Search This Blog

Thursday, December 05, 2013

வால்ட் டிஸ்னி - 1901 டிசம்பர் 5 அன்று பிறந்தார்

வால்ட் டிஸ்னி


அமெரிக்காவில் 1901 டிசம்பர் 5 அன்று பிறந்தார் வால்ட் டிஸ்னி. புகழ்பெற்ற ஓவியர், கார்ட்டூன் படத்தயாரிப்பாளர், பொழுதுபோக்குப் பூங்கா நிறுவனராக மிகவும் புகழ்பெற்றார். சிறு வயதிலிருந்தே இயற்கைக் காட்சிகளையும் விலங்குகளையும் ஓவியமாக வரையும் விருப்பமே, பின்னாளில் உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்தியது. 16 வயதில் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு நுண்கலைப் பள்ளிகளில் ஓவியம் பயின்றார். 

1923ல் சகோதரர் ராய் டிஸ்னி மற்றும் உப் ஐவர்க்ஸ் ஆகியோருடன் இணைந்து கேலிச்சித்திர அசைவாக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். 1926-28 வரை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ‘ஓஸ் வால்ட் தி ராபிட்’ எனும் கார்ட்டூன் தொடரைத் தயாரித்தார். 1928ல் இவர்கள் தயாரித்த ‘ஸ்டீம்போர்ட் வில்லி’ என்ற முதல் கார்ட்டூன் திரைப்படத்தில் ‘மிக்கி மௌஸ்’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினார். ஐவர்க்ஸ் நகைச்சுவை ஓவியங்களை வரைய அவற்றுக்கு வால்ட் டிஸ்னி குரல் கொடுக்க, பேசும் முதல் கேலிச் சித்திரத் திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றது. 1950-60களில் வால்ட் டிஸ்னி நிறுவனம் ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்ததுடன் உலகமெங்கும் வரவேற்பையும் பெற்றது. 

1932ல் இவர் உருவாக்கிய ‘ஃப்ளவர் அண்ட் ட்ரீஸ்’ கார்ட்டூன் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது வாழ்நாளில் 59 ஆஸ்கர் விருதுக்கான நியமனங்களும், 26 ஆஸ்கர் விருதுகளும் பெற்றுள்ளார். 1955ல் கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘டிஸ்னி லேண்ட்’ என்ற மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவை நிறுவினார். 1971 ஃப்ளோரிடா மாகாணம் ஆர்லண்டோவில் ‘டிஸ்னி வேர்ல்ட்’ உருவாக்கப்பட்டது.
1966 டிசம்பர் 15, நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்தார் வால்ட் டிஸ்னி.

நகத்தைப் பாதுகாப்பது எப்படி?


நகம் என்பது கை, கால் விரல்களின் நுனியில் வளரும் ஓர் உறுப்பு. ‘கெரோட்டீன்’ எனும் புரதப் பொருளாலான அமைப்பு. நகமும் சதையும் சந்திக்கிற நகக்கண் தோலிலிருந்து நகம் வளருகிறது. புதிய செல்கள் உருவாகும்போது பழைய செல்கள் முன்னால் தள்ளப்பட்டு நகத்தின் நுனியில் வெள்ளையாக மாறுகின்றன. புதிய செல்கள் உயிருள்ளவை. பழைய செல்கள் உயிரற்றவை. இதனால்தான் நகத்தின் நுனியைக் கடித்தாலும் வெட்டினாலும் வலிப்பதில்லை. அதேசமயம் நகக்கண்ணில் அடிபட்டால் அதிகம் வலிக்கும். காரணம், அங்குதான் நுண்ணிய ரத்தக்குழாய்களும் நரம்புமுனைகளும் அதிகம் உள்ளன. நகங்கள், விரல் நுனிகளுக்குப் பாதுகாப்பு தருகின்றன.
ஒரு நகம் ஒவ்வொரு வாரமும் 0.5 மி.மீ. அளவில் வளருகிறது. கால்விரல் நகங்கள் மெதுவாக வளருகின்றன. நகத்தின் இயல்பான வளர்ச்சிக்குப் புரதம், பயாட்டின், வைட்டமின்-ஏ, கால்சியம், துத்தநாகம், இரும்பு ஆகிய சத்துகள் தேவை. பால், முட்டை, மீன், இறைச்சி, மாம்பழம், வாழைப்பழம், கீரைகள், காரட், காலிஃபிளவர், முட்டைகோஸ், அவரை, சோயாபீன்ஸ், வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள், முழுத் தானியங்கள் போன்றவற்றில் இந்தச் சத்துகள் நிறைய உள்ளன. இந்த உணவுகளை நம் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.

நகம் என்பது நோய் காட்டும் கண்ணாடி. நகத்தின் நிறம் மற்றும் வடிவம் மாறுவதிலிருந்தும் நகத்தை அழுத்தி அதில் காணப்படும் ரத்த ஓட்டத்தைப் பார்த்தும் ரத்தச்சோகை, இதயநோய், சுவாசப்பை நோய், சர்க்கரை நோய், எலும்பு நோய், கல்லீரல் நோய், தோல் நோய், தைராய்டு பாதிப்பு என்று பல நோய்களைக் கண்டுபிடித்துவிட முடியும்.

நாள்தோறும் நாம் பல பொருள்களைத் தொடுகிறோம். அவற்றிலிருந்து அழுக்கு மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் ஏராளமாக கைவிரல்களுக்கு வந்து சேருகின்றன. இவை நகத்தின் அடியில் புகுந்து கொள்கின்றன. அசுத்தமான நகங்களால் நமக்குப் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, வாந்தி, வயிற்றுப்போக்கு, குடல்புழு போன்றவை தொற்றுவதற்கு அழுக்கான நகங்களே காரணம். நகம் கடிப்பது, விரல் சூப்புவது போன்ற பழக்கங்கள் இருந்தால், நகத்தின் அழுக்கில் இருக்கும் கிருமிகள் உடலுக்குள் எளிதாகப் புகுந்துவிடும். ஆகவே, நகங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

நகத்தில் வரும் நோய்களில் முதன்மையானது, நகச்சுற்று. அசுத்தமான நகம், நகத்தில் அடிபடுவது, நகத்தை வெட்டும்போது சதையோடு வெட்டிவிடுவது, கூர்மையான பொருள் குத்தி விடுவது, நகம் கடிப்பது போன்றவற்றால் பாக்டீரியா கிருமிகள் நகத்தைச் சுற்றியுள்ள தோல் மற்றும் தசையைத் தாக்கும். அப்போது ‘நகச்சுற்று’ ஏற்படும். இதன் விளைவால், நகத்தைச் சுற்றி வீக்கமும் வலியும் உண்டாகும். இதற்குத் தகுந்த ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டால் குணமாகும். நகச்சுற்றில் சீழ் வைத்துவிட்டால் சீழை வெளியேற்ற வேண்டும். நகச்சுற்றுக்கு வீட்டு வைத்தியமாக எலுமிச்சைப் பழத்தை விரலில் சொருகி வைப்பார்கள். இதனால் பலன் கிடைப்பதில்லை. பதிலாக, ஐஸ்கட்டியைப் பிளாஸ்டிக் பையில் வைத்து நகச்சுற்று வந்த விரலில் ஒற்றடம் கொடுத்தால் வலி குறையும்.

நகச்சொத்தை என்பது ‘ட்ரைக்கோபைட்டன் ரூப்ரம்’ எனும் ஒருவகை பூஞ்சையால் வருவது. நகம் சொத்தையானால், நகத்தின் பெரும்பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படும். பின்பு அது சுருங்கி, வதங்கி, உடைந்து, சிதைந்து போகும். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். நகச்சொத்தையில் தகுந்த களிம்பு தடவி, சில வாரங்களுக்குப் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைச் சாப்பிட அது குணமாகும். விரல்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் தண்ணீரில் வேலை செய்யும்போது கைக்குக் காப்புறை அணிந்துகொண்டால் மீண்டும் நகச்சொத்தை வராமல் தடுக்கலாம்.

சிலருக்கு நகத்தில் வெண்புள்ளிகள் தோன்றும். இந்த நிலைமை கால்சியம் மற்றும் துத்தநாகம் சத்துகள் பற்றாக்குறையினால் வருகிறது என்று முன்பு சொல்லப்பட்டது. இது தவறு என்று இப்போது தெரியவந்துள்ளது. நகத்தில் லேசாக அடிபடுவதுதான் இந்த வெண் புள்ளிகள் தோன்றுவதற்குக் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை நகத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை; சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடும். ஆகவே, இவற்றுக்குத் தனியாக சிகிச்சை எதுவும் தேவையில்லை.

வெதுவெதுப்பான சோப்பு கரைசலில் விரல் நகங்களை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர், மென்மையான பிரஷைக் கொண்டு விரல் நகங்களுக்கும் சதைக்கும் இடையில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். சுத்தமான பஞ்சு கொண்டு விரல் முனைகளைத் துடைக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டுமுறை இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும். வாரம் ஒருமுறை நகம் வெட்டுவதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. சரியான நக வெட்டியால் மட்டுமே நகத்தை வெட்ட வேண்டும். பிளேடு கொண்டு நகத்தை வெட்டக்கூடாது. நகத்தின் சதையை ஒட்டி வெட்டக்கூடாது. கால்விரல் நகங்கள் கடினமாக இருக்கும் என்பதால், குளித்து முடித்த பிறகு அவற்றை வெட்டுவது எளிதாக இருக்கும்.

நகத்துக்கு பாலிஷ் போடலாம். தரமான நகப்பூச்சுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகப்பூச்சு சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். ஒவ்வாமை உள்ளவர்கள் நகப்பூச்சுப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். விரல் சூப்புவது, நகம் கடிப்பது போன்ற பழக்கங்கள் வேண்டாம். நகங்களை நீளமாக வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

நகத்தில் அழுக்கு சேராமல் இருக்க வேண்டுமானால் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழாயிலிருந்து கொட்டும் தண்ணீரில் நன்றாகக் கைகளை நனைக்க வேண்டும். பின்னர், கையின் முன்புறம், பின்புறம், விரல்களுக்கு இடையில், நகங்களுக்குக் கீழே, மணிக்கட்டு ஆகிய பகுதிகளை சோப் அல்லது சோப் திரவம் கொண்டு நன்கு நுரை வரத் தேய்க்க வேண்டும். பிறகு, கைகளைத் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். சோப் இல்லாத நேரங்களில் கைகளை அதிவேகமாக உரசிக் கழுவுவதன் மூலம் சுத்தப்படுத்தலாம். வெறும் கையால் தண்ணீர்க் குழாயை மூடுவதற்குப் பதிலாக கையில் துண்டு ஒன்றை எடுத்து அதன் மூலம் குழாயை மூட வேண்டும். அப்போதுதான் குழாயில் உள்ள அழுக்கு கைகளில் ஒட்டாது. துண்டு இல்லாவிட்டால் குழாயை இடது கையால் மூட வேண்டும். உலர்ந்த சுத்தமான துண்டு அல்லது டிஷ்ஷூ பேப்பரைப் பயன்படுத்தி கைகளில் ஈரம் போகத் துடைக்க வேண்டும். ‘கைச் சுத்தம்’ நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம்!



Tuesday, December 03, 2013

ராமேஸ்வர தீர்த்தங்கள்!

 
ராமேஸ்வரம் - காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அனைத்து இந்தியர்களுக்கும் புனித கே்ஷத்ரம். இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில்தான் ஸ்ரீ ராமபிரான் ராவணனை வதம் செய்தபின் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது ஐதிகம். 
 
