Search This Blog

Tuesday, April 15, 2014

புதிய மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன ?

நம் நாடு வளர்ச்சி காண வேண்டும் - அடுத்த சில வாரங்களில் அமையப்போகும் புதிய மத்திய அரசிடம்  மக்கள் எதிர்பார்ப்பது இதுவாகவே இருக்கிறது. ஆனால், அடுத்துவரும் பிரதமர் யாராக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சியை மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிதாக உயர்த்திவிட முடியாது. அப்படி உயர்த்துவதற்கு பல விஷயங்கள் தடையாக இருக்கிறது. இதில் முக்கிய தடையாக இருப்பது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு. அடுத்துவரும் அரசாங்கமானது இந்த விஷயத்தில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே நம் நாடு வேகமான வளர்ச்சி காணும். என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்?


தொழில் துறை! 

ஒரு நாட்டின் வளர்ச்சி பிரமாதமாக இருக்க வேண்டும் எனில், தொழில் துறை நல்ல வளர்ச்சி காண வேண்டும். நம் நாட்டில்  தொழிற்சாலை தொடங்கத் தேவையான நிலத்தை மாநில அரசாங்கம்தான் தரவேண்டும். மத்திய அரசாங்கம் நிலம் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்பதால், அந்த வேலையை அது செய்ய முடியாது. இதற்கு அருமையான உதாரணம், மேற்கு வங்காளத்தில் சிங்கூரில் டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை அமைக்க முற்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பு.


தொழிற்சாலைக்குத் தேவையான இடத்தை ஒதுக்கித் தருவதில் அரசியல் காரணங்கள் தவிர, வேறு சில நியாயமான காரணங்களும் மாநில அரசாங்கங்களுக்கு இருக்கலாம். நிலங்களின் விலை மிக அதிகமாக வளர்ந்திருப்பதை இதற்கொரு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் நில ஆர்ஜித சட்டம் சில ஆண்டுகளுக்குமுன் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இந்த ஒரு சட்டத்தினால் மட்டுமே அந்தப் பிரச்னையை தீர்த்துவிட முடியாது. தொழில் துறைக்குத் தேவையான நிலத்தைத் தருவதில் தொடங்கி, அதற்குத் தேவையான பல்வேறு அனுமதிகளை வழங்குவது வரை உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டால் மட்டுமே தொழில் துறை வேகமான வளர்ச்சி காணும்.

ஜிஎஸ்டி! 

பொருட்கள் மற்றும் சேவைக்கு வரி விதிக்கும் முறையான ஜிஎஸ்டி-யை மத்திய அரசாங்கம் கொண்டுவருவதை சில மாநில அரசாங்கங்கள் எதிர்க்கின்றன. காரணம், இந்த வரி விதிப்புமுறை நடைமுறைக்கு வந்தால், விற்பனை வரி, மாநில கலால் வரி போன்ற சில முக்கிய வரிகள் காலாவதியாகிவிடும். இந்த வரிகள் மூலமாகத்தான் மாநில அரசாங்கங்களுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை மாநில அரசாங்கங்கள் இழக்கும்பட்சத்தில் அதற்கான இழப்பீட்டை மத்திய அரசாங்கமானது எப்படி தரப் போகிறது என்பது முக்கியமான கேள்வி.

எனினும், மத்திய அரசினால் இந்த ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவராமல் இருக்க முடியாது. இந்த வரியைக் கொண்டுவருவதன் மூலமே இந்தியா முழுக்க எல்லாப் பொருட்களுக்கும் ஒரேமாதிரியாக விலை நிர்ணயம் செய்ய முடியும்.

ஜிஎஸ்டி-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநில அரசாங்கங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பு பிரச்னையில் சரியானதொரு தீர்வை கூடிய சீக்கிரத்தில் கண்டால் மட்டுமே பொருளாதார மேம்பாட்டுக்கான வழிபிறக்கும்.

விவசாயத் துறை!  

நம் நாட்டில் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்கிறது. அதனால்தான் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது, நியாய விலை கடைகளுக்குத் தேவையான பொருட்களை மானிய விலையில் தருவது என்கிற முக்கிய விஷயங்களை மத்திய அரசாங்கம் செய்கிறது.

ஆனால், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிற வேலையை மாநில அரசாங்கங்கள்தான் செய்ய வேண்டும். உதாரணமாக, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர வேண்டியது மாநில அரசாங்கம்தான்.

நீர்வளம் மாநில அரசாங்கங்களில் கீழ் வருவதால், ஒரு மாநிலம் பக்கத்தில் உள்ள இன்னொரு மாநிலத்துடன் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் பல்வேறு சிக்கல் இருப்பதை காவிரிப் பிரச்னை மூலமும், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னை மூலமும் நாம் நேரடியாக அனுபவித்து வருகிறோம்.

நீர்வளம், உரங்களுக்கான மானியம் என்பது போன்ற விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் மத்திய-மாநில அரசாங்கங்கள் நல்லிணக்கத்தோடு செயல்பட்டால் மட்டுமே விவசாயத் துறையில் இந்தியா முழுக்க பெரிய அளவில் வளர்ச்சி காண முடியும்.

அரசு செலவினங்கள்! 
 
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் என மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது. இந்தத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கித்தருவதோடு மத்திய அரசாங்கத்தின் வேலை முடிந்துவிடுகிறது. இந்தத் திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசாங்கங்களின் வேலைதான்.

உதாரணமாக, பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசாங்கம் தந்தாலும், அது எந்த பள்ளியையும் நடத்துவதில்லை. (கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகள் நாடு முழுக்க வேலை பார்க்கும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான்!)

மத்திய அரசின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. உதாரணமாக, ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களை   நடைமுறைப் படுத்துவதால், தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்துக் கும் தேவையான வேலையாட்கள் கிடைப்பது குறைகிறது. சம்பளத்தை அதிகமாக தந்து வேலையாட்களை வேலைக்கு கொண்டுவர வேண்டி யிருக்கிறது. இதனால் உற்பத்திச் செலவு கூடுகிறது. பொருட்களின் விலை அதிகரிக்கிறது.

இது ஒருபக்கமிருக்க, சில மாநில அரசாங்கங்கள் அரசியல் காரணமாகவும் மத்திய அரசின் நலத் திட்டங்களை சரியாக அமல்படுத்து வதில்லை. இதனாலும் மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சரியாகப் போய்ச் சேருவதில்லை.

அரசின் செலவினங்கள் மக்களுக்கு சரியாக போய்ச் சேர, மத்திய - மாநில அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கல்வியறிவும் ஆரோக்கியமும் பெருகி, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி காணும்.

அந்நிய நேரடி முதலீடு! 
 
அந்நிய நேரடி முதலீடு பங்குச் சந்தையிலும் சில தொழில் துறைகளிலும் வருவதில் பிரச்னை இல்லை. காரணம், இவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளில் வரும்போது, பிரச்னை வருகிறது.

உதாரணமாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாமா,வேண்டாமா என்பது பற்றி ஒவ்வொரு மாநில அரசும் ஒவ்வொருவிதமான முடிவை எடுக்கிறது. ஒரே பிராண்டு  விற்பனையில் மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஏற்கெனவே அனுமதி தந்து அதை சட்டமாக ஆக்கியிருந்தாலும், மாநில அரசாங்கம் விரும்பினால் மட்டுமே அதை அமல்படுத்த முடியும். இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசாங்கங்களுக்கு இடையே இருவேறு நிலைப்பாடு இருப்பதால் அந்நிய நேரடி முதலீடு வருவதற்கு வாய்ப்பே இல்லை. 

வேகமான பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் மிகச் சில விஷயங்களை பற்றி மட்டுமே நான் சொல்லி இருக்கிறேன். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது'' என்று விரிவாக பேசி முடித்தார் பேராசிரியர் சீனுவாசன்.

அடுத்த பிரதமர் யாராக இருந்தாலும், அவர் மேற்சொன்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே வேகமான பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்.





No comments:

Post a Comment