Search This Blog

Tuesday, February 04, 2014

பால் ஏர்டிஷ் -- 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித மேதை

20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித மேதையாகத் திகழ்ந்தவர், பால் ஏர்டிஷ் Paul Erdős).ஹங்கேரி நாட்டில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தனது சிறப்பான கணித ஆற்றலை வெளிப்படுத்தினார். தனது மூன்றாவது வயதிலேயே, ஒரு நபரின் வயதைவைத்து, அவர் பிறந்து எத்தனை வினாடிகள் ஆகியிருக்கின்றன என்பதை உடனடியாகக் கணக்கிட்டுக் கூறி, திகைக்கவைப்பார்.
 
21 வயதில் முனைவர் பட்டம் பெற்ற ஏர்டிஷ்,  கணித உண்மைகளை எளிய முறையில் வழங்குவதில் திறமைபெற்றவர். வாழ்நாளில், தனக்கென எதையும் சேர்த்து வைக்காதவர். திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் பெயரில் வங்கிக் கணக்குகூட இல்லை. கணித ஆய்வுக்காகவும் வளர்ச்சிக்காகவுமே பாடுபட்டார்.

இன்று வரை மிக அதிக அளவில் கணித ஆய்வுக் கட்டுரைகளை ஏற்படுத்திய கணிதவியலாளர்களில் ஏர்டிஷ் முதல் இடம் வகிக்கிறார். மற்ற கணிதவியலாளர்களின் துணையுடன் 1,500 கணிதக் கட்டுரைகளுக்கு மேல் வழங்கியுள்ளார். மற்றவர்களுடன் சேர்ந்து கணிதம் பயில்வதைத் தன் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார். திறமை வாய்ந்த கணித வல்லுநர்களைச் சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவினார். மேலும், தனக்கு விடை காண இயலாத கணிதப் புதிர்களை உருவாக்கு பவர்களுக்கு, சிறு சிறு பரிசுத் தொகைகள் வழங்குவார். கணிதப் படைப்புகளுக்காக, Wolf Prize, Cole Prize என்ற இரு முக்கியக் கணித விருதுகளைப்  பெற்றுள்ளார்.

இவரது கணித ஆற்றலையும் புகழையும் பறைசாற்ற, 'ஏர்டிஷ் எண்’ என்ற கருத்து உருவாக்கப்பட்டது. இதன்படி, ஏர்டிஷின் எண் பூஜ்ஜியம். இவருடன் நேரடியாகக் கணித ஆய்வுக் கட்டுரையை உருவாக்கிய கணிதவியலாளரின் ஏர்டிஷ் எண், ஒன்று. அந்த நபருடன் மற்றொருவர் கணித ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தால், அவருக்கு ஏர்டிஷ் எண் இரண்டு. இப்படி சங்கிலித் தொடராக அந்த எண், ஏழு வரை இருக்கும். எனவே, ஒருவரது கணிதப் புலமைக்கு அடையாளமாக 'ஏர்டிஷ் எண்’ விளங்குகிறது.

1996 செப்டம்பர் 20-ல், போலந்து நாட்டின் வார்சா நகரில் நடந்த கணிதக் கருத்தரங்கு வளாகத்திலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்டு, உயிர் நீத்தார். இவரது கணித ஆய்வும் அனைவரிடமும் அன்பு செலுத்தும் பண்பும் என்றும் பேசப்படும். ஏர்டிஷ் வாழ்க்கைச் செய்திகளை மேலும் தெரிந்துகொள்ள The man who loved only numbers’ என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.


சிவராமன் 
 

No comments:

Post a Comment