இங்கு அக்னி தீர்த்தத்தில் ஆரம்பித்து நகுல தீர்த்தம், சகாதேவ தீர்த்தம், திரௌபதி தீர்த்தம், ஹனும குண்ட தீர்த்தம், நாகதீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், ராம தீர்த்தம், அமிர்தவாபி தீர்த்தம், ரண விமோசன தீர்த்தம், மங்கல தீர்த்தம், சுக்ரீவ தீர்த்தம், அங்கத தீர்த்தம், ஜாம்பவ தீர்த்தம் என்று 11 குளங்கள், நான்கு கிணறுகள் மற்றும் சமுத்திர நீராடல் தலங்கள் உள்ளன.இவற்றில் சிலவற்றையே யாத்திரிகர்கள் பயன்படுத்துகின்றனர். பல கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. குப்பைகளே எங்கும் நிறைந்திருந்தன. யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசு. இதைச் சீர்திருத்தும் முயற்சியை கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி செயல்திட்டம் மேற்கொண்டு இன்று பல தீர்த்தங்களை மீட்டிருக்கிறது.ஹனுமான் குண்ட தீர்த்தத்தில்தான் தூய்மைப்படுத்தும் பணியின் தொடக்கப் பூஜைகள் செய்யப் பட்டன. புனித தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது அவற்றைச் சீரமைக்கும் பணியில் களமிறங்கிய பின்னர் தெரிந்தது. ஒவ்வொன்றும் நம் அலட்சியத்தால் அசுத்தங்களாலும் மது குப்பிகளாலும் நிரம்பியிருந்தன. பல்லாண்டுகளாகச் சுத்தப்படுத்தப்படாத அந்தத் தீர்த்தங்களை முட்மரங்கள் கவிந்து மூடியிருந்தன.ஒவ்வொரு நாளும் உள்ளே இறங்கிச் சுத்தம் செய்யும் ஒரு சகோதரரின் கால் மதுபாட்டில் ஒன்றால் கிழிபடும். மாசுகளால் காய்ச்சல் வரும். ஒரு கட்டத்தில் உள்ளூர் ஆஸ்பத்திரிகளில் ‘என்ன தடுப்பூசி ஆட்களா?’ என்றே அன்புடன் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் கவிந்திருந்த அத்தனை மாசையும் கஷ்டப்பட்டு அகற்றி, தேங்கி அசுத்தமாகிவிட்ட நீரைச் சிரமத்துடன் வெளியேற்றிய பிறகு உள்ளே நல்ல நீர் ஊறிக்கொண்டே இருப்பதைக் காண முடிந்தது. நம் பாரதப் பண்பாட்டைப் போலவே," என்கிறார் இந்தச் செயல்களைக் களத்தில் ஒருங்கிணைத்து வரும் சகோதரி சரஸ்வதி. இவர் விவேகானந்த கேந்திரத்தின் முழுநேர ஊழியர். இதே கதைதான் மீண்டும் திரௌபதி தீர்த்தத்திலும். அங்கு விவேகானந்த கேந்திரத்தினர் செல்வதற்கு முன்னால் அந்தத் தீர்த்தத்தின் அடிப்பகுதி ஏறக்குறையத் தகர்ந்திருந்தது. முழுக்க முழுக்க மதுபானக் குப்பிகள், அசிங்கமான மாசு தேங்கி நோய் உருவாக்கும் தண்ணீர். இன்றோ அந்தத் தீர்த்த நீரில் உள்ளூர்ச் சிறுவர்கள் தாவி ‘டைவ்’ அடித்து நீச்சல் பழகும்படி அழகிய நன்னீர். நகுலசகாதேவ தீர்த்தங்களில் நன்றாகத் தூர்வாரி சுற்றுப்புறத்தைச் சரிசெய்து அருமையான ஒரு தீர்த்தமாக அவை மாற்றப்பட்டுள்ளன. ஜாம்பவான் தீர்த்தமும் அங்கத தீர்த்தமும் கிணறுகள். அவை பாழடைந்து கிடந்தன. இப்போது அவை புதுப்பொலிவுடன். இவற்றின் சுற்றுச்சுவர்கள் சரி செய்யப்பட்டுள்ளன. மங்கல தீர்த்தமும் ருண விமோசன தீர்த்தமும் ராமேஸ்வரத்துக்கு நுழையும் பாதையிலேயே இருக்கின்றன. முழுக்க கைவிடப்பட்ட நிலையில் இருந்த இவை இன்று சுத்தமான நீருடன் அல்லிகள் திரும்பப் பூக்க, மீண்டும் மீன்கள் துள்ளி விளையாடும் நீர்நிலைகளாகியுள்ளன. ருண விமோசன தீர்த்தத்தின் அருகே ஒரு சிறிய ஆலமரம் துளிர்விட்டு நிற்கிறது. கோயிலின் அருகே எளிய டீக்கடை வைத்திருக்கும் முதியவர் ஒருவர் அவரே முன்வந்து இந்த ஆலமரக் கன்றைப் பராமரித்து வருகிறார்.
 
தீர்த்தங்கள் இப்போது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகிவிட்டன!

அதிர்ச்சித் தோல்வி ஆனந்த்!

 
செஸ்ஸில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. செஸ் வரைபடத்தில் நார்வேக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது. 22 வயது கார்ல்சன் புதிய உலக சாம்பியனாகியிருக்கிறார். 2007லிருந்து உலக சாம்பியனாக இருந்த விஸ்வநாதன் ஆனந்த்தை அவருடைய சொந்த மண்ணில் தோற்கடித்து, தன்னிகரற்ற வீரராக விளங்குகிறார் கார்ல்சன்.
 
ஆரம்பத்தில், யார் உலக சாம்பியன் என்பதில் கடும் விவாதங்கள் நடைபெற்றன. ‘கார்ல்சன் மாதிரி வராது, கோட்டையைத் தகர்க்கப் போகிறார்’ என்று பலரும், ‘ஆனந்த்தை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜெயிப்பது அவ்வளவு சுலபமில்லை. தான் பெரிய லெஜண்ட் என்பதை மீண்டும் நிரூபிக்கப் போகிறார்’ என்று ஆனந்த் ரசிகர்கள் பட்டாளமும் ஆட்டத்தின் முடிவை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், ஆனந்த் ஒரு மேட்சில் கூட ஜெயிக்காமல் தோற்றுப்போனது அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகப் போய்விட்டது. செஸ்ஸில் இனி புதிய தலைமுறையின் ஆட்சிதான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார் கார்ல்சன்.  

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காகத் தமிழக அரசு ரூ. 29 கோடியைச் செலவு செய்துள்ளது. உலக அளவிலுள்ள மிக முக்கிய செஸ் பிரமுகர்களெல்லாம் சென்னைக்கு வந்திருந்தார்கள். இந்தப் போட்டி சென்னையில் நடந்ததன் மூலமாகத் தமிழ்நாட்டின் செஸ் வளர்ச்சியை அனைவரும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. மாஸ்கோவுக்கு இணையாகச் சென்னையிலும் ஏராளமான, தரமான செஸ் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை சர்வதேச மீடியா பதிவுசெய்துள்ளது. 
 
கார்போவ், காஸ்பரோவுக்குப் பிறகு ஆனந்த், கிராம்னிக், டொபலோவ், கெல்ஃபண்ட் போன்ற வீரர்கள் முன்னணி வீரர்களாக இருந்தார்கள். இவர்களில் ஆனந்தும் கிராம்னிக்கும் மற்றவர்களைத் தாண்டிச் சென்றார்கள். அதிலும் ஆனந்த், ‘2000ல் ஆரம்பித்து அடுத்த 13 வருடங்களுக்கு அதிகமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர்’ என்கிற பெருமையை அடைந்தார். இப்போது அந்தத் தலைமுறையைத் தாண்டிச் சென்று, புதிய வளையத்தை உருவாக்கியிருக்கிறார் கார்ல்சன்.  

கார்ல்சனின் செஸ் வாழ்க்கையில் இதுவரை முடியாதது என்று ஒன்றில்லை. 12 வயதில் செஸ், கால்பந்து ஆகிய இரண்டிலும் ஈடுபாடு அதிகமிருந்தபோது செஸ்தான் இனி என்று முடிவெடுத்தார். 16 வயதில் ‘பள்ளிக்குச் செல்லமாட்டேன் செஸ்தான் முக்கியம்’ என்று பெற்றோரிடம் சொன்னார். 13 வயதில் கிராண்ட் மாஸ்டர், 19 வயதில் உலகின் நெ.1 வீரர், 22 வயதில் உலக சாம்பியன் என்று சரியாகத் திட்டுமிட்டு வென்றிருக்கிறார். இத்தனைக்கும் நார்வே, செஸ்ஸில் ஆர்வம் உள்ள நாடு கிடையாது. எப்படி இந்தியாவுக்கு ஒரு ஆனந்தோ அதுபோல நார்வேக்கு ஒரு கார்ல்சன் என்கிற பெருமை அவருக்கு இப்போது கிடைத்திருக்கிறது. 
 
போட்டியின் 10வது ஆட்டத்தில் கார்ல்சன் டிரா செய்தாலே உலக சாம்பியனாகிவிடலாம் என்கிற நிலையிலும் சுலபமாக டிராவுக்கு ஒப்புக்கொள்ளாமல் கடைசிவரை முயற்சி செய்தபிறகே ஆட்டத்தை டிரா செய்தார்.  இறுதிப் போட்டியில் செகண்ட்ஸ் என்றழைக்கப்படும் பயிற்சியாளர்களின் உதவியில்லாமல் (ஒருவர் இருந்திருக்கிறார். ஆனால் அவர் சென்னைக்கே வரவில்லை.) ஜெயித்திருக்கிறார் கார்ல்சன். செஸ் வரலாற்றில் ஃபிஷர்கூட இப்படிச் செய்ததில்லை. அருமையான தொடக்கம்தான். செஸ் ஆட்டத்தின் அடிப்படை என்கிற விதியை மாற்றி இறுதி ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்துவதில் நிபுணராக இருக்கிறார். இதனால்தான் இந்தப் போட்டியில், பாதி ஆட்டங்களில் ‘டிரா அல்லது ஆனந்த் ஜெயிக்கக்கூடும்’ என்கிற கணிப்புகளை உடைத்து மூன்று வெற்றிகளைப் பெறமுடிந்தது. தொடக்க ஆட்டமும் வலுவாக அமைந்துவிட்டால் கார்ல்சனை யாராலும் அசைக்கமுடியாது என்று மதிப்பிடுகிறார்கள் செஸ் நிபுணர்கள். மீடியா, கார்ல்சனை ‘மொசார்ட் அஃப் செஸ்’ என்று வாழ்த்துகிறது. காஸ்பரோவ் 45 வயது வரை ஆடினார். கெல்ஃபண்ட் 45 வயதிலும் தரவரிசைப் பட்டியலில் ஆனந்துக்கு முன்னால் இருக்கிறார். ஆனால் கடந்த 6 வருடங்களில் 5 உலக சாம்பியனுக்கான போட்டியில் ஆடியதால் இதற்கு மேலும் ஆனந்தால் உற்சாகமாக ஈடுபடமுடியுமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ‘இரண்டு வாரங்கள் கழித்து லண்டன் கிளாசிக் போட்டியில் ஆடுவேன். பிறகு, பிப்ரவரியில் ஜூரிச் போட்டியில் ஆடுவேன். மார்ச்சில் நடக்கும் கேண்டிடேட்ஸில் (அடுத்த வருட உலக சாம்பியனுக்கான போட்டியில் கார்ல்சனுடன் விளையாடுபவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி) ஆடுவேனா என்று முடிவு செய்யவில்லை’ என்கிறார் ஆனந்த். 
 
சொந்த மண்ணில், ரசிகர்கள் முன்னால் தோற்றுப்போனதற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்தார். ‘என் அம்மா சிறிய வயதில் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றதுபோல, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து இறுதிப் போட்டியைப் பார்த்தது நெகிழ்ச்சியாக இருந்தது. பல மேட்சுகளில் என் முதல் மூவ்களுக்கு கைதட்டினார்கள். ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும்தான் இப்படி காய் நகர்த்தல்களுக்கு மக்கள் கைதட்டுவார்கள். நான் நிச்சயம் செஸ்ஸை விட்டு விலக மாட்டேன்’ என்று உறுதியளிக்கிறார் ஆனந்த்.
 
‘ஆனந்துடன் விளையாடியும் பயிற்சிகள் எடுத்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது அவருக்குக் கற்றுத்தரும் நேரமிது’ என்று உலக சாம்பியனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு பேட்டியளித்தார் கார்ல்சன். ‘இளவயது என்பதால் கார்ல்சன் எதற்கும் பயப்படுவதில்லை. இரண்டு தோல்விகள் ஏற்பட்டாலும் கூட, அடுத்தநாள் அதிரடியாக ஆடி ஜெயிப்பார். மற்றவர்களைப் போல ஒரு தோல்வியில் துவண்டு விடமாட்டார்’ என்கிறார் கார்ல்சனின் முன்னாள் பயிற்சியாளர் சிமென்.  

ச.ந.கண்ணன்

அருள்வாக்கு - உபாயம் காண்க!


உலகியலில் செய்யும் எந்த அபிவிருத்தியும் நிலைத்து நிற்பதற்கான பயனும் பயனால் விளைவதான ஆனந்தமும் தரவில்லையென்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்த அபிவிருத்தி தாற்காலிகமாகவே முடிவதாகவும் அதனைப் பெற மீண்டும் மீண்டும் போராடுவதாகவும் அப்போராட்டத்தில் பலவிதமான வார்க்க பேதப் போட்டி, பொறாமைகளும் சண்டைகளும் எழுவதாகவும் மொத்தத்தில் அமைதி குறைவதாகவே காண்கிறோம். 

இன்றையக் கண்டுபிடிப்புகளால் உலகியல் சுக சாதனங்கள் கணக்கின்றிப் பெருகிக் கொண்டே போவதில், எத்தனை பெற்றாலும் திருப்திப் பெறாமல் மேன்மேலும் அதே அறியாதவர்களாக இருக்கிறோம். ‘சுவரை வைத்தே சித்திரம்’ என்றபடி உடல்நலனை ஓம்பத்தான் வேண்டுமாயினும், ‘சித்திரம் தீட்டவே இச்சுவர்; உள்ளத்தின் உயர்வான உயிரின் நிறைவே அச்சித்திரம்’ என்பதையும் நாம் மறவாது பொன்னே போல் மனத்தில் பொதிந்து கொள்ள வேண்டும்.  மீண்டும் மீண்டும் நலிவும் அழுக்கும் உறும் உலகியல் சுவரைக் கெட்டிப்படுத்துவதும், அழகுபடுத்துவதுமான ஓய்யா முயற்சியிலேயே ஈடுபட்டு, அதோடு சேர்ந்துவரும் போட்டி, பொறாமைப் போராட்டத்தில் அமைதியிழந்து, மேன்மேலும் தேவை தேவையெனும் குறைவாழ்வில் வாணாளை வீணாளாக்குவதோடு முடிந்து விட்டோமாயின், நாம் ஆறறிவு பெற்றும் அறியாதாராகவே முடிந்த பரிதாபமாகத்தான் ஆகும்.குறைவாழ்வை நிறைவாழ்வாகவும், போராட்டப் பொறாமையை அன்பு வழியில் நின்று பெறும் அமைதியாகவும், வந்து வந்து மறையும் தாற்காலிக இன்பத்தை நிரந்தர ஆனந்தமாகவும் மாற்றும் உள்ளத்தின் உயர்வு என்ற சித்திரத்தைச் சுவரின் மீது தீட்டிக் கொள்வதற்கு உபாயம் காண்பதே நாம் செய்ய வேண்டுவது.

உள்ளவுயர்வை நல்கவல்ல அந்த உபாயம் நல்லொழுக்கமாம் தர்மமும், தெய்வ பக்தியும், ஆத்ம சிந்தனையும் திரிவேணியாகக் கலக்கும் மதவியலேயாகும்.

வலிவூட்டும் மூன்று மூலிகைச் சாறுகளின் கலவையான ‘திரிபலா’ என்றும் இம்மூன்று அங்கம் கொண்ட மதவியலைக் கூறலாம். அழியும் மூலிகைச் சாற்றினால் சித்திரம் தீட்டுவது போலன்றி, இந்த அழியாத சஞ்சீவினி மூலிகையால் மதவியல் சித்திரத்தை நாம் உலகியல் மீது தீட்டிக் கொண்டால், பிறவிப்பயன் பெற்று அமரமான பூரணவாழ்வின் பேரானந்தத்தைப் பெறுவோம்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

தாக்குப்பிடிக்குமா தூத்துக்குடி அனல்மின் நிலையம்?

 
சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற நகரங்களில் ஆறு ஏழு மணி நேரம் மின்வெட்டு தொடர்கிறது. குறிப்பாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள அலகுகள் பழுதாவதும் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவருகின்றன. சமீபத்தில் மூன்று அலகுகள் பழுதாயின. பின்னர் சரி செய்யப்பட்டன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் என்ன பிரச்னை?
 
தூத்துக்குடி அனல்மின் நிலையம் தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான பெரிய அனல்மின் நிலையம். அதில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 முறைக்கு மேல் பழுதுகள் ஏற்பட்டதால் தென்மாவட்டங்கள் அடிக்கடி இருளில் மூழ்கின.தூத்துக்குடி அனல்மின் நிலையம் தென்மாவட்டங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்குவகித்தது. காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் மின் உற்பத்தி குறையத் தொடங்கியது.தூத்துக்குடி அனல்மின் நிலையமானது வங்காள விரிகுடா கடலோரம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு மிக அருகே அமைந்துள்ளது. இங்கு 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளில் ஏதாவது ஒரு அலகு தொடர்ந்து பழுதாவது வாடிக்கையாகிவிட்டது. அனல்மின் நிலையத்தின் ஐந்து யூனிட்டுகளில் உள்ள கொதிகலன்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரியில் சாம்பல் அதிகமாக வெளியேறுவதால்தான் குழாய்களில் அடிக்கடி ஓட்டை ஏற்படுகிறது" என்கிறது ஒரு தரப்பு.தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்திக்கான கொதிகலன்கள் எல்லாம் இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரியை மட்டுமே பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது நமது நாட்டில் நிலக்கரி போதுமான அளவில் கிடைப்பதில்லை. இதனால் மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது கட்டாயமாகியுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக இந்திய நிலக்கரி 75 சதவிகிதத்துடன், வெளிநாட்டு நிலக்கரி 25 சதவிகிதம் கலக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலக்கரிகளிலிருந்து குறைந்தது 19 சதவிகிதத்துக்குப் பதிலாக 40 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவில் சாம்பல் வெளியாகிறது. இந்தச் சாம்பல் கழிவுகள் கொதிகலன்களைச் சுற்றிப் படிவதால் அதில் அரிப்பு ஏற்பட்டு ஓட்டை விழுகிறது. அதனால், கொதிகலன்கள் அடிக்கடி பழுதாகி மின்உற்பத்தி முடங்கி விடுகிறது. 
 
கடந்த 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 3வது மின்உற்பத்தி அலகின் கொதிகலன்தான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்படுவது அடிக்கடி நடக்கும் சம்பவமாகி விட்டது.  இந்த யூனிட்டின் கொதிகலன் மட்டுமல்லாது கொதிகலனுக்குத் தண்ணீர் கொண்டுவரும் குழாய்களும் பழுதாகி விட்டன. கொதிகலனில் சுமார் 52 மீட்டர் உயரம் கொண்ட 600 குழாய்களில் 20 முதல் 40 மீட்டர் வரையிலான பகுதிகளில் குழாயின் தாங்கும் திறன் 5.2 மில்லி மீட்டர் தடிமனில் இருந்து 2.2 மில்லி மீட்டர் தடிமனாகக் குறைந்துவிட்டது. இதுவே 3வது அலகின் அடிக்கடி பழுதுக்குக் காரணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கொதிகலனுக்குத் தண்ணீர் கொண்டு வரும் 600 குழாய்களையும் புதியதாக அமைத்தால் இதனை முறையாகப் பழுதில்லாமல் இயக்க முடியும்" என்கின்றனர் இத்துறை நிபுணர்கள்.தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. தொடர்ச்சியாக இயங்குவதால், அவ்வப்போது சிறு சிறு கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனைச் சரிசெய்திடும் பணிகளை விரைவாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காண்டுக்கு ஒருமுறை பழுதான குழாய்கள் மாற்றப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை 40 நாட்கள் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுகின்றன. முன்பிருந்தது போலல்லாமல் தற்போது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுத்திறன் அளவுக்கு உள்ளது" என்கிறார்கள் அரசுத் தரப்பில்.
 
எம்.பார்த்தீபன் சங்கர்

Tuesday, November 26, 2013

எழுமின்... விழிமின்!

ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம்... பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களுக்கு அதிபதி!

திடீரென, வியாபாரத்துக்காக அவர் செய்த முறைதவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை மனநோயாளி ஆக்கியது.

பரிதாபத்துக்கு உரிய அந்த நிலையில்... அவரது நண்பர் ஒருவர், தனது இல்லத்துக்கு வந்திருக்கும் இந்து மதத் துறவியைக் காண வரும்படி அழைத்தார். இவரோ மறுத்துவிட்டார்.அந்தத் துறவி வேறு யாருமல்ல; நமது சுவாமிஜிதான்! அவரைப் பார்ப்பதென்றால், அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனால், ராக்ஃபெல்லருக்கு அதற்கான நேரம் வாய்த்தது என்றே சொல்ல வேண்டும். முதலில் மறுத்தவர், பிறகு என்ன நினைத்தாரோ... தன் நண்பருக்குக்கூடத் தகவல் சொல்லாமல், அவரது வீட்டுக்கு வந்தார். திடும் என்று சுவாமிஜி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். நம்மையெல்லாம் போல அவர் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை. தலையைக் கவிழ்த்தவண்ணம் அப்படியே படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் நிச்சயம் வியந்திருப்பார்.

 

அதுமட்டுமல்ல... ராக்ஃபெல்லரைப் பற்றி அவருக்கு மட்டுமே தெரிந்த, மற்ற யாருக்குமே தெரியாத அவருடைய வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் கூறிய சுவாமிஜி, அவரிடம் இருக்கும் பணம் கடவுள் கொடுத்தது என்றும், அதை மக்களுக்கான சேவைகளுக்குச் செலவு செய்வதற்காகவே கடவுள் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி, ஆண்டவன் அளித்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மற்றவர்கள் தன்னிடம் சொல்வதற்கு அஞ்சும் விஷயங்களை, சுவாமிஜி தன்னிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதில் அதிர்ந்துபோன ராக்ஃபெல்லர், சட்டென அறையை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்.ஒரு வாரத்துக்குப் பின், மீண்டும் பழைய மாதிரியே விருட்டென சுவாமிஜியின் அறைக்குள் நுழைந்த ராக்ஃபெல்லர், ஒரு காகிதத்தை சுவாமிஜி முன் வீசி எறிந்தார். அப்போதும் சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ''அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எனக்கு நன்றி கூறுவீர்கள்'' என்றார் ராக்ஃபெல்லர்.அவர் அளித்த நன்கொடைகளின் விவரங்கள் அந்தக் காகிதத்தில் இருந்தன. அதைப் பார்த்த சுவாமிஜி, ''நல்லது! இப்போது நீங்கள் கொஞ்சம் திருப்தி அடைந்திருப்பீர்களே! இதற்கெல்லாம் நீங்கள்தான் எனக்கு நன்றி கூறவேண்டும்'' என்றார்.சுவாமிஜியுடனான இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பின்னர், கஞ்சனான ராக்ஃபெல்லர் பெரும் கொடையாளியாகி, மனித குலத்துக்குப் பெரும் நன்மைகள் விளையக் காரணமானார். 'பென்ஸிலின்’ மருந்தைக் கண்டுபிடிக்கப் பணத்தை அள்ளி வழங்கியதும் அவர்தான்.

தனக்கென்று சேர்த்து வைத்தபோது அடையாத மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், திருப்தியையும் பிறருக்கெனக் கொடுத்தபோது அடைந்த ராக்ஃபெல்லர், புத்துயிர் பெற்று ஆரோக்கிய மனிதராகி, 93 வயது வரை வாழ்ந்தார்.நமது சுவாமிஜின் அன்பினாலும் கருணையினாலும் ஆட்கொள்ளப்பட்ட மனிதர், இன்று மனித குலம் நன்றியோடு நினைக்கும் மாமனிதராக மாறினார் என்பதை எண்ணும்போது, சுவாமிஜியின் பெருமை விண்ணையெட்டி நிற்பது புரிகிறதல்லவா?!

அழாதே... அழகு குறையும்..!

 
அழுகையைப் பற்றி நம்ம ஞானிகள் நிறைய சொல்லியிருக்காங்க... கண்ணீர் ஊற்றால் உடல் நனைய அழுது இறைவனைப் போற்றுதல் வேண்டும் என்று வள்ளலார் கூறுவார். மாணிக்கவாசகரும் இறையருளை ‘அழுதால் பெறலாமே’ என்று கூறுவார். திருமங்கை ஆழ்வார் மட்டும் சளைத்தவரா? ‘உடம்பெலாம் கண்ண நீர் சோர நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம்’ என்பார். நிலையான இறை அருளைப் பெற அழுவது முறை. ஆனால், அழியும் பொருளைப் பெறவும் அதேபோல அழுவது எப்படி முறையாகும். பெண்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இந்த அழுகை. கணவன் போடும் தும்மலில் தொடங்கி கடையில் வாங்கும் கம்மல் வரை அழுது அழுது சாதிக்கும் அருங்குணம் பெண்கள் குணம் என்று குற்றம்சாட்டுவார்கள் ஆண்கள்.
 
வள்ளுவன் கண்ட பெண்கள் முதல் வலைத்தளம் கண்ட பெண்கள் வரை அழுகின்ற இந்நிலையில் மாற்றம் எதுவும் பெரிதாக நிகழ்ந்து விடவில்லை.  சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அழுகைப் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டனர். இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மட்டும் தனிக்குழுவாகப் பிரித்து பரிசோதனை செய்தனர். அந்தக் குழுவில் மொத்தம் 60 பெண்கள் இருந்தனர்.
 
