சரியாகப் பதினைந்து வருடங்கள் முன்பு சென்னை மகளிர் கிறித்துவக்
கல்லூரியில் மாணவிகளுக்கான மூன்று மாத நாடகப் பட்டறை நடத்தியபோது அதில்
‘சண்டைக்காரிகள்’ என்ற நாடகத்தை
உருவாக்கினேன். சரித்திரம் முழுக்கவும் தங்களுக்கான நியாயத்துக்காகவும்
சமத்துவத்துக்காகவும் வெவ்வேறு விதங்களில் சண்டையிட்ட பெண்களின் கதைகளின்
தொகுப்பு அந்த நாடகம்.
அப்படி ஒரு சண்டைக்காரியாக இந்த வாரம் அம்மாபட்டினம் அனீஸ் பாத்திமாவை
அறிந்தேன். மதவெறிக்கு எதிரான சண்டையில் களம் கண்டு வெற்றி அடைந்தவர்.
மதவெறி என்பது எந்தத் தனி மதத்துக்கும் உரிய ஏக போகச் சொத்து அல்ல. எல்லா
மதங்களுக்கும் உரியது. மதத்தின் பெயரால், மதப் பழக்க வழக்கங்களின் பெயரால்
மனிதர்களை
ஒடுக்குவது, அவர்களுடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது என்பதும் எல்லா
மதங்களிலும் இருப்பதுதான். சாதாரண மக்கள் பொறுத்தது போதும் என்று எதிர்த்து நின்றால் மத வெறியர்களால்
தாங்கமுடியாது. பின்வாங்கியே தீரவேண்டியிருக்கும். அப்படி பாகிஸ்தானில்
தாலிபான்களை எதிர்த்து நின்ற சிறுமி
மலாலா இன்று உலகம் முழுவதும் மதவெறிக்கு எதிரான மக்களின் பிரதிநிதியாக
ஆகிவிட்டார்.
தமிழ்நாட்டிலும் ஒரு மலாலாவாக, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி
அம்மாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா உருவாகியிருக்கிறார்.
கோவை அரசு சட்டக்
கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் மாணவியான இவர் புரட்சிகர மாணவர்
இளைஞர் அமைப்பு என்ற இடதுசாரி அமைப்பில் இருப்பவர். இவரது அண்ணன்
அலாவுதீனும் அதே
அமைப்பில் இருக்கிறார். அவரும் அதே கல்லூரியில் சட்டம் படித்து
புதுக்கோட்டையில் வழக்கறிஞராக இருப்பவர்.கடந்த ஜனவரி 27 அன்று இரவு தன் கிராமத்திலிருந்து பக்கத்து ஊரான
மீமிசலுக்குப் போய் கோவைக்கு பஸ் ஏறப் புறப்பட்டார் அனீஸ் பாத்திமா.
அவருக்குத் துணையாகக்
குடும்ப நண்பர் முத்துகிருஷ்ணன் உடன் சென்றார். மீமிசலில் பஸ் ஏறுவதற்காகக்
காத்திருந்த சமயத்தில், பாத்திமா வேறு மத இளைஞருடன் இருப்பதைக் கண்ட சில
இஸ்லாமிய
மதவெறியர்கள் அவர் பஸ்ஸில் ஏறிய பின்னர் அவரிடம் வந்து கடுமையாக
விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். தான் யார் என்றோ, யாருடன் எங்கே செல்கிறேன் என்பதைக் கேட்கவோ அவர்களுக்கு
எந்த உரிமையுமில்லை என்று பாத்திமா பதில் சொன்னதையடுத்து தொடர்ந்து கலாட்டா
செய்துள்ளனர். பஸ் கம்பெனி
ஊழியர்கள் தலையிட்டு பாத்திமா வழக்கமாக அந்த பஸ்சில் செல்பவரென்று
விளக்கியும், பாத்திமாவின் சகோதரர் அலாவுதீனுக்கு முத்துகிருஷ்ணன் போன்
செய்து சொல்லி அவருடன் கலாட்டா செய்தவர்கள் பேசிய
பின்னரும், தாற்காலிக சமாதானம் ஏற்பட்டு, பஸ் புறப்பட்டது. ஆனால் பஸ் கொஞ்ச
தூரம் சென்றதும், சிலர் அதை டூவீலர்களில் துரத்திச் சென்று தடுத்து
மீண்டும்
பாத்திமாவுடன் தகராறு செய்தனர். பாத்திமா எதற்கும் அசரவில்லை. ‘போலீசை வரச்
சொல், பார்த்துக் கொள்வோம்’ என்று சவால் விடுத்தார். பொது இடத்தில் நடந்த
சச்சரவால் கூட்டம் கூடி, போலீசும் வந்துவிட்டது.போலீஸ் வந்ததும் மதவெறி இளைஞர்கள் பலர் காணாமல் போய்விட்டார்கள்.
