பாரதியாரின் நினைவு தினம் எது என்று கேட்டால், செப்டம்பர் 11 என்பீர்கள். ஆனால் அந்தத் தேதி இப்போது மாறிவிட்டது!
சமீபத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்
பாரதியாரின் நினைவு தினம் பற்றிய தகவல் கேட்கப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்ட
தகவலில், 1921 செப்டம்பர் 11, நள்ளிரவு 1 மணிக்கு பாரதியார் இறந்ததாகச்
சான்றிதழ் உள்ளது. அப்படியானால், செப்டம்பர் 12, அதிகாலை என்று ஆகிறது.
இப்போது, பாரதியார் இல்லம், மணிமண்டபம் போன்ற இடங்களில் தேதியை மாற்றம்
செய்துகொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற தேதி மாற்றங்கள், உலகம் முழுக்கவே அடிக்கடி நடக்கும். அப்படியான சில தேதிகள் மாறிப்போன விஷயம்...
விண்வெளி நாயகி!
இந்திய விண்வெளி ஆய்வாளர், கல்பனா சாவ்லா பிறந்த
தேதியும் மாறிப்போச்சு. அவருடைய சான்றிதழ்களின்படி பிறந்த தேதி, 1961 ஜூலை
1. ஆனால், அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமோ, 17 மார்ச் 1962 என்கிறது.
ஏன் இப்படி?
கல்பனா
சாவ்லாவை பள்ளியில் சேர்த்ததில், அவர் பிறந்த தேதி மாறிப்போச்சு. கல்பனா
சாவ்லாவுக்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்கப் பலருக்கும் பள்ளியில்
கொடுக்கும் தேதி மாறிவிடுகிறது. சாதாரணமாக இருக்கும் வரை பரவாயில்லை.
பின்னாளில் அவர் பிரபலமாகிவிட்டால், இப்படித்தான் குழப்பம் வரும்.
மேற்கு வங்க முதலமைச்சர், மம்தா பானர்ஜியின் பிறந்த
தேதியும் இப்படி மாறிப்போச்சு. அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர், மோஸ்
வின்சனுக்கு இரண்டு பிறந்த தேதிகள், மூன்று மரணமடைந்த தேதிகள் உள்ளன.
1752-ம் ஆண்டு இந்திய காலண்டரில், செப்டம்பர் மாதத்தைத்
திருப்பிப் பார்த்தால், ஓர் ஆச்சரியம் இருக்கும். இரண்டாம் தேதிக்கு
அடுத்து, 14 வரும். ஆமாம், இங்கே காலண்டருக்கே தேதி மாறிப்போச்சு. ஏன்?
உலகம் முழுக்கப் பின்பற்றும் நாட்காட்டியின் பெயர்,
கிரிகோரியன் காலண்டர். அதற்கு முன் வழக்கத்தில் இருந்தது, ஜூலியன்
காலண்டர். அந்தக் காலண்டர் முறையில் இருந்து கிரிகோரியன் காலண்டருக்கு
இந்திய காலண்டரை மாற்ற முடிவானது. 10 நாள்களை ஈடுகட்ட, 1752-ம் ஆண்டு
செப்டம்பர் மாதத்தில், 11 நாள்களை விழுங்கிவிட்டார்கள்.
1582-ம் ஆண்டு முதலே பல நாடுகள், கிரிகோரியன் முறைக்கு
மாறத்தொடங்கின. பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் முதலில் மாறின.
இவ்வாறு மாறிய எல்லா நாடுகளுமே, அந்தந்த ஆண்டில் 10 முதல் 13 நாள்களைக்
கைவிட்டன. நாம், பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றியதால், இந்திய
நாள்காட்டியில் 1752-ம் ஆண்டு செப்டம்பரில், 12 நாள்கள் குறைந்தன.
1918-ம் ஆண்டு ரஷ்யக் காலண்டரில், பிப்ரவரி மாதம் 14-ம் தேதியில் இருந்துதான்
தொடங்கும். ரஷ்யா, கிரிகோரியன் காலண்டர் முறைக்கு அப்போதுதான் மாறியது.
இந்தத் தேதி மாறிப்போனதில், இன்னொரு குழப்பமும் உண்டானது. 1917-ம் ஆண்டு
ரஷ்யாவில், லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சி நடந்தது. இது நடந்தது, பழைய
ஜூலியன் நாட்காட்டி முறைப்படி அக்டோபர் 25. ஆனால், கிரிகோரியன் முறைப்படி
நவம்பர் 7 என மாறிவிட்டது. இப்படித் தேதி மாறியதால், அக்டோபர் புரட்சியை
நவம்பர் மாதத்தில் கொண்டாடுகிறார்கள்.
உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறையை
ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதும் புது ஆண்டு தொடங்கும் தேதியும் மாறிப்போச்சு.
பழைய காலண்டர் முறையில், ஏப்ரல் மாதம் முதல் தேதிதான் புத்தாண்டு
கொண்டாடப்பட்டது. கிரிகோரியன் காலண்டர் முறையில், ஜனவரி மாதம் முதல் தேதி,
புத்தாண்டைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
அப்போது, பழைய முறைப்படி சிலர் ஏப்ரல் முதல் தேதியைப்
புத்தாண்டாகக் கொண்டாடினார்கள். அவர்களை முட்டாள்கள் என்று கேலி செய்தனர்.
அதுவே, பின்னாளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி, 'ஏப்ரல் ஃபூல்’ என்ற முட்டாள்கள்
தினமாக மாறியது.
சுப.தமிழினியன்
No comments:
Post a Comment