பெண்கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிகவும் மோசமான அழுகைக் காட்சிகள் கொண்ட திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரைமணி நேரம் படம் ஓடியது. இதனால் பெண்களுக்குக் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம் பார்த்து கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரைச் சோதனைக் குழாயில் சேகரித்தனர். கண்ணீர் வராத பெண்களுக்காக மற்றொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரைத் தயார் செய்தனர்.பின்னர் கண்ணீர் வடித்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர் வராத பெண்களின் முகத்தில் உப்பு நீரையும் பேஷியல் செய்வதுபோல் பூசினர். இப்போது யாருக்கு உண்மையான கண்ணீர், யாருக்குப் பொய்யான கண்ணீர் என்பது ஆய்வாளர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழைத்து அந்தப் பெண்களின் அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களைத் துல்லியமாகப் பதிவு செய்தனர். கூடவே காதல் உணர்வைத் தோற்றுவிக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருவரின் உடலில் எந்தளவு சுரக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனராம். ஆய்வின் முடிவில் அழுவதால் ஹார்மோன்களில் மோசமான மாற்றம் ஏற்பட்டு பெண்களின் அழகு குறையும் என்று தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
ஆதிரா முல்லை

Saturday, November 23, 2013

அருள்வாக்கு - ஸெக்யூலரிஸம்

சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை ‘ஸெக்யூலரிஸம்’ என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது. இந்த ‘ஸெக்யூலரிஸம்’ என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.இது சரியான கருத்தல்ல என எடுத்துக்காட்டி, ‘ஸெக்யூலரிஸம்’ என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. தற்போது எண்ணுவதுபோல் அது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத் தொடர்பே அற்று இருப்பதல்ல. மாறாக அது, அரசாங்கமானது எந்த ஒரு மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே என்பதுதான் சரியான பொருள்.ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவையாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘ஸெக்யூலரிஸம்’ ஆகும்.பிரஜைகளின் உடல்நலத்துக்கும், உலகியல் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் வழிவகைகள் காண்பதான விவசாயம், பொருளாதாரம், உலகியலை மையப்படுத்திய கல்வி, சுகாதாரம், உள்நாட்டு வெளிநாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றை அபிவிருத்தி செய்வது ஓர் அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்பது உண்மையாயினும், அதோடு பொறுப்பு முற்றிலும் முடிந்து விட்டதாகக் கருதுவதற்கில்லை. உடலைவிட முக்கியம் உள்ளமேயன்றோ? பிரஜைகளின் அந்த உள்ளமாம் உயிரை அபிவிருத்தி செய்வதை ஓர் அரசாங்கம் புறக்கணிக்க முடியுமா? உள்ளவுயர்வு பெறாத மக்கட்கூட்டம் வாழும் நாடு நாடாகுமா? ‘உயர்ந்தோர் மாட்டே உலகு’ என்பதன்றோ ஆன்றோர் - சான்றோர் அறிவுரை? எனவே, ஒரு நாட்டின் பரிபாலனத்துக்குப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம், நாடு நாடாக இருக்க வேண்டுமாயின், மக்களின் உள்ளத்தை உயர்த்தவும் நிச்சயமாக உதவி புரியத்தான் வேண்டும்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - பாரத் ரத்னா படும் பாடு! ஞாநி

 
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 24 வருட ஆட்டத்துக்குப் பிறகு ஓய்வெடுக்க முடிவு செய்ததும் அவருக்குப் பாரத் ரத்னா என்ற இந்திய அரசின் உயரிய விருதை அரசு அறிவித்திருக்கிறது. கூடவே சி.என்.ஆர்.ராவ் என்கிற மக்கள் யாரும் அறிய வாய்ப்பில்லாத ஒரு மூத்த விஞ்ஞானிக்கும் விருதை அறிவித்துள்ளது.சச்சின் நல்லவர்தான். ஆனால் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே ஆடினார். அவருக்கு எதற்கு விருது என்று ஐக்கிய ஜனதா தளப் பிரமுகர் ஒருவர் கேட்டிருக்கிறார். சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்த்தவர்களுக்கு விருது தரக் கூடாது என்றால் விஞ்ஞானியும் தகுதி இழந்துவிடுவார். அவர் மட்டுமல்ல, இதற்கு முன்பு பாரத் ரத்னா விருது வாங்கியவர்களில் எம்.ஜி.ஆர், எம்.எஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர, விருது பெற்ற பல குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் சம்பளம் வாங்கிக்கொண்டு பணியாற்றியவர்கள்தான்.தேசத்தின் மிக உயரிய இந்த விருது எந்த அடிப்படையில் யாருக்குத் தரப்படுகிறது என்பதற்குத் தெளிவான, துல்லியமான வரையறைகள் இல்லை. நாட்டுக்கு ஆற்றிய மிக உச்சமான தொண்டுக்கு (for the highest degrees of national service) என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. தொண்டு எந்தத் துறையிலும் இருக்கலாம். கலை, இலக்கிய, அறிவியல் துறைகள் மட்டுமன்றி எந்தப் பொதுத் தொண்டின் அங்கீகாரமுமாகவும் தரப்படலாம் என்று இருந்த வரையறையை எந்தத் துறையிலும் மனித முயற்சியின் உச்சமான சாதனைக்கு என்று அண்மையில் திருத்தினார்கள். கோயில் பிரசாதமாக சுண்டல் விநியோகிப்பது போல இந்த உயரிய விருதைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு வருடத்தில் மூன்று பேருக்கு மேல் விருது கொடுக்கப்படக் கூடாது என்ற விதியும் போடப்பட்டிருக்கிறது. யாருக்கு விருது தரலாம் என்று தேர்வு செய்வது யார்? ஒரே ஒருத்தர் கையில்தான் அதிகாரம் இருக்கிறது. பிரதமர், குடியரசுத் தலைவரிடம் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வளவுதான்.இந்த விதியைப் படித்துவிட்டு இதுவரை பாரத் ரத்னா விருது தரப்பட்டோர் பட்டியலைப் பரிசீலித்தால் நிச்சயம் வருத்தமாக இருக்கிறது. தங்களுடன் பதவியில் இருக்கிற சகாவுக்கே விருது கொடுத்துக் கொள்வது என்ற நடைமுறையைப் பலமுறை பிரதமரும் குடியரசுத் தலைவரும் பின்பற்றி இருக்கிறார்கள். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1954ல் துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் போதே அவருக்கு பாரத் ரத்னா விருதை அன்றைய பிரதமர் நேருவும் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தும் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து ஜாகீர் உசேன் துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் போதே அவருக்கு பாரத் ரத்னா விருது தரப்படுகிறது. கோவிந்த் வல்லப் பந்த் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும்போதே அவருக்கு 1957ல் பாரத் ரத்னா கிடைக்கிறது. (இவர்தான் ஹிந்தியை ஆட்சிமொழியாக்கியவர்.)
 
குடியரசுத் தலைவராக இருப்பவருக்கே அவர் தரும் விருதைத் தரமுடியாது என்பதால், ராஜேந்திர பிரசாத் 1962ல் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே அவருக்கு பாரத் ரத்னா அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் என்னால் ஜீரணிக்கவே முடியாமல் இருக்கும் தகவல் நான் மிகவும் மதிக்கும் ஜவாஹர்லால் நேருவைப் பற்றியதுதான். அவருக்கு 1955ல் பாரத் ரத்னா அளிக்கப்படுகிறது. அப்போது அவர்தான் பிரதமர். அப்படியானால், தனக்கு விருது தரும்படி தானே குடியரசுத் தலைவருக்கு அவர் பரிந்துரை செய்தாரா? பின்னாளில் அவர் மகள் இந்திரா காந்திக்கு 1971ல் பாரத் ரத்னா விருது தரப்பட்டது. அப்போது இந்திராவேதான் பிரதமர்!  இப்போது சச்சினுக்கு விருது அறிவிக்கப்பட்ட உடன் எழுந்த இன்னொரு சர்ச்சை, சச்சினை விட முக்கியமானவரான இந்திய ஹாக்கியின் தந்தை தியான்சந்துக்கு தராமல் சச்சினுக்குக் கொடுக்கலாமா என்பதாகும். தியான்சந்த் சாதனையாளர்தான். ஒலிம்பிக்கில் ஹாக்கியில் 1928,1932,1936 ஆகிய மூன்று வருடங்களும் தங்கம் வென்றவர். ஆனால் அவரது சாதனை சுதந்திர இந்தியாவுடன் எந்தச் சம்பந்தமும் இல்லாதது. விடுதலைக்கு முந்தைய காலகட்டம் அது. தவிர, அவர் அந்தச் சமயத்திலும் விடுதலை வரையிலும் கூட, பிரிட்டிஷ் ராணுவத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே அவரை பாரத ரத்னாவாகக் கருத நியாயமில்லை.எந்த அடிப்படையில் பாரத் ரத்னாவுக்கு ஒருவரை பரிசீலிப்பது என்பது நிச்சயம் குழப்பமானதாகவே இருக்கிறது. வாஜ்பாயி பாரத் ரத்னாவுக்கு உரியவர் என்றால் அதற்கு என்ன காரணம்? பொக்ரானில் இரண்டாம் முறை அணுகுண்டு வெடித்த சாதனைக்கா? அதற்காகத்தான் ஏற்கெனவே கலாமுக்குக் கொடுத்தாகிவிட்டதே! அரசியல் ரீதியாக என்றால் அத்வானி உரியவர் இல்லையா? எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கலாம் என்றால் ஏன் கருணாநிதிக்குக் கொடுக்கக்கூடாது ? லதா மங்கேஷ்கருக்குத் தரலாம் என்றால் ஏன் பி.சுசீலாவுக்கும் தரக் கூடாது ? மராத்திய லதா ஹிந்தியில் பாடி இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்திய மாதிரி தானே, தெலுங்கு சுசீலா தமிழில் பாடி வலுவூட்டியிருக்கிறார்? பீம்சேன் ஜோஷிக்கு உண்டு. பாலமுரளிக்குக் கிடையாதா? பிஸ்மில்லாகானுக்கு உண்டு. ராஜரத்தினம் பிள்ளைக்குக் கிடையாதா? இந்தக் கேள்விகளுக்கு முடிவே கிடையாது.
 
பாரத் ரத்னா சர்ச்சைகளுக்கு இரண்டே தீர்வுகள்தான் உள்ளன. ஒன்று எல்லா அரசு விருதுகளையும் முடிவு செய்ய சுயேச்சையான அறிஞர் குழு ஒன்றை ஏற்படுத்தலாம். பத்மஸ்ரீ, பத்மபூஷண், விபூஷன் எல்லாவற்றையும் இதன் கீழ் கொண்டு வந்துவிடலாம். அரசியல், நிர்வாகம் ஆகியவற்றின் செல்வாக்கு இல்லாமல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம், இந்தக் குழுவுக்கும் தேர்தல் ஆணையம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரிப் போல இருக்க வேண்டும். இது நடக்கும் வாய்ப்பு மிகக் குறைவுதான்.எனவே இரண்டாவது தீர்வே மேலானது. இனி இந்த விருதுகள் கிடையாது என்று அறிவித்துவிடலாம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிறபோது எல்லோரும் இந்நாட்டு பாரத் ரத்னாக்கள்தானே.

Monday, November 18, 2013

தலையைப் பாதுகாப்பது எப்படி? - டாக்டர் கு.கணேசன்

 
மனித உடலின் சிகரமாகத் திகழ்கிறது தலை. மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில்தான் உள்ளது. மனிதனை இயக்கும் மூளையும் அதில்தான் உள்ளது. உடல் உறுப்புகளிலேயே தலையாய உறுப்பு மூளை. நம் உடலின் ஒவ்வோர் அசைவையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது மூளை. மூளைதான் நமது உயிர். மூளையின் செயல்பாடு நின்ற பிறகு மற்ற உறுப்புகள் செயல்பட்டாலும் பலனில்லை. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வது தலையில் இருக்கும் மண்டை ஓடுதான். 
 
தலையின் முன்பகுதியில் முக எலும்புகளும் அதன் மேற்புறமும் பின்புறமும் ‘கிரேனியம்’ என்று சொல்லப் படும் கபாலமும் உள்ளன. தலை எலும்புகள் மொத்தம் 22. இவற்றில் முக எலும்புகள் 14. இந்தத் தலை எலும்புகளைத் தாங்குபவை கழுத்து எலும்புகள். உடலின் மற்ற பாகங்களின் தோலோடு ஒப்பிடும்போது, தலையில் இருக்கும் தோல் சிறிது வித்தியாசமானது. ‘ஸ்கால்ப்’ என்று சொல்லப்படும் தலைத் தோலின் கீழ் தசை எதுவும் இல்லை. இதனால் தலையில் லேசாக அடிபட்டால்கூட காயம் பலமாக ஏற்பட்டுவிடலாம். தலையில் ஆறு ரத்தக்குழாய்கள் உள்ளன. இதனால் தலையில் அடிபடும்போது அதிக அளவில் ரத்தம் இழப்பதற்கு வாய்ப்புண்டு.  தலைக்கு ஆபத்து வருவது பெரும்பாலும் சாலை வாகன விபத்துகளால்தான். அடுத்து, நாம் விளையாடும் போது, நடை தவறி கீழே தரையில் விழும்போது, அடிதடி சண்டை போடும்போது, துப்பாக்கிச்சூடு என்று பல வழிகளில் தலையில் காயங்கள் உண்டாகின்றன. தலையில் காயம் ஏற்படும்போது தோல் கிழியும். கபால எலும்பு உடையும். கபால எலும்புக்கும் மூளைக்கும் நடுவில் இருக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்து போகும். மூளை அதிர்ந்து போகும். மூளைத் திசுக்களும் கிழிபடலாம். மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் வெடித்து மூளையின் உள்ளேயே ரத்தம் உறையலாம். கண் பார்வை பறி போகலாம். காதுச் சவ்வு கிழிந்து காது கேட்காமல் போகலாம். இப்படிப் பல ஆபத்துகள் நெருங்கலாம். ஆகவே, தலைக்காயத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.தலைக்காயங்கள் இரண்டு வகைப்படும். 1. மூடிய காயங்கள். 2. திறந்த காயங்கள். மூடிய காயங்களில் ரத்த ஒழுக்கு இருக்காது. தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து வீங்கியிருக்கும். இதனை ‘ரத்தக்கட்டு’ என்று சொல்வார்கள். திறந்த காயங்களில் ரத்தம் வெளியேறும். தோல் மட்டும் சிதைந்திருந்தால் ‘சிராய்ப்பு’ என்கிறோம். இதில் ரத்தம் லேசாகவே கசியும். தோல் கிழிந்திருந்தால் அது ‘வெட்டுக்காயம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ரத்தம் குபுகுபுவென்று நிறைய வெளியேறும். பல நேரங்களில் பார்ப்பதற்குத் தலைக்காயம் லேசாக இருக்கும். ஆனால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். கடுமையான தலைக்காயத்தின் அறிகுறிகள் இவை: காயம் பட்ட தலையில் குழி இருக்கும் அல்லது வீக்கம் இருக்கும். காதுக்குப் பின்புறம் வீக்கம் காணப்படும். காது மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறலாம். அல்லது நிறமற்ற திரவம் கசியலாம். கண்ணில் ரத்தக்கசிவு காணப்படலாம். முகம் வீங்கலாம். கிறுகிறுப்பு வரும். வாந்தி வரக்கூடும். சுயநினைவில் மாற்றம் இருக்கலாம். சிலர் பிரமை பிடித்ததுபோல இருப்பார்கள். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்.
 
