Search This Blog

Tuesday, April 15, 2014

புதிய மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன ?

நம் நாடு வளர்ச்சி காண வேண்டும் - அடுத்த சில வாரங்களில் அமையப்போகும் புதிய மத்திய அரசிடம்  மக்கள் எதிர்பார்ப்பது இதுவாகவே இருக்கிறது. ஆனால், அடுத்துவரும் பிரதமர் யாராக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சியை மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிதாக உயர்த்திவிட முடியாது. அப்படி உயர்த்துவதற்கு பல விஷயங்கள் தடையாக இருக்கிறது. இதில் முக்கிய தடையாக இருப்பது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு. அடுத்துவரும் அரசாங்கமானது இந்த விஷயத்தில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே நம் நாடு வேகமான வளர்ச்சி காணும். என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்?


தொழில் துறை! 

ஒரு நாட்டின் வளர்ச்சி பிரமாதமாக இருக்க வேண்டும் எனில், தொழில் துறை நல்ல வளர்ச்சி காண வேண்டும். நம் நாட்டில்  தொழிற்சாலை தொடங்கத் தேவையான நிலத்தை மாநில அரசாங்கம்தான் தரவேண்டும். மத்திய அரசாங்கம் நிலம் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்பதால், அந்த வேலையை அது செய்ய முடியாது. இதற்கு அருமையான உதாரணம், மேற்கு வங்காளத்தில் சிங்கூரில் டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை அமைக்க முற்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பு.


தொழிற்சாலைக்குத் தேவையான இடத்தை ஒதுக்கித் தருவதில் அரசியல் காரணங்கள் தவிர, வேறு சில நியாயமான காரணங்களும் மாநில அரசாங்கங்களுக்கு இருக்கலாம். நிலங்களின் விலை மிக அதிகமாக வளர்ந்திருப்பதை இதற்கொரு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் நில ஆர்ஜித சட்டம் சில ஆண்டுகளுக்குமுன் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இந்த ஒரு சட்டத்தினால் மட்டுமே அந்தப் பிரச்னையை தீர்த்துவிட முடியாது. தொழில் துறைக்குத் தேவையான நிலத்தைத் தருவதில் தொடங்கி, அதற்குத் தேவையான பல்வேறு அனுமதிகளை வழங்குவது வரை உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டால் மட்டுமே தொழில் துறை வேகமான வளர்ச்சி காணும்.

ஜிஎஸ்டி! 

பொருட்கள் மற்றும் சேவைக்கு வரி விதிக்கும் முறையான ஜிஎஸ்டி-யை மத்திய அரசாங்கம் கொண்டுவருவதை சில மாநில அரசாங்கங்கள் எதிர்க்கின்றன. காரணம், இந்த வரி விதிப்புமுறை நடைமுறைக்கு வந்தால், விற்பனை வரி, மாநில கலால் வரி போன்ற சில முக்கிய வரிகள் காலாவதியாகிவிடும். இந்த வரிகள் மூலமாகத்தான் மாநில அரசாங்கங்களுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை மாநில அரசாங்கங்கள் இழக்கும்பட்சத்தில் அதற்கான இழப்பீட்டை மத்திய அரசாங்கமானது எப்படி தரப் போகிறது என்பது முக்கியமான கேள்வி.

எனினும், மத்திய அரசினால் இந்த ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவராமல் இருக்க முடியாது. இந்த வரியைக் கொண்டுவருவதன் மூலமே இந்தியா முழுக்க எல்லாப் பொருட்களுக்கும் ஒரேமாதிரியாக விலை நிர்ணயம் செய்ய முடியும்.

ஜிஎஸ்டி-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநில அரசாங்கங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பு பிரச்னையில் சரியானதொரு தீர்வை கூடிய சீக்கிரத்தில் கண்டால் மட்டுமே பொருளாதார மேம்பாட்டுக்கான வழிபிறக்கும்.

விவசாயத் துறை!  

நம் நாட்டில் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்கிறது. அதனால்தான் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது, நியாய விலை கடைகளுக்குத் தேவையான பொருட்களை மானிய விலையில் தருவது என்கிற முக்கிய விஷயங்களை மத்திய அரசாங்கம் செய்கிறது.

ஆனால், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிற வேலையை மாநில அரசாங்கங்கள்தான் செய்ய வேண்டும். உதாரணமாக, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர வேண்டியது மாநில அரசாங்கம்தான்.

நீர்வளம் மாநில அரசாங்கங்களில் கீழ் வருவதால், ஒரு மாநிலம் பக்கத்தில் உள்ள இன்னொரு மாநிலத்துடன் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் பல்வேறு சிக்கல் இருப்பதை காவிரிப் பிரச்னை மூலமும், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னை மூலமும் நாம் நேரடியாக அனுபவித்து வருகிறோம்.

நீர்வளம், உரங்களுக்கான மானியம் என்பது போன்ற விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் மத்திய-மாநில அரசாங்கங்கள் நல்லிணக்கத்தோடு செயல்பட்டால் மட்டுமே விவசாயத் துறையில் இந்தியா முழுக்க பெரிய அளவில் வளர்ச்சி காண முடியும்.

அரசு செலவினங்கள்! 
 
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் என மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது. இந்தத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கித்தருவதோடு மத்திய அரசாங்கத்தின் வேலை முடிந்துவிடுகிறது. இந்தத் திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசாங்கங்களின் வேலைதான்.

உதாரணமாக, பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசாங்கம் தந்தாலும், அது எந்த பள்ளியையும் நடத்துவதில்லை. (கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகள் நாடு முழுக்க வேலை பார்க்கும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான்!)

மத்திய அரசின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. உதாரணமாக, ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களை   நடைமுறைப் படுத்துவதால், தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்துக் கும் தேவையான வேலையாட்கள் கிடைப்பது குறைகிறது. சம்பளத்தை அதிகமாக தந்து வேலையாட்களை வேலைக்கு கொண்டுவர வேண்டி யிருக்கிறது. இதனால் உற்பத்திச் செலவு கூடுகிறது. பொருட்களின் விலை அதிகரிக்கிறது.

இது ஒருபக்கமிருக்க, சில மாநில அரசாங்கங்கள் அரசியல் காரணமாகவும் மத்திய அரசின் நலத் திட்டங்களை சரியாக அமல்படுத்து வதில்லை. இதனாலும் மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சரியாகப் போய்ச் சேருவதில்லை.

அரசின் செலவினங்கள் மக்களுக்கு சரியாக போய்ச் சேர, மத்திய - மாநில அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கல்வியறிவும் ஆரோக்கியமும் பெருகி, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி காணும்.

அந்நிய நேரடி முதலீடு! 
 
அந்நிய நேரடி முதலீடு பங்குச் சந்தையிலும் சில தொழில் துறைகளிலும் வருவதில் பிரச்னை இல்லை. காரணம், இவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளில் வரும்போது, பிரச்னை வருகிறது.

உதாரணமாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாமா,வேண்டாமா என்பது பற்றி ஒவ்வொரு மாநில அரசும் ஒவ்வொருவிதமான முடிவை எடுக்கிறது. ஒரே பிராண்டு  விற்பனையில் மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஏற்கெனவே அனுமதி தந்து அதை சட்டமாக ஆக்கியிருந்தாலும், மாநில அரசாங்கம் விரும்பினால் மட்டுமே அதை அமல்படுத்த முடியும். இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசாங்கங்களுக்கு இடையே இருவேறு நிலைப்பாடு இருப்பதால் அந்நிய நேரடி முதலீடு வருவதற்கு வாய்ப்பே இல்லை. 

வேகமான பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் மிகச் சில விஷயங்களை பற்றி மட்டுமே நான் சொல்லி இருக்கிறேன். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது'' என்று விரிவாக பேசி முடித்தார் பேராசிரியர் சீனுவாசன்.

அடுத்த பிரதமர் யாராக இருந்தாலும், அவர் மேற்சொன்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே வேகமான பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்.





ஸ்மார்ட்போன் - போலி ஆப்ஸ்கள்!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர்.  மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான்.
 
சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத் தரும் ஆப்ஸ்கள் வரை பல ஆப்ஸ்கள்  ஆஃப் மார்க்கெட்டில் இலவசமாகவும், சிறிய கட்டணத்துடனும் கிடைக்கின்றன. இவையெல்லாம் பாதுகாப்பானவை தானா, இதில் உள்ள போலிகளை எப்படி கண்டுபிடிப்பது, போலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன??
 
ஸ்மார்ட் போன்களின் விலையும் குறைந்துவருவதால் அதன் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஆனால், அதன் மீதான விழிப்பு உணர்வு இருக்கிறதா என்றால், இல்லை.ஸ்மார்ட் போன்கள் கணினியைப் பின்னுக்குத் தள்ளி அது செய்யும் வேலைகளில் பெரும்பாலானவைகளைத் தானே செய்கின்றன. இந்தநிலையில் மோசடி கும்பல்களின் பார்வை கணினி களிடமிருந்து ஸ்மார்ட் போன்களின் பக்கம் இப்போது திரும்பி இருக்கிறது.
 
இதற்கோர் உதாரணம், சில ஆண்டுகளுக்குமுன், கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மார்க்கெட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களில் டிராய்டுட்ரீம் (DroidDream) என்னும் டிரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் உள்ள அப்ளிகேஷன்களை இயக்கியவுடன், போனில் அதன் உரிமையாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெற்றுவிடுகிறது.

இதன்மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்களை எளிதாக டவுண்லோடு செய்கிறது. இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் நீக்கியது.

சீனாவில், இந்தவகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தன.  அந்தச் சமயத்தில் வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் பயனாளர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தது. 'மொபைல் போனுக்கான ஆப்ஸ்களை டவுண்லோடு செய்யும் போது அது  பாதுகாப்பானதுதானா என்று கண்டறியுங்கள்’ என்பதே அந்த கோரிக்கை.

உத்தரவாதம் இல்லை! 

நீங்கள் எந்த ஆப்ஸை எதிலிருந்து டவுண்லோடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அவை பாதுகாப்பானதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஆண்ட்ராய்டு போனில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஒரு அப்ளிகேஷனை கூகுள் பிளேயில் இருந்து டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது. கூகுள் பிளே அல்லாத வேறு தளங்களின் மூலம் டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

டிசேபிள் செய்வது அவசியம்! 

கூகுள் பிளேயில் இருந்து நீங்கள் டவுண்லோடு செய்யும் ஆப்ஸ்களின்  பாதுகாப்பு கூகுள் பிளேயால் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு வேறு தளங்களில் இருந்து டவுண்லோடு செய்யப்படும் அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்ய விரும்பவில்லை எனில், Settings > Security / Settings > Applications பகுதியில் Unknown sources என்பதை டிசேபிள் செய்திருக்க வேண்டும்.

ரிவியூ  படியுங்கள்! 

கூகுள் பிளேயிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் டவுண்லோடு செய்துகொள்ளலாமா எனில், அது பாதுகாப்பானதல்ல. சில சமயங்களில் புதிய அப்ளிகேஷன் ஒன்றை டவுண்லோடு செய்வது நம் பாதுகாப்புக்குப் பிரச்னையாக அமையலாம். எனவே, அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனை தேர்வு செய்வது புத்திசாலித்தனம். அதோடு ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை  பயன்படுத்தும்முன் அதை பயன்படுத்தி யவர்களின் கருத்தை கூகுள் பிளேயில் படிப்பதும் அவசியம்.

நிறுவனத்தின் பெயரை கவனி! 

முக்கியமானதொரு ஆப்ஸை டவுண்லோடு செய்யவேண்டும் எனில், அது குறிப்பிட்ட நிறுவனம்தான் வெளியிட்டுள்ளதா என்பதை அறிந்துகொண்டு டவுண்லோடு செய்வது நல்லது. ஆப்ஸ்களின்  பெயருக்கு கீழே அதை வெளியிட்ட நிறுவனத்தின் பெயரும் இருக்கும். நிறுவனத்தின் பெயரை இணையத்தில் தேடுவதன் மூலம் அதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களின் கீழே அந்த நிறுவனத்தின் முழுப்பெயர் இருக்கும்.

படிக்காமல் அனுமதி தரக்கூடாது!  

அப்ளிகேஷன் ஒன்றினை டவுண்லோடு செய்வது என்று முடிவு செய்தபின் நீங்கள் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், ''permissions'' எல்லா அப்ளிகேஷன்களும் இதைக் கேட்கும். இணையத்தை எப்போது அக்சஸ் செய்யவேண்டும் என்று அனுமதி கேட்டபின், அந்தஅப்ளிகேஷன் இணையம் சார்ந்த சேவையைத் தரும் அல்லது உங்களுக்கு நிறைய விளம்பரங் களைக் காட்டும். இதேபோல, நீங்கள் இருக்கும் இடம், போன் கால்/மெசேஜ் போன்றவற்றைச் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், சோஷியல் நெட்வொர்க் நண்பர்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போட்டோ எடுக்கும் பெர்மிஷன் என்று பல செயல்களைச் செய்ய உங்களிடம் அனுமதி கேட்கப்படும்.

இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, 'போன்கால்/மெசேஜ் போன்றவற்றை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன்'. ஏனெனில், எல்லா அப்ளிகேஷன்களும் அக்சஸ் செய்யும்பட்சத்தில் உங்கள் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும். எனவே, குறிப்பிட்ட அப்ளிகேஷன் எந்த மாதிரியான பெர்மிஷன்களைக் கேட்கிறது, அது நிஜமாகவே தேவையானதுதானா என்று தெரிந்துகொள்வது பாதுகாப்பானது.

அப்டேட் கவனம்! 

ஆரம்பத்தில் சில பெர்மிஷன்களை மட்டும் கேட்டுவிட்டு, நீங்கள் ஆப்ஸ்களை அப்டேட் செய்யும்போது புதிய பெர்மிஷன்களைக் கேட்கும் அப்ளிகேஷன்களும் உள்ளன. எனவே, அப்டேட் செய்யும்போதும் இதைக் கவனிப்பது அவசியம். சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற்போதைய ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும், எந்த நேரமும் ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது. பல நேரங்களில் நம் சமயோசிதப் புத்திசாலித்தனம்தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்.

- பி.கே.ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் - பிரபு கிருஷ்ணா.

ஆப்ஸ் வைரஸ்கள் உஷார்! 

இன்றைய நிலையில் தகவல் திருடுபவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகத் திகழ்கின்றன வைரஸ்கள். ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலான வைரஸ்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுகின்றன. ஸ்மார்ட்போன் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கும் அப்ளிகேஷன் களைப் போலியாகத் தயாரிக்கும் மோசடி கும்பல், அதைக் குறிவைத்து      தாக்குவதுபோலவே வைரஸ்களையும் உற்பத்தி செய்து உலாவவிடுகிறது. இந்தவகை வைரஸ்கள், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனிநபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.

தகவல் திருடன்! 

ஒரிஜினல் குறியீடுகள் கொண்ட ஆப்ஸ்களாக இருந்தால் அது உட்புகுந்த வைரஸால் பாதிக்கப்படுவதில்லை. போலியான அப்ளிகேஷன்களாக இருந்து அதைப் பயனாளர்,  ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்தும்போது,  கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகள் மூலம் தகவல்கள் திருடப்படுகின்றன. இ-மெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.

இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள ஃபைல்கள் அதே பெயரில், புதிய ஃபைல்களைப் பதிக்கிறது. இதனால் எந்தச் சோதனைக்கும் முதலில் உள்ள ஒரிஜினல் ஃபைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு ஃபைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது. அதுமட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது.

வரும்முன் காப்பது! 

அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற இணையதளங்களுக்கான இணைப்பை அவசரப்பட்டு கிளிக் செய்துவிடக் கூடாது. நம்பகத்தன்மையான மொபைல் ஆன்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதையும் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோடு செய்யக்கூடாது. முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்தபின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்லோடு செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற மிகவும் நம்பகத்தன்மையான ஆஃப் மார்க்கெட்டில் மட்டுமே தேவையான அப்ளிகேஷன்களையே பயன்படுத் தினால், உங்கள் தனிப்பட்ட தகவல் களுக்கு எந்த பங்கமும் வராது!

தங்க ஓலையில் தரங்கம்பாடி !


ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் தொட்டுச் செல்லும் தொலைவில் கம்பீரமான அழகுடன் நிற்கிறது அந்தக் கோட்டை. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் முதல் சுவடு தமிழ்நாட்டில் பதிக்கப்பட்ட கடற்கரைக் கிராமமான தரங்கம்பாடியில் 16-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. டேனிஷ்காரர்களுக்கு முன்னரே போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும் கிறித்துவத்தைப் பரப்ப இந்தக் கிராமத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் வலிமையான இந்தக் கோட்டை எழுந்த பின்னர்தான், ‘தரங்கம்பாடி மிஷின்’ என்ற சபை உருவாகி, தமிழ்நாட்டில் கிறித்துவத்தின் நுழைவாயிலாகி இருக்கிறது இந்தக் கோட்டை. ஒரு தமிழகக் குறுநில மன்னராலோ புரட்சிக்காரர்களாலோ கட்டப்படவில்லை. இங்கு வந்து ஒரு கோட்டையைக் கட்டிக் கொள்ளுங்கள், உங்கள் மக்களைக் குடியமர்த்துங்கள் என டென்மார்க் மன்னரான 4ஆம் கிறிஸ்டியனுக்கு ரெங்கநாத நாயக்கர் என்பவர் வரவேற்று எழுதிய ஒரு கடிதத்தால் எழுந்த கோட்டை. 

கடிதம் சாதாரணமாக எழுதப்படவில்லை. பனை ஓலை வடிவில் தயாரிக்கப்பட்ட ஒரு தங்க ஓலையில் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தங்க ஓலையும் இதைப்போல வேறு சில தங்க ஓலைகளும் இன்னும் பத்திரமாக இருப்பது டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ள ‘ராயல் ஆர்க்கைவ்ஸ்’ என்ற ஆவணக் காப்பகத்தில். இதைத் தவிர பல ஆயிரக்கணக்கானச் சுவடிகளும், கையெழுத்துப் பிரதி ஆவணங்களும் நவீன வசதிகளுடன் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.இந்தக் குவியல்களுக்குள்ளே இருக்கும் தங்க ஓலைகளைப் பார்த்து ஆராய்ந்து, அதிலிருக்கும் விவரங்களைச் சொல்லியிருப்பவர் ஒரு தமிழர். பேராசிரியர் பி.எஸ்.ராமானுஜம். இவர் தொல்லியலில் பேராசிரியர் இல்லை. டென்மார்க்கின் மிகப்பெரிய, பாரம்பரிய மிக்க பல்கலைக்கழகமான டென்மார்க் டெக்கினிக்கல் யூனிவர்சிட்டியில் இயற்பியல் பேராசிரியர். தம் துறையில் 8 புத்தகங்களும், 82 கட்டுரைகளும் எழுதியிருப்பவர். இவருக்கு பழைய சுவடிகள், ஆவணங்களை ஆராய்ச்சிச் செய்வது பொழுதுபோக்கு. இவர் டேனீஷ், ஜெர்மன் மொழிகளை நன்கு அறிந்தவர். பண்டைய தமிழ் எழுத்துகளையும் எளிதாகப் படிப்பவர். இந்த ஆவணங்களை நாம் படிக்கக்கூடிய தமிழில் எழுதி, ஆங்கிலம், டேனிஷ், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து ஆவணக்காப்பகத்துக்கு உதவுகிறார்.

இந்தத் தங்க ஓலை அன்றைய தஞ்சாவூர் மன்னருக்கும் டென்மார்க் மன்னருக்கும் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கை என ஆவணக் காப்பகத்தில் கேட்லாக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது ரெங்கநாத நாயக்கன் என்பவர் டென்மார்க் மன்னருக்கு எழுதிய ஒரு கடிதம். இதில் மன்னரை நலம் விசாரித்து டென்மார்க்கிலிருந்து வந்த கடற்படை கேப்டன் ரோலண்ட், ஹாலந்திலிருந்து வந்திருக்கும் ஜெனரல் ஆகியோரை சிறப்பாகப் பல்லக்கில் வரவேற்றது குறித்தும் தரங்கம்பாடி துறைமுகம் நிறுவப்பட்டிருப்பதால் டேனிஷ் மக்களை வந்து குடியமரச் சொல்லும்படியும் எழுதப்பட்டிருக்கிறது. ‘நாயக்கன்’ என்ற சொல்லால் மன்னர் எனத் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மன்னருக்கு அனுப்பப்பட்டிருக்கும் பரிசுகளும் கடிதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தரங்கம்பாடி பகுதி ரெங்கநாதரின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதியாக இருந்தாலும் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரங்களால் அவர் பயன் பெற்றதால், ஒரு பண்டகச் சாலை அமைக்க இடம் கொடுத்திருக்கிறார். பின்னாளில் அது கோட்டையாகியிருக்கிறது.

40 செ.மீ. நீளமும் 25 செ.மீ., அகலமும் உள்ள இந்தத் தங்க ஓலை1620 ஏப்ரலில் ஆணியும் சுத்தியும் கொண்டு தமிழில் வடிக்கப்பட்டிருக்கிறது. ரெங்கநாத நாயக்கன் தெலுங்கில் கையெழுத்திட்டிருக்கிறார். அவரது நீண்ட கையெழுத்துக்கு மேல் சில கடித எழுத்துக்கள் இருப்பதால் முதலில் கடிதத்தில் கையெழுத்துப் போடப்பட்டபின் செய்தி வடிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழில் கையெழுத்திடத் தெரியாத ஒருவர் தங்க ஓலையில் தரங்கம்பாடி கிராமத்தை, தமிழ் தெரியாத டென்மார்க் மன்னருக்கு தாரைவார்த்திருக்கிறார். இந்தக் கடிதத்தின் டேனிஷ் மொழிபெயர்ப்பு காகிதத்தில் எழுதப்பட்டு இதனுடன் அனுப்பப்பட்டிருக்கிறது, அதுவும் இந்த காப்பகத்தில் இருக்கிறது. அப்போது இந்தியாவிலும், டென்மார்க்கிலும் அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த தங்க ஓலையைத் தவிர, இன்னும் இரண்டு தங்க ஓலைகளும் இருக்கின்றன. ஒன்று மன்னருக்கு நன்றி சொல்லும் கடிதம், மற்றொன்று ‘கம்பெனியின் சார்பாக’ என நான்கு தமிழர்கள் கையெழுத்திட்ட ஒரு புகார்க் கடிதம்.  ஏன் தங்க ஓலைகள்? எழுதியவர் மற்றும் பெறுபவரின் கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுவதற்கும், என்றும் நிலைத்து நிற்கும் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம் என்கிறார் ராமானுஜம். இந்தக் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட அலமாரிகளில் ஆயிரக்கணக்கான தமிழ் ஆவணங்கள் தவிர உருது, தெலுங்கு, கன்னட மோடி (பழைமையான மராத்திய மொழி) மொழிகளிலும் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் தமிழ் ஆவணங்களைப் பற்றி மட்டும் ஆராய்ச்சிகள் செய்கிறார் ராமானுஜம். அவர் ஆராந்தவற்றின் ஆங்கிலம், டேனிஷ் மொழிபெயர்ப்புகளை குறிப்புகளுடனும், ஆவணங்களின் போட்டோக்களுடனும் அவருடைய இணையதளத்தில் (http://www.tharangampadi.dk/) வெளியிட்டிருக்கிறார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுவது நோக்கம். ஆர்வமுள்ளவர்களைத் தொடர்பு கொள்ள வரவேற்கிறார். இவர் இந்தத் தங்க ஓலையில் கண்டுபிடித்துச் சொன்ன ஒரு விஷயம் அதிலிடப் பட்டிருக்கும் தேதியில் தவறு. அந்தத் தவறைச் சரித்திர ஆசிரியர்கள் எவரும் கவனிக்கவில்லை என்கிறார். தமிழில் எழுதப்பட்டிருக்கும் அந்தத் தங்க ஓலையில் ஆண்டும் மாதமும் தமிழில் ‘ருத்ர வருடம் சித்திரை மாதம் 20’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ் வருடங்களுக்கு இணையான ஆங்கில வருடங்களைக் காட்டும் அட்டவணையின்படி அது 1620 ஏப்ரல் 25. ஆனால் அந்தக் காலகட்டத்தில் இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் டேனிஷ் கேப்டன் ஓவ்க் ஜெட்டேயின் கப்பல் ஆப்பிரிக்கக் கடலைக் கடந்து கொண்டிருந்தது; இந்தியாவை அடையவில்லை. அப்படியானால் எங்கே தவறு? ஆராய்ச்சிக்குரிய விஷயம் இதுதான்! 

தரங்கம்பாடி அரசியல் ஆவணங்களைத் தவிரவும் பல சுவடிகள் இங்கிருக்கின்றன. கிறிஸ்டியன் கிறிஸ்டோபர் என்பவர் தரங்கம்பாடி டேனிஷ் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். இவர் 1831ல் ‘கபில வாசகம்’, ‘ஆத்திசூடிக் கதைகள்’ என்ற இரண்டு பெரிய சுவடித் தொகுப்புகளை வாங்கி டென்மார்க்குக்கு அனுப்பியிருக்கிறார். பல ஆண்டுகளாகக் கேட்பாரற்றுக் காப்பகத்தின் நிலவரையிலிருந்த இது ஒரு நூலகரால் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது இங்கே பாதுகாக்கப்படுகிறது. அதை ராமானுஜம் நாம் படிக்கக்கூடிய தமிழில் எழுதி அதை ஆங்கிலத்திலும் டேனிஷிலும் மொழிபெயர்த்திருக்கிறார். சுவடிகளின் படங்களுடன் பக்க எண் இட்டு மொழிபெயர்ப்புகளைத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.400 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைப் பயணங்கள் தமிழில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அது ஐரோப்பாவின் ஒரு பகுதியில் சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதும் பெருமைக்குரிய விஷயம். அதைவிட பெருமைக்குரியது முனைவர் ராமானுஜம் செய்து கொண்டிருப்பது.

ஆனந்த் - க்ராம்னிக்


உலகின் மிகச்சிறந்த எட்டு வீரர்கள். ஒருவருக்கொருவர் இருமுறை போட்டியிட வேண்டும். அதிகப் புள்ளிகள் எடுப்பவர் நவம்பரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் கார்ல்சனுடன் மோதவேண்டும். ‘44 வயது ஆனந்த் ஜெயிப்பது கடினம். ஆரோனியன் அல்லது க்ராம்னிக் ஜெயிக்கக்கூடும்’ என்று கார்ல்சன் தம் போட்டியாளரைப் பற்றி ஆருடம் கூறியிருந்தார். உண்மையில் ஆனந்தை ஒருவர்கூட மதிக்கவில்லை. புதிய தலைமுறை கிளம்பிவிட்டது. இவர் ஏன் இந்தப் போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்கிறார் என்கிற பார்வை பலருக்கும் இருந்தது. அதற்கேற்றவாறு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி, பிறகு ஆடிய இரண்டு பெரிய போட்டிகளிலும் தோல்வி என ஆனந்த்தின் செஸ் வாழ்க்கை அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

கேண்டிடேட்ஸில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று ஆனந்துக்கும் ஒரே குழப்பம். ஆனால் ஒருவருக்கு மட்டும் ஆனந்த் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. போட்டியாளராக, எதிரியாக ஆனந்தைப் பார்க்காமல் ஒரு நல்ல நண்பனாக ஆனந்துக்கு அறிவுரை வழங்கி இன்று அவரையும் அவர் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியிருப்பவர், க்ராம்னிக்.‘லண்டன் போட்டியின்போது க்ராம்னிக் ஒரு ஆட்டத்தில் தோற்றுப் போயிருந்தார். அவரைச் சாந்தப்படுத்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கு அவர் என்னைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். கேண்டிடேட்ஸில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்’ என்று தம் மனத்தை க்ராம்னிக் மாற்றிய விதம் பற்றிப் பேசுகிறார் ஆனந்த். கேண்டிடேட்ஸில் ஆனந்துக்கு முதலிடம் கிடைக்க கிராம்னிக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. ஒரே துறையில் இருந்தாலும் நண்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் ஆனந்தும் க்ராம்னிக்கும்.யாரும் எதிர்பாராதவிதமாக கேண்டிடேட்ஸை ஆனந்த் ஜெயித்திருப்பது செஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மட்டும் ஆனந்த் எப்படி நன்றாக ஆடினார் என்பதை விடவும் கடந்த இரண்டு வருடங்களாக ஏன் மோசமாக ஆடினார் என்பதுதான் பலருக்கும் ஆச்சர்யம்.

ஆரோனியனை முதல் ஆட்டத்தில் வென்றது பெரிய திருப்புமுனை. அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் ஆனந்த் முன்னிலைவகித்தார். இறுதிவரை யாருக்கும் வழிவிடவில்லை. 14 ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் பெற்று மற்ற ஆட்டங்களை டிரா செய்தார். ஒரு தோல்விகூட இல்லை. இந்த வெற்றியினால், ஆனந்த் தரவரிசையில் உலகளவில் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்திருக்கிறார். (போட்டிக்கு முன்பு 8ம் இடம்.) போட்டியை வென்றதால் 1.11 கோடி ரூபாய் பரிசுத் தொகையாகக் கிடைத்திருக்கிறது. கடந்த 18 வருடங்களில் 9 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆனந்த் தகுதி பெற்றிருக்கிறார் (5 முறை வெற்றி, நான்கு முறை தோல்வி). 2014 உலக சாம்பியன்ஷிப் போட்டி, நார்வேயில் அல்லது அமெரிக்காவில் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆனந்த் கேண்டிடேட்ஸில் பங்குபெற ஊக்கமளித்த க்ராம்னிக் இன்னொரு முறை ஆனந்துக்கு பூஸ்ட் கொடுக்கிறார். ‘இந்த முறை கார்ல்சனை ஆனந்த் வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது!’ நண்பேன்டா!

ச.ந.கண்ணன்

ஓட்டுனரில்லா கார் - தொழில்நுட்பம்


ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் கதை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். தானியங்கி / ஓட்டுனரில்லா கார் - முற்றிலும் நிஜம்!!! என்ன இப்படிப் பாக்கறீங்க? தானியங்கி புகைவண்டி ஜப்பான் போன்ற நாடுகளிலும், எல்லா வெளிநாட்டு விமான நிலையத்திலும் ஓடும்போது தானியங்கி கார் சாத்தியமில்லையா? உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகளின் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் பாதிக்குப் பாதி மனிதரின் (கவனக்குறைவு) பிழையினால்தான் நடக்கிறது. அதற்கு இந்த ஓட்டுனரில்லா கார் நல்ல தீர்வாக அமையும் என்கிறார்கள் ஆட்டோமோட்டிவ் நிபுணர்கள்.

கூகிள் நிறுவனம்தான் இந்த முயற்சியில் வீறு நடைபோட்டு முன்னேறி வருகிறது. டொயோட்டா ப்ரியஸ் என்ற காரை சோதனை ஓட்டமாக இதுவரை சுமார் முந்நூராயிரம் கி.மீ. ஓட்டிச் சாதித்திருக்கிறது. அமெரிக்காவில் இந்தக் கார் இதுவரை எந்த விபத்திலும் மாட்டிக் கொள்ளவில்லை. ஜி.எம்., பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ., வோல்வோ என்ற எல்லா நிறுவனங்களும் தத்தம் ஓட்டுனரில்லா காரைச் சந்தைக்குக் கொண்டுவர முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றன. நீஸான் நிறுவனம் 2020இல் தன் ஓட்டுனரில்லாக் காரைச் சந்தைக்குக் கொண்டு வருவதாக மார்தட்டுகிறது. அமெரிக்காவில் ஒன்றிரண்டு மாகாணங்கள் தானியங்கிக் காருக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டன.

காருக்குள் ஒரு கணினி இருக்கும். காருக்கு வெளியே லேசர் நிலப்படம் இருக்கும். அந்த நிலப்படம் காரைச்சுற்றி 200 அடிவரை சுற்றளவில் இருக்கும் பொருட்களை, சாலையைப் படம்பிடித்து உள்ளிருக்கும் கணினிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் சாலையின் 3டி பிம்பம் கிடைத்துவிடும். அதே போல், காரின் ஓட்டுனர் கண்ணாடிக்குக் கீழே இருக்கும் காமிரா பாதசாரிகள், சிக்னல் விளக்கு எல்லாவற்றையும் படம்பிடித்து கணினிக்கு அனுப்பும். இதன்மூலம் கார் தன் முன்னே வரும் இடையூறுகளை அறிந்து கொள்ளும். காரின் முகப்பில் மூன்றும், பின்புறம் ஒன்றும் என நான்கு ரேடார் உணரிகள் உள்ளன. இவை தூரத்துப் பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும்.

தானியங்கிக் கார்களுக்குச் சாலைகளின் கட்டமைப்பு மிகமிக முக்கியம். இல்லையேல் இந்தக் காரை கொண்டுவந்து எந்தப் பயனும் இல்லை. உலகில் ஒரு சில நாடுகளைத் தவிர எல்லா நாடுகளிலும் இது கேள்விக்குறியே. அதே போல், காரில் சென்சார் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் ஒரு குறிப்பிட்ட கார் இந்த விநாடியில் எந்தச் சாலையில் எந்த ஊரில் இருக்கிறது என்று மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இதனால் குறிப்பாக பிரபலங்களின் அந்தரங்கம் பாதிக்கப்படும்!  

அதே போல் 100% தானியங்கி கார் தற்பொழுது சாத்தியம் இல்லை. அதெல்லாம் இன்னும் நூறு வருடம் கூட பிடிக்கலாம். இடைஇடையே, காரை இயக்க வேண்டி வரும். அதனால், கிடைத்தது சாக்கு என்று காரில் ஏறிக் குறட்டை விட்டுத் தூங்கிவிடலாம் என்று பகல்கனவு காணாதீர்கள். ஆனால் பாவம், உலகம் முழுவதும் காரையே நம்பி பிழைப்பு நடத்தும் ஓட்டுனர்கள், கால் டாக்ஸி நிறுவனங்கள், ஏர்போர்ட் வாடகைக் கார்கள் என எல்லா தொழிலும், அதில் ஈடுபட்டுள்ள ஏழை மக்கள் பலரும் இந்த ஓட்டுனரில்லா கார் வந்தால் கஷ்டப்படுவார்கள் என்று ஒரு பக்கம் விமர்சனம் எழுந்தவண்ணம் உள்ளது. 

அண்ணா, எதுக்கும் எங்க இந்தியச் சாலைகளில் ஒரு முறை ரவுண்டு அடிச்சுட்டு அப்புறம் இந்தக் காரை பெருமளவில் தயாரிக்க ஆரம்பிங்க! இரண்டு காரை சுற்றிலும் குறைந்தது பத்து மோட்டார் சைக்கிள், ஆட்டோ இருக்கும். அப்புறம் உங்க ஓட்டுனரில்லா காரில் இருக்கும் உணரிகள் எல்லாம் செய்வதறியாது தடுமாறிவிடும்!!!

தி.சு.பா.

இவரும் தமிழ்த் தெய்வமே!

 
தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
 
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். அவரைப் ‘பிள்ளையார்’ என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். ‘பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே ‘பிள்ளை’ என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் ‘பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
 
தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை ‘நம்முது’ (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்து ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு. ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனஸமூஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு. தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தான வராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.
 
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு - ஒருவேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே - அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் - அந்த அண்ணா - தம்பிகளைப் பிரிக்கவேபடாது, சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் - பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ‘ரெஸொல்யூஷன்’ கொண்டு வரப்போகிறேன்!. (அது) ‘பாஸ்’ ஆகணுமே! அதனால், புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன். ‘யுனானிம’ஸாகவே ‘பாஸ்’ பண்ணிவிடுவீர்கள்!
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

பாபர் மசூதி - கோப்ரா போஸ்ட்

 
டிசம்பர் 6, 1992. இந்திய வரலாற்றில் ஓர் கருப்பு பக்கம். ராமஜென்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும் பலர் மனத்திலிருக்கிறது. கர சேவைக்காகப் போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சிமிக்க பேச்சுக்களால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பழைய கட்டடத்தை இடித்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்கு விசாரணைகளும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட சதி என்கிறது.
 
கோப்ரா போஸ்ட் என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (தெஹல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர் கே ஆஷிஷ், பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாகச் சொல்லி, 23 முக்கிய தலைவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வின கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க. சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.  

இவர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சி.பி.ஐ. தமது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரேஷன் ஜென்மபூமி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச் செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும் ‘கோப்ரா போஸ்ட்’டின் டிவிடியை தில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கினார். இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:
 
பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனா வால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும், இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ‘பலிதானி ஜாதா’ எனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கப்பட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவரை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்தப் படைக்கு லக்ஷ்மண சேனை என்று பெயர்.
 
மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபா தலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளி மனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில் 5 பேர்கள் ராமபக்தர்களானார்கள். நாங்கள் கோவிலை காப்போம் என ராமர் மேல் சத்தியம் செய்து கொண்டு பணியைத் தொடங்கினார்கள்.  

சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கத் திட்டமிட்டவர் உமா பாரதி. பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கட்டடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டது.ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க இரண்டு தற்கொலைப் படையினர் உடலில் கட்டிய குண்டுகளுடன் ‘பிளான் பி’யாக தயாராக இருந்தனர் என்றும் பேட்டிகளில் பதிவாகியிருக்கிறது.மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் இந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசியக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி. சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.இந்த நாசவேலைக் குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்குக்கும், பிரதமர் நரசிம்ம ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருப்பமில்லாத சிங் டிச. 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர். எஸ்.எஸ்.வீரர்களால் ‘சிறை’ பிடிக்கப்பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார். இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதைத் தடுக்கும் விதத்தில் ‘கோப்ரா போஸ்ட்’ திட்டமிட்டு காங்கிரஸின் உதவியுடன் சதிசெய்வதாகவும், இது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார் செய்தது. இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. செய்தியைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் பி.ஜே.பி. அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்கவில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.
 
இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவுசெய்யப்பட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளைச் சந்திக்கத் தயார் எனச் சவால் விடுகிறது கோப்ரா போஸ்ட்.  

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை சட்ட விதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது பி.ஜே.பி.
 
ஆதித்யா

Wednesday, April 09, 2014

கோடை நோய்கள்..

 
இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து மே மாதம் வரும் அக்னி நட்சத்திரம்... இன்னும் கொடுமையாக இருக்கப்போவது உறுதி. ஒவ்வொரு பருவநிலைக்கும் அதற்குரிய நோய்கள் நம்மைத் தாக்கும். அப்படி வெயிலுக்கே உரிய நோய்களான வியர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச்சல் என பலவும் நம்மைத் தாக்கக் காத்திருக்கின்றன. 
 
சின்னம்மை... பெரிய விளைவுகள்!  
 
இந்தக் கோடையில் சில நோய்க்கிருமிகள் அதிக ஆற்றலுடன் செயல்படும். அவற்றில் முதன்மையானது, சிக்கன்பாக்ஸ் என்று சொல்லக்கூடிய சின்னம்மை. இதை உருவாக்கும் கிருமி, நம் உடலில் விரைவாக தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. கோடைகாலத்தில் இன்னும் வீரியமாகச் செயலாற்றும். வெளியில் வேலை செய்பவர்களுக்கும், டூ வீலரில் அலைபவர்களுக்கும் எளிதில் தொற்றும். பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, தூசு மற்றும் புகை மண்டலம் வழியாக எளிதாக மற்றவர்களுக்கும் பரவிவிடும். உடம்பில் நீர்ச்சத்துக் குறைந்தாலும் சின்னம்மை ஏற்படும். 
 
இதற்கான அறிகுறிகள்... அதிக ஜுரம், பின் கழுத்து, முதுகு, கை போன்ற இடங்களில் சிறுசிறு கொப்புளங்கள். இந்த கொப்புளங்களைக் கிள்ளக்கூடாது. இவை, ஒரு வாரத்தில் தாமாகவே மறைந்துவிடும். முன்னோர் சொன்னபடி, வேப்பிலைகளை விரித்து அதன்மீது படுப்பது, வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரில் குளிப்பது, வேப்பங்கொழுந்தை அரைத்துக் குடிப்பது போன்றவற்றை கடைபிடித்தால்... கொப்புளங்களால் ஏற்படக்கூடிய அரிப்பு நீங்கும். அதிகப்படியான அரிப்போ அல்லது அதிக காய்ச்சலோ இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.எண்ணெய் சேர்த்த உணவுகள், அசைவ உணவுகளுக்கு முற்றிலும் தடை போடுங்கள். ஆவியில் வேகவைத்த காய்கறிகள், இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகள், பழங்கள், மோர், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
கோடைக்கால சளி மற்றும் காய்ச்சல்! 

மற்ற பருவநாட்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலில் இருந்து மாறுபட்டது, கோடை கால காய்ச்சல். இதை உருவாக்கும் வைரஸ்கள், கோடையில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் மூலமாகவும், பகலில் அதிக வெப்பம், மாலையில் அதிக குளிர் போன்ற சீதோஷ்ண மாற்றத்தாலும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

வியர்க்குரு, வேனல் கட்டிகளுக்கு கெட் அவுட்! 
 
உடம்பின் வெப்பநிலை அதிகரிப்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்து, விரைவாகக் குறைந்து வற்றிவிடும். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, அவை உடம்பில் வேனல் கட்டிகளையும் முகத்தில் பருக்களையும் ஏற்படுத்தும். இவை அதிக வலி தருவதாக இருக்கும். அளவில் சிறிய கட்டிகளாக இருந்தால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும். சீழ்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால், மருத்துவரிடம் செல்லவேண்டும். இந்தக் கட்டிகளை கையால் தொடவோ... கிள்ளவோ கூடாது. இதன் சீழ் மற்ற இடங்களில் பட்டால், அங்கேயும் கட்டிகள் தோன்ற வாய்ப்புகள் அதிகம்.

வியர்வை உடம்பில் தங்குவதால் வியர்க்குரு ஏற்படுகிறது. ஆகையால், வியர்வையை உடம்பில் தங்க விடாதபடி முகத்தை வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது, தினமும் இரண்டு முறை குளிப்பது, வெளியில் செல்லும்போது வியர்க்குரு பவுடர் போட்டுச் செல்வது... என்று பராமரிப்பதன்  மூலம் வியர்க்குருவிலிருந்து தப்பிக்கலாம். வியர்க்குரு வந்துவிட்டால், கையால் தொட்டு சொறியக்கூடாது. இரண்டு வேளை குளிப்பது, இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது, அரிக்கும் இடங்களில் அதற்கான பவுடர் போடுவது ஆகியவற்றை மேற்கொண்டால்... வந்த வேகத்தில் அவை மறைந்துவிடும்.

வியர்வை காரணமாக வரும் ஜலதோஷம் பிடிப்பது வழக்கமே. குறிப்பாக, தலைப்பகுதியில் ஏற்படும் வியர்வையின் ஈரம் காரணமாகவே இந்தத் தொல்லை. எனவே, வியர்வையை துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்

சருமப் பிரச்னைகள்! 

இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி... படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் (படர்தாமரை பரவும் இடங்களில் தோல் வீங்கி சிவப்பது) போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக தூசு, வெப்பம் கலந்த காற்று காரணமாகவும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். உடலை மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலைத் தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்கான க்ரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு தடவுவது ஆகியவற்றை மேற்கொண்டாலே... பிரச்னை தீர்ந்துவிடும்.

வெயில் காலத்தில் படுத்தி எடுக்கும் பிரச்னை... சூடுபிடித்தல். அடிவயிறு வலிப்பதுதான் சூடுபிடித்தலின் அறிகுறி. அப்படி வலித்தால், அடிவயிற்றில் தொப்புளை சுற்றி நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது, கூடுமானவரை குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது, தண்ணீர் அதிகம் அருந்துவது போன்றவற்றை கடைபிடித்து நிவாரணம் பெறலாம்'’.

''தண்ணீர், தண்ணீர், தண்ணீர். இதுதான் கோடையில் உடம்புக்குத் தேவையான முக்கிய உணவும் மருந்தும். சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என்றால், கோடையில் 5 - 6 லிட்டர் தண்ணீர் உடம்புக்குத் தேவைப்படும். இதை பின்பற்றினாலே, கோடைகால நோய்கள் பலவற்றையும் விரட்டிவிடலாம்.

எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் பொதுமருத்துவர் டாக்டர் ஜோய் டேவிட் ஆண்டன்.

 

Monday, April 07, 2014

மனை VS அபார்ட்மென்ட்

முதலீட்டு நோக்கில் சொத்து வாங்கும் பலர் புறநகர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். நகருக்குள் அபார்ட்மென்ட்டும், மனை விலையும் மிக அதிகமாக இருப்பதால் புறநகர்களுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. அதுவும் புறநகர்களில் அபார்ட்மென்ட்டைவிட மனையைப் பெரிதும் விரும்பி வாங்குகிறார்கள். இதற்கு, அபார்ட்மென்ட்களின் விலை, மனையின் விலையைவிட அதிகமாக இருப்பது மற்றும் ஃப்ளாட்டைவிட பிளாட் விலை வேகமாக உயர்ந்துவருவதும் காரணமாக இருக்கிறது.


முதலீடு செய்ய வேண்டும் என்று கையில் ரொக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் மனைகளை வாங்கலாம். ஏனெனில், முதலீட்டின் மீதான வருமானம் இதில் அதிகம். மனை மற்றும் அபார்ட்மென்ட் வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்களை இனி விளக்கமாகப் பார்ப்போம்.


ஜியோனி இலைஃப் இ7

இன்றைக்கு மொபைல் துறையில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராண்டு, ஜியோனி (Gionee). இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட் போன் ஜியோனி இலைஃப் இ7 (Gionee Elife E7).


இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 4.2-ல் இயங்குகிறது. 5.5 இன்ச் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் தொடுதிரையைக் கொண்டுள்ள இந்த போன், 401 ppi திறன் கொண்டுள்ளது. 2.5 GHz QuadCore பிராசஸரையும் Qualcomm Snapdragon 800 Soc என்னும் கிராபிக்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளது.

மேலும், 3 ஜி.பி. ராம் மற்றும் 2500 mAh திறன் கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், வாடிக்கையாளர்களுக்கு 16 ஜி.பி மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் வடிவத்தில் கிடைக்கும். மேலும், ஏழு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 மெகா பிக்ஸல் பின்புற கேமராவையும் 8 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் உள்ள முன்புற கேமரா அதிக அளவிலான பிக்ஸல்.

(8 மெகா பிக்ஸல்) கொண்டது என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது. பின்புற கேமரா உயர்தர  சென்ஸாரைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகச் சிறந்த படங்களை உடனுக்குடன் எடுத்துவிடலாம்.
16 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட இந்த  ஸ்மார்ட் போனின் விலை ரூ.24,000, 32 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட் போனின் விலை ரூ.27,000 என்ற விலைகளில் விற்கப்பட்டு வருகிறது.

Saturday, April 05, 2014

குறைந்து வரும் பறவை இனங்கள்

 
தமிழகத்தின் நினைவுச் சின்னங்களாகவும் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கும் பறவையினங்களின் பெருக்கமும் வரத்தும் குறைந்து வருவதற்கு சுற்றுச்சூழல் மாசே காரணம்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
தமிழகத்தின் நினைவுச் சின்னங்களாகவும் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கும் பறவையினங்களின் பெருக்கமும் வரத்தும் குறைந்து வருவதற்கு சுற்றுச்சூழல் மாசே காரணம்" என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீர்காகம், மரகதப்புறா, சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்களைத் தற்போது பார்ப்பதே அரிதாகி விட்டன. தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்காக காடு, மரங்கள் அழிக்கப்படுதல், ரசாயனக் கதிர்வீச்சுகள், பருவமழை பொய்த்து வருவது, பருவநிலை மாற்றம் போன்றவையே பறவை இனங்கள் அழிவதற்குக் காரணமாகின்றன என்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆறு, வாய்க்கால், குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அளவுக்கதிகமாக இருக்கிறது. இவை மழைக்காலங்களில் நீரால் நிரம்பித் ததும்பும் நேரத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, ருஷியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் உணவு தேடியும் இனப்பெருக்கத்துக்காவும் இயற்கைவளம் சார்ந்த இங்கு இடம் பெயருகின்றன. அதுபோன்று நமது நாட்டு பறவைகள் அயல்நாடுகளுக்குச் செல்வதும் தொடர்கிறது.ஆனால் முன்புபோல இப்போது பறவைகளின் வருகை இல்லை. போதிய மழையின்மை, நீர்நிலைகள் தூர்ந்துபோனது, காலநிலை மாற்றம் போன்றவை பறவைகளின் வருகைக்குத் தடைக்கல்லாக இருந்து வருகிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குளங்கள் அதிகளவில் உள்ளன. பருவமழையை மட்டுமல்லாது இக்குளங்கள் எல்லாக் காலங்களிலும் தாமிரபரணி ஆற்றின் மூலமாக ஆண்டுதோறும் நல்ல நீர்வரத்தைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பறவை இனங்களின் வரத்து வெகுவாகக் குறைந்ததையடுத்து மணிமுத்தாறு அகத்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கைவள பாதுகாப்பு மையம், முத்துநகர் இயற்கைச் சங்கத்தினர் இணைந்து நீர்வாழ்ப் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டனர்.கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், உள்ளூர்ப் பொதுமக்கள் என 61 பேர் அடங்கிய குழுவினர் கணக்கெடுப்பு நடத்தினர்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 63 குளங்களில் 3 நாட்கள் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பின் முடிவில் 60 வகையான 58 ஆயிரம் பறவைகள் வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டை போன்று அதே எண்ணிக்கையிலான பறவைகளே தற்போதும் வாழ்வது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே எண்ணிக்கையில்தான் நீர்வாழ் பறவைகள் இருப்பது கணக்கெடுப்பின் மூலமாகத் தெரியவந்துள்ளது.

பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி இனங்களைப் பிடித்துத் தின்று விவசாயிகளுக்கு நண்பனாக இருக்கும் பறவை இனங்கள் குறைந்து வருவது நல்லதல்ல. எனவே பறவை இனங்களைப் பாதுகாத்திடுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்ற குரல் பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.


