உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், ராஜீவ் கொலை வழக்கின் தூக்குத் தண்டனைக்
கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உயிர் தப்பி வாழும் மாற்றம்
ஏற்பட்டிருக்கிறது. மரண
தண்டனையிலிருந்து இப்போது இந்த மூவரும், சில மாதங்களுக்கு முன்னர் வீரப்பன்
கூட்டாளிகளும் மீண்டதற்கான காரணங்கள் இன்னமும் திருப்திகரமானவை அல்ல. மரண
தண்டனை என்பதே
ஒழிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் இவர்களின் தண்டனை ஆயுளாகக்
குறைக்கப்படவில்லை. இவர்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் அரசு
காட்டிய தாமதத்தின்
அடிப்படையில் மட்டுமே இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இது புதியதல்ல. 1983ல் தமிழ்நாட்டில் நடந்த விஷ ஊசிக் கொலை வழக்கில்
தண்டிக்கப்பட்டவர் வைத்தி. பணத்துக்காகப் பலரை ஏமாற்றி வரவழைத்து விஷ ஊசி
போட்டுக் கொன்றுவிட்டு பணத்தைச் சுருட்டிய குற்றம் பற்றிய வழக்கு இது.
இதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வைத்திக்கு அதை நிறைவேற்ற இரண்டு வருடங்கள்
தாமதமாவதைக் காட்டி
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்னப்ப ரெட்டியும் ஆர்.பி.மிஸ்ராவும் அந்தத்
தண்டனையை ஆயுளாகக் குறைத்தனர். அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு அளிக்கும்
வாழ்க்கைக்கும்
சுதந்திரத்துக்கும் ஆன உரிமையை அந்தத் தாமதம் பாதிப்பதால் இப்படி
தீர்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர்.இதன்படி தண்டனை விதித்து இருவருடமே ஆனது தாமதம் என்ற கருத்துப்படி
பார்த்தால் பத்தாண்டுகளுக்கும் முன்னதாகவே ராஜீவ் மரண தண்டனைக் கைதிகள்
உட்பட பல கைதிகளின் மரண தண்டனை குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி
எதுவும் நடக்கவில்லை. இருபதாண்டுகள் கழித்துத்தான் தாமதம் கணக்கில்
எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு
இன்னொரு காரணம், நம் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு
எடுக்கும் நேரமும் முன்பைவிட அதிகமாவதுதான். கொல்கத்தாவில் தூக்கில்
இடப்பட்ட
தனஞ்செய் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் தூக்கில் போடப்பட்டார். அவரது
அப்பீல் மனு 1994ல் தாக்கல் செய்யப்பட்டதை விசாரணைக்கு எடுக்கவே
நீதிமன்றத்துக்கு எட்டாண்டுகள் ஆகியிருக்கிறது.இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கொஞ்சம் பேரை மரணத்திலிருந்து
காப்பாற்றியிருந்தாலும், இனி வரப்போகும் வழக்குகளில் சில ஆபத்தான விளைவுகளை
ஏற்படுத்திவிடலாம். செஷன்ஸ் நீதிமன்றத்தில்
தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் முடிந்து குடியரசுத் தலைவர் கருணை
மனுவை குறிப்பிட்ட காலவரம்புக்குள் பரிசீலித்து முடிவு தெரிவித்துவிட
வேண்டுமென்ற கால
வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்படுகிறது. அப்படி
நிர்ணயிக்காவிட்டால், எல்லாமே காலதாமதமான தூக்குத் தண்டனை என்ற பிரிவின்
கீழ் வந்துவிடும். காலவரம்பை நிர்ணயித்தால் வரப்போகும் ஆபத்து என்ன? பல சமயங்களில்
அப்பாவிகள், தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், தவறு தெரியவரும்
வாய்ப்பே இல்லாமல் அவர்கள்
கொல்லப்படுவார்கள். இப்போது ராஜீவ் கொலை வழக்கிலேயே மரண தண்டனை
விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மனித வெடி குண்டில் பயன்படுத்தப்பட்ட
பேட்டரி
செல்களை அதற்கென்று தெரிந்தே வாங்கிக் கொடுத்தார் என்பதுதான்
குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டில் பல ஓட்டைகள் இருந்தன. எந்தப்
பெட்டிக்கடையிலும் பேட்டரி செல்வாங்கினால், ரசீது கொடுப்பதில்லை
என்பது நடைமுறை உண்மை. இங்கே ரசீது சாட்சியமாகக் காட்டப்பட்டது. அப்படியே
அந்தக் கடையில் பேரறிவாளன் வாங்கியிருந்தாலும் அந்த செல்கள்தான்
வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டன என்பதை எப்படி
நிரூபிக்கமுடியும் என்றும் புரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மையில்
பேரறிவாளனை வழக்கில் விசாரித்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்த காவல்
அதிகாரி, பேரறிவாளன்
சொல்லாததைச் சொன்னதாகத் தான் எழுதியதாகப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
அது என்ன? ‘இந்த செல்களை ராஜீவ் கொலைக்குப் பயன்படுத்தப் போவதாகத் தனக்குத்
தெரியும் என்று பேரறிவாளன்
சொல்லவில்லை. ஆனால் தெரிந்தே வாங்கிக் கொடுத்ததாக ஒப்புக்கொள்வதாக’ அதிகாரி
எழுதியிருக்கிறார்.
இந்தத் தவறான ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவுப்படி
காலதாமதம்
தவறு என்று கருதி காலவரம்பு நிர்ணயித்து முன்கூட்டியே தூக்கில்
போட்டிருந்தால், அது எவ்வளவு பெரிய கொடுமையாக, அநீதியாக இருக்கும்!
இதை ஏற்காதவர்கள் வைக்கும் வாதம் என்ன? ‘கொடூரமான கொலைகள் செய்தவர்கள்,
குற்றங்கள் செய்தவர்கள் ஏன் அதற்காகக் கொல்லப்படக்கூடாது’ என்பதாகும்.
அப்படிப்பட்ட
கொடூரர்களுக்கு மரணதண்டனை விதித்தால்தான் இனி அப்படிப்பட்ட குற்றங்கள்
பெருகாமலும் நடக்காமலும் தடுக்கமுடியும் என்பதே இந்தத் தரப்பின் வாதம்;
நம்பிக்கை.
இதைப் பற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணயர் பல
வருடங்களுக்கு முன்னரே அழகாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர்
கொலைக் குற்றவாளிகளை
மூன்று விதமாக வகைப்படுத்துகிறார். ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு
கொல்லுகிறவர்கள். இவர்கள் நிச்சயம் தூக்குக் கயிற்றைப் பற்றி முன்கூட்டியே
யோசிக்கக்கூடப் போவதில்லை. எனவே அந்தப்
பயன் அவர்களைத் தடுக்காது. இரண்டாவது வகையினர் இறுகிய மனம் உடைய
கிரிமினல்கள். இவர்களும் (சாவுக்கு) மரண தண்டனைக்குப் பயப்படப் போவதில்லை.