கபால எலும்பு முறிந்திருந்தால் அல்லது மூளைத் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வடியும். கண்கள் முன்பக்கமாகத் தள்ளப்படலாம். காதுக்குப் பின்புறம் கடுமையான வீக்கம் உண்டாகும். அடிபட்டவருக்கு மயக்கம் உண்டாகும். வலிப்பு வரலாம். சமயங்களில் தலையில் அடிபடும்போது மூளை மட்டும் கபாலத்துக்குள் அதிர்ந்து அசைந்திருக்கும். இதனாலும் மயக்கம் வரலாம்.  தலைக்காயம் எதுவாக இருந்தாலும் உடனடியாக முதலுதவி செய்யப்பட வேண்டும். பஞ்சை ஈரப்படுத்திக் கொண்டு அல்லது சுத்தமான பருத்தித் துணி கொண்டு காயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்.டெட்டால் இருந்தால் அதைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். ‘ஆன்டிபயாடிக்’ களிம்பு கைவசமிருந் தால், அதைக் காயத்தில் தடவி, சுத்தமான துணியால் தலையைச் சுற்றி அழுத்தமாகக் கட்டுப் போட வேண்டும். தலைக்காயத்திலிருந்து வெளியேறும் ரத்தக்கசிவை நிறுத்துவதுதான் முதலுதவியின் முக்கிய நோக்கம் என்பதால் பஞ்சு, துணி, பாண்டேஜ் எதுவும் கிடைக்காதபோது, முதலுதவி செய்பவர் தன் உள்ளங் கையால் தலைக்காயத்தின் மீது சுமார் 10 நிமிடங்களுக்கு அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாலே ரத்தம் கசிவது நின்று விடும். அதற்குள் துணி, கைக்குட்டை என்று ஏதாவது வைத்துக் கட்டுப் போட்டு விடலாம். காயத்திலிருந்து ரத்தம் கடுமையாக வெளியேறினால் கழுத்தைச் சுற்றி தாடையோடு ஒரு கட்டுப் போடலாம். கபால எலும்பில் முறிவு உள்ளது என்பது தெரிந்தால் தலையையும் கழுத்தையும் அசைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தலையில் காயம் பட்டவருக்குக் கழுத்து எலும்பிலும் முறிவு உண்டாகியிருக்கலாம். அப்போது கழுத்தை அசைத்தால் கழுத்தில் எலும்பு முறிவு அதிகப்பட்டுவிடும். அல்லது கபாலத்தின் உள்ளே ஏற்கெனவே ஏற்பட்டுள்ள ரத்தக்கசிவு அதிகப்பட்டுவிடும். இதைத் தவிர்க்க தலையில் அடிபட்டவரை சமதளத்தில் மல்லாந்து படுக்க வைக்க வேண்டும். அந்த நபர் சுவாசிக்கச் சிரமப்பட்டாலோ, சுயநினைவை இழந்திருந்தாலோ செயற்கை சுவாசம் மற்றும் இதய மசாஜ் தரப்பட வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த ஒரு விபத்து நடந்தாலும் முதல் ஒரு மணி நேரம் என்பதை ‘பொன்னான நேரம்’ என்கிறோம். அதற்குள் அவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிருக்கு ஆபத்து வருவது குறையும். ஆகவே, அடிபட்டவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அல்லது ஒரு வாகனம் மூலம் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
 
பாதுகாப்பான பயணம்தான் தலைக்குப் பாதுகாப்பு தரும். குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம். வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.சாலை விதிகளை மீறக்கூடாது. மித வேகம் நல்லது. அதிவேகம் ஆபத்தானது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும். பயணம் செய்யும் வாகனங்களில் குழந்தைகளை அமரச் செய்ய வேண்டும்; நிற்க வைக்கக்கூடாது. பெண்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது துப்பட்டாவை முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும். சைக்கிள் பயணம் என்றால், அதன் சுழலும் செயின் முழுவதும் மூடும்படியான உலோகக் கவசமுள்ள சைக்கிளில் பயணிப்பது நல்லது.

அன்னாசி


பதினைந்தாம் நூற்றாண்டில் கடல் வழியே உலகைச் சுற்றி வந்த கொலம்பஸ், தான் கண்டுபிடித்த ‘புது’ உலகத்திலிருந்து எதையெதையோ ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அவற்றில் ஒரு விசேஷமான பழம்.கொலம்பஸுக்கு அந்தப் பழம் பிடித்திருக்க வேண்டும். தன்னுடைய நாட்டு மக்களுக்கு அதனை அறிமுகப்படுத்த விரும்பினார். அதற்காக ஏற்றுமதி செய்தார். ஆனால், நீண்ட கப்பல் பயணத்தில் அந்தப் பழங்கள் எல்லாம் அழுகிவிட்டன. கொலம்பஸ் நொந்துபோனார்.நல்லவேளையாக, ஒரே ஒரு பழம் மட்டும் அழுகாமல் தப்பியிருந்தது. அதைத் தன்னுடைய அரசர் ஃபெர்டினாண்ட்க்கும் அரசி இசபெல்லாவுக்கும் பரிசாகக் கொடுத்தார் கொலம்பஸ்.அந்தப் பழத்தின் தலையில் கிரீடம்போல இலைகள் முளைத்திருந்தன. சொரசொரப்பான தேகம். தொட்டுப் பார்த்தால் கெட்டியாக இருந்தது, முகர்ந்து பார்த்தால் ஆளை மயக்கியது.வாசனையிலேயே அசந்துபோன அரசர், அந்தப் பழத்தை வெட்டிச் சாப்பிட்டார். ஆஹா! நான் இதுவரை இப்படி ஒரு பழத்தைச் சாப்பிட்டதில்லையே" என்று கிறங்கிவிட்டார்.உடனடியாக இந்தப் பழத்தை நம் நாடு முழுவதும் விளைவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இனிமேல் தினம் நான் இதைச் சாப்பிடவேண்டும்!"

அரசர் நினைத்ததுபோல அது அத்தனை சுலபம் இல்லை. அந்தப் பழம் சில குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில், மண் வகைகளில்தான் விளையும். அன்றைய ஐரோப்பாவுக்கும் அதற்கும் ஒத்துப்போகவில்லை.அதனால் என்ன? மன்னர் நினைத்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் அதைத் தருவிக்கலாமே?அன்று தொடங்கி, அந்தப் பழம் அரசர்களின் விருப்பமான விஷயமாகிவிட்டது. எவ்வளவு செலவானாலும் சரி, அந்தப் பழம் எங்கே விளைகிறதோ அங்கிருந்தே நேரடியாக இறக்குமதி செய்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.அபூர்வமாக மட்டுமே கிடைக்கும் அந்தப் பழத்தை அவர்கள் ‘அரசர்களின் பழம்’ (Fruit of the kings)என்று செல்லமாக அழைத்தார்கள்.இன்றைக்கு, அந்த அருமையான பழம் உலகம் முழுவதும் கிடைக்கிறது. மன்னர்கள் மட்டுமல்ல, நம்மைப் போன்ற மக்களும் வாங்கிச் சாப்பிடலாம்.ஆகவே, ‘அரசர்களின் பழம்’ என்ற பெயரைத் திருப்பிப்போட்டு, அதனைப் ‘பழங்களின் அரசன்’ (King of fruits) என்று மாற்றிவிட்டார்கள். ‘பைனாப்பிள்’ என்று ஆங்கிலத்திலும், ‘அன்னாசி’ என்று தமிழிலும் அழைக்கப்படும் சுவையான பழம் தான் அது!கடைக்குச் செல்கிறீர்கள். அன்னாசிப் பழம் ஒன்றைக் கையில் எடுக்கிறீர்கள். கடைக்காரரிடம் இந்தப் பழம் என்ன விலை?" என்று விசாரிக்கிறீர்கள்.உண்மையில் உங்கள் கேள்வியே தவறு. அது ‘பழம்’ அல்ல, ‘பழங்கள்’! 

ஆமாம், நாம் ஒரு பழமாக நினைக்கும் அன்னாசிக்குள் பல பழங்கள் ஒருங்கிணைந்து கூட்டணி சேர்ந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் "Multiple Fruit' என்று அழைக்கிறார்கள்.சந்தேகமாக இருக்கிறதா? ஓர் அன்னாசிப் பழத்தைக் குறுக்கே நறுக்கிப் பாருங்கள், மையத்தில் ஒரு தண்டு தெரியும், அதைச் சுற்றிச் சிறு கண் போன்ற பகுதிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு பழம். மொத்தமாகச் சேர்ந்து சொரசொரப்பான வெளித்தோலுடன் வளர்கின்றன!பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் அன்னாசிப் பழங்கள் அதிகபட்சம் ஓரிரு கிலோ எடைதான் இருக்கும். ஆனால், விவசாயிகள் அவற்றைப் பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அவை மிகப் பெரியதாக வளர்ந்து எட்டு, ஒன்பது கிலோ எடைவரை செல்லக்கூடும்.அன்னாசி புதர் போன்ற சிறு செடிகளில் விளைகிறது. பொதுவாக மலைச் சரிவுகளில்தான் அன்னாசி நன்றாகச் செழித்து வளரும். மலையோரக் கிராமங்கள் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் இதனைப் பயிரிடுகிறார்கள்.தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்க அன்னாசியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.‘பைனாப்பிள்’ என்ற ஆங்கிலச் சொல்லை, பைன் + ஆப்பிள் என்று பிரிக்க வேண்டும். இந்தப் பழத்தை மேலோட்டமாகப் பார்த்தால் பைன் மரக் கூம்பைப் போல் சொரசொரப்பாக இருக்கும், ஆனால் வெட்டிச் சாப்பிட்டால் ஆப்பிளைப்போல ருசிக்கும் என்பதால் அப்படிப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.இதனைத் தமிழில் ‘அன்னாசி’ என்று அழைக்கிறோம். உண்மையில் இது போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்து வந்த பெயர். செந்தாழை, பிருத்தி, அன்ன தாழை போன்ற மாற்றுப் பெயர்களிலும் இதனை அழைப்பது உண்டு.இந்தச் செடியின் தாவரவியல் பெயர் ‘அனனாஸ்’. இதற்கு ‘மிக நல்ல பழம்’ என்று அர்த்தம்.அன்னாசிப் பழத்தைத் தோல் சீவித் துண்டாக்கி அப்படியே சாப்பிடலாம். பல நாடுகளில் இதன்மீது உப்பு, காரப்பொடியைத் தூவி அப்படியே சாப்பிடுவார்கள். அப்படியே குச்சியில் குத்தி எடுத்து ஐஸ்க்ரீம்போலச் சுவைக்கிறவர்கள் உண்டு. இதேபோல, அன்னாசிப் பழரசமும் மிகச் சுவையானது. இந்தப் பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள், ஜெல்லி தயாரிக்கிறார்கள், கேக் போன்ற இனிப்புகளின் மீது அலங்காரமாக நறுக்கி வைக்கிறார்கள்!

