Search This Blog

Saturday, April 05, 2014

அருள்வாக்கு - அறிவு கடந்த சாஸ்திர விதி!

 
இந்த எக்ஸ்ப்ளனேஷன்களெல்லாம் இரண்டாம் பக்ஷம்தான். நம்முடைய சாஸ்த்ரங்களைத் தந்திருக்கிற பெரியவர்கள், நம் அறிவுக்குப் புரியவே முடியாததும், ஸ்வய ப்ரயத்னத்தால் அநுபவத்துக்கு வரவே முடியாததுமான ஆத்மலோக ஸத்யங்களைக் கண்டறிந்து அநுபவித்து அவற்றை நாமும் அடைய வேண்டும் என்ற பரம கிருபையிலேயே சாஸ்திர விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். 
 
அப்படிப்பட்டவர்கள் ‘சுத்து, சுத்திக்கோ, அதுகளை வலமாய்ப் பண்ணு, மெதுவாய்ப் பண்ணு’ என்று சொல்கிறார்களென்றால் அதெல்லாம் நம் கே்ஷமத்தை உத்தேசித்துத்தான். ஏதொன்று அவர்கள் சொன்னாலும் அர்த்தத்தோடு சொன்னதுதான். வேறே காரணம், எக்ஸ்ப்ளனேஷன் தேடவே வேண்டாம். புத்தி சும்மாயிருக்காமல் கேள்வி கேட்கிறதே என்றுதான் காரணத்தைத் தேடி எக்ஸ்ப்ளென் என்று பண்ணுவதெல்லாம். அவர்கள் சொன்னது அர்த்தத்தோடுதான்; அது ஜீவர்களுடைய கே்ஷமத்திற்காகத்தான் என்பதற்கு proof வேண்டுமென்றால், பெரிய proof, அவர்கள் சொன்னபடியே பக்தி விச்வாஸத்தோடு பண்ணியதாலேயே அநாதி காலமாக, வேறே எந்தத் தேசத்திலும் இல்லாத அளவுக்கு, இங்கே தலைமுறைதோறும் எல்லா ஜனங்களுமே பொதுவாக சாந்தர்களாகவும் நல்லவர்களாகவும் இருந்து வந்திருப்பதும், அவர்களில் எத்தனையோ பேர் மஹான்களாகவே அநுக்ரஹம் பண்ணிக் கொண்டு இருந்ததும்தான். கேள்வி கேட்க ஆரம்பித்த நாளாக ஏற்பட்டிருக்கிற துர்த்தசையை ப்ரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். இருந்த இடத்திலேயே விழுந்து கிடக்கிற நமஸ்காரத்துக்குப் பூர்வாங்கமாக இருக்கப்பட்ட ப்ரதக்ஷிண ஸப்ஜெக்டைப் பெரிசாகவே சுற்றி வளைத்து ப்ரதக்ஷிணம் பண்ணி விட்டேன்! சக்தியில் ஆரம்பித்து சாந்தத்தில் முடிகிறதற்குத்தான் இப்படி ப்ரதக்ஷிணமும், அதை முடித்து நமஸ்காரமும்.
 
மொத்தத்தில் விஷயம் என்னவென்றால்: ஒரு மனோபாவத்தை வெளிப்படுத்துவதற்காகச் செய்கிற சரீர க்ரியையே தலைமுறை தலைமுறையாகப் பலபேர் அப்படிப் பண்ணுகிறபோது மரத்தில் வஜ்ரம் பாகிற மாதிரி ஒரு உள்பலத்தைப் பெற்று விடுகிறது. அப்புறம் இந்த க்ரியையே அந்த மனோபாவத்தை பலப்படுத்தி விருத்தி செய்து கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. அடிப்படையில் அந்த மனோபாவத்தை நாம் நினைத்து அந்த க்ரியையைச் செய்தால், க்ரியையே நினைப்பை ஆழப்படுத்தி பாவத்தை வளர்த்துக் கொடுக்கும். அப்படி இந்த ஸாஷ்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரங்கள் விநய ஸம்பத்து என்ற உசந்த - தாழ்மையாலேயே உசரமான - பாவத்தை போஷித்துக் கொடுக்க உதவியாயிருக்கின்றன.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment