Search This Blog

Tuesday, April 15, 2014

ஆனந்த் - க்ராம்னிக்


உலகின் மிகச்சிறந்த எட்டு வீரர்கள். ஒருவருக்கொருவர் இருமுறை போட்டியிட வேண்டும். அதிகப் புள்ளிகள் எடுப்பவர் நவம்பரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் கார்ல்சனுடன் மோதவேண்டும். ‘44 வயது ஆனந்த் ஜெயிப்பது கடினம். ஆரோனியன் அல்லது க்ராம்னிக் ஜெயிக்கக்கூடும்’ என்று கார்ல்சன் தம் போட்டியாளரைப் பற்றி ஆருடம் கூறியிருந்தார். உண்மையில் ஆனந்தை ஒருவர்கூட மதிக்கவில்லை. புதிய தலைமுறை கிளம்பிவிட்டது. இவர் ஏன் இந்தப் போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்கிறார் என்கிற பார்வை பலருக்கும் இருந்தது. அதற்கேற்றவாறு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி, பிறகு ஆடிய இரண்டு பெரிய போட்டிகளிலும் தோல்வி என ஆனந்த்தின் செஸ் வாழ்க்கை அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

கேண்டிடேட்ஸில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று ஆனந்துக்கும் ஒரே குழப்பம். ஆனால் ஒருவருக்கு மட்டும் ஆனந்த் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. போட்டியாளராக, எதிரியாக ஆனந்தைப் பார்க்காமல் ஒரு நல்ல நண்பனாக ஆனந்துக்கு அறிவுரை வழங்கி இன்று அவரையும் அவர் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியிருப்பவர், க்ராம்னிக்.‘லண்டன் போட்டியின்போது க்ராம்னிக் ஒரு ஆட்டத்தில் தோற்றுப் போயிருந்தார். அவரைச் சாந்தப்படுத்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கு அவர் என்னைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். கேண்டிடேட்ஸில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்’ என்று தம் மனத்தை க்ராம்னிக் மாற்றிய விதம் பற்றிப் பேசுகிறார் ஆனந்த். கேண்டிடேட்ஸில் ஆனந்துக்கு முதலிடம் கிடைக்க கிராம்னிக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. ஒரே துறையில் இருந்தாலும் நண்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் ஆனந்தும் க்ராம்னிக்கும்.யாரும் எதிர்பாராதவிதமாக கேண்டிடேட்ஸை ஆனந்த் ஜெயித்திருப்பது செஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மட்டும் ஆனந்த் எப்படி நன்றாக ஆடினார் என்பதை விடவும் கடந்த இரண்டு வருடங்களாக ஏன் மோசமாக ஆடினார் என்பதுதான் பலருக்கும் ஆச்சர்யம்.

ஆரோனியனை முதல் ஆட்டத்தில் வென்றது பெரிய திருப்புமுனை. அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் ஆனந்த் முன்னிலைவகித்தார். இறுதிவரை யாருக்கும் வழிவிடவில்லை. 14 ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் பெற்று மற்ற ஆட்டங்களை டிரா செய்தார். ஒரு தோல்விகூட இல்லை. இந்த வெற்றியினால், ஆனந்த் தரவரிசையில் உலகளவில் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்திருக்கிறார். (போட்டிக்கு முன்பு 8ம் இடம்.) போட்டியை வென்றதால் 1.11 கோடி ரூபாய் பரிசுத் தொகையாகக் கிடைத்திருக்கிறது. கடந்த 18 வருடங்களில் 9 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆனந்த் தகுதி பெற்றிருக்கிறார் (5 முறை வெற்றி, நான்கு முறை தோல்வி). 2014 உலக சாம்பியன்ஷிப் போட்டி, நார்வேயில் அல்லது அமெரிக்காவில் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆனந்த் கேண்டிடேட்ஸில் பங்குபெற ஊக்கமளித்த க்ராம்னிக் இன்னொரு முறை ஆனந்துக்கு பூஸ்ட் கொடுக்கிறார். ‘இந்த முறை கார்ல்சனை ஆனந்த் வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது!’ நண்பேன்டா!

ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment