எல்லாப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை? ஏதோ
ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டில் நுழைவோம். வாங்க நினைத்த
பொருளோடு, வாங்க நினைக்காத நான்கைந்துப் பொருட்களை வாங்குவோம்.
கடையைவிட்டு வெளியே வந்தபிறகு ஏன் இத்தனை பொருட்களை வாங்கினோம் என்று
தெரியாமல் முழிப்போம். இதற்குப் பெயர்தான் 'இம்பல்ஸ் பையிங்’. அதாவது,
நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணுக்குப்பட்டதை எல்லாம்
வாங்க நினைக்கிற மனநிலை. இந்த மனநிலையைத் தூண்டி, தங்கள் குவித்து
வைத்திருக்கிற பொருட்களை விற்பதற்கான அத்தனை வேலைகளையும் பெரிய மால்களும்,
சூப்பர் மார்க்கெட்களும் பக்கவாகச் செய்கின்றன. இந்த வலையில் சிக்காமல்,
தேவையான பொருளை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்கு இதோ பத்து
வழிகள்..!
1. கிரெடிட் கார்டு வேண்டாம்!
பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு
ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கப்
பாருங்கள். ஏனெனில், கிரெடிட் கார்டுதான் இருக்கிறதே என்று பொருட்களை
வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குச் சட்டென வந்துவிடுவீர்கள். எனவே, முடிந்த
மட்டும் ரொக்கமாக பணம் தந்து பொருளை வாங்குங்கள்.
2. தேவையான பொருள் மட்டும்..!
நீங்கள் ஷாப்பிங் செல்லும்முன், உங்களுக்கு என்னென்ன
பொருள் தேவை என்று பட்டியல் போடுங்கள். எது உடனடியாகத் தேவையோ, அது மட்டுமே
ஞாபகத்துக்கு வரும். சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடன் அந்தப்
பொருட்களை மட்டும் வாங்குங்கள். அதுதவிர்த்து கண்ணில்படும் பொருட்களை
மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். பிற்பாடு தேவைப்பட்டால் வாங்குங்கள்.
3. டைம்பாஸ் ஷாப்பிங்!
வீட்டில் போரடிக்கிறது, ஷாப்பிங் போனால் பொழுதுபோறதே
தெரியாது என்று நினைத்து ஷாப்பிங் போகாதீர்கள். ஷாப்பிங் போனால்
பொழுதுபோகும்; கூடவே பர்ஸும் காலியாகும். எனவே, உங்கள் ஷாப்பிங்கை
அதிகபட்சம் மாதம் இருமுறை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.
4. ஆஃபர் வலை!
இது வாங்கினால் அது ஃப்ரீ, அது வாங்கினால் இது ஃப்ரீ என
ஆஃபர்கள் சூப்பர் மார்க்கெட்களில் அடிக்கடி போடப்படும். இந்த ஆஃபர்
இன்னும் சிலநாட்கள் மட்டுமே என்பார்கள். இந்த ஆஃபரை நாம் சுதாரிப்போடு
கேட்காவிட்டால், அதில் நாமும் சிக்கி, தேவை இல்லாத பொருட்களை வாங்குவோம்.
தினம் ஆஃபர் சேல்ஸ் இருக்கும்! அவசரப்பட வேண்டாம்!
5. விளம்பர மாயை!
50% தள்ளுபடி, 60% தள்ளுபடி என்கிற மாதிரியான அதிரடி
விளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். விளம்பரங்கள்
சொல்கிறமாதிரி 50%, 60% தள்ளுபடி சில பொருட்களுக்கு மட்டுமே இருக்கும்.
குறைந்த எண்ணிக்கையில் எந்த சாய்ஸும் இல்லாமல் தரத்திலும் குறைவானதாக
அந்தப் பொருட்கள் இருக்கும். கடைக்குப் போய் வெறுங்கையோடு திரும்ப
மனமில்லாமல், வேறு ஏதேதோ பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவோம்.
அதேபோல் இணையதளத்தில் அதிரடி ஆஃபர் விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும். அதுபோன்ற சமயங்களில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.
6. மளிகைக் கடைகளே பெஸ்ட்!
உங்கள் வீட்டுக்கு அருகில் மளிகைக் கடைகளில்
உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குங்கள். அங்குதான் ஆளை விழுங்கும்
ஆஃபர்கள் அடிக்கடி இருக்காது. எனவே, ஆஃபருக்காகத் தேவையில்லாத பொருளை
வாங்கவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இருக்காது. பணமும் அதிகம் செலவழியாது.
7. சரியான விலை தாருங்கள்!
நீங்கள் வாங்கப்போகும் பொருளுக்கான விலையை முதலில்
உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்துத் தெரிந்து
கொள்ளுங்கள். பெரிய கடைகளில் அதைவிடக் குறைந்த விலையில், ஆனால் அதே அளவு
எடையில், அதே அளவு தரத்தில் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். ஆஃபர்
என்கிற பெயரில் விலை குறைந்த ஒரு பொருளோடு, தேவையில்லாத வேறொரு பொருளை
நீங்கள் வாங்குவதைவிட, கொஞ்சம் அதிக விலை தந்து உங்களுக்குத் தேவையான
பொருளை வாங்கிவிடலாமே!
8. அவசரம் வேண்டாம்!
பெரிய கடைகளுக்குப் போய் அவசர அவசரமாக ஷாப்பிங்
செய்யாதீர்கள். இந்த அவசரம் நமக்கான தேவை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றைப்
பற்றி சிந்திக்கவிடாமல், நஷ்டத்தில் நம்மை வாங்கவைத்துவிடும். அதேபோல, மிக
நிதானமாகவும் ஷாப்பிங் செய்யவேண்டாம். ஒவ்வொரு பொருளையும் அதிகநேரம்
பார்த்துக்கொண்டே இருந்தால், அதை வாங்காமல் வெளியே வரமாட்டோம்.
9. செல்ஃப் ஆடிட்டிங் தேவை!
அதிரடி ஆஃபரில் இதுவரை நீங்கள் உங்களுக்குத் தேவையான
சரியான பொருளைத்தான் வாங்கி இருக்கிறீர்களா? எந்தெந்தப் பொருளைத்
தேவையில்லாமல் வாங்கி இருக்கிறீர்கள்? அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்
என்ன? என்பதை என்றைக்காவது வீட்டில் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது உங்களுக்கு
நீங்களே ஆடிட் செய்துபாருங்கள்! நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது
உங்களுக்கே புரியும்!
10. தேவை, உடன் ஒருவர்!
நீங்கள் ஷாப்பிங் செய்யப்போகும் முன்பு உங்களைப் பற்றி
நன்கு அறிந்த, உங்கள் நலனில் அக்கறைகொண்ட ஒருவர் (உங்கள்
கணவரையோ/மனைவியையோ) உடன் இருந்தால், தேவையில்லாத பல பொருட்களை நாம் வாங்கத்
துணிய மாட்டோம். நம் பர்ஸும் எப்போதும் கனமாகவே இருக்கும்!
No comments:
Post a Comment