பிட்ஸாவில் பொதுவாகக் காரமான சமாசாரங்கள், காய்கறிகள்தான் சேர்க்கப்படும். ஆனால் அன்னாசிக்கு மட்டும் அங்கே விதிவிலக்கு, இனிப்பான அன்னாசிப் பழத்துண்டுகளைத் தூவிய பிட்ஸா உலகம் முழுக்கப் பிரபலம்.இவை தவிர, அன்னாசிப் பழத்தைச் சமைத்துச் சாப்பிடுகிற பழக்கமும் இருக்கிறது. குறிப்பாக, அன்னாசி அல்வா பலருக்குப் பிடித்த இனிப்பு வகை. அன்னாசிப் பழத்தில் ரசம், பச்சடி, சாலட் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். கேசரியில் இதனைத் துண்டாக்கிச் சேர்ப்பது தனி சுவையைத் தரும்.அன்னாசியில் பெரும்பகுதி தண்ணீர்தான். ஆகவே, இதை நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பும், ஆனால் தொப்பை போடாது.பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் ஆகியவை இதில் ஏராளமாக உண்டு. வைட்டமின் இயும் அதிகமாக இருக்கிறது.அன்னாசிப் பழத்துக்கு மருத்துவ குணங்களும் நிறைய உண்டு. உடலில் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும், பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகளுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. வயிற்றில் புழுக்கள் இருந்தால் அவற்றை நீக்கிக் குணப்படுத்தும். வியர்வை, சிறுநீர் சுரப்பில் இருக்கக்கூடிய கோளாறுகளை அகற்றும். உடலில் காயம்படும்போது ரத்தம் அதிகம் வெளியேறாமல் காக்கும்.‘பைனா’வை நேரடியாகவோ, அல்லது, பட்டு, பாலியெஸ்டருடன் சேர்த்தோ நெசவு செய்யலாம். இதிலிருந்து சில விசேஷமான ஆடைகளைச் செய்கிறார்கள். மேஜை விரிப்பு, பைகள், பாய்கள் போன்றவற்றையும் தயாரிக்கிறார்கள்.அன்னாசியை நறுக்கும்போது நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற தோல், இலைகள் போன்றவற்றுக்கும் பயன் இருக்கிறது. வினிகர் உற்பத்தியிலும், வேறு சில பானங்களைத் தயாரிக்கும்போதும் இவற்றைச் சேர்க்கிறார்கள், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கிறார்கள்.

என்.சொக்கன்

படேல் ஒரு மதவாதியா?


அமெரிக்காவிலிருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விடவும் பிரமாண்டமாக சர்தார் படேலுக்கு ஒரு சிலையை நிறுவத் திட்டமிட்டு வருகிறது குஜராத் அரசு. அதன் ஆரம்ப விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அதே மேடையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசும்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவை மறைமுகமாகத் தாக்கினார்.

சர்தார் வல்லபாய் படேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்றும் வருந்துகின்றனர். அவர் அன்று மட்டும் பிரதமராகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்" என்ற அவரது பேச்சு நேருவின் கொள்கைகளினால் தான் மதவாதம் வளர்ந்தது என்ற தொனியில் இருந்தது.  பிரதமர் மன்மோகன்சிங் பேசும் போது, படேல் உண்மையான மதச்சார்பற்றவர். வல்லபபாய் படேல் இருந்த கட்சியில் நான் இப்போது இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்" என்று கூறிப் பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து அத்வானி, முழுமையான மதவாதி என படேலை வர்ணித்தவர் நேரு" என்றும், படேலை மதவாதி என்று கூறியவர்கள், இப்போது அவரை மதச்சார்பற்றவர் என்றும், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் காங்கிரஸ் காரர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்" என்று தன் ‘பிளாக்’கில் தாக்கியிருக்கிறார்.

உண்மையில் அதுதான் நேருவின் கருத்தா? படேல் மதவாதியா? படேலின் செயலராக இருந்த எம்.கே.கே நாயர் ஐ.ஏ.எஸ். தமது "The story of an era told without ill will" என்ற தம் புத்தகத்தில் அன்று நடந்ததைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பக்கங்களிலிருந்து, சுதந்திரம் அடைந்தபோது இந்தியா முழுவதும் தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை இந்தியப் பேரரசுடன் இணைக்கும் முயற்சியில் உள்துறை அமைச்சராக இருந்த படேல் ஈடுபட்டார். ஐதராபாத் நிஜாம் தமது சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் சேர்க்க விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக, பாகிஸ்தானுக்குத் தமது தூதரை அனுப்பினார். பாகிஸ்தானுக்குப் பெருமளவில் பணமும் அளித்தார். நிஜாமின் ஆதரவாளர்களும் அவரது படையினரும் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், ஐதராபாத்தில் நடந்த சம்பவங்களை விளக்கிய படேல், அங்கு ராணுவத்தை அனுப்பி அதை இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

வழக்கமாக அமைதியாக, கண்ணியமாகப் பேசக்கூடிய பிரதமர் நேரு, இதனால், கோபமடைந்து படேலைப் பார்த்து, நீங்கள் ஒரு முழுமையான மதவாதி. உங்கள் பரிந்துரையை ஏற்கமாட்டேன்" என்று சத்தமாகப் பேசினார். அதைக் கேட்டு படேல் அமைதியாக இருந்தாலும் அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த விஷயம் அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் கவனத்துக்குச் சென்றது. அவர் நேருவையும், படேலையும் ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.  அப்போது ‘ஐதராபாத்தில் கன்னியாஸ்திரிகள் சிலரை நிஜாமின் படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இங்கிலாந்து தூதரிடமிருந்து ராஜாஜிக்குக் கடிதம் வந்ததைக் காட்டினார். அதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு அழுத நேரு, இனி ஒருகணம் கூட தாமதிக்கக் கூடாது. அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்" என்றார். சொந்த நாட்டிலேயே ராணுவத்தால் ஒரு இனம் தாக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில், உணர்ச்சி வேகத்தில் நேரு சொன்ன வார்த்தைகள் அவை. ராஜாஜி தந்த அறிவுரையில் உண்மை நிலையை உணர்ந்து உடனடியாக மாற்றிக் கொண்ட கருத்து அது.நம் அரசியல்வாதிகள் தலைவர்களின் வார்த்தைகளைத் தங்கள் வசதிக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை எப்போதுதான் மாறுமோ?

ரமணன்

ஆனந்த் - கார்ல்சன்

 
ஆனந்த் - கார்ல்சன் இடையேயான உலக சாம்பியன்ஷிப் போட்டியினால் இந்திய செஸ் வளர்ச்சியின் மீதான கவனம் அதிகமாகியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நல்ல செய்தி. FIDE rated players என்று சொல்லப்படுகின்ற அதிகப் புள்ளிகள் கொண்ட வீரர்களில் இந்தியாவும் பிரான்ஸும் இப்போது சமநிலையில், முதலிடத்தில் உள்ளன. இந்தியாவின் முதல் FIDE rated player, விஸ்வநாதன் ஆனந்த் அல்ல. மேனுவல் ஆரோன் (FIDE பட்டியலில் வர ஆயிரம் புள்ளிகள் இருந்தாகவேண்டும்.) இந்தியாவின் முதல் இன்டர்நேஷனல் மாஸ்டர் இவர்தான். ஆனந்தின் வரவுக்குப் பிறகு இந்திய செஸ் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. அதுவும் கடந்த பத்து வருடங்களில் பலமடங்கு அதிகமாகியிருக்கிறது. இந்தியாவில் இப்போது 34 கிரான்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு, குஜராத் பள்ளிகளில் செஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு எந்த நாடுகளை விடவும் இந்தியாவில்தான் அதிகமாக நபர்கள் செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரான்சு, கடந்த 10 வருடங்களாக முதலிடத்தில் இருக்கிறது. எப்படியும் அடுத்த மார்ச், ஏப்ரலில் பிரான்சைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டி.வி.யில் லைவாகப் பார்ப்பது புதிய அனுபவம், அதுவும் கமென்ட்ரியோடு. கமென்டேட்டர்களில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருப்பவர், சூசன் போல்கர். ஹங்கேரி, புதாபெஸ்டைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வாழ்கிறார். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல் கரின் சகோதரி. சூசன், பெண்களில் முதல் கிரான்ட் மாஸ்டர் என்கிற பெருமையை உடையவர். ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் வீராங்கனை. உலகில் எங்கு செஸ் போட்டிகள் நடந்தாலும் அதைப் பற்றிய விவரங்களைத் தம் இணையதளத்தில் வெளியிடுகிறார். அடிக்கடி செஸ் தொடர்பான போட்டிகளை வாசகர்களுக்கு வைப்பார். சூசன், 1990களில் ஆனந்துடன் பல போட்டிகளில் ஆடியிருக்கிறார்.  

அப்போது ஆனந்த் பரபரப்பாக ஆடுவார். எவ்வளவு பெரிய கிரான்ட் மாஸ்டராக இருந்தாலும் அரை மணி நேரத்தில் தோற்கடித்து விடுவார். அவர் மூளை கம்ப்யூட்டர் போலச் செயல்படும்" என்கிறார். 
 
சரி, யார் அடுத்த உலக சாம்பியன்? ஆனந்தை லேசில் நினைக்க முடியாது. இது மாதிரியான போட்டிகளில் அவர் மிகவும் கடினமாக ஆடுவார். ஆனால், கார்ல்சன் அடுத்த ராஜாவாகத் தயாராக இருக்கிறாரா என்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்கிறார்.
 
ச.ந.கண்ணன்

அருள்வாக்கு - மனோபாவம் அவசியம்

சிஷ்யன் பண்ணுகிற பாபம் குருவையே போய்ச் சேருகிறது. இவனுக்கு வெறும் படிப்பை மட்டும் சொல்லித் தராமல் இவனை ஒழுக்கமுள்ளவனாக்கவும் அவர் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார். எடுத்துக் கொண்ட பொறுப்பைச் சரியாக நிறைவேற்றாவிட்டால், அதற்குத் தண்டனை உண்டு. சிஷ்யனை அவர் யோக்கியனாக்க முடியவில்லை, அவன் ஒரு பாபம் செய்கிறான் என்றால், அந்தப் பாபம் சிஷ்யனைத் தாக்காது. அவனைச் சீர்த்திருத்தத் தவறிய குருவையே சென்றடையும்.
 
இப்போது ஸ்கௌட் காம்ப் (சாரணர் முகாம்) என்று குழந்தைகளை ஒரு மாஸம், அரை மாஸம் வெளியூருக்கு அனுப்புகிறீர்கள் அல்லவா? இதையே கொஞ்சம் விஸ்தரித்து ஒரு ஆசார்யனிடத்தில் ஒரு வருஷமாவது கூட வசித்து பிக்ஷாசர்யம் பண்ணி வரும்படியாக ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொல்கிறேன். இதனால் அநேக நல்ல பழக்கங்கள், கட்டுப்பாடுகள் உண்டாகும்; குரு பக்தி என்பதன் த்வாரா (வழியாக) இத்தனையும் ஏற்படும்.
 
குழந்தைகளைத் தங்களோடு வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கப் பிரியப்படுகிற குருமார்களையும் அவர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைக்கக்கூடிய பெற்றோர்களையும் சமூக உணர்ச்சியின் மூலம்தான் உண்டாக்க வேண்டும். இந்த ஸஹாயத்தைச் செய்யும்படியாக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். படிப்பு முடிந்த பின் தக்ஷிணை தர முடியாத ஏழைக் குடும்பத்தினருக்காகவும் மற்றவர்கள் தரவேண்டும். அநேகமாக இப்படிப்பட்ட வசதியில்லாதவர்கள்தான் குழந்தைகளைக் குருகுலவாஸத்துக்கு அனுப்பக்கூடியவர்கள். அவர்களுக்கான ஸஹாயத்தை அங்கங்கே பத்துப்பேர் சேர்ந்து பண்ணினாலும் போதும். தனியாகப் பெரிய ஸ்தாபனம் என்று ஏற்படுத்தக்கூட வேண்டும். ஸ்தாபனம் கூடவே கூடாது என்று சொல்வதாக அர்த்தமில்லை. ஆனால் அப்படிப் பெரிய ஸ்கேலில் நடப்பதற்காக நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கிறேன். இப்போது நம்மளவில் சாத்யமான அளவுக்கு ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறேன். நாம் ஒவ்வொருவரும் சொந்த அக்கறை (Personal interest) காட்டி, தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்பதே முக்கியம். இந்த மனோபாவம் வருவதுதான் அவசியம்.  

எனவே நாம் இதில் முயற்சி எடுக்க வேண்டும். யார் வருவார்கள் என்று முயற்சி பண்ணாமலே இருந்துவிடக் கூடாது. மனப்பூர்வமாக முயற்சி பண்ணினால் பத்துப் பேராவது பலன் அடையாமல் போக மாட்டார்கள்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sunday, November 17, 2013

நவ.17 திருக்கார்த்திகை

 
காலத்தாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப்பெரிது என்பார் திருவள்ளுவர். 
 
