Search This Blog

Saturday, January 03, 2015

இயற்கைப் புரதம் இருக்கையில் செயற்கைப் புரதம் வேண்டாமே!


சமீப காலமாகக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஆரோக்கியம் காக்க உதவும் பானங்கள் என்ற பெயரில் புரதச் சத்து பானங்களைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்துகிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று பார்ப்போம்.

நம் ஒவ்வொருவரின் உணவிலும் புரதம் நிறைந்த உணவு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு கிலோ உடல் எடைக்கு, ஒரு கிராம் புரதம் தேவை என்பது பொதுவான கணக்கு. ஒரு கிராம் புரதச் சத்து 4 கலோரி சக்தியைத் தருகிறது.
‘எக்ஸ்ட்ரா எனர்ஜி’க்குப் புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக், புரோட்டீன் சப்ளிமென்ட் சாப்பிடுங்கள்’ என்ற விளம்பரங்கள் வெகுவாகப் பிரபலமாகி வருகின்றன. ஆரோக்கியமான உடல்நிலை உள்ள எவருக்கும் இந்த வகைப் புரதப் பானங்கள் தேவையே இல்லை.

நீண்ட காலம் நோய்வாய்ப் பட்டவர்கள், நாள்கணக்கில் பட்டினி கிடந்து, உடல்நிலை மோசமானவர்கள், புரத உணவைக் குறைத்துச் சாப்பிட்டு மராஸ்மஸ் மற்றும் குவாஸியார்க்கர் போன்ற புரதப் பற்றாக்குறை நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், பாடி பில்டர்கள், தீவிரமான விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு வேண்டுமானால் இந்தப் பவுடர்கள் தேவைப்படலாம்.
இப்படிப் புரதம் தேவைப்படுபவர்கள் மிகவும் குறைந்த சதவீதத்தினர்தான். மற்றவர்கள் இந்த பானங்களை எடுத்துக்கொள்ளும் போது சில வேண்டாத விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

பசிக்கும்போது சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும் என்பதுதான் இயல்பான முறை. ஆனால், அப்படிப் பசிக்கிற வேளைகளில் இந்தப் புரதச் சத்து பானங்களைக் குடித்து விட்டால், வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து விடும். பசி போய்விடும். பிறகு வழக்கமாகச் சாப்பிட வேண்டிய மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியன அடங்கிய உணவைச் சாப்பிடமாட்டோம். இதனால் வைட்டமின் சத்துக்குறைவு நோய்கள் ஏற்படும். உடல் பலம் பெறுவதற்குப் பதிலாக பல வீனம் ஆகும்.

அடுத்து, இந்த வகைப் பானங்களில் கலக்கப்படும் சர்க்கரைப் பொருள், செயற்கை இனிப்புகள், செயற்கை நிறங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. சிறு வயதிலேயே உண்டாகும் நீரிழிவு நோய், ஹார்மோன் கோளாறுகள்,புற்றுநோய் போன்றவற்றுக்கு இவை வழி வகுக்கின்றன என்கிறது அந்த நிறுவனம்.

எனவே, செயற்கையாகத் தயாரிக்கப்படுகிற இம்மாதிரியான பானங்களைத் தவிர்த்துவிட்டுப் பால், தயிர், லஸ்ஸி, பருப்பு, முளை கட்டியப் பயறுகள், முட்டை, மீன் போன்ற இயற்கை உணவுகளிலிருந்து புரதச் சத்தைப் பெற முயல்வதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

டாக்டர் கு.கணேசன்

No comments:

Post a Comment