Search This Blog

Saturday, April 05, 2014

கவாஸ்கர்?!


‘ஒரு தொடக்க ஆட்டக்காரர், (அணியைக் காப்பாற்ற) நைட் வாட்ச்மேனாக மாறுவார் என்று நினைக்கவில்லை’- பி.சி.சி.ஐ.யைக் கவனிக்கும் பொறுப்பு கவாஸ்கருக்கு அளிக்கப்பட்டது குறித்து பிஷன்சிங் பேடி இப்படி கருத்துத் தெரிவித்திருந்தார். சிக்கலிலிருந்து பி.சி.சி.ஐ. விடுபட கவாஸ்கர்தான் சரியான தீர்வு என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது யாருமே எதிர்பாராத நிகழ்வு. இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவோ நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் சண்டைச் சச்சரவுகளுக்கு ஓய்வே இருக்காது. இப்போது எல்லாம் மாறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதா? 
கடந்த ஒரு வருடமாக கொதித்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். பரபரப்புகள் அடங்குவதற்கும், நியாயமான முறையில் ஐ.பி.எல். வழக்குகள் நடைபெறுவதற்குமான ஒரு நல்ல ஏற்பாட்டைப் பரிந்துரைத்துள்ளது உச்சநீதிமன்றம். சென்ற ஆண்டு நடந்த 6வது ஐ.பி.எல்-லில் ‘மேட்ச் ஃபிக்சிங்’கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை தில்லி காவல்துறை கைது செய்தது. அடுத்ததாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினரும் பி.சி.சி.ஐ. தலைவர் என். ஸ்ரீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வசமாகச் சிக்கினார்கள். அவ்வளவுதான். ரகளைகள் ஆரம்பமாயின. இதற்குப் பொறுப்பேற்று, ஸ்ரீனிவாசன் பதவி விலக வேண்டும் என்கிற வலுவான கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் உடும்புப்பிடியாக தம் பதவியை விட்டுக்கொடுக்காமல் இருந்தார் ஸ்ரீனிவாசன். மீண்டும் தலைவராகத் தேர்வாகி, அடுத்ததாக ஐ.சி.சி.யின் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் தயாரானார். இந்த நிலையில், ஐ.பி.எல். வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த, முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான விசாரணைக் கமிட்டி, அறிக்கை வெளியிட்டது. இதுதான் பல தலைகள் உருள அடிப்படைக் காரணமாகிவிட்டது.
முட்கல் அறிக்கை குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ‘ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீனிவாசன் விலக வேண்டும்’ என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த முறை ஸ்ரீனிவாசனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விசாரணை முடியும் வரை தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்தார். ஐ.பி.எல். போட்டி முடியும் வரை பி.சி.சி.ஐ.யை கவாஸ்கர் நிர்வகிப்பார், ஐ.பி.எல். முடிந்தபிறகு, பி.சி.சி.ஐ.யின் துணைத்தலைவர் ஷிவலால் யாதவ், பி.சி.சி.ஐ.யின் நிர்வாகப் பணிகளைக் கவனிப்பார், இந்த வருட ஐ.பி.எல்-லை தொடர்ந்து நடத்தலாம் என்று பி.சி. சி.ஐ.யின் நிர்வாக அடுக்குகளை மாற்றி அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கவாஸ்கர் இதற்குச் சரியானவரா? அவரால் சர்ச்சைகளில் இருந்து கிரிக்கெட்டை மீட்கமுடியுமா?  

பி.சி.சி.ஐ.யுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள வர்ணனையாளர் என்பதால் கவாஸ்கர் பி.சி.சி.ஐ.யின் கைப்பாவையாகத்தான் இருப்பார். அவருக்கு எல்லாமே பணம்தான். பி.சி.சி.ஐ.யின் ஊதுகுழலாக என்ன வேண்டுமானாலும் செய்வார்,’ என்று கவாஸ்கரின் நியமனத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறார் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராகுல் மெஹ்ரா. ஆதாய முரண் (Conflict of interest) என்கிற குற்றச்சாட்டுக்கு கவாஸ்கரும் அப்பாற்பட்டவரில்லை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. கவாஸ்கர், பி.எம்.ஜி. என்கிற விளையாட்டு மார்க்கெட்டிங் அமைப்பை பல வருடங்களாக நடத்தி வருகிறார். ஷேவாக், வருண் ஆரோன், மனோஜ் திவாரி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்களின் விளம்பர நிர்வாகங்களை பி.எம்.ஜி.தான் கவனித்துக் கொள்கிறது. பி.சி.சி.ஐ. யின் விருது வழங்கும் நிகழ்ச்சிகளை பி.எம்.ஜி.தான் பொறுப்பேற்று நடத்துகிறது. ஐ.சி.சி., ஐ.பி.எல். நிர்வாக அமைப்புகளில் கவாஸ்கர் பங்கேற்றபோது சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. 2008 வரை எட்டு வருடங்கள், ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் சேர்மனாக இருந்தார் கவாஸ்கர். அதே சமயம் தொலைக் காட்சி வர்ணனையாளராகவும் கட்டுரையாளராகவும் மற்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் ஏற்பட்ட சர்ச்சையில் ஐ.சி.சி. நடுவரை கவாஸ்கர் விமர்சித்தபோது பிரச்னை உருவானது. உங்களுடைய நடவடிக்கைகளில் ஆதாய முரண் உள்ளதால் ஏதாவதொரு பணியை மட்டும் தேர்ந்தெடுக்கவும் என்று ஐ.சி.சி. கேட்டுக்கொண்டதால் சேர்மன் பதவியிலிருந்து விலகினார். ஐ.பி.எல். ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார். 2012 டிசம்பரில் பாகிஸ்தான் அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மும்பைத் தாக்குதலில் ஒத்துழைப்பு அளிக்காத பாகிஸ்தானுடன் எதற்காக கிரிக்கெட் ஆடவேண்டும் என்று கேள்வி கேட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கவாஸ்கரும் ஸ்ரீனிவாசனின் வளையத்தில் உள்ளவர்தான் என்கிற குற்றச்சாட்டுக்கு ஏற்றவாறு ‘நீதி மன்றத்தால் தண்டிக்கப்படும்வரை ஸ்ரீனிவாசன் குற்றமற்றவர்தான்,’ என்கிறார். 
உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததால் இன்னும் கூடுதல் பொறுப்பு, கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியம் கவாஸ்கருக்கு உருவாகியிருக்கிறது. இத்தனை விமர்சனங்களுக்குப் பிறகும் கவாஸ்கர் எப்படி தன்னை நிரூபிக்கப் போகிறார்? முதலாக, இந்த ஐ.பி.எல். எந்தச் சர்ச்சையும் இல்லாமல் முடிய வேண்டும். அடுத்தது, மீண்டும் ஐ.பி.எல். கலங்கப்படாமல் இருப்பதற்கு கவாஸ்கர் சிறு துரும்பையாவது நகர்த்தியிருக்க வேண்டும். இனி எந்தச் சிக்கல் வந்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு கவாஸ்கர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையையும் உருவாக்க வேண்டும். முள் மேல் நடந்து எப்படி எல்லாச் சோதனைகளையும் கடந்துவரப் போகிறார்?!  

பி.சி.சி.ஐ.யில் உள்ள 30 அமைப்புகளிலும் திரும்பத் திரும்ப பெரும் பணக்காரர்களும் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளுமே பதவி சுகத்தை அடைந்து வருகிறார்கள். வாரிசு அரசியல், குடும்ப வியாபாரம் போல பி.சி.சி.ஐ.யிலும் இந்த நடைமுறைகள் தொடர்வதால்தான் பலவருடங்களாக பி.சி.சி.ஐ.யை யாராலும் ஒழுங்குபடுத்த முடியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டதால்தான் பி.சி.சி.ஐ.யில் இத்தனை மாற்றங்கள் / அதிரடிகள். இதுவும் தாற்காலிகம்தான். பி.சி.சி.ஐ. மீண்டும் தம் பழைய நடைமுறைக்கே திரும்ப நீண்ட நாளாகாது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால் ஒன்று, இனியும் பி.சி.சி.ஐ.யில் ஒழுங்கீனங்கள் தொடர்ந்தால் உச்சநீதிமன்றம் இன்னும் வலுவான ஆணைகளைப் பிறப்பிக்கும் என்கிற நம்பிக்கையை சமீபகால நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன. எல்லாம் நன்மைக்கே.

No comments:

Post a Comment