Search This Blog

Tuesday, January 20, 2015

ரகுராம் ராஜன்!

 
இந்த வருடத்தின் (2015) சிறந்த கவர்னருக்கான விருதினை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்குத் தந்துள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்கிங் என்கிற பத்திரிகை. 2014-ல் ரகுராம் ராஜனின் திறமையான செயல்பாட்டுக்காகவும் இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரம் பற்றிய புரிதலுக்காகவும் இந்த விருதினை அளித்துள்ளது. ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் எடுத்த முடிவுகள் மற்றும் அவரது தெளிவான அணுகுமுறை மூலம் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் என்று புகழ்ந்திருக்கிறது அந்தப் பத்திரிகை. இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகை ரகுராம் ராஜனுக்கு விருது வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.
 
தானமளிப்பதில் போட்டி!


பெங்களூரில் இருக்கும் அட்சய பாத்திரா என்கிற தொண்டு நிறுவனம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைத் திறம்பட நடத்தி வருகிறது. டாடா குழுமமும் இன்ஃபோசிஸ் நிறுவனமும் இணைந்து இந்தத் தொண்டு நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்துள்ளன. நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி 147 கோடி ரூபாய் அளித்துள்ளார். ஜாம்ஷெட்ஜி டாடா டிரஸ்ட்டின் மூலம் 55 கோடி ரூபாயும் நன்கொடை யாக அளிக்கப்பட்டுள்ளது. அட்சய பாத்திரா நிறுவனம் செய்துவரும் சேவையை 2008-ம் ஆண்டிலேயே புகழ்ந்து பேசினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
நல்ல விஷயம், தொடரட்டும்!

மூன்று ஹோட்டல் மாறிய ஜான் கெர்ரி!

வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சிக்காக இந்தியா வந்த அமெரிக்கச் செயலாளர் ஜான் கெர்ரி தங்குவதற்கு குஜராத்தில் அதிரடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அமெரிக்கத் தூதரகம் பாதுகாப்பு நடவடிக்கைக்காக புதிய உத்தியைக் கையாண்டுள்ளது. ஜான் கெர்ரிக்கு மூன்று ஹோட்டல்களை புக் செய்தது அமெரிக்கத் தூதரகம். அவர் எந்த ஹோட்டலில் தங்குவார் என்பதை படுரகசியமாக வைத்திருந்தது. ஒரு ஹோட்டலில் காலை உணவு, இன்னொன்றில் மதிய உணவு, மூன்றாவதில் தூங்கச் செல்வது என்று திட்டமிட்டு எல்லோரையும் திக்குமுக்காட வைத்தது அமெரிக்கத் தூதரகம்.



நிதி ஆயோக் சிஇஓ ஆனார் சிந்து!


திட்ட கமிஷனுக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் என்னும் அமைப்புக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், திட்ட கமிஷனின் செயளராகப் பணியாற்றிய சிந்து குலார் (Sindhushree Khullar) சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1-ம் தேதி முதல், ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்தப் பதவியை வகித்து வருகிறார். ஏற்கெனவே திட்ட கமிஷனில் பணியாற்றி இருப்பதால், இவரது பங்களிப்பு இதில் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
ட்விட்டர் வாங்கும் இந்திய நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் ட்விட்டர் இணையதளம், இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஜிப்டயல் நிறுவனத்தை 30 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 185 கோடி ரூபாய்க்கு மேல்) தந்து வாங்க முயற்சித்து வருகிறது. 2010-ல் தொடங்கப்பட்ட ஜிப்டயல் நிறுவனம், 2014-ல் இந்தியாவின் எட்டாவது மிகச் சிறந்த இன்னோவேட்டிவ் கம்பெனி என்கிற சிறப்பைப் பெற்றது. இந்த நிறுவனத்துக்கு உலக அளவில் 500 வாடிக்கையாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது!
 

 
 

No comments:

Post a Comment