Search This Blog

Sunday, February 23, 2014

அருள்வாக்கு - குழந்தை சந்தோஷம்


ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும் பெரிய மநுஷ்யாள் வீட்டுக் குழந்தையாயிருந்து விட்டால் அதனிடம் எல்லோரும் அன்பு காட்டிக் கொஞ்சுவார்கள். அதற்குப் பயப்படக்கூடச் செய்வார்கள். பழைய நாளில் ‘ராஜாப்பயல்’ என்று அன்போடும் பயத்தோடும் சொன்னார்கள். அப்புறம் ‘கலெக்டர் அகத்துப் பிள்ளையாக்கும்’ என்று சொல்லி வந்தார்கள். இப்போது ‘மந்திரி, எம்.எல்.ஏ. வீட்டுப் பிள்ளை’ என்று சொல்கிறார்களோ என்னவோ? 

பெரிய மநுஷ்யாள் குழந்தை என்றால் அது ஏதாவது சண்டித்தனம் பண்ணினால்கூட, மற்ற குழந்தைகளை அதட்டுகிற மாதிரி அதட்டாமல் அது கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால், இந்தக் குழந்தை போய், ரொம்பவும் செல்வாக்குள்ள அதன் தகப்பனாரிடம் ஒருத்தரைப் பற்றி ஏதாவது புகார் பண்ணிவிட்டால், அவ்வளவுதான், அந்த ஆசாமிக்கு இந்தத் தகப்பனார் காரரிடமிருந்து பெரிய உபத்ரவங்கள் வந்து சேரும். எவரும் தங்களையே திட்டினால் கூடப் பொறுத்துக் கொள்ளக்கூடும், போனால் போகிறதென்று விட்டு விடலாம். ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிறார்களே, அப்படி ரொம்பவும் அருமையாக இருக்கப்பட்ட தங்கள் குழந்தையை யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்களானால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யர் கோபித்துக் கொண்டு கிளம்பினால் ரொம்ப ஆபத்து அல்லவா? அதனால்தான் ‘இது பெரிய இடத்துப் பிள்ளை அப்பா. இதனிடம் வம்புக்குப் போகப்படாது’ என்று சொல்வது.

இதற்கு நேர் எதிராக, ஒரு குழந்தையை மெச்சிவிட்டால் அதன் தகப்பனாருக்கு அவரையே மெச்சுவதைவிட ஸந்தோஷமாவிடும், உச்சிக் குளிர்ந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யரை ப்ரீதி செய்துவிட்டால் ஸுலபமாக அவரிடமிருந்து பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாம். பெரியவர்களை நேராக த்ருப்தி செய்வது கஷ்டம். குழந்தைகளையோ ரொம்பவும் எளிதில் த்ருப்திப்படுத்தி விடலாம். ஒரு சின்னச் சோப்பையோ சாக்லெட்டையோ காட்டிவிட்டால் போதும். இல்லாவிட்டால் ஏதோ கொஞ்சம் கோணங்கி விளையாட்டுக் காட்டினால் அதிலேயே ஒரு குழந்தைக்கு குஷி பிறந்துவிடும். அந்தக் குழந்தையின் ஸந்தோஷத்தில் அதன் அப்பாவுக்கும் ஏக ஸந்தோஷம் உண்டாகிவிடும்.  தன் குழந்தையை ஸந்தோஷப்படுத்தினவருக்குத் தன்னாலான எல்லா நன்மையும் பண்ணிவிடுவார். அதாவது, ஸுலபத்தில் திருப்திப்படுத்த முடியாத ஒரு பெரியவரால் நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமானால் அதற்கு வழி ஈஸியாக த்ருப்தியாகிவிடும் அவருடைய குழந்தையை ஸந்தோஷப்படுத்துவதுதான். 

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment