Search This Blog

Friday, April 04, 2014

அப்ரிடி

 
ஆசிய கோப்பையில் அப்ரிடி அடித்த சிக்ஸர்களையெல்லாம் யாராலும் மறக்கமுடியாது. அப்ரிடி இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணியால் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருக்க முடியாது. பல சமயங்களில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து அப்ரிடி அவுட் ஆகும்போது ஏன் தான் அணியில் இருக்கிறாரோ என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். இதுபற்றி அப்ரிடி பேசியிருக்கிறார். ‘2015 உலக கோப்பையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உடல் தகுதி இருக்கும் வரை கிரிக்கெட்டுக்காக என்னை அர்ப்பணிப்பேன். பாகிஸ்தான் அணிக்குச் சுமையாக இருக்கிறேன் என்று எப்போது உணரத் தொடங்குகிறேனோ அப்போதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். மற்றவர்கள் என் விலகல்/ஓய்வு பற்றி பேச வாய்ப்பு தரமாட்டேன்’ என்கிறார்.
 
பங்களாதேஷில் நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை (மார்ச் 16 - ஏப்ரல் 6), அங்கு நடக்கும் 3வது உலகக்கோப்பைப் போட்டி. ஆனால் இப்போது நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிதான் பங்களாதேஷில் நடக்கும் முழுமையான, முக்கியமான ஒரு சர்வதேசப் போட்டி.
 
முதல்முறையாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு ஓர் உலகக்கோப்பை கிடைத்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் மூலமாக. துபாயில் நடந்த த-19 உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை வென்று உலக சாம்பியன் ஆகியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இது 2015ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியை தென் ஆப்பிரிக்க அணி வெல்வதற்கான ஆரம்பமாக இருக்கும் என்று ரசிகர்கள் உற்சாகமடைகிறார்கள்.
 
64-வது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, தமிழக அணி. இளம் வீரர்களைக் கொண்ட தமிழக அணி மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டியில் பஞ்சாப்பைத் தோற்கடித்து சாம்பியனாகி யுள்ளது. இத்தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ரிகின் பெதானிக்கு விருது வழங்கப்பட்டது.  

ஐடிபில் (International Tennis Premier League,ITPL) என்ற டென்னிஸ் லீக் போட்டி, இந்த வருடம் தொடங்கவுள்ளது (நவம்பர் 28 - டிசம்பர் 14). பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் சொந்த நிறுவனமான குளோப் ஸ்போர்ட் சார்பில் ஐடிபிஎல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் நான்கு அணிகள் கலந்து கொள்கின்றன. மும்பை, துபாய், சிங்கப்பூர், பாங்காங். மும்பை அணியில் நடால், சானியா மிர்சா, ரோஹன் பொபன்னா, சாம்பிராஸ் ஆகியோர் ஆடவுள்ளனர். துபாய் அணியில் ஜோகோவிச், இவானிசெவிச், மார்டினா ஹிங்கிஸ் போன்றோரும், ஆண்டி முர்ரே, கார்ல்ஸ் மோயா போன்றோர் பாங்காங் அணிக்கும் ஆடவுள்ளார்கள். செரினா வில்லியம்ஸ், அகாசி போன்றோர் சிங்கப்பூர் அணியில் இடம் பெற்றுள்ளார்கள். ஒவ்வோர் ஆட்டமும் அதிகபட்சமாக 3 மணி நேரத்திற்கு மேல் இருக்காது.

No comments:

Post a Comment