Search This Blog

Saturday, February 15, 2014

ஜெ.வை பயமுறுத்தும் சொத்துக் குவிப்பு வழக்கு!

 
1992-1995 காலகட்டத்தில் ஜெயலலிதா வருமான வரி படிவம் தாக்கல் செய்யாத வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், சென்னையில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கை நான்கே மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அவரது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் பெங்களூர் - நீதிமன்றம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. அது விரைந்து விசாரிக்கப்படும் நிலையைப் பார்க்கும்போது அந்த வழக்கின் தீர்ப்பும் மூன்று, நான்கு மாதத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் முழு கவனம் செலுத்தி, நாற்பதையும் அள்ளும் முயற்சியில் இருக்கும் ஜெயலலிதா தேர்தல் நெருங்கும் சமயம், இந்த வழக்குகள் தமக்குத் தலைவலியாக மாறிவிடுமோ என்ற திக்... திக்கில் இருக்கிறாராம். எப்படியாவது இந்த இரண்டு வழக்குகளும் ஆறப்போடப்பட்டு, மே மாதத்துக்குப் பிறகு விசாரணைக்கு வரும் வகையில், தாமதப்படுத்த தீவிரமாக யோசிக்கப்படுகிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, இந்த வழக்குகள் குறித்து ஜெ.வுக்குப் பாதகமான அம்சங்கள் நீதிமன்றத்தில் வெளிவரும்போது அது குறித்து செய்தி வெளியிடுவதைத் தவிர்க்குமாறு செய்தித்துறை அதிகாரிகள் முன்னணி தமிழ் தினசரி பத்திரிகைகளிடம் ‘நட்பு’ ரீதியாகக் கேட்டுக் கொள்கிறார்கள். வருமானவரி வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது அப்படிக் கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல் தேர்தலின்போது ஆட்சி மட்டத்திலும் ஆளும்கட்சி மட்டத்திலும், பல பக்கங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடும் யோசனைகள் இருப்பதையும் பூடகமாக, புரியும்படிச் சொன்னார்களாம்.
 
காவல் துறை மற்றும் மாநில, மத்திய அரசுகளில் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வுபெற்ற உடனேயோ அல்லது ராஜினாமா செய்தோ, தேர்தல் நெருங்கும்போது, அரசியல் கட்சியில் இணைந்து பிரசாரம் செய்வதோ அல்லது தேர்தலில் போட்டியிடும் போக்குகளோ அதிகமாகிக் கொண்டே இருக்கிறது அல்லவா? இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இப்படிப்பட்ட அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்த போது மத, இன, கட்சிப் பாரபட்சம் காட்டாமல் கடமையைச் செய்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அரசுத் துறைகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், குறிப்பாக உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற தேதியிலிருந்து, இரண்டு வருட காலம், வருமானம் ஈட்டும் தொழிலிலோ, வேலையிலோ செல்லக் கூடாது என்ற நடத்தை விதி இருக்கிறது. அதுபோல உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலோ ராஜினாமா செய்தாலோ ஐந்து வருடம் எந்த அரசியல் கட்சியிலும் சேரக் கூடாது என்றும், தேர்தலில் போட்டியிடக் கூடாதென்றும், நடத்தை விதிகள் திருத்தப்பட வேண்டும்.

அ.தி.மு.க. அமைச்சர்களும், பொறுப்புகளில் இருக்கும் கட்சிப் பிரமுகர்களும், யாரைக் கண்டு பயப்படுகிறார்களோ இல்லையோ மாவட்டத்திலும் உளவுப் பிரிவு (ஸ்பெஷல் பிரான்ச்) அதிகாரிகளைப் பார்த்துத்தான் மிகவும் பயப்படுகிறார்கள். காரணம் ஜெயலலிதா, பெரும்பாலும், கட்சிக்காரர்களின் செயல்பாடுகளைக் காவல்துறை நுண்ணறிவுத் துறை அதிகாரிகளின் அறிக்கையின் மூலமே அறிந்து கொள்வதால் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் மாவட்ட நுண்ணறிவு காவல் அதிகாரிகளைக் குஷியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழல் காரணமாக ஒருவர்மீது அவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. பின்னர் அந்த நபர் தேர்தலில் போட்டியிட முதல்வரால் வாய்ப்பு வழங்கப்படும்போது மீடியாக்கள் மூலமாகப் பாதகமான விஷயங்கள் வெளியே வருகின்றன. வேட்பாளரை மாற்றுகிறார் ஜெ. அ.தி.மு.க.வில் பலமுறை இதுபோன்று நடந்திருக்கிறது. கீழிருந்து நற்சான்றிதழ் கொடுத்த காவல் அதிகாரி எந்த நடவடிக்கைக்கும் ஆளாகாமல் தப்பிக்கிறார். இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டு அ.தி.மு.க. தலைமை கட்சியின் முக்கிய தலைவர்களையோ மாவட்டச் செயலாளரையோ நம்ப வேண்டும்.
 
அபிமன்யு

No comments:

Post a Comment