Search This Blog

Monday, December 22, 2014

மேக் இன் இந்தியா... மேக் ஃபார் இந்தியா...

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் மத்தியில் அமைந்தவுடன், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானதாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவுவதாகவும் கருதப்பட்ட திட்டம்தான் ‘மேக் இன் இந்தியா’.

இந்தியாவில் முக்கியமான 25 துறைகள் கண்டறியப்பட்டு, அதில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம்; இந்தியாவில் அவர்களது தொழிற்சாலையை அமைத்து உற்பத்தி செய்யலாம் என கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்துப் பேசிய பிரதமர் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பெருமையுடன் அறிவித்தார். மேக் இன் இந்தியா மூலம், வருகிற 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் சொன்னதால், இந்தியாவின் தலையெழுத்தையே இந்தத் திட்டம் மாற்றிவிடும் என எல்லோரும் நினைத்தார்கள். 

மோடியின் மேக் இன் இந்தியா கருத்துக்கு பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், அந்தத் திட்டத்துக்கு கடுமையான விமர்சனம் கிளம்பி இருக்கிறது. இந்த விமர்சனத்தை எதிர்கட்சியைச் சேர்ந்த யாராவது செய்திருந்தால், அது கவனம் பெறாமலேயே போயிருக்கும். ஆனால், மேக் இன் இந்தியாவைப் பற்றி விமர்சித்தவர் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன். ‘மேக் இன் இந்தியா’ என்கிற கருத்தைப் புறந்தள்ளிவிட்டு, ‘மேக் ஃபார் இந்தியா’ என்கிற புதிய கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார். இதனால் இப்போது ‘மேக் இன் இந்தியா’வா, இல்லை, ‘மேக் ஃபார் இந்தியா’வா என்கிற மோதல் எழுந்துள்ளது. சிலர் ‘மேக் இன் இந்தியா’தான் சரி என்றும், இன்னும் சிலர் ‘மேக் ஃபார் இந்தியா’தான் சரி என்றும் கருத்து சொல்லிவரும் இந்த நிலையில், இந்த இரண்டு விஷயங்களிலும் உள்ள சிறப்பான அம்சங்களைப் பார்த்துவிடுவோம்.

மேக் இன் இந்தியா!

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 25 துறை களில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்து, இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கவைப்பதுதான் திட்டத்தின் முக்கியமான நோக்கம்.  இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வது இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்கு. உலகின் 7-வது மிகப் பெரிய ஆட்டோமொபைல் துறையைக் கொண்டிருக்கும் இந்தியாவை, நான்காவது இடத்தைப் பிடிக்க வைப்பது; 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்டுக்கு 6 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்வது; இந்தியாவில் கட்டுமானத் துறையின் பங்களிப்பை ஜிடிபியில் 10 சதவிகிதமாக அதிகரிக்கச் செய்வது; 2017-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் கி.மீ  தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது; ரயில்வே துறையில் புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்வது; ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது போன்ற பிரமாண்ட திட்டங்களை முன்வைத்துதான் இந்த மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது.

மேக் இன் இந்தியாவில் என்ன பிரச்னை?

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க வருவதும் முதலீடு செய்வதும் நல்ல விஷயம் என்றாலும், அந்த நிறுவனங்கள் இங்கு பதிவு செய்வதில் தொடங்கி,  மின்சாரம், உள்கட்டமைப்பு, பணியாளர் திறன் என பல விஷயங்கள் தேவைக்கு ஏற்ற அளவு இல்லை. இந்தச் சிக்கல்கள் எல்லாம் இருப்பதை நன்கு உணர்ந்த வெளிநாடுகள், இங்கு வந்து புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குமா என்பது சந்தேகமே. தவிர, இந்தத் திட்டம் ஏற்றுமதிக் கொள்கையைத் தீவிரமாக வலியுறுத்துவதாக உள்ளது. ஏற்றுமதியை மட்டுமே வலியுறுத்தும் ஒரு கொள்கையை நூறு சதவிகிதம் நாம் பின்பற்றினால் எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

இதுமாதிரியான பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாகத்தான் ‘மேக் ஃபார் இந்தியா’ என்கிற கருத்தை ரகுராம் ராஜன் சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள் சிலர். 

 

மேக் ஃபார் இந்தியா! 

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது. காரணம், உலக அளவில் சீனா இதை ஏற்கெனவே செய்து முடித்துவிட்டது. உலகப் பொருளாதாரம் இப்போதுள்ள நிலையில் சீனாவை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இருக்கும்போது, இன்னொரு நாடு அதேமாதிரி உருவாவதை ஏற்றுக் கொள்ளாது. தவிர, ஏற்றுமதிப் பொருளாதாரத் தினால் கரன்சி மதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.

இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டுமெனில், ஏற்றுமதியை மட்டும் நம்பாமல்,  உள்நாட்டுக்குத் தேவையான பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். நம் நாட்டிலேயே எல்லா மக்களுக்கும் எல்லா விதமான வசதிகளும் இன்னும் கிடைத்துவிடவில்லை. எனவே, முதலில் நம் நாட்டு மக்களுக்காக உற்பத்தியைப் பெருக்குவோம்; பிற்பாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம் என்பது ரகுராம் ராஜன் வைத்திருக்கும் வாதம்.

 ச.ஸ்ரீராம்




No comments:

Post a Comment