Search This Blog

Sunday, January 04, 2015

ஹாலிவுட் ட்ரெய்லர்!

2015 வந்தாச்சு. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவர இருக்கும் ஹாலிவுட் படங்களின் முன்னோட்டம் இது.


உலகம் முழுவதுமே ஆர்வமாக எதிர்பார்க்கும் படம் ஸ்டார் வார்ஸ் - 7. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் உயிர்களுக்கும் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும்  உயிர்களுக்கும் இடையே நடக்கும் ஆதிக்கப் போட்டிதான் கதை. அந்தக் கதையின் அடிப்படையில் இதுவரை 6 படங்கள் வெளிவந்துள்ளன. இதுவரை வெளியான அனைத்து ஸ்டார் வார்ஸ் படங்களும் இயக்குநர் லூகாஸின் லூகாஸ் பிலிம்ஸ் மூலம்தான் தயாரிக்கப்பட்டது. தற்போது டிஸ்னி நிறுவனத்தின் கைகளில் லூகாஸ் உள்ளது. 'டிஸ்னி தயாரிப்பதால், ஸ்டார் வார்ஸ் தொடர் படங்களின் தாக்கத்தைக் குறைவாக எண்ண வேண்டாம், படத்தின் கதை இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸ்தான்’ என்கிறது டிஸ்னி. இந்திய மதிப்பில் 1,400 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகிற இந்தப் படம் 3டியிலும் பரவச அனுபவம் தரக் காத்திருக்கிறது!  


ஹங்கர் கேம்ஸ் மோக்கிங் ஜாய் - 2:   டைஸ்டோபியன் எனும் கிரகத்தை ஆட்சி செய்யும் அரசன் புரட்சி செய்த கிராமங்களை இரு குழுவாக்கி சாகும்வரை சண்டையிட வைக்கும் கதை. இதுவும் தொடர் படம்தான். அதில் இது மூன்றாவது பாகம். ஹங்கர் கேம்ஸ் சீரிஸ் படங்களில் கேட்னீஸ் என்கிற கேரக்டரில் வரும் கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ்தான் இதுவரை வெளியான மூன்று படங்களின் முதுகெலும்பே. அந்த வரிசையில் கடைசிப்படம் என்கிற அறிவிப்போடு வெளிவர இருக்கும் இந்தப் படம் 2015 நவம்பர் 20ல் ரிலீஸ் ஆகிறது!


ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே: கோடீஸ்வரர் ஒருவரைப் பேட்டி எடுக்கப் போகும் பெண்ணுக்கும் அந்தப் பணக்காரருக்கும் இடையிலான கதைதான் இது. புத்தகமாக வெளிவந்து டாப் விற்பனையில் இருக்கும் ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே படமாக வரப்போகிறது என்றவுடனே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. நாவலைப் படித்தவர்கள் மட்டுமில்லாமல் அதன் விற்பனையைக் கேள்விப்பட்டவர்களும் எதிர்பார்க்கும் இந்தப் படம் பிப்ரவரி மாதம் வெளியாகிறது!


பீநட்ஸ்:  ஆங்கிலப் படவுல கில் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்க வைக்கும் ஒரு விஷயம், மற்ற படங்களைப் போலவே பிரமாண்ட தயாரிப்பில் அனிமேஷன் படங்களும் துணிச்சலாகப் போட்டியில் இறங்குவதுதான். அமெரிக்காவில் நவம்பர், டிசம்பர் விடுமுறைக்காலம் என்பதால், அதை கணக்கில் கொண்டு நிறையப் படங்கள் வெளியாகும்.  அந்தக் காலகட்டத்தில் வெளியாகிறது இந்த பீநட்ஸ். ஸ்னூப்பி எனும் கார்ட்டூன் கேரக்டர் காமிக் ரசிகர்களிடம் அதிகம் பரிச்சயம். 100 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் குழந்தைகளைக் குறிவைத்து மயக்கக் காத்திருக்கிறது!


ஃபென்டாஸ்டிக் ஃபோர்: விண்வெளி ஆராய்ச்சிக்குப் போகும் நால்வருக்கு அவர்களின் விண்வெளி ஓடத்தைக் கடக்கும் காந்தப் புயலால் நான்கு வித ஆற்றல்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் உலகை அவர்கள் எப்படி தீய சக்தியிடம் இருந்து காக்கின்றனர் என்பதே கதையின் ஒன்லைன். ஒரு நல்ல கதையை எத்தனை முறை படமாக எடுத்தாலும் ஓடும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஃபென்டாஸ்டிக் ஃபோர். இதற்கு முன்னர் 2005-ல் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இப்போது மீண்டும் முதல் பாகம் முற்றிலும் ரீமேக் செய்யப்பட்டு புதிய நடிகர்களுடன் தயாராகி ஆகஸ்ட் - 7 அன்று திரைக்கு வருகிறது. ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு ஹை டெசிபலில் எகிறிக் கிடக்கிறது எதிர்பார்ப்பு!  


ஸ்பெக்டேர்: ஜேம்ஸ் பாண்டின் லேட்டஸ்ட் அதிரடிச் சரவெடி.  பிரிட்டன் உளவு அமைப்பான எம்.ஐ.6ஐக் கலைத்து விடும் சூழல் மிஸ்டர் எம்முக்கு ஏற்படுகிறது. அதில் ஜேம்ஸ் பாண்ட் வெற்றி பெறுகிறாரா என்பதுதான் கதை. கடைசியில் ஜேம்ஸ் பாண்ட்தான் ஜெயிப்பார் என்று எல்லோருக்குமே தெரியும். இருந்தாலும் எப்படி ஜெயிக்கிறார் என்கிற ட்ரீட்மென்டில்தான் இருக்கிறது பாண்ட் வித்தை. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பாண்ட் கார், பாண்ட் கட்டப்போகும் வாட்ச் எல்லாமே நெட்டில் உலாவ ஆரம்பித்துவிட்டன. விதவிதமான பெண்கள், விதவித துப்பாக்கிகள் என ரஜினி போல் மவுசு குறையாத பாண்ட்தான் இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பு!


செந்தில்குமார்

No comments:

Post a Comment