எம்.பார்த்தீபன் சங்கர்
 

கம்பியில்லா மின்சாரம் !

 
லேப்டாப், மோடம், ரௌட்டர், தொலைபேசி, தொலைக்காட்சி, கேபிள் டி.வி. என்று எந்த வீட்டு ஷோகேஸ் பின்னாடியும் கசமுசவென்று வயர்கள். இந்த வயர்கள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டன. இந்த வயர் இல்லாமல் நம்மால் ஒரு வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்காவில் மசசூஸெட்ஸ் மாகாணத்தில் "Witricity" என்ற நிறுவனம் கம்பியில்லா மின்சாரத்தை உருவாக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது சிறிய அளவில் அந்த ஆராய்ச்சியில் வெற்றியும் கண்டுள்ளது. 
 
கம்பியில்லா இணையம் இருக்கும் பொழுது கம்பியில்லா மின்சாரம் ஏன் கூடாது என்று அந்நிறுவனம் கேட்கிறது. ஹை! கம்பியில்லா மின்சாரம் மட்டும் வந்துவிட்டால், நம் தெருக்களில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் மின்கம்பிகளில் இனி துணி காயப்போடலாம்.  இந்தக் கம்பியில்லா மின்சாரம் எப்படி இயங்கும் என்பதைக் காணலாம். காற்றில் மின்சாரத்தைச் செலுத்த மாட்டார்கள். அதற்குப் பதில் காந்தப்புலத்தைக் காற்றில் உருவாக்குவார்கள். காந்தப்புலத்தில் மற்றொரு சுருள் வரும்பொழுது மின்சாரம் உற்பத்தியாகும். அந்தக் காந்தப்புலத்துக்குள் ஓர் உபகரணம் வந்தவுடன், ஆற்றல் கடத்தப்பட்டு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும். உடனே நமக்கு ஒரு சந்தேகம் வரும். மனிதர்களோ, விலங்குகளோ இந்தக் காந்தப்புலத்தினுள் வந்தால் பாதிப்பு ஏற்படுமா? ‘இல்லை’ என்று அந்த நிறுவனம் அடித்துக் கூறுகிறது. இன்று லேப்டாப்பில், செல்பேசியில் உபயோகிக்கப்படும் வயர்லெஸ் - கம்பியில்லா இணையம் - போலத்தான் இதுவும். பாதிப்பு கிடையாது. இந்நிறுவனம் மடிக்கணினி, மின்விளக்கு, தொலைக்காட்சி என அன்றாட சாதனங்களை இக்கம்பியில்லா மின்சாரம் மூலம் (சிறிய அளவில்) இயக்கிக் கொண்டுள்ளது. அதை மக்களுக்கும் செய்து காண்பித்து விளக்கியிருக்கிறது அந்நிறுவனம்.வரும்காலத்தில் நமது வீடுகளில், நம் பாக்கெட்டுகளில் இருக்கும் செல்பேசியில் சார்ஜ் குறைந்தால், அதுவே கம்பியில்லா மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும். அதேபோல் மின்சாரக் கார்களும் சந்தையில் வரத் தொடங்கியிருக்கின்றன. உங்கள் அப்பார்ட்மென்ட் பார்க்கிங்கில் இரவு காரை நிறுத்தி விட்டு தூங்கப் போனால் மறுநாளுக்குள் அதுவே சார்ஜ் செய்து கொள்ளும். பெட்ரோல் பங்குக்கு ஓடத் தேவையில்லை. தவிர, இன்று புழக்கத்தில் இருக்கும் மின்சாதனப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் என எல்லாவற்றையும் வேறு மாதிரி அதாவது மிக எளிதாகத் தயாரித்தாலே போதும்.
 
எனினும் இந்த வைட்ரிசிட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பல சவால்களும் உள்ளன. குறிப்பாக, கம்பியில்லை என்றால் எவ்வளவு தூரம்? நம் வீடுகளில் கூடத்தில் பரவியிருக்கும் காந்தப்புலத்தைக் கொண்டு படுக்கை அறையிலிருந்து கொண்டு மின்சாரத்தைப் பெறமுடியுமா? அதற்கான விடை இன்னும் தெரியவில்லை. இது தற்பொழுது ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இதன் மீது பல விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.

கம்பியில்லா மின்சாரம் வெற்றி பெற்றால், உலகையே புரட்டிப் போடும் என்பதில் ஐயமில்லை.


ஆர்வமுள்ளவர்கள் www.witricity.com என்ற இணையதளத்துக்குச் சென்று விவரங்களைப் படிக்கலாம்.

தி.சு.பா.

அருள்வாக்கு - அறிவு கடந்த சாஸ்திர விதி!

 
இந்த எக்ஸ்ப்ளனேஷன்களெல்லாம் இரண்டாம் பக்ஷம்தான். நம்முடைய சாஸ்த்ரங்களைத் தந்திருக்கிற பெரியவர்கள், நம் அறிவுக்குப் புரியவே முடியாததும், ஸ்வய ப்ரயத்னத்தால் அநுபவத்துக்கு வரவே முடியாததுமான ஆத்மலோக ஸத்யங்களைக் கண்டறிந்து அநுபவித்து அவற்றை நாமும் அடைய வேண்டும் என்ற பரம கிருபையிலேயே சாஸ்திர விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். 
 
அப்படிப்பட்டவர்கள் ‘சுத்து, சுத்திக்கோ, அதுகளை வலமாய்ப் பண்ணு, மெதுவாய்ப் பண்ணு’ என்று சொல்கிறார்களென்றால் அதெல்லாம் நம் கே்ஷமத்தை உத்தேசித்துத்தான். ஏதொன்று அவர்கள் சொன்னாலும் அர்த்தத்தோடு சொன்னதுதான். வேறே காரணம், எக்ஸ்ப்ளனேஷன் தேடவே வேண்டாம். புத்தி சும்மாயிருக்காமல் கேள்வி கேட்கிறதே என்றுதான் காரணத்தைத் தேடி எக்ஸ்ப்ளென் என்று பண்ணுவதெல்லாம். அவர்கள் சொன்னது அர்த்தத்தோடுதான்; அது ஜீவர்களுடைய கே்ஷமத்திற்காகத்தான் என்பதற்கு proof வேண்டுமென்றால், பெரிய proof, அவர்கள் சொன்னபடியே பக்தி விச்வாஸத்தோடு பண்ணியதாலேயே அநாதி காலமாக, வேறே எந்தத் தேசத்திலும் இல்லாத அளவுக்கு, இங்கே தலைமுறைதோறும் எல்லா ஜனங்களுமே பொதுவாக சாந்தர்களாகவும் நல்லவர்களாகவும் இருந்து வந்திருப்பதும், அவர்களில் எத்தனையோ பேர் மஹான்களாகவே அநுக்ரஹம் பண்ணிக் கொண்டு இருந்ததும்தான். கேள்வி கேட்க ஆரம்பித்த நாளாக ஏற்பட்டிருக்கிற துர்த்தசையை ப்ரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். இருந்த இடத்திலேயே விழுந்து கிடக்கிற நமஸ்காரத்துக்குப் பூர்வாங்கமாக இருக்கப்பட்ட ப்ரதக்ஷிண ஸப்ஜெக்டைப் பெரிசாகவே சுற்றி வளைத்து ப்ரதக்ஷிணம் பண்ணி விட்டேன்! சக்தியில் ஆரம்பித்து சாந்தத்தில் முடிகிறதற்குத்தான் இப்படி ப்ரதக்ஷிணமும், அதை முடித்து நமஸ்காரமும்.
 
மொத்தத்தில் விஷயம் என்னவென்றால்: ஒரு மனோபாவத்தை வெளிப்படுத்துவதற்காகச் செய்கிற சரீர க்ரியையே தலைமுறை தலைமுறையாகப் பலபேர் அப்படிப் பண்ணுகிறபோது மரத்தில் வஜ்ரம் பாகிற மாதிரி ஒரு உள்பலத்தைப் பெற்று விடுகிறது. அப்புறம் இந்த க்ரியையே அந்த மனோபாவத்தை பலப்படுத்தி விருத்தி செய்து கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. அடிப்படையில் அந்த மனோபாவத்தை நாம் நினைத்து அந்த க்ரியையைச் செய்தால், க்ரியையே நினைப்பை ஆழப்படுத்தி பாவத்தை வளர்த்துக் கொடுக்கும். அப்படி இந்த ஸாஷ்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரங்கள் விநய ஸம்பத்து என்ற உசந்த - தாழ்மையாலேயே உசரமான - பாவத்தை போஷித்துக் கொடுக்க உதவியாயிருக்கின்றன.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

கவாஸ்கர்?!


‘ஒரு தொடக்க ஆட்டக்காரர், (அணியைக் காப்பாற்ற) நைட் வாட்ச்மேனாக மாறுவார் என்று நினைக்கவில்லை’- பி.சி.சி.ஐ.யைக் கவனிக்கும் பொறுப்பு கவாஸ்கருக்கு அளிக்கப்பட்டது குறித்து பிஷன்சிங் பேடி இப்படி கருத்துத் தெரிவித்திருந்தார். சிக்கலிலிருந்து பி.சி.சி.ஐ. விடுபட கவாஸ்கர்தான் சரியான தீர்வு என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது யாருமே எதிர்பாராத நிகழ்வு. இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவோ நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் சண்டைச் சச்சரவுகளுக்கு ஓய்வே இருக்காது. இப்போது எல்லாம் மாறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதா? 
கடந்த ஒரு வருடமாக கொதித்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். பரபரப்புகள் அடங்குவதற்கும், நியாயமான முறையில் ஐ.பி.எல். வழக்குகள் நடைபெறுவதற்குமான ஒரு நல்ல ஏற்பாட்டைப் பரிந்துரைத்துள்ளது உச்சநீதிமன்றம். சென்ற ஆண்டு நடந்த 6வது ஐ.பி.எல்-லில் ‘மேட்ச் ஃபிக்சிங்’கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை தில்லி காவல்துறை கைது செய்தது. அடுத்ததாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினரும் பி.சி.சி.ஐ. தலைவர் என். ஸ்ரீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வசமாகச் சிக்கினார்கள். அவ்வளவுதான். ரகளைகள் ஆரம்பமாயின. இதற்குப் பொறுப்பேற்று, ஸ்ரீனிவாசன் பதவி விலக வேண்டும் என்கிற வலுவான கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் உடும்புப்பிடியாக தம் பதவியை விட்டுக்கொடுக்காமல் இருந்தார் ஸ்ரீனிவாசன். மீண்டும் தலைவராகத் தேர்வாகி, அடுத்ததாக ஐ.சி.சி.யின் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் தயாரானார். இந்த நிலையில், ஐ.பி.எல். வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த, முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான விசாரணைக் கமிட்டி, அறிக்கை வெளியிட்டது. இதுதான் பல தலைகள் உருள அடிப்படைக் காரணமாகிவிட்டது.
முட்கல் அறிக்கை குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ‘ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீனிவாசன் விலக வேண்டும்’ என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த முறை ஸ்ரீனிவாசனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விசாரணை முடியும் வரை தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்தார். ஐ.பி.எல். போட்டி முடியும் வரை பி.சி.சி.ஐ.யை கவாஸ்கர் நிர்வகிப்பார், ஐ.பி.எல். முடிந்தபிறகு, பி.சி.சி.ஐ.யின் துணைத்தலைவர் ஷிவலால் யாதவ், பி.சி.சி.ஐ.யின் நிர்வாகப் பணிகளைக் கவனிப்பார், இந்த வருட ஐ.பி.எல்-லை தொடர்ந்து நடத்தலாம் என்று பி.சி. சி.ஐ.யின் நிர்வாக அடுக்குகளை மாற்றி அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கவாஸ்கர் இதற்குச் சரியானவரா? அவரால் சர்ச்சைகளில் இருந்து கிரிக்கெட்டை மீட்கமுடியுமா?  

