ஏழையோ, பணக்காரனோ எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான
சுபகாரியங்கள், சாவு மாதிரியான அசுப காரியங்கள் வருகின்றன. இவற்றுக்காக
எவனும் கடன்படுகிற மாதிரி நாம்
விட்டால் அது நமக்குப் பெரிய தோஷம். அவரவரும் தன்னாலானதை ஐந்தோ, பத்தோ
ஏழைப்பட்ட பந்துக்களின் சுபாசுபகார்யங்களுக்கு உதவ வேண்டியது ஒரு பெரிய
கடமை. இதை முன்காலங்களிலெல்லாம் ஸஹஜமாகச் செய்து
வந்தார்கள். ‘பரோபகாரம்’ என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்குச் செய்வதற்கு
முன்னால், ‘பந்துத்வ’த்தோடு நம்முடைய ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய
வேண்டும். இரண்டு
தலைமுறைக்கு முந்தி இதைச் சொல்ல வேண்டிய அவச்யமே இருக்கவில்லை.
அப்போது கிழவர் பராமரிப்பு இல்லம், விதவை விடுதி என்றெல்லாம் வைக்க வேண்டிய
அவச்யமே இல்லாதிருந்ததற்கு என்ன காரணம்? பந்துக்களே இவர்களைப் பராமரித்து
வந்தது தான். அநேகமாக எல்லா
வீடுகளிலும் ஒரு அத்தை, பாட்டி, மூன்று தலைமுறை விட்டு ஒரு மாமா, தாத்தா
என்கிற மாதிரி கிழங்கள் இருக்கும்! தற்காலத்தில் ரொம்பவும் பணக்காரர்களும்
கூட வெறும்
‘ஷோ’வாக பார்ட்டியும் ஃபீஸ்டும் கொடுக்கிறார்கள். அல்லது பேப்பரில் போடுகிற
மாதிரி டொனேஷன் கொடுக்கிறார்கள்; ஆனால் பந்துத்வத்தோடு தங்கள்
குடும்பத்திலேயே வசதி இல்லாதவர்களை ஸம்ரக்ஷிப்பது என்பது
இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது.
அவிபக்த குடும்பமுறை (Joint family system)போனபின் அண்ணன், தம்பி
என்பதே போய்விட்டது. முன்பெல்லாம் இப்படி ஜாயின்ட்- ஃபாமிலியாக
இருக்கும்போது, தாயார், தகப்பனார், சிற்றப்பா பெரியப்பாமார்கள், அவர்களுடைய
பத்னிகள், பிள்ளைகள், மாட்டுப்பெண்கள், பேரக்குழந்தைகள் என்று ஒரு
வீட்டிலேயே 20, 25 பேர் இருப்பார்கள். இவ்வளவு பேர் இருக்கிறபோது, அநாதரவான
தூர பந்துக்கள்
நாலைந்து பேரைக்கூட வைத்துக்கொண்டு சோறு போடுவது ஒரு பாரமாகவே தெரியவில்லை.
இப்போதோ அவனவனும் பெண்டாட்டியோடு கத்திரித்துக்கொண்டு தனிக்குடித்தனம்
என்று போவதால் கூட
ஒருத்தரை வைத்துக்கொள்வது என்றால்கூடச் சுமையாகத் தெரிகிறது. எத்தனையோ
ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு,
மூன்று தலைமுறைகளில் வீணாகப்
போய், இங்கிலீஷ் ஃபாஷன் வந்ததில், உயர்ந்த தர்மங்கள் எல்லாம் நசித்துப்
போய்விட்டன.
No comments:
Post a Comment