உலகின்
ஏதோ ஒரு பகுதியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதனை மனிதர்கள் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகமாக உள்ளது. முன்பு மற்ற
நாடுகளில் ஒரு விஷயம் நடந்தால் நேரில் பார்த்தவர்கள் வந்து சொன்னால்தான்
அந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியும். ஒரு தனிமனிதன் எத்தனை பேருக்கு ஒரு
கருத்தைச் சொல்லிவிட முடியும் என்கிற நிலையில் பரந்துபட்ட மக்களுக்கு
தகவல்களும் கருத்துகளும் சென்று சேருவதற்காக உருவானதுதான் பத்திரிகைகள்.
ஆனால், படிக்கத் தெரிந்த மனிதனுக்கு மட்டுமே
பத்திரிகைகள் போய்ச் சேர்ந்தன. படிக்கத் தெரியாதவர்களுக்கும் பல விஷயங்கள்
சென்று சேர வேண்டும் என்று நினைத்தபோது வானொலி என்கிற கண்டுபிடிப்பு
தோன்றியது. ஆனால், வானொலி என்பது வெறும் காதால் மட்டுமே கேட்கக்கூடிய ஒரு
கருவியாக இருந்தது. இங்கிலாந்து இளவரசியின் திருமணம், உலகக் கோப்பை போட்டி,
அமெரிக்க அதிபர் பதவியேற்பு என எதுவாக இருந்தாலும் அதை நேரில் பார்க்கிற
மாதிரி எந்தக் கருவியும் இல்லையே என மனிதர்கள் வருத்தப்பட்டதன் விளைவு,
தொலைக்காட்சிப் பெட்டி உருவானது.
1843 முதல் 1846 வரையிலான காலகட்டத்தில் அலெக்ஸாண்டர்
பைன் மற்றும் ஃபெட்ரிக் பேக்வெல் ஆகியோர் வெவ்வேறு நாடுகளில் தங்களது
ஆராய்ச்சியின் மூலம் புகைப்படங்களை நகரவைக்கும் அமைப்பைக் கண்டுபிடித்தனர்.
இதன்பின் தொலைக்காட்சி பல்வேறு பரிணாமங்களை அடைந்து, 1926-ம் ஆண்டு
பொதுமக்கள் பயன்படுத்தும் நகரும் படங்களைக் காட்டும் தொலைக்காட்சியை ஜான்
லியோ பேர்டு கண்டுபிடித்தார். பின்னர் ஒலி உடைய தொலைக்காட்சி, நீண்ட நேர
வீடியோக்களைக் காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அலைக்கற்றைகளை வாங்கி ஒளிபரப்பும் விதமான அமைப்புடன் தொலைக்காட்சி இருந்தது. பிற்பாடு அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்றைக்கு முழுக்க டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. தற்போது வை-ஃபை வசதியுடன் கூடிய இணையதளத் தொலைக்காட்சி யாக வளர்ந்திருக்கிறது.
இன்று டெல்லியில் மோடியும், ஒபாமாவும் சந்திப்பதை
வீட்டில் உட்கார்ந்தபடி பார்க்க முடிகிறதென்றால், ஆஸ்திரேலியாவில் தோனி
விளையாடுவதை சென்னையிலிருந்து பார்க்க முடிகிறதென்றால், தொலைக்காட்சி
பெட்டிதான் காரணம். ‘இடியட் பாக்ஸ்’ என பெர்னாட்ஷா அதைச் சொன்னாலும்,
சாதாரண மனிதர்கள் எல்லோருக்குமே அது இன்றியமையாத பாக்ஸ்தான்!
ச.ஸ்ரீராம்
No comments:
Post a Comment