பி.சி.சி.ஐ.யுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள வர்ணனையாளர் என்பதால் கவாஸ்கர் பி.சி.சி.ஐ.யின் கைப்பாவையாகத்தான் இருப்பார். அவருக்கு எல்லாமே பணம்தான். பி.சி.சி.ஐ.யின் ஊதுகுழலாக என்ன வேண்டுமானாலும் செய்வார்,’ என்று கவாஸ்கரின் நியமனத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறார் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராகுல் மெஹ்ரா. ஆதாய முரண் (Conflict of interest) என்கிற குற்றச்சாட்டுக்கு கவாஸ்கரும் அப்பாற்பட்டவரில்லை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. கவாஸ்கர், பி.எம்.ஜி. என்கிற விளையாட்டு மார்க்கெட்டிங் அமைப்பை பல வருடங்களாக நடத்தி வருகிறார். ஷேவாக், வருண் ஆரோன், மனோஜ் திவாரி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்களின் விளம்பர நிர்வாகங்களை பி.எம்.ஜி.தான் கவனித்துக் கொள்கிறது. பி.சி.சி.ஐ. யின் விருது வழங்கும் நிகழ்ச்சிகளை பி.எம்.ஜி.தான் பொறுப்பேற்று நடத்துகிறது. ஐ.சி.சி., ஐ.பி.எல். நிர்வாக அமைப்புகளில் கவாஸ்கர் பங்கேற்றபோது சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. 2008 வரை எட்டு வருடங்கள், ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் சேர்மனாக இருந்தார் கவாஸ்கர். அதே சமயம் தொலைக் காட்சி வர்ணனையாளராகவும் கட்டுரையாளராகவும் மற்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் ஏற்பட்ட சர்ச்சையில் ஐ.சி.சி. நடுவரை கவாஸ்கர் விமர்சித்தபோது பிரச்னை உருவானது. உங்களுடைய நடவடிக்கைகளில் ஆதாய முரண் உள்ளதால் ஏதாவதொரு பணியை மட்டும் தேர்ந்தெடுக்கவும் என்று ஐ.சி.சி. கேட்டுக்கொண்டதால் சேர்மன் பதவியிலிருந்து விலகினார். ஐ.பி.எல். ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார். 2012 டிசம்பரில் பாகிஸ்தான் அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மும்பைத் தாக்குதலில் ஒத்துழைப்பு அளிக்காத பாகிஸ்தானுடன் எதற்காக கிரிக்கெட் ஆடவேண்டும் என்று கேள்வி கேட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கவாஸ்கரும் ஸ்ரீனிவாசனின் வளையத்தில் உள்ளவர்தான் என்கிற குற்றச்சாட்டுக்கு ஏற்றவாறு ‘நீதி மன்றத்தால் தண்டிக்கப்படும்வரை ஸ்ரீனிவாசன் குற்றமற்றவர்தான்,’ என்கிறார். 
உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததால் இன்னும் கூடுதல் பொறுப்பு, கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியம் கவாஸ்கருக்கு உருவாகியிருக்கிறது. இத்தனை விமர்சனங்களுக்குப் பிறகும் கவாஸ்கர் எப்படி தன்னை நிரூபிக்கப் போகிறார்? முதலாக, இந்த ஐ.பி.எல். எந்தச் சர்ச்சையும் இல்லாமல் முடிய வேண்டும். அடுத்தது, மீண்டும் ஐ.பி.எல். கலங்கப்படாமல் இருப்பதற்கு கவாஸ்கர் சிறு துரும்பையாவது நகர்த்தியிருக்க வேண்டும். இனி எந்தச் சிக்கல் வந்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு கவாஸ்கர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையையும் உருவாக்க வேண்டும். முள் மேல் நடந்து எப்படி எல்லாச் சோதனைகளையும் கடந்துவரப் போகிறார்?!  

பி.சி.சி.ஐ.யில் உள்ள 30 அமைப்புகளிலும் திரும்பத் திரும்ப பெரும் பணக்காரர்களும் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளுமே பதவி சுகத்தை அடைந்து வருகிறார்கள். வாரிசு அரசியல், குடும்ப வியாபாரம் போல பி.சி.சி.ஐ.யிலும் இந்த நடைமுறைகள் தொடர்வதால்தான் பலவருடங்களாக பி.சி.சி.ஐ.யை யாராலும் ஒழுங்குபடுத்த முடியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டதால்தான் பி.சி.சி.ஐ.யில் இத்தனை மாற்றங்கள் / அதிரடிகள். இதுவும் தாற்காலிகம்தான். பி.சி.சி.ஐ. மீண்டும் தம் பழைய நடைமுறைக்கே திரும்ப நீண்ட நாளாகாது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால் ஒன்று, இனியும் பி.சி.சி.ஐ.யில் ஒழுங்கீனங்கள் தொடர்ந்தால் உச்சநீதிமன்றம் இன்னும் வலுவான ஆணைகளைப் பிறப்பிக்கும் என்கிற நம்பிக்கையை சமீபகால நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன. எல்லாம் நன்மைக்கே.

Friday, April 04, 2014

சாக்கடல்


சாக்கடல் என்ற பெயரில் ஒரு கடல் இருக்கிறது. ஆனால் அது சாவை ஏற்படுத்தாத கடல். சாக்கடலில் ஒருவர் இறங்கினால் அவர் மூழ்கி இறந்து போக மாட்டார். சாக்கடலில் ஒருவர் கால்களை நீட்டிக்கொண்டு, ஜாலியாக நீரில் மிதந்தபடி, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருக்கலாம். மனிதன் மிதக்கக் கூடிய கடல் அது ஒன்றுதான் என்று சொல்லலாம். சாக்கடலில் மனிதன் மூழ்கமாட்டான் என்பதற்கு சாக்கடல் தண்ணீரின் தன்மையே காரணம்.

சாக்கடல் மேற்காசியாவில் அமைந்துள்ளது. இந்தக் கடலுக்கு கிழக்கே ஜோர்டான் நாடு உள்ளது. மேற்கே இஸ்ரேலும் பாலஸ்தீனப் பிராந்தியமும் அமைந்துள்ளன. கடலின் நீளம் சுமார் 50 கிலோ மீட்டர். அகலம் அதிகபட்சம் 15 கிலோ மீட்டர். ஆழம் சுமார் 300 மீட்டர்.

பெயர்தான் கடலே தவிர மற்றபடி இது நான்கு புறங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட பெரிய ஏரி.

சாக்கடலின் தண்ணீர் சொல்ல முடியாத அளவுக்குக் கடுமையான அளவுக்கு உப்பு கரிக்கும். கடல் நீரில் உள்ளதைவிட சாக்கடல் நீரில் உப்பு அளவு அதிகம். ஒரு லிட்டர் கடல் நீரை எடுத்துக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால் ஒரு லிட்டர் சாக்கடல் நீரை எடுத்துக் காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும்.உப்பு என்றவுடன் எல்லோருக்கும் சமையல் உப்பு தான் ஞாபகத்துக்கு வரும். சமையல் உப்புக்கு சோடியம் குளோரைடு என்ற வேதியியல் பெயரும் உண்டு.கடல்களில் உள்ள நீரில் சோடியம் குளோரைடு மட்டுமன்றி சிறிதளவுக்கு இதர உப்புகளும் உண்டு. மொத்த உப்புகளில் சோடியம் குளோரைடு 97 சதவிகிதம் அளவுக்கு உள்ளது. ஆனால் சாக்கடல் நீரில் சோடியம் குளோரைடு அளவு சுமார் 30 சதவிகிதமே. பொட்டாஷியம், புரோமைன், கால்சியம் ஆகியவை அதிகம் உள்ளன.சாக்கடல் நீர் கடுமையான அளவுக்கு உப்பு அடங்கியது என்பதால் இந்தக் கடலில் மீன், ஆமை, நண்டு என எந்த வகையான உயிரினமும் கிடையாது. சிறு உயிரினங்களும் கிடையாது. கடல் வாழ் தாவரங்களும் இல்லை. ஆகவேதான் செத்த கடல் என்ற பொருளில் சாக்கடல் என்று பெயர் ஏற்பட்டுள்ளது.சாக்கடலில் உப்பு அளவு அதிகம் என்பதால் சாக்கடல் நீர் அதிக அடர்த்தி கொண்டதாக உள்ளது. மனிதன் சாக்கடலில் மூழ்காமல் மிதப்பதற்கு இதுவே காரணம்.சாக்கடலின் உப்பு அளவு அதிகரித்ததற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது சாக்கடலில் வந்து சேருகிற நீரின் அளவு எப்போதுமே குறைவு. ஆனால் இந்தக் கடலிலிருந்து ஆவியாகி மேலே செல்கிற நீரின் அளவு அதிகம். பன்னெடுங்காலமாக இந்த நிலை இருந்து வந்துள்ளதால்தான் சாக்கடலின் நீர் கடுமையான அளவுக்கு உப்பு கரிப்பதாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

உயிரற்ற சாக்கடலை யார் சீந்தப் போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாக்கடலுக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குள்ள சில குறிப்பிட்ட நோய்கள் அல்லது கோளாறுகளுக்கு நிவாரணம் பெற சாக்கடல் பகுதிக்கு வருகின்றனர். சாக்கடல் நீரில் குளித்தால் உடலுக்கு நல்லது என்பது அனுபவ ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.சாக்கடலில் உள்ள சேற்றை அள்ளி உடல் முழுவதும் பூசிக்கொள்பவர்கள் பலர் உண்டு. சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்களை இந்தச் சேறு குணப்படுத்தி விடும் என்று கருதப்படுகிறது. தசை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகவும் மூட்டு வலிக்காகவும் பலர் இங்கு வருகின்றனர்.சாக்கடலில் கிடைக்கும் உப்பு, சேறு ஆகியவற்றைக் கொண்டு பல் வகையான மருந்துகளும் அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன அவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சுவாசக்கோளாறு உள்ளவர்களும் சாக்கடல் நோக்கி வருகின்றனர். சாக்கடல் வட்டாரத்தில் உள்ள காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகம் என்பது இது ஒரு காரணம்.சாக்கடலுக்கு அடியிலிருந்து அவ்வப்போது தார் போன்ற கறுப்பான பொருள் வந்து மேலே மிதக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் பிரமிடுகளில் வைக்கப்பட்ட மன்னர்களின் சடலங்கள் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்கு இந்தப் பொருள் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சாக்கடல் பிராந்தியம் உலகிலேயே மிகத் தாழ்வான பகுதி. உலகின் நிலப்பகுதியில் அநேகமாக எல்லா இடங்களுமே கடல் மட்டத்தைவிட உயரமாக இருக்கும். கடலோரமாக உள்ள இடங்கள் கூட கடல் மட்டத்தை விட சில மீட்டர் உயரமாக இருக்கும். ஆனால் சாக்கடல் பகுதியானது கடல் மட்டத்தை விட 427 மீட்டர் தாழ்வாக உள்ளது. ஆகவே இங்கு காற்று அடர்த்தி அதிகம். அந்த அளவில் இங்கு காற்றில் ஆக்சிஜன் அளவும் அதிகம்.உடல் குணம் பெறவும் தங்களுக்கு உள்ள சில வகைக் கோளாறுகளுக்குச் சிகிச்சை பெறவும் ஏராளமானவர்கள் சாக்கடல் நோக்கி வருவதால் சாக்கடலைச் சுற்றிலும் பல தங்கும் விடுதிகள் உள்ளன.சாக்கடல் நீரிலிருந்து பொட்டாஷ் உரம் தயாரிக்கும் ஆலைகளும் இங்கு உள்ளன.

ஆனால் சாக்கடலின் பரப்பளவு சுருங்கி வருகிறது. சாக்கடலைச் சுற்றிலும் இயற்கையான பல நீர் ஊற்றுகள் இருந்தாலும் இந்தக் கடலில் வந்து கலக்கிற ஒரே நதி ஜோர்டான் நதி. ஆனால் 1960களில் தொடங்கி ஜோர்டான் நதி மீது ஜோர்டான், இஸ்ரேல், சிரியா ஆகிய நாடுகள் பல அணைகளைக் கட்டி நதி நீரில் பெரும் பகுதியைப் பாசனத்துக்குத் திருப்பிவிட்டதன் விளைவாக ஜோர்டான் நதி மூலம் சாக்கடலில் வந்து சேரும் நீரின் அளவு குறைந்துவிட்டது. தவிர, சாக்கடல் பகுதியில் மழை அளவும் குறைவு.ஆகவே சாக்கடலுக்குத் தொடர்ந்து நீர் கிடைக்கும்படிச் செய்ய அதை அருகே உள்ள செங்கடலுடன் இணைப்பதற்கு ஒரு திட்டம் கூறப்பட்டது. சில நூறு கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய்களையும் மற்றும் கால்வாய்களையும் அமைப்பதன் மூலம் செங்கடலிலிருந்து சாக்கடலுக்கு நீர் கொண்டு வர இயலும்.இப்படிச் செய்யும்போது வழியில் உள்ள பகுதிகளில் கடல் நீரைச் சுத்திகரித்து குடிநீர் பெற முடியும். செங்கடல் நீர் மிகவும் பள்ளமாக உள்ள சாக்கடல் பகுதியை நோக்கி இறங்கும்போது புனல் மின்சாரத் திட்டத்தையும் மேற்கொள்ளலாம். இப்படிப் பல சாதகங்கள் இருந்தாலும் இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. சாக்கடல் வட்டாரம் பாதிக்கப்படும் பிரச்னையும் உள்ளது. சாக்கடல் நீண்ட வரலாற்றுத் தொடர்பு கொண்டது. மத நூல்கள் உட்பட பழங்கால ஏடுகளில் சாக்கடல் பற்றிய குறிப்புகள் உள்ளன.சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சாக்கடல் ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உள்ள மத்திய தரைக்கடலுடன் இணைந்து இருந்ததாகக் கருதப்படுகிறது. அதற்கு 10 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தரைக்கடலுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டு அது உள்நாட்டுக் கடலாக மாறியது.

