சொந்தமாக வீடு
வாங்க வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக்
கடன்தான். ஏனெனில், இன்றைக்கு வீடு விற்கும் விலையில் ஒரு தனிநபர் மொத்தப்
பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்குவது என்பது முடியாத காரியம்.
எனவே, வீடு வாங்கும் கனவை நனவாக்குவதில் வீட்டுக் கடன் பெரும்பங்கு
வகிக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி நிலையான வட்டி (ஃபிக்ஸட் ரேட்),
மாறுபடும் வட்டி (ஃப்ளோட்டிங் ரேட்) என இருவிதமாக இருக்கும்.
பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி
நிறுவனங்களில் நிலையான வட்டி விகிதம் என்பது 2, 3 வருடங்களுக்கு இருக்கும்.
அதன்பிறகு அப்போதுள்ள மாறுபடும் வட்டிக்கு மாற்றப்படும். ஆனால், தற்போது
சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு நிலையான வட்டி
விகிதத்தை அறிவித்துள்ளன. அதாவது, 10 வருடங்கள் வரை நிலையான வட்டியில்
வீட்டுக் கடன் வழங்குகின்றன.
கடந்த பத்து வருடங்களில் வீட்டுக் கடனுக்கான வட்டியானது 7 சதவிகிதத்துக்கு
இறங்கி 13 சதவிகிதத்துக்கு உயர்ந்துள்ளது. இப்போது நீண்ட காலத்தில் நிலையான
வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க என்ன தேவை ஏற்பட்டிருக்கிறது?
தற்போது பண்டிகைக் காலம். இந்த நேரத்தில் பலரும் சொந்த
வீடு வாங்க விரும்புவார்கள். இனிவரும் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி
விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. வட்டி விகிதம்
குறையும்போது, வங்கிகளின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது.
லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீண்ட கால நிலையான வட்டி
விகிதத்தில் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை வைத்துக்கொள்வது நல்லது என
வங்கிகள் நினைப்பதால், நீண்ட காலத்தில் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக்
கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நிலையான
வட்டி விகிதத்தில் கடனை முன்கூட்டியே அடைக்கும்போது நிலுவையில் உள்ள கடன்
தொகைக்கு 2% அபராதம் இருக்கிறது. அதனால், வட்டி விகிதம் குறையும்போது, ஒரு
வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் மாறும் சதவிகிதம்
குறைவாக இருக்கும் என்கிற எண்ணத்திலும் நிலையான வட்டி விகிதத் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் 10 ஆண்டு
களுக்கும், ஆக்ஸிஸ் பேங்க் 20 ஆண்டுகளுக்கும் நிலையான வட்டி விகிதத்தில்
கடன் திட்டங்களை அறிவித்துள்ளன.
பொதுத்துறை வங்கிகள் இந்த நிலையான வட்டி விகிதத் திட்டம் எதையும் புதிதாக அறிவிக்காமல் உள்ளன.
கவனிக்க வேண்டியவை!
மத்தியில் நிலையான ஆட்சி, நவம்பர் மொத்த பணவீக்க
விகிதம் பூஜ்ஜியம், கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து
வருவதால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவது, ஜிடிபி உயர்வு
போன்றவற்றால் இனிவரும் காலத்தில் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்க
வாய்ப்பு அதிகம் உள்ளது.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, வீட்டுக் கடனுக்கான
வட்டி விகிதமும் குறையும்போது, ஃபிக்ஸட் வட்டியில் வீட்டுக் கடன்
வாங்கியவர்கள், அதே வங்கியில் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு மாற முடியாது
என்பது முக்கியமான விஷயம். கடனை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் எனில்,
பாக்கி கடன் தொகையில் 2% அபராதம் கட்ட வேண்டிய சூழல் உருவாகும்.
இந்தத் தொகையைக் கடன் வாங்கியவர் கையிலிருந்து கொடுக்க
வேண்டும். இதன் விளைவாக, வட்டி மிச்சம் ஏற்படாமல் இழப்புதான் ஏற்படும்.
கூடவே, வேறு வங்கிக்குக் கடனை மாற்றும் போது மீண்டும் செயல்பாட்டுக்
கட்டணம், லீகல் ஒப்பீனியன் சார்ஜ், சொத்தின் சந்தை மதிப்பைக்
கணக்கிடுவதற்குக் கட்டணம் என பல கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
வட்டி விகிதம் குறைந்தால், மாறுபடும் வட்டி விகிதத்தில் இஎம்ஐ தொகை குறைவதற்கோ அல்லது கடனை முன்கூட்டியே முடிக்கவோ வாய்ப்புள்ளது.
ஆனால், நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்பவர்கள் அந்தசமயத்தில் அதிக இஎம்ஐ தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தநிலையில், ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட்டுக்
கடன் வாங்கியவர், தவணை சரியாகக் கட்டிவரும் நிலையில், வட்டி குறையும் போது
வேறு வங்கிக்கு கடனை மாற்றப்போவதாக தன் வங்கியில் சொன்னால், அவர்கள்
வட்டியைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சில ஆயிரம் ரூபாயைக்
கட்டணமாக வசூலிப்பார்கள்.
தற்போதைய நிலையில், நிலையான வட்டி விகிதம் மற்றும்
மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையேயான வட்டி வித்தியாசம் 0.5% 1% சத
விகித அளவில் உள்ளது. இது நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்க
வைப்பதுபோல் இருந்தாலும், விரைவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம்
குறையும் என்பதால், மாறுபடும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பதே லாபகரமாக
இருக்கும்.
ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல், கடன் காலம் முழுக்க
நிலையான வட்டி விகிதம், குறுகிய காலத்தில் கடனை கட்டத்
திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் ரிஸ்க்கே வேண்டாம் என்பவர் களுக்குத்தான்
ஃபிக்ஸட் வட்டி விகிதம் என்பதை மனதில் கொண்டு முடிவு எடுங்கள்!
இரா.ரூபாவதி
No comments:
Post a Comment