சிறிய நன்றிக்கே இவ்வளவு மகத்துவம் என்றால், நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் மீது, நாம் நன்றி கொள்ள வேண்டும் என்பதற்கு, முருகப்பெருமானின் பிறப்பு ஒரு உதாரணம். அவர் தாயின் சம்பந்தமின்றி அவதரித்தவர்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் அந்த பொறிகள் விழுந்து, ஆறு குழந்தைகளாக மாறின. அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க, ஆறு பெண்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், 'கார்த்திகை பெண்கள்' எனப்பட்டனர். பிள்ளைகளுக்கு பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். இந்த நன்றிக்கடனுக்காக, அவர்கள் ஆறுபேரையும் ஒரே நட்சத்திரமாக மாற்றி, வானமண்டலத்தில் இடம் பெற செய்தார் சிவன். அதுவே கார்த்திகை நட்சத்திரம்.
 
முருகன் பிறந்தது விசாக நட்சத்திரத்தில். ஆனால், தன் பிறந்த நாளைக் கூட அவர் வருடம் ஒருமுறை தான் கொண்டாடுவார் (வைகாசி விசாகம்). ஆனால், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெண்களுக்குரிய, எல்லா கார்த்திகை நட்சத்திர நாட்களிலும், அந்த தேவியரையும் நினைத்து, தன்னையும் வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக வரம் அளித்தார். இதனால் தான் இன்றும், 'கார்த்திகை விரதம்' பிரபலமாக இருக்கிறது. இந்த சம்பவத்தின் மூலம், தங்களை வளர்த்து ஆளாக்கியவர்களை மறவாத உள்ளம் வேண்டும் என்ற நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். கார்த்திகை விரதம் துவங்குபவர்கள் திருக்கார்த்திகையில் துவங்கி, ஒரு வருடம் தொடர்ந்து அனுஷ்டித்தால் நினைத்தது நிறைவேறும்.
 
வளர்த்தவர்களைத் தான் என்றில்லை, நமக்கு ஒருவர் சிறு உதவி செய்தாலும், அதைப் பெரிதாகக் கருதி, நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்பதை கார்த்திகை திருநாள் நமக்கு உணர்த்துகிறது.
 
முருகன் ஒளி வடிவாகப் பிறந்தவர். அந்த ஒளியை உருவாக்கியவர் சிவபெருமான். இதனால், தந்தைக்கு திருவண்ணாமலையிலும், மகனுக்கு திருப்பரங்குன்றம் மலையிலும் தீபம் ஏற்றுவர். இன்னும் சிறு சிறு மலை முருகன் கோவில்களிலும் கூட கார்த்திகை தீபம் ஏற்றுவதுண்டு.சிவன் பெருஞ்சுடராக விளங்குகிறார். அவர் நெற்றியில் இருந்து சிறு சிறு குழந்தைகள் உருவாயின. அதுபோல, திருவண்ணாமலை தீபம் என்னும் பெருஞ்சுடரில் இருந்து, நம் வீட்டு சிறு அகல்களில், குட்டிக் குழந்தைகளாக ஒளி வீசுகிறது. முருகன் சிவாம்சம் கொண்டவர். அதாவது, சிவனும், முருகனும் நம் வீட்டு தீபங்களில் ஒளி வீசுகின்றனர் எனலாம்.முருகப்பெருமானை தீபத்திற்கு ஒப்பிடுகிறார் அருணகிரிநாதர். 'தீபமங்களஜோதீ நமோநம...' என்று திருப்புகழில் அவர் பாடுகிறார். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்த போது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக, அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட, கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும்.விளக்கொளி இல்லாவிட்டால் வீடு இருண்டு விடும். அதுபோல மனதில் ஒளி இல்லாவிட்டால், உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். கார்த்திகை திருநாளில் வீடு நிறைய தீபம் ஏற்றுவது மட்டுமல்ல, நம் மனதிலும் நற்குணங்களாகிய தீபங்களை ஏற்றுவோம்.

தி.செல்லப்பா

Friday, November 15, 2013

ஓ பக்கங்கள் - ஒரு டிராஜெடி பற்றிய காமெடி! ஞாநி

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசிலிருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரி தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாகத் தீர்மானம் நிறைவேறச் செய்திருக்கிறார் ஜெயலலிதா.

‘இந்தியா கலந்துகொள்ளும். பிரதமர் தான் செல்லமாட்டார். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்வார்’ என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்த பின்னர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் அவசர அவசரமாக இரண்டாம்முறை இதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார் ஜெ. இதற்கு ஏதாவது அர்த்தம், பயன், விளைவு இருக்கமுடியுமா என்று பார்த்தால், ஒன்றும் கிடையாது. 

குர்ஷித் போய்விட்டார். சட்டமன்றத் தீர்மானத்துக்கு ஒரு மரியாதையும் இல்லை.  ஒரு வாதத்துக்காக, ‘குர்ஷித்தையும் போகவேண்டாம் என்று பிரதமர் நிறுத்திவைத்து தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு மரியாதை செலுத்தியிருந்தால்...?’ என்று கற்பனை செய்வோம். அப்போதும் அதன் விளைவு என்ன? ஒன்றும் கிடையாது. இந்தியா கலந்து கொள்ளவில்லை என்பதால் காமன்வெல்த் மாநாடு ரத்து செய்யப்பட்டிராது. அடுத்த இரு வருடங்களுக்கு இலங்கைதான் காமன்வெல்த்தின் தலைமையில் இருக்கும். ராஜபட்சேதான் காமன்வெல்த் தலைவராக இருப்பார். இந்தியா கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் இதுதான் யதார்த்த நிலைமை. ராஜபட்சேதான் அடுத்த இரு வருட காமன்வெல்த் தலைவர். அந்த காமன்வெல்த்தின் கூட்டங்களிலே இலங்கை மீதான மனித உரிமை மீறல், போர்க் குற்றங்களுக்கான கண்டனங்களோ, விசாரணையோ நடக்கும் வாய்ப்பே இல்லை. காமன்வெல்த்தில் இந்தியா பேசினாலும் பேசாவிட்டாலும், அது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வை வளமாக்கவோ, 13 வது திருத்தத்தைக் கொண்டு வந்து அரசியல் சம உரிமைகளைத் தரவோ, இலங்கையின் போர்க்குற்றவாளிகளை உலக நீதிமன்றத்தில் நிற்கவைத்து விசாரிக்கவோ துளியும் உதவப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்பு அல்ல காமன்வெல்த். இது ஒரு முன்னாள் அடிமைகளும் ஆண்டானும் சேர்ந்து இப்போது சமமாகிவிட்டோம் என்று நம்பிக்கொண்டு ஒன்றாக விருந்து சாப்பிட்டு மகிழும் ‘க்ளப்’ மட்டும்தான். தமிழ்நாட்டில் நேற்று முளைத்த தமிழகப் பிரிவினைக் கனவுடைய சிறு குழு முதல், இலங்கைப் பிரச்னையைச் சமாளிப்பதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களான கருணாநிதி, ஜெயலலிதா வரை எல்லோருக்கும் இதுதான் யதார்த்தம் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்தப் பிரச்னையை எழுப்பி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி கிடைத்த லாபத்தை அடையலாம் என்பதே வெவ்வேறு கட்சிகளின் கணக்கு.சட்டமன்றத்தில் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் இருமுறை தீர்மானம் நிறைவேற்றுகிற முதலமைச்சர் நியாயமாகச் செய்திருக்க வேண்டியது என்ன? அத்தனை கட்சிகளின் பிரதிநிதிகளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு தில்லிக்குப் போய் நேருக்கு நேர் பிரதமரைச் சந்தித்து, ‘காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்றுங்கள், வேறு நாட்டில் நடந்தால் மட்டுமே மாநாட்டுக்கு வருவேன் என்று சொல்லுங்கள்,’ என்றெல்லாம் சொல்லியிருக்க வேண்டும். நேரில் சொன்னால் நடந்துவிடுமா என்று வாதிடலாம். தீர்மானம் போட்டால் மட்டும் நடக்கிறதா என்ன? நேருக்கு நேர் போய் பிரச்னையைப் பேசும்போது, இருதரப்பும் ஒரு மையப் புள்ளியில் சந்திக்க வேண்டிய கட்டாயமேனும் ஏற்படும்.இலங்கை அரசை உலக அரங்கில் தனிமைப்படுத்தி, பிறநாட்டு அரசுகள் உதவியுடன் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனையும் மக்களுக்குப் பரிகாரமும் பெற்றுத் தர, தனிமைப்படுத்தும் உத்திகளில் ஒன்றுதான் காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை என்று வாதிடலாம். 

ஆனால் அதை எப்போது செய்திருக்க வேண்டும்? 2011லேயே அடுத்த மாநாடு இலங்கையில் என்பதும் அதையொட்டி அடுத்த தலைவர் இலங்கை என்பதும் அறிவிக்கப்பட்டுவிட்ட விஷயங்கள். அப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையம் முன்பு இலங்கையை நிறுத்தக் காட்டிய முனைப்புக்குச் சமமான முனைப்புடன் யாரும் காமன்வெல்த் முடிவை எதிர்க்கவில்லை.அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று வற்புறுத்தும்படி இந்தியப் பிரதமரை தமிழகக் கட்சிகள் அப்போது நிர்ப்பந்திக்கவில்லை. காரணம் உடனடியாகத் தேர்தல் வாய்ப்பு அப்போது இல்லை. இப்போது தேர்தலை மனத்தில் வைத்து மட்டுமே எல்லாம் நடக்கிறதே தவிர, ஈழத் தமிழரைக் கருதியே அல்ல.ஒப்புக்குத் தீர்மானம் நிறைவேற்றுகிறோம் என்று தெரிந்தே எல்லோரும் நாடகமாடுகிறார்கள். தீர்மானம் போட்டால் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையுள்ள விஷயங்களில் நிச்சயம் தீர்மானம் போடமாட்டார்கள். கூடங்குளம் அணு உலையையே எடுத்துக் கொள்வோம். இரண்டு வருடங்களாக மக்கள் போராட்டம் நடக்கிறது. சுமார் ஒரு வருடத்துக்கு மேல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்கள். இன்று வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் ஒரு விலங்கு இறந்த செய்தி கேட்டதும் முதலமைச்சர் அங்கே சென்று இதர மிருகங்களின் நிலையைப் பார்வையிடுகிறார். ஆனால் கூடங்குளத்துக்கு ஒருமுறை கூடப் போய் மக்களைப் பார்த்ததில்லை. ‘இன்னும் 15 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கிவிடுவோம்’ என்று இரண்டு வருடம் வாதா வாங்கிக் கடைசியில் தொடங்கிவிட்டோம் என்று மத்திய அரசு அறிவித்த மின் உற்பத்தி ஏன் ஒரு சில வாரம் கூட நீடிக்கவில்லை? அணு உலையில் என்ன நடக்கிறது என்று மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியுமா? முடியாது. நிழல் யுத்தம் நடத்துவது பாதுகாப்பானது. நிஜ சண்டைகள் போட்டால், சி.பி.ஐ.யும் வழக்குகளும்தான் வரும். இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாகச் சில மாதங்களாக அரசியல் கட்சிகளும் சில அமைப்புகளும் எழுப்பிய நவரச சுவை நிரம்பிய நாடகத்தின் உச்சகட்ட காமெடிக் காட்சிதான் தமிழக சட்டமன்றத்தின் ‘வரலாற்று சிறப்பு’ மிக்க தீர்மானம்.

Friday, November 08, 2013

அருள்வாக்கு - குரு!

 
சாந்தமும் விநயமும் இருந்த வரையில் வளர்ந்தது. இப்போது சாந்தத்தைக் கெடுத்து சலனத்தைக் கொடுத்துத் தடுமாற வைக்க எத்தனை உண்டோ அத்தனை சினிமாவும் கதைப் புஸ்தகங்களும், ஸ்கூலில் படிக்கிற நாளிலேயே வந்து சேர்ந்து விடுகிறது. காமம் புகுந்து விகாரப்படுத்தாத பிரம்மசரியம் என்பது படிக்கிறவனுக்கு இல்லை. சாந்தத்தைக் கெடுத்துச் சலனத்தைப் பெரிதாகக் கொடுக்கிற இன்னொரு சத்ரு குரோதம். அதைத்தான் பள்ளிக்கூட நாளிலிருந்தே இன்றைய அரசியல் கட்சிகள் பசங்களுக்கு ஊட்டி வருகிறது. சாந்தம் போய், விநயம் போய் அகம்பாவமும் கர்வமும் வந்தபின், அவற்றோடு கூட உண்மையான வித்யையும் போய் விட்டது.
 