என்.ராமதுரை

அப்ரிடி

 
ஆசிய கோப்பையில் அப்ரிடி அடித்த சிக்ஸர்களையெல்லாம் யாராலும் மறக்கமுடியாது. அப்ரிடி இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணியால் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருக்க முடியாது. பல சமயங்களில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து அப்ரிடி அவுட் ஆகும்போது ஏன் தான் அணியில் இருக்கிறாரோ என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். இதுபற்றி அப்ரிடி பேசியிருக்கிறார். ‘2015 உலக கோப்பையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உடல் தகுதி இருக்கும் வரை கிரிக்கெட்டுக்காக என்னை அர்ப்பணிப்பேன். பாகிஸ்தான் அணிக்குச் சுமையாக இருக்கிறேன் என்று எப்போது உணரத் தொடங்குகிறேனோ அப்போதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். மற்றவர்கள் என் விலகல்/ஓய்வு பற்றி பேச வாய்ப்பு தரமாட்டேன்’ என்கிறார்.
 
பங்களாதேஷில் நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை (மார்ச் 16 - ஏப்ரல் 6), அங்கு நடக்கும் 3வது உலகக்கோப்பைப் போட்டி. ஆனால் இப்போது நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிதான் பங்களாதேஷில் நடக்கும் முழுமையான, முக்கியமான ஒரு சர்வதேசப் போட்டி.
 
முதல்முறையாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு ஓர் உலகக்கோப்பை கிடைத்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் மூலமாக. துபாயில் நடந்த த-19 உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை வென்று உலக சாம்பியன் ஆகியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இது 2015ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி வெல்வதற்கான ஆரம்பமாக இருக்கும் என்று ரசிகர்கள் உற்சாகமடைகிறார்கள்.
 
64-வது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, தமிழக அணி. இளம் வீரர்களைக் கொண்ட தமிழக அணி மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டியில் பஞ்சாப்பைத் தோற்கடித்து சாம்பியனாகி யுள்ளது. இத்தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ரிகின் பெதானிக்கு விருது வழங்கப்பட்டது.  

ஐடிபில் (International Tennis Premier League,ITPL) என்ற டென்னிஸ் லீக் போட்டி, இந்த வருடம் தொடங்கவுள்ளது (நவம்பர் 28 - டிசம்பர் 14). பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் சொந்த நிறுவனமான குளோப் ஸ்போர்ட் சார்பில் ஐடிபிஎல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் நான்கு அணிகள் கலந்து கொள்கின்றன. மும்பை, துபாய், சிங்கப்பூர், பாங்காங். மும்பை அணியில் நடால், சானியா மிர்சா, ரோஹன் பொபன்னா, சாம்பிராஸ் ஆகியோர் ஆடவுள்ளனர். துபாய் அணியில் ஜோகோவிச், இவானிசெவிச், மார்டினா ஹிங்கிஸ் போன்றோரும், ஆண்டி முர்ரே, கார்ல்ஸ் மோயா போன்றோர் பாங்காங் அணிக்கும் ஆடவுள்ளார்கள். செரினா வில்லியம்ஸ், அகாசி போன்றோர் சிங்கப்பூர் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். ஒவ்வோர் ஆட்டமும் அதிகபட்சமாக 3 மணி நேரத்திற்கு மேல் இருக்காது.

Wednesday, April 02, 2014

பீட்ரூட்

 
''பீட்ரூட் சாப்பிடு செல்லம்... ரத்தம் உடம்பில் ஊறும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிச் சொல்லி ஊட்டுவோம். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாகத் துணைபுரிகிறது. அந்தக் காலத்தில் ரோமானியர்கள் காய்ச்சல், மலச்சிக்கல், புண், தோல் பிரச்னைகள் ஆகியவற்றைச் சரிப்படுத்த, பீட்ரூட்டைப் பயன்படுத்தினர். ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, வீக்கங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்டது பீட்ரூட்.
 
'பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றை அதிக அளவு சாப்பிட்டும், ரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில், பீட்ரூட்டை வாரத்துக்கு நான்கு நாட்கள் சாப்பிட்டாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்ல பலனைத் தரும். 
 
 

பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சம்பழச் சாற்றில் தோய்த்து சாப்பிட்டு வர, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

ல்லீரல் கோளாறுகளுக்கும், பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கும் பீட்ரூட் மிகச் சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால், அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும்.  

பீட்ரூட்டை அரைத்துச் சாறு எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரவு படுக்கப் போவதற்கு முன், பீட்ரூட் சாறை நீருடன் கலந்து அரை டம்ளர் அருந்தலாம்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

பீட்ரூட் சாறுடன், படிகாரத்தைப் பொடியாக்கிச் சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில்  தடவ, உடனடியாகச் சரியாகும்.

மருத்துவர் ஸ்ரீதர்
 

சுத்தம் அம்மையை விரட்டும் ...

பருவகால மாற்றத்தின் விளைவு... வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  வெயிலைத் தவிர்த்து, கோடையின் மற்றொரு பெரும் பிரச்னை 'வைரஸ்’. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்தாலே வயது வித்தியாசமின்றி, வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகின்றோம். இதன் காரணமாக, தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக 'அம்மை’ நோய் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. அம்மை வராமல் தடுப்பதற்கும், வந்தபின் செய்ய வேண்டியவைகளையும் என்ன என்ன ?
நோய் எதிர்ப்பு சக்தி அவசியம்... 
 
மனிதனின் உடம்பில் ஏதேனும் வைரஸ் தொற்று இருந்துகொண்டுதான் இருக்கும். வைரஸுக்கு ஏதுவான சூழல் அமையும்போது, அதன் தன்மைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸின் தாக்கம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, பல்வேறு மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. 5 கிராம் வேப்பங்கொழுந்துடன், 5 கிராம் விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து உருண்டைகளாக்கி, குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். வாரம் ஒருமுறை கொடுப்பது உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகப்படுத்தும்.

சுத்தம் அம்மையை விரட்டும்...
சின்னம்மை, பெரியம்மை, உமியம்மை, தட்டம்மை, புட்டாலம்மை என அம்மையில் பலவகை உண்டு.இதில் சின்னம்மையைத் தவிர்த்து பெரும்பான்மையான அம்மைகளுக்கு மருந்துகள் வந்துவிட்டன. அம்மையால்  பாதிக்கப்பட்டவரை சுத்தமான இடத்தில் வைத்து, தனிமைப்படுத்த வேண்டும். வீட்டில் யாரேனும் ஒருவர் அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். கவனித்துக் கொள்பவரும் சுத்தமாக இருப்பது அவசியம். இந்நோய் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், வைரஸ் தொற்று வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புள்ளது.

ஜுரத்தைக் குறைக்க...  
ஜுரம், உடல்வலி, கண் எரிச்சல் என வரிசையாகப் பிரச்னைகள் தோன்றி, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும். உடலின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு கொப்பளங்கள் உண்டாகும். என்னதான் மாத்திரைகள் பயன்படுத்தினாலும், சில மணி நேரத்துக்கு ஜுரம் கட்டுப்படுத்தப்படுமே தவிர, குணமாகாது. திரிதோடம், கஸ்தூரி, வசந்தகுசுமாகரம் போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தி ஜுரத்தை உடனடியாகக் குறைக்கலாம். பிரம்மானந்த பைரவ மாத்திரையைப் பொடி செய்து சிறிதளவு தேன் சேர்த்து உட்கொண்டால் ஜுரம் குறையும்.

வைரஸைக் கட்டுப்படுத்த...
துளசி மற்றும் ஆடுதொடா இலைச் சாறுகளை எடுத்து, அதில் தேன் கலந்து உட்கொண்டால் வைரஸின் வீரியம் குறையும். அதேபோல், கருங்குறுவை அரிசி, பார்லி மாவு கஞ்சி, இருமுறை வடித்த சோற்றுக் கஞ்சி இவற்றை உணவுகளாக உட்கொள்ளலாம். முத்துச்சிப்பி பற்பத்தில் தேன்விட்டுக் குழைத்து உட்கொண்டால் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.  வீட்டிலுள்ள பழந்தோலை (லெதர்)  சுட்டு சாம்பலாக்கி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

தொண்டை மற்றும் கண்களுக்கு...
அம்மை போட்டவுடன் சிலருக்குத் தொண்டையில் எரிச்சல்,  கண்களில் பூ விழவும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க கற்பூரவல்லி இலை மற்றும் கோரோசனை மாத்திரையைக் கரைத்துச் சாப்பிட்டால் உடனடியாகத் தொண்டைப் பிரச்னை சரியாகிவிடும். பனங்குருத்துச் சாறை கண்களில் விட்டுக் கொண்டால், பூ விழுவது தவிர்க்கப்படும். நெரிஞ்சில் பூ, முருங்கைப் பூ, நந்தியாவட்டை, சீரகம் 5 கிராம் எடுத்துக்கொண்டு, அதன் சாறைக் கண்களில் விட்டால் பூ விழாது.



 செய்யக்கூடாதவை:   
 
கொப்புளங்களை உடைக்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. சொறிவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளைப் பயன்படுத்துதல் தவறு.

செய்யவேண்டியவை: 
 
குளிர்ச்சியான உணவுப் பொருட்களையே சாப்பிட வேண்டும். தரையில் வேப்பிலையைப் போட்டு, அதன் மீது மெல்லிய துணியை விரித்துப் படுக்க வேண்டும். தினமும் அறையை மஞ்சள் தெளித்து, சுத்தமாக வைக்க வேண்டும். துத்தி இலையுடன் கற்பூரம் சேர்த்து, விளக்கெண்ணெய் விட்டுக் குழைத்து, வேப்பிலை கொண்டு கொப்புளங்கள் மீது தடவ வேண்டும்.

கஷாயம் காய்ச்சும் முறை: 

சிலருக்கு அம்மை நோய் குணமான பிறகும், சில வாரங்களிலே திரும்பத் தாக்கலாம். அப்போது இந்தக் கஷாயம் நல்ல பயன் தரும்.

ஜாதிக்காய், திப்பிலி, கிராம்பு, சீரகம் இவை தலா 5 கிராம் எடுத்து, 400 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி ஆகும் வரை கொதிக்கவைக்க வேண்டும். பிறகு இதில், எலுமிச்சைச் சாறு, பூண்டுச் சாறு சேர்த்துக் கொதிக்கவைத்து, தேன் கலந்து, காலை - மாலை இருவேளையும் குடித்து வந்தால் அம்மை பூரண குணமாகும்.

மருத்துவர் சந்திரசேகரன்



Tuesday, April 01, 2014

யூடோசக்ஸ்

பைதாகரஸ் வழிவந்த அறிஞர்களில் ஒருவரான ஆரிசிடாஸ் என்பவரிடம் பாடம் கற்றவர், யூடோசக்ஸ் (Eudoxus)

கனசதுரத்தை அதன் வடிவம் மாறாமல், அப்படியே இரு மடங்காக்கும்  கணிதப் புதிரில் பெரும் ஆர்வம் காட்டினார். இந்தப் புதிரை ப்ளாட்டோ வழங்கி இருந்தார். ப்ளாட்டோ வழங்கிய புதிருக்குப் புதிய முறையில் யூடோசக்ஸ் தீர்வு கண்டார்.

அந்தத் தீர்வு, கிரேக்கர்கள் அமைத்த கோட்பாடுகளுக்கு ஏற்ப அமையாததால், ப்ளாட்டோ ஏற்க மறுத்தார். ஆனால், இன்றைய முறையில், யூடோசக்ஸ் வழங்கிய தீர்வு முறை மிகச் சரியானதே என்கிறார்கள்.

எண்ணியல், இசையியல், புவியியல் போன்ற துறைகளிலும் அதிக ஆர்வம்கொண்டு, அவற்றைக் கற்றுத் தேர்ந்த யூடோசக்ஸ், புவியியல் பற்றிய ஏழு தொகுப்புகள்கொண்ட 'புவியின் சுற்றுலா’ என்ற நூலை எழுதி, வெளியிட்டார். ஆனால், இன்று அதில் ஒன்றுகூட கிடைக்கவில்லை.

நீளத்தையும் பரப்பையும் ஒரு குறிப்பிட்ட தகவில் அமைக்க இயலாது’ என்றும், 'பரப்பையும் கன மதிப்பையும் ஒரு குறிப்பிட்ட தகவில் அமைக்க இயலாது’ என்ற அற்புத கணிதச் சிந்தனையை இன்றைய அறிஞர்கள் போற்றுகின்றனர். மேலும், ''ஒரே உயரமும் அடியும் உடைய கூம்பு (Cone) மற்றும் உருளையில் (Cylinder), கூம்பின் கன அளவு, உருளையின் கன அளவில் மூன்றில் ஒரு பங்காக அமையும்'' என்றார். 'ஒரே உயரமும் அடியும் உடைய கூம்பகம் (Pyramid) மற்றும் பட்டகத்தில் (Prism),கூம்பகத்தின் கன அளவு, பட்டகத்தின் கன அளவில் மூன்றில் ஒரு பங்காக அமையும்’ என்ற அரிய கணித உண்மையையும் முதன்முதலில் யூடோசக்ஸ் நிரூபித்தார். இதை, டெமோக்ரிடஸ் என்ற அறிஞர் கூறியிருந்தாலும், அதற்கான நிரூபண முறையை முதன்முதலில் வழங்கியவர் யூடோசக்ஸ்.

கொடுத்த பகுதியின் பரப்பையோ அல்லது கொடுத்த பொருளின் கன அளவையோ கண்டறிவதற்கு, அதனை முதலில் சிறு துண்டுகளாகப் பிரித்து, மேலும் சிறுசிறு துண்டுகளாகப் பிரித்துகொண்டே சென்று, வெறுமைப்படுத்துவதை 'வெறுமைப்படுத்தும் முறை’ என்று கணிதத்தில் அழைப்பார்கள். இதை, முதன்முதலில் கணிதத்தில் யூடோசக்ஸ் அறிமுகப்படுத்தினார். இதன் மூலமே பலரும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். தொகை நுண்கணிதம் என்ற முக்கிய கணிதப் பிரிவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது வெறுமைப்படுத்தும் முறைதான்.



யூடோசக்ஸ் உருவாக்கிய கணிதச் சிந்தனைகள், உலகின் முதல் கணிதப் புத்தகம் தோன்றுவதற்கு ஆதாரமாக விளங்கியது. பல்வேறு அரிய செய்திகளைக் கணிதத்தில் வழங்கி, அதன் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக விளங்கினார்.

கணித வானில் மிளிரும் நட்சத்திரமாக என்றென்றும் யூடோசக்ஸ் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார். 

இரா.சிவராமன்

பாரதியாரின் நினைவு தினம் - செப்டம்பர் 12

பாரதியாரின் நினைவு தினம் எது என்று கேட்டால், செப்டம்பர் 11 என்பீர்கள். ஆனால் அந்தத் தேதி இப்போது மாறிவிட்டது!

சமீபத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பாரதியாரின் நினைவு தினம் பற்றிய தகவல் கேட்கப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்ட தகவலில், 1921 செப்டம்பர் 11, நள்ளிரவு 1 மணிக்கு பாரதியார் இறந்ததாகச் சான்றிதழ் உள்ளது. அப்படியானால்,  செப்டம்பர் 12, அதிகாலை என்று ஆகிறது. இப்போது, பாரதியார் இல்லம், மணிமண்டபம் போன்ற இடங்களில் தேதியை மாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற தேதி மாற்றங்கள், உலகம் முழுக்கவே அடிக்கடி நடக்கும். அப்படியான சில தேதிகள் மாறிப்போன விஷயம்...

விண்வெளி நாயகி! 
 
இந்திய விண்வெளி ஆய்வாளர், கல்பனா சாவ்லா பிறந்த தேதியும் மாறிப்போச்சு. அவருடைய சான்றிதழ்களின்படி பிறந்த தேதி, 1961 ஜூலை 1. ஆனால், அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமோ, 17 மார்ச் 1962 என்கிறது. ஏன் இப்படி?


 கல்பனா சாவ்லாவை பள்ளியில் சேர்த்ததில், அவர் பிறந்த தேதி மாறிப்போச்சு. கல்பனா சாவ்லாவுக்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்கப் பலருக்கும் பள்ளியில் கொடுக்கும் தேதி மாறிவிடுகிறது. சாதாரணமாக இருக்கும் வரை பரவாயில்லை. பின்னாளில் அவர் பிரபலமாகிவிட்டால், இப்படித்தான் குழப்பம் வரும்.

மேற்கு வங்க முதலமைச்சர், மம்தா பானர்ஜியின் பிறந்த தேதியும் இப்படி மாறிப்போச்சு. அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர், மோஸ் வின்சனுக்கு இரண்டு பிறந்த தேதிகள், மூன்று மரணமடைந்த தேதிகள் உள்ளன.

1752-ம் ஆண்டு இந்திய காலண்டரில், செப்டம்பர் மாதத்தைத் திருப்பிப் பார்த்தால், ஓர் ஆச்சரியம் இருக்கும். இரண்டாம் தேதிக்கு அடுத்து, 14 வரும். ஆமாம், இங்கே காலண்டருக்கே தேதி மாறிப்போச்சு. ஏன்?

உலகம் முழுக்கப் பின்பற்றும் நாட்காட்டியின் பெயர், கிரிகோரியன் காலண்டர். அதற்கு முன் வழக்கத்தில் இருந்தது, ஜூலியன் காலண்டர். அந்தக் காலண்டர் முறையில் இருந்து கிரிகோரியன் காலண்டருக்கு இந்திய காலண்டரை மாற்ற முடிவானது. 10 நாள்களை ஈடுகட்ட, 1752-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 11 நாள்களை விழுங்கிவிட்டார்கள்.


1582-ம் ஆண்டு முதலே பல நாடுகள், கிரிகோரியன் முறைக்கு மாறத்தொடங்கின. பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் முதலில் மாறின. இவ்வாறு மாறிய எல்லா நாடுகளுமே, அந்தந்த ஆண்டில் 10 முதல் 13 நாள்களைக் கைவிட்டன. நாம், பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றியதால், இந்திய நாள்காட்டியில் 1752-ம் ஆண்டு செப்டம்பரில், 12 நாள்கள் குறைந்தன.

1918-ம் ஆண்டு ரஷ்யக் காலண்டரில், பிப்ரவரி மாதம் 14-ம் தேதியில் இருந்துதான் தொடங்கும். ரஷ்யா, கிரிகோரியன் காலண்டர் முறைக்கு அப்போதுதான் மாறியது. இந்தத் தேதி மாறிப்போனதில், இன்னொரு குழப்பமும் உண்டானது. 1917-ம் ஆண்டு ரஷ்யாவில், லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சி நடந்தது. இது நடந்தது, பழைய ஜூலியன் நாட்காட்டி முறைப்படி அக்டோபர் 25. ஆனால், கிரிகோரியன் முறைப்படி நவம்பர் 7 என மாறிவிட்டது. இப்படித் தேதி மாறியதால், அக்டோபர் புரட்சியை நவம்பர் மாதத்தில் கொண்டாடுகிறார்கள்.

உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதும் புது ஆண்டு தொடங்கும் தேதியும் மாறிப்போச்சு. பழைய காலண்டர் முறையில், ஏப்ரல் மாதம் முதல் தேதிதான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கிரிகோரியன் காலண்டர் முறையில், ஜனவரி மாதம் முதல் தேதி, புத்தாண்டைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

அப்போது, பழைய முறைப்படி சிலர் ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டாகக்  கொண்டாடினார்கள். அவர்களை முட்டாள்கள் என்று கேலி செய்தனர். அதுவே, பின்னாளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி, 'ஏப்ரல் ஃபூல்’ என்ற முட்டாள்கள் தினமாக மாறியது.

சுப.தமிழினியன் 





சரோஜினி நாயுடு

ஹைதராபாத்தில், நிஜாம் கல்லூரி மிகவும் புகழ்பெற்றது. அந்தக் கல்லூரியை உருவாக்கி, முதல் முதல்வராக இருந்த கல்வியாளர், அகோர்நாத் சட்டோபாத்யாயா. அவரைவிட, அவரது மகளைப் பற்றிதான் ஊரில் பேச்சு.

அந்தச் சிறுமியின் பெயர், சரோஜினி. உருது, தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பெர்சிய மொழி என ஆறு மொழிகளில் இலக்கியங்களைச் சரளமாக எழுதியும் பொது மேடைகளில் பேசியும் அவள் வியக்கவைத்தபோது... அவளுக்கு வயது ஆறுதான்!

சரோஜினியின் அம்மா, ஒரு டைரி வைத்திருந்தார். அவர், வங்காள மொழியில் பாடல்கள் புனைந்து பாடுவதில் வல்லவர். ஒரு நவராத்திரி சமயம், தனது டைரியைத் திறந்தபோது வியப்பு. அதில், ஏழு வயது சரோஜினியின் கையெழுத்தில் இரண்டு புதிய பாடல்கள் இருந்தன.

சரோஜினிதான் வீட்டில் மூத்தவள். தம்பிகளான பிரேந்திர நாத் மற்றும் ஹரீந்திரநாத் உடன் தினமும் விளையாடுவதே, கவிதை புனைவதும் கவிதை நாடகம் நடத்துவதும்தான். பள்ளியில், படிப்பில் சரோஜினிக்கே முதல் இடம். நடனம், விளையாட்டு, நாடக நடிப்பு எனப் பல்வேறு திறன்கள் இயல்பாகவே அவளுக்கு இருந்தன. அந்தப் பள்ளியின் ஆண்டுவிழா கலை நிகழ்ச்சி முழுவதும் சரோஜினியின் பாடல்களே ஒலித்தபோது, அவளது வயது 11.


11-ம் வகுப்பு மெட்ரிக் (அந்தக் காலத்தில் சென்னை பல்கலைக்கழகம் நடத்தியது) தேர்வை சரோஜினி எதிர்கொண்டபோது, 12 வயது. சரோஜினியிடம் இருந்த  சிறப்பான குணம், எதையும் மனப்பாடம் செய்யாமல்  புரிந்துகொண்டு படிப்பது. புரியும் வரை விடாமல் ஆசிரியர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களைக் கேட்பது. அந்த ஆண்டு மெட்ரிக் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து, இந்தியா முழுதும் பிரபலமானாள் சரோஜினி.

சரோஜினி படிப்பில் கொடிகட்டிப் பறப்பதைக் கண்டு, தன் மகள் ஒரு கணித மேதையாகவோ, விஞ்ஞானியாகவோ வர வேண்டும் என்று பெற்றோர் கனவு கண்டனர்.

சரோஜினியின் மனம், வானம்பாடியாகக் கவிதைகள் புனைவதிலேயே பறந்தது. தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பெர்சிய மொழியில் சரளமாகக் கவிதைகள் புனையத் தொடங்கினாள். தன் மகள் எப்படிப் படிக்கிறாள் என்பதைக் காண, அவளது அல்ஜீப்ரா நோட்டைப் பார்த்த தந்தைக்கு அதிர்ச்சி. 'மாஹர் முன்னீர்’ எனும் தலைப்பில் அந்த நோட்டின் 60 பக்கங்களுக்கு பெர்சிய மொழியில் கவிதை நாடகம் வடித்திருந்தாள் 13 வயது சரோஜினி. அதில் நாட்டுப்பற்று வரிக்கு வரி மிளிர்ந்தது.

சரோஜினியின் பெற்றோர், மற்றவர்களைப்போல இல்லை. மகள் விரும்பும் துறையில் அவள் பிரகாசிக்கட்டும் என முழுமையாக ஏற்றார்கள். விரைவில் அந்த பெர்சியக் கவிதை நாடகம், ஹைதராபாத் நவாபின் பார்வைக்குத் தந்தையால் அனுப்பப்பட்டது. நான்கே நாட்களில் நவாபினால் சரோஜினி அழைக்கப்பட்டாள்.

''நீதான் எழுதினாயா?'' என்று அவர் சந்தேகத்தோடு கேட்டார்.

சரோஜினி, தன்னிடம் இருந்த ஆங்கிலக் கவிதையை எடுத்து நீட்டினாள். 1,300 வரிகள் கொண்ட 'தி லேடி ஆஃப் தி லேக்’ (ஜிலீமீ லிணீபீஹ் ஷீயீ tலீமீ லிணீளீமீ) என்ற கவிதையைப் படித்த நவாப், தன்னுடைய செலவில் இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பினார்.

 பின் நாட்களில் 'இந்தியாவின் நைட்டிங்கேல்’ ஆகவும் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில், கவிக்குயிலாகவும் திகழ்ந்தார்.

ஆயிஜா இரா. நடராசன்