எஞ்சியிருந்தவர்களை போலீஸ் விசாரிக்கும்போதே, புகார் தரவேண்டாமென்று
பாத்திமாவை, முஸ்லிம் அமைப்புகளின்
பிரமுகர்கள் வந்து வற்புறுத்தத் தொடங்கியதாக ‘வினவு’ இணையம் தெரிவிக்கிறது.
ஆனால் பாத்திமா கடைசி வரை உறுதியாக இருந்து போலீசில் புகார் எழுதிக்
கொடுத்தார். அவரை அதன்பின் வீட்டுக்குப் போலீசாரே பத்திரமாக அழைத்துச்
சென்றனர்.
மறுநாள் நடந்த சமரசப் பேச்சு வார்த்தையில் பாத்திமா புகாரைத் திரும்பப்
பெற உறுதியாக மறுத்தார். போலீஸ் கைது செய்து வழக்குத் தொடர்ந்தால், தவறு
செய்த இளைஞர்களின்
எதிர்காலமே பாழாகி விடும் என்று மன்றாடப்பட்டது. அதையடுத்து,
1. மதத்தின் பெயரால் தாங்கள் இழைத்த கொடுமைக்காகப் பொதுமக்கள்
முன்னிலையில் அனீஸ் பாத்திமாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
2. மத உரிமை என்ற பெயரில் இனி யாருடைய தனி உரிமையிலும் தலையிடமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
இவற்றையே கடிதமாகவும் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை கலாட்டா செய்த
இளைஞர்கள் ஏற்றுக்கொண்டனர். இதை பாத்திமா ஒப்புக் கொண்டார். அதையடுத்து
பிரச்னை நடந்த ஊரின் பொது இடத்தில் மக்கள் முன்னால் ஐவரும் பாத்திமாவிடம்
மன்னிப்புக் கேட்டார்கள். கடிதமும் தரப்பட்டது.
பாத்திமா கடைசிவரை பிடிவாதமாக எதிர்த்துப் போராடக் காரணம், அவர் ஒரு
இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வருபவர் என்பதால் அவருக்கு
ஏற்பட்டிருக்கக்கூடிய
தெளிவுதான். பாத்திமாவின் சகோதரரும் இடதுசாரி அமைப்பில் இருப்பவர் என்பது
இன்னொரு காரணம். சாதி, மத வெறியர்களின் முதல் கவலை தங்கள் சாதி, மதப் பெண்கள் வேறு
சாதியில், மதத்தில் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதேயாகும். இந்தக் கவலை
எல்லா சாதிகளிலும் மதங்களிலும் இருக்கும் வெறியற்ற மனிதர்கள் பலரிடமும்
உண்டென்றாலும்கூட, இதற்காகத் தீவிர வழிகளைப் பின்பற்றுபவர்கள் வெறியர்களே
ஆவர். பிற
மத, சாதி ஆண்களைத் தங்கள் பெண்கள் சந்திக்கவும் பேசவும் பழகவும் விடாமல்
தடுத்துவிட்டால் நல்லது என்பதே இவர்கள் கருதும் தீர்வு. இந்தப்
பார்வையில்தான் இன்று
ஒவ்வொரு சிறு நகரத்திலும் கிராமங்களிலும் சாதி வெறிக் குழுக்களும் மதவெறிக்
குழுக்களும் தம் இனப் பெண்களைத் தொடர்ந்து கண்காணிப்பது, மிரட்டுவது,
குடும்பத்தின் மூலம்
அழுத்தம் தருவது என்றெல்லாம் செயல்களில் ஈடுபடுகின்றன. பெரு நகரத்தில் இது
சாத்தியமில்லை.ஆணோ பெண்ணோ 18 வயதை எட்டிய பின்னர், அவர் யாருடன் பேசுகிறார், யாருடன்
பழகுகிறார், யாருடன் வெளியே செல்கிறார் என்றெல்லாம் கட்டுப்படுத்தும் உரிமை
அவரவர்
குடும்பத்துக்கே கிடையாது. பாத்திமா அடைந்திருக்கும் வெற்றி அவர்
வட்டாரத்தில் இருக்கும் இதர அவர் மதப் பெண்கள் எல்லாருக்கும் பயன்தரக்கூடிய
வெற்றி. நாம் கவலைப்படவேண்டிய அம்சங்கள் இதில் இன்னும் சில உள்ளன. பாத்திமாவைப் போல
ஒவ்வொரு பெண்ணும் பொது இடத்தில் தனக்கு அநீதி நடக்கும் போது
அதை எதிர்த்து சண்டையிட்டால், அதை ஆதரிக்கும் பொதுப் புத்தி நம் சமூகத்தில்
இன்னமும் இல்லை. அரசியல்ரீதியாக கவலைக்குரிய அம்சம், இதில் ஈடுபட்ட மதவெறி இளைஞர்கள்
அரசியல், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதுதான். ஒரு கட்சியாக,
அமைப்பாக இருக்கும்
பல இயக்கங்கள் பொதுவெளியில், ஊடகங்களில் பல நியாயமான சமூக அக்கறையுள்ள
விஷயங்களை முன்வைப்பதும் அவற்றின் தலைவர்கள் கண்ணியமாக அவற்றை
பேசுவதும் ஒருபுறம் நடக்கும் அதேசமயத்தில், அதே அமைப்புகளின்
கீழ்மட்டத்தில் நேர் எதிரான அராஜகப் போக்குகளும் கட்டப் பஞ்சாயத்துகளும்,
பாசிச, நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் சகஜமாகச்
செயல்படுவதைப் பார்க்கிறோம்.
மிக அண்மையில் பி.ஜே.பி.யின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின் வீடியோவைப்
பார்த்த போது அதில் அவர் பெரியாரை ‘அவன் இவன்’ என்றும் ‘அவரை
அப்போதே செருப்பால் அடித்திருக்க வேண்டாமா?’ என்றும் ஆவேசமாகப்
பேசியிருப்பதைக் கண்டபோது, மதவெறி என்பது இவர்கள் எல்லாரையும் தாற்காலிகமாக
மட்டுமே
கண்ணியமாக நடக்கச் செய்யும் சக்தி என்பது புரிகிறது. வேறெப்போது இருந்ததையும்விட இப்போது தமிழ்நாட்டில் சாதி அமைப்புகள், மத
அமைப்புகள் அரசியல் களத்தில் பலமாக இறங்கியிருப்பது மட்டுமல்ல, மிகவும்
பிற்போக்கான பார்வையுடன்
கீழ்மட்டத்தில் செயல்படவும் செய்கின்றன. அது எதுவும் ஊடகங்களின்,
பத்திரிகைகளின் கவனத்துக்கும், ஆய்வு அலசல்களுக்கும் வராமல், மேல்மட்ட
தலைவர்களின் கண்ணியமான சண்டைகள் மட்டுமே செய்திகளாகின்றன.இந்தச் சூழ்நிலையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடியோர் ஒவ்வொரு
சாதியிலும் மதத்திலும் இருக்கக் கூடிய பெண்கள்தான். ஏதாவது ஒரு சாக்கின்
மூலம்
அவர்களை வீட்டுக்குள்ளேயோ அல்லது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயோ
முடக்கிவைக்கும் முயற்சிகளுக்கு சாதி, மத அரசியல் தளம் இன்று சார்பானதாக
இருக்கிறது.
இதில் ஒரு அனீஸ் பாத்திமாவின் சண்டைக்குரல் ஆறுதலாக ஒலித்திருக்கிறது. இந்த
வருடப் பூச்செண்டு பாத்திமாவுக்கு. இன்னும் பல சண்டைக்காரிகள் வெளியே
வரவேண்டும்.
No comments:
Post a Comment