பையன் வீட்டிலேயே ட்யூஷன் கற்றுக் கொண்டால் பையன் யஜமான், வாத்தியார் சேவகன் என்றே அர்த்தம். ஹாஸ்டலிலும், காலேஜிலும்கூடத் ‘தன் யஜமான்’ என்பதால் தான் ஸ்டிரைக் பண்ணுகிறான். வார்டனையும் ப்ரொபஸரையும் அடிக்கப் போகிறான். ஏனென்றால் இங்கெல்லாமும் முதலில் பையனிடம் கையை நீட்டிப் பணத்தை வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். குருகுலத்திலோ கடைசியாகத்தான் தக்ஷிணை. இம்மாதிரி விஷயங்களில் நம் பூர்விகர்களின் ஸைகாலஜி - நுட்பம் ஆச்சரியமாயிருக்கிறது! பல வருஷம் அவரோடு சேர்ந்து அன்பாகப் பழகினபின் சிஷ்யனுக்கே எதைத் தருவோம், எதைத்தான் தரக் கூடாது?" என்று நன்றியும் ஆர்வமுமாக இருக்கும். இம்மாதிரி சந்தர்ப்பத்தில் இந்திராணியின் குண்டலத்தைக் கொண்டு வா! நாகரத்தினத்தைக் கொண்டு வா!" என்று கேட்ட குருமாரும் உண்டு. ஆனால் இப்படிக் கேட்டவர்கள் அபூர்வமே. சிஷ்யனால் இம்மாதிரி அஸாத்யத்தையும் சாதிக்க முடிகிறது என்று காட்டி அவனைப் பெருமைப்படுத்தவே இவர்கள் இப்படிக் கேட்பார்கள். பொதுவில் எந்த குருவும் துராசை பிடித்து எதுவும் கேட்கமாட்டார். அல்ப சந்தோஷியாக எதிலும் திருப்திப்பட்டு விடுவார்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

விராத் கோலி - ரோஹித் சர்மா


உங்களுடைய 100 சதங்கள் சாதனை, யாரால் முறியடிக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு சச்சின் அளித்த பதில் : ‘என் சாதனையை விராத் கோலி, ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது.’ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் இல்லையே என்று ஒரு நிமிடமாவது யோசித்தீர்களா? ஒருநாள் போட்டியில், சச்சின் இல்லாத குறையை கோலி, ரோஹித் போன்ற இளம் வீரர்கள்தான் தீர்த்து வைக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு இவ்விருவரின் பங்களிப்பு மிக அவசியமாக இருக்கிறது. 2008ம் வருடம், விராத் கோலிக்குப் பல கதவுகளைத் திறந்தது. அவர் தலைமையிலான U19 அணி உலகக் கோப்பையை வென்றது. அந்த வருடம்தான் இலங்கைத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் தொடரில் ஓரளவு சிறப்பாகவே ஆடினார். நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் அடுத்த தொடர்களில் இடம் பெறவில்லை. ஒரு வருடம் இந்திய அணியில் கோலி இல்லை. கம்பீருக்கு காயம் ஏற்பட்டபோது மீண்டும் அணிக்குள் நுழைந்தார். பிறகு, கோலியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐ.பி.எல்., கோலியின் திறமையைக் கொண்டுவந்த மாதிரி அவருடைய ஆக்ரோஷமான பக்கத்தையும் காண்பித்தது. இளமைத் துடிப்பு, கோபம், பொறுப்பற்றத்தன்மை போன்றவற்றால் திறமை வீணாகிவிடுமோ என்று பலரும் பயந்தார்கள். ‘கிரிக்கெட்டை விடவும் தான் பெரிய ஆள் என்று கோலி நினைத்துக் கொண்டிருக்கிறார்,’ என்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் ஒருமுறை சொன்னது கோலியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. விமர்சனங்களைப் பக்குவமாகக் கையாண்டார். ‘நான் செய்தது தவறுதான். திருந்திவிட்டேன்’ என்று பேட்டி கொடுத்தார். நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக ஆடி ரோஹித் சர்மாவை முந்திக்கொண்டு 2011 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார். இறுதி ஆட்டத்தில் சச்சினும் ஷேவாக்கும் முதலிலேயே அவுட் ஆனபின்பு, கம்பீருடன் ஜோடி சேர்ந்த கோலி, மேலும் விக்கெட்டுகள் இழக்காமல் பார்த்துக் கொண்டது, இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மிக மோசமாக டெஸ்டுகளில் தோற்றபோது, செஞ்சுரி அடித்த ஒரே பேட்ஸ்மேன், கோலி. 

சிபி முத்தரப்புத் தொடரில் அடித்த செஞ்சுரிகளால் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தார். தமக்கு முன்னால் ஆடவந்த ரைனா, ரோஹித் சர்மாவை கடந்து சென்றது இந்தத் தருணத்தில்தான். இலங்கையுடனான 3 ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ந்து செஞ்சுரிகள் அடித்தார். (அந்தச் சமயத்தில் 5 ஆட்டங்களில் 4 செஞ்சுரிகள் அடித்தார்.) இப்போது ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில், அதிரடியாக அடித்த 2 செஞ்சுரிகளும் கோலியை உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிவிட்டது. ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் கோலிதான் நெ.1.சச்சினின் டெஸ்ட் சாதனைகளை இங்கிலாந்தின் குக் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கோலியால் சச்சினின் ஒருநாள் செஞ்சுரி சாதனைகளைத் தாண்ட வாய்ப்புண்டு’ என்று மதிப்பிடுகிறார் கவாஸ்கர். ‘சச்சின் ஓய்வு பெறுகிறார் என்று ஆஸ்திரேலியர்கள் சந்தோஷப்பட வேண்டாம். அவருடைய வாரிசான கோலி அந்த இடத்தை நிரப்பிவிட்டார். சமீபத்திய இரண்டு செஞ்சுரிகளும் ஷார்ஜா செஞ்சுரிகளுக்குச் சமம்’ என்கிறார் ஐயன் சாப்பல். இது கோலியின் காலம்.

தோனிக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டனாகப் போகிறார் கோலி. துணைத்தலைவர் பதவிக்கு ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோர் நியமிக்கப்பட்டபோது அவர்கள் தோனிக்கு மாற்றாக இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றவில்லை. ஆனால், கோலிக்கு ஒரு கேப்டனாக நிறைய அனுபவங்கள் உண்டு. ஏற்கெனவே U19 அணி, ஐ.பி.எல்., ரஞ்சி அணிகளுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். இந்தியக் கிரிக்கெட்டில் கோலியை விடவும் நம்பிக்கை அளிக்கிற ஒரு கிரிக்கெட்டர் இல்லை.கடந்த ஆறேழு வருடங்களில், கொடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புகளையும் வீணடித்து, ஆனால் தொடர்ந்து அணியில் நீடித்தபோது, ரோஹித் சர்மாவால் எரிச்சலடையாத இந்திய ரசிகரே இல்லை என்று சொல்லலாம். ரோஹித் சர்மாவை என்ன செய்வது என்று பி.சி.சி.ஐ.யும் நீண்ட நாளாகக் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. வாய்ப்பு அளிக்கப்படும் போதெல்லாம் வீணடித்து விடுவார். ஆனால், அவ்வப்போது சிறிய அணிகளுடனும் ஐ.பி.எல்.லிலும் நன்றாக ஆடி தம் இருப்பை உறுதி செய்துகொள்வார். சாம்பியன்ஸ் டிராபி வரை இப்படித்தான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை கழிந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் முதலில் விஜயும் தவானும்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுவதாகத் திட்டம். இதை தோனியும் உறுதி செய்திருந்தார். ஆனால் விஜயின் கெட்ட நேரம், பயிற்சி ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. இதனால் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார். ஆச்சர்யமாக, முதன்முறையாக மிகப்பெரிய போட்டியில், மிகப்பெரிய அணிகளுடன் பிரமாதமாக ஆடினார். ரோஹித்தும் தவானும் அருமையான தொடக்கம் கொடுத்து இந்தியா பல மேட்சுகள் ஜெயிக்கக் காரணமாக இருந்தார்கள். இறுதியில், இத்தனை நாட்களாகத் தம்மைச் சகித்துக் கொண்டவர்களுக்காக ரோஹித் அளித்த பரிசுதான், இரட்டைச் சதம். ரோஹித் சர்மாவை ரசிகர்கள்தான் வெறுத்தார்கள். ஆனால், கிரிக்கெட் வட்டாரங்களில், ரோஹித் சர்மா என்றாலே வாயைப் பிளப்பார்கள். ஸ்டைலான ஸ்டிரோக்குகள், தொழில்நுட்பரீதியில் சரியாக ஆடுவது, எவ்வளவு மெதுவாக ஆடினாலும் பிறகு ஸ்டிரைக் ரேட்டைச் சரிசெய்துகொள்வது போன்ற பலங்கள் ரோஹித்துக்கு ஆதரவாக இருக்கின்றன. ரோஹித்தின் வெற்றியில் அதிகம் சந்தோஷப்படுகிறார் கோலி. ‘இந்திய அணியில் உள்ள இளைஞர்களிலேயே மிகவும் திறமையானவர் ரோஹித் சர்மாதான். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதால் சரியாகத் தன் திறமையை வெளிப்படுத்தமுடியாமல் இருந்தார். இப்போது தொடர்ந்து ஓபனராக ஆடுவதால், தன் திறமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்’ என்கிறார். 

தம் சாதனைகளை ரோஹித் சர்மா முறியடிப்பார் என்று சச்சின் சொன்னபோது பலருக்கும் அது வேடிக்கையாக இருந்தது. ஆனால் இன்று மூன்றாவது இந்தியராக ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்து, சச்சினின் ஒருநாள் ஸ்கோரையும் தாண்டிச் சென்றிருக்கிறார்.

சச்சினை மயக்கிய தீவிர ரசிகர்!


ஆளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். இவர் ஒரு வெறித்தனமான சச்சின் ரசிகர் என்று. மொட்டைத் தலையில் இந்தியக் கொடி வரையப்பட்டிருக்கும். மேல்சட்டை அணியாமல் இடுப்புவரை முன்னும் பின்னும் மூவர்ணத்தால் பெயின்ட் செய்யப்பட்டு, ‘டெண்டுல்கர் 10’ என்று எழுதப்பட்டிருக்கும். மூக்கில் அசோகச் சக்கரம். மீசையில்கூட மூவர்ணம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இந்த அடையாளங்களோடு சச்சினின் தீவிர ரசிகராகப் பிரபலமாகியிருக்கிறார் பீகாரின் முசாஃபர்புர் நகரைச் சேர்ந்த சுதிர் குமார் சௌத்ரி. 

மேட்ச் நடக்கும் சமயங்களில், இந்திய வீரர்கள் ஃபோர், சிக்ஸர் அடித்தால், சுதிர் கொடியை ஆட்டிக் கொண்டும் சங்கை ஊதிக்கொண்டும் தோன்றும் காட்சிகளை டி.வி.யில் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இந்தியா மேட்சில் தோற்றுவிட்டால் வருத்தமாகிவிடுவார். அந்த நாளில் எதுவும் சாப்பிட மாட்டார்.  நவம்பர் 2003 முதல் இந்தியா ஆடிய சர்வதேச மேட்சுகள், ஐ.பி.எல். என எல்லாம் சேர்த்து இதுவரை 300 மேட்சுகளுக்குமேல் (206 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்டுகள், 70 டி20 மேட்சுகள்) நேரில் பார்த்திருக்கிறார். 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, டிரெஸ்ஸிங் ரூமுக்கு சுதிரை அழைத்து உலகக் கோப்பையை அவரிடம் வழங்கிய சச்சின், போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இந்தக் கவனிப்பில் திக்குமுக்காடிப் போனார் சுதிர். கொல்கத்தாவில் மேட்ச் நடந்தால் கங்குலியின் வீட்டில்தான் சைக்கிளை பார்க்கிங் செய்வார். சச்சின் மேட்ச் டிக்கெட்டுகளைத் தருவதன் நன்றிக்கடனாக இவர் ஒவ்வொரு வருடமும் சச்சினுக்கு 1000 லிச்சிப் பழங்களைத் தருகிறார். சென்னை மெரினா கடற்கரையில் விற்கும் சங்குகளையும் அவ்வப்போது தருவது வழக்கம். சச்சினுக்காக இரண்டுமுறை மைதானத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறார். ஒருமுறை சச்சினின் காலைத் தொட்டு வணங்க முயற்சி செய்தபோது சச்சின் அதைத் தடுத்து, சுதிரைப் பிடிக்கவந்த காவலர்களிடம், ‘அவரை அடிக்க வேண்டாம். அவரே போய்விடுவார்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஹைதராபாத் மேட்ச் ஒன்றிலும் இதேபோல நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சுதிரை ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்று பழுக்க அடித்திருக்கிறார்கள். 33 வயது சுதிருக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு எதிலும் நாட்டம் கிடையாது. சுதிர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக வேண்டாம். நான் இந்தியா முழுக்கச் சுற்றுபவன். கிரிக்கெட்தான் என் வாழ்க்கைத் துணை" என்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சுஷ்ருத் ஜெயின், இந்திய கிரிக்கெட் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுக்கிறார். அதில் சுதிரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தில்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், சுதிர் பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறார். ‘எனக்கும் சச்சினுக்குமான உறவு, கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது. சச்சின் ஓய்வுக்குப் பிறகும் என்னை நீங்கள் மேட்சுகளில் பார்க்கமுடியும். ‘மிஸ் யூ டெண்டுல்கர்’ என்று என் உடலில் எழுதப்பட்டிருக்கும்," என்கிறார் சுதிர். 

ச.ந.கண்ணன்