மூன்றாவது வகையினர்
கொள்கை அடிப்படையிலோ, தங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கை அடிப்படையிலோ, அரசியல்
அடிப்படையிலோ கொலையில் ஈடுபட்டவர்கள். இவர்களும் மரணத்துக்கு
அஞ்சுவதில்லை. எனவே மரண தண்டனை அச்சத்தை ஏற்படுத்தி கொலைக் குற்றங்களைக்
குறைக்கும் என்று நம்புவது அர்த்தமற்றது. இதை இங்கிலாந்தில் ராயல் கமிஷன் 1866லேயே சுட்டிக்காட்டியது. அங்கு ஒரு
நகரத்தில் மரண தண்டனைக் கைதிகளாக இருந்த 167 பேரில் 164 பேர் தங்கள் கண்
முன்பாகவே வேறு
ஒருவர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்படுவதைப் பார்த்தவர்கள். ஆனால் அது
ஒன்றும் அவர்கள் குற்றம் செய்வதைத் தடுத்துவிடவில்லை. எனவே தூக்குத்
தண்டனையை
ஒழித்துவிடலாம் என்று ராயல் கமிஷன் தெரிவித்தது.இன்று ஐரோப்பா முழுவதும் மரண தண்டனை இல்லை. மிக அதிகமான மரண தண்டனை
விதிக்கும் நாடுகள் சீனா, சவுதி அரேபியா, காங்கோ, ஈரான், அமெரிக்கா
ஆகியவைதான். ஆனால் இங்கே எங்கும்
எந்தக் குற்றமும் குறைந்துவிடவில்லை. மரண தண்டனை என்பது ஒரு சமூகம்
சட்டத்துக்குள் ஒளிந்துகொண்டு கொலை செய்வது தவிர வேறல்ல.ஆயுள் தண்டனைக் கைதிகளையும் முழு ஆயுளுக்கும் சிறையில் வைத்திருக்கவேண்டும்
என்பது தவறான பார்வை. தண்டனைக் காலமாகப் பத்தோ பதினான்கு ஆண்டுகளோ
சிறையில் இருந்து
பின்னர் வெளியே வந்துவிட்டால், மீண்டும் கொலை செய்வார்கள் என்று
அஞ்சத்தக்க அளவு எந்த நிகழ்ச்சியும் இல்லை. வெளியே வரும்போது திருந்தி
வந்து வாழ்ந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம். அவர்களைத் திருந்தவிடாமல்
தடுக்கும் சமூகம்தான் பல சமயங்களில் பிரச்னை. ராஜீவ் கொலை வழக்கு மட்டுமல்ல, இன்னும் கோவை குண்டுவெடிப்பு போன்ற
வழக்குகளில் தண்டிக்கப்பட்ட பல கைதிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாகச்
சிறையில்
இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அரசாங்கங்கள் மறுத்துவருகின்றன.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்ததாகத்
தண்டிக்கப்பட்டோரை அவர்கள்
அழகிரி ஆதரவாளர்கள் என்பதால், அண்ணா நூற்றாண்டில் விடுதலை செய்த தி.மு.க.
அரசு, நளினியையும் கோவை இஸ்லாமிய கைதிகளையும் விடுவிக்கத் தொடர்ந்து
மறுத்தது.
ஜெயலலிதாவோ மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதையே ஏற்கும் மனநிலை இல்லாதவர்.
இந்திய அரசாங்கமும் அது காங்கிரசானாலும், பா.ஜ.க.வானாலும் மரண தண்டனை
பற்றிய
மாற்றுக் கருத்துக்கே தயார் இல்லை. கடந்த 2007லும் மறுபடி 2012லும் இந்தியா ஐ.நா. பொது மன்றத்தில் மரண தண்டனை
ஒழிப்புக்கான தீர்மானத்தை எதிர்த்தே வாக்களித்தது. அண்மையில் இந்தியாவில்
கொடூரமான
பாலியல் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்க அவசரச் சட்டமே பிறப்பித்து
பிறகு அதைச் சட்டத்திலும் சேர்த்திருக்கிறது.இப்படிப்பட்ட சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதுவும் டெக்னிகலான
அடிப்படையில் மட்டுமான தீர்ப்புக் கொடுத்திருப்பது தற்காலிக ஆறுதல்தான்.
மரண தண்டனை முற்றாக
ஒழிக்கப்படுவதற்குத் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வும்
பிரசாரமும் தேவைப்படுகிறது. சிறை தண்டனை என்பது ஆயுள் முழுவதுமானதாக
இருக்கத் தேவையில்லை; நன்னடத்தை அடிப்படையில்
வெளியே வந்து வாழ்க்கையை இன்னொரு முறை வாழ்ந்து பார்க்க அனுமதிக்கும் சிறை
தண்டனையே சரி என்ற பார்வையையும் நம் சமூகத்தில் வளர்க்க
வேண்டியிருக்கிறது.
இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தற்காலிக ஆறுதல் நிரந்தர மகிழ்ச்சியாக மாற இவையெல்லாம் தேவை.
No comments:
Post a Comment