Search This Blog

Thursday, December 18, 2014

சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்... வழிபாடுகள்!

திருக்கணிதப்படி ஜய வருடம், ஐப்பசி மாதம் சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி, ஜய வருடம், மார்கழி -1, செவ்வாய்க்கிழமை அன்று (16.12.14) மதியம் 2:16 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

ஜாதக பலன்களைக் காண்பதற்கு லக்னத்தை முதன்மையாகச் சொல்வது போன்று, கோசார பலன் காண்பதற்கு ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியை முதன்மையாகக் கொண்டு பலன் சொல்ல வேண்டும். சனி ராசிக்கு 12, 1, 2 வரும் காலங்களை ஏழரை சனி என்றும், ராசிக்கு 4-ம் இடத்துக்கு வரும் போது அர்த்தாஷ்டம சனி என்றும், 7-ம் இடத்துக்கு சனி வரும்போது கண்டச் சனி என்றும், 8-ல் வரும்போது அஷ்டமச் சனி என்றும் கூறுகிறோம்.

5, 9, 10 இடத்தில் சனி வரும் காலத்தை, சனி பகவான் மத்திம பலன் தரும் காலமாகச் சொல்லலாம். அவர் 3, 6, 11-ம் இடத்துக்கு வரும் காலத்தில் யோக பலன்கள் கூடிவரும்.


இந்த அடிப்படையில், தற்போதைய சனிப்பெயர்ச்சியில்... மிதுன ராசிக்கு 6-ம் இடத்துக்கும், கன்னி ராசிக்கு 3-ம் இடத்துக்கும், மகர ராசிக்கு 11-ம் இடத்துக்கும் பெயரும் சனிபகவான் சிறந்த யோக பலன்களை வாரி வழங்குவார். கடக ராசிக்கு 5-ம் இடத்து சனியாகவும், கும்பத்துக்கு 10-ம் இடத்து சனியாகவும், மீன ராசிக்கு 9-ம் இடத்து சனியாகவும் வருகிறார். அதனால் கடந்த காலத்தைவிட, இப்போது சுப பலன்கள் கூடும்; மத்திம பலன் எனலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு கண்ட சனியாகவும், சிம்ம ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும், துலா ராசிக்காரர்களுக்கு பாதச் சனியாகவும், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜென்மச் சனியாகவும், தனுசு ராசிகாரர்களுக்கு விரயச் சனியாகவும் (ஏழரைச் சனி ஆரம்பம்) வருகிறார். இந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது சிறப்பு. அதற்காக பயமோ, பதற்றமோ தேவையில்லை. சனி பகவானை உரிய முறையில் வழிபட்டு, சங்கடம் நீங்கப் பெறலாம்.


சில பரிகாரங்கள்... வழிபாடுகள்...

சனிக்கிழமை விரதம் இருந்து, எள் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, சனிபகவானுக்கு உகந்த எள் எண்ணெய் விளக்கிட்டு, எள் சாதம் படைத்து, சனி கவசம் ஓதி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

வெள்ளிக்கிழமை இரவு, எள் தானியத்தை கரும்பட்டுத் துணி அல்லது கருமை நிற காகிதத்தில் வைத்து மடித்து தலையணைக்குக் கீழ் வைத்து படுத்துறங்கவும். மறுநாள் காலையில் எள் எண்ணெய் தேய்த்துக் குளித்து,  முதல்நாள் மடித்து வைத்த எள்ளை வடித்த சாதத்தோடு கலந்து நைவேத்தியம் செய்து காக்கைக்கு வழங்க நன்மை ஏற்படும். இயன்றபோது குச்சனூர், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு முதலான தலங்களுக்கும் சென்று சனிபகவானை வழிபட்டு வரலாம்.

வெள்ளிக்கிழமைதோறும் அதிகாலை நீராடி அருகம்புல் மாலை சாற்றி, அரசமர பிள்ளையாரை சுற்றி வந்து முறையாக வழிபட்டால் சீரும் சிறப்பும் நாடி வரும்.

இயன்றபோதெல்லாம் அனுமனுக்கு வடைமாலை சாத்தி, துளசி மாலை அணிவித்து, வெண்ணெய் அர்ப்பணித்து வழிபட்டு வந்தால், பாதிப்புகள் நீங்கும். அதேபோன்று நளபுராணம் படிப்பதாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராம நாமத்தை உச்சரிப்பதாலும் பாதிப்புகள் நீங்கி பயன் அடையலாம்.

நேர்மை, நீதி, வாக்கு தூய்மையை விரும்பக்கூடியவர் சனி பகவான். பாதகமான காலங்களில் சோதனைகளைத் தாங்கி நேர்மையாக உண்மையாக நடந்துகொண்டால் எந்தத் தீங்கும் ஏற்படாது.

No comments:

Post a Comment