பைத்தியம் பிடித்த ஒருவனிடம் ‘இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக்கொண்டே இரு’ என்றால் அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக்கொண்டிருக்க முடிகிறது. ஸ்தூல வஸ்துவை நம்மால் பிடிக்க முடிகிறது. ஆனால் ‘ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக்கொண்டு இரு’ என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப் படங்கள் ஓடுவதுபோல் ஓட்டமாக ஓடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத்தான் படுவோம்.
மனம் கட்டப்படுகிற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஐகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம். தோஷம் போனால் ஐகாக்ரதை வரும்; ஐகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும்.
தோஷத்தைப் எப்படிப் போக்குவது?
நமக்கு அழுக்கு என்பது தேகம். இந்தத் தேகம் எதனால் வந்தது? பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம்? கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்தோம். சுற்றியுள்ள கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால், சுற்றின பிரகாரமே மறுபடியும் திரும்பவும் அவிழ்க்க வேண்டும். அதேமாதிரி அஸத் காரியங்களை ஸத் காரியங்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் புண்ணியம் தொலைக்க வேண்டும். கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த அவயவங்களினாலேயே தொலைக்க வேண்டும்.
No comments:
Post a Comment