பைதாகரஸ் வழிவந்த அறிஞர்களில் ஒருவரான ஆரிசிடாஸ் என்பவரிடம் பாடம் கற்றவர், யூடோசக்ஸ் (Eudoxus)
கனசதுரத்தை அதன் வடிவம் மாறாமல், அப்படியே இரு
மடங்காக்கும் கணிதப் புதிரில் பெரும் ஆர்வம் காட்டினார். இந்தப் புதிரை
ப்ளாட்டோ வழங்கி இருந்தார். ப்ளாட்டோ வழங்கிய புதிருக்குப் புதிய முறையில்
யூடோசக்ஸ் தீர்வு கண்டார்.
அந்தத் தீர்வு, கிரேக்கர்கள் அமைத்த கோட்பாடுகளுக்கு
ஏற்ப அமையாததால், ப்ளாட்டோ ஏற்க மறுத்தார். ஆனால், இன்றைய முறையில்,
யூடோசக்ஸ் வழங்கிய தீர்வு முறை மிகச் சரியானதே என்கிறார்கள்.
எண்ணியல், இசையியல், புவியியல் போன்ற துறைகளிலும் அதிக
ஆர்வம்கொண்டு, அவற்றைக் கற்றுத் தேர்ந்த யூடோசக்ஸ், புவியியல் பற்றிய ஏழு
தொகுப்புகள்கொண்ட 'புவியின் சுற்றுலா’ என்ற நூலை எழுதி, வெளியிட்டார்.
ஆனால், இன்று அதில் ஒன்றுகூட கிடைக்கவில்லை.
நீளத்தையும் பரப்பையும் ஒரு குறிப்பிட்ட தகவில் அமைக்க இயலாது’ என்றும்,
'பரப்பையும் கன மதிப்பையும் ஒரு குறிப்பிட்ட தகவில் அமைக்க இயலாது’ என்ற
அற்புத கணிதச் சிந்தனையை இன்றைய அறிஞர்கள் போற்றுகின்றனர். மேலும், ''ஒரே
உயரமும் அடியும் உடைய கூம்பு (Cone) மற்றும் உருளையில் (Cylinder),
கூம்பின் கன அளவு, உருளையின் கன அளவில் மூன்றில் ஒரு பங்காக அமையும்''
என்றார். 'ஒரே உயரமும் அடியும் உடைய கூம்பகம் (Pyramid) மற்றும்
பட்டகத்தில் (Prism),கூம்பகத்தின் கன அளவு, பட்டகத்தின் கன அளவில் மூன்றில்
ஒரு பங்காக அமையும்’ என்ற அரிய கணித உண்மையையும் முதன்முதலில் யூடோசக்ஸ்
நிரூபித்தார். இதை, டெமோக்ரிடஸ் என்ற அறிஞர் கூறியிருந்தாலும், அதற்கான
நிரூபண முறையை முதன்முதலில் வழங்கியவர் யூடோசக்ஸ்.
கொடுத்த பகுதியின் பரப்பையோ அல்லது கொடுத்த பொருளின் கன அளவையோ
கண்டறிவதற்கு, அதனை முதலில் சிறு துண்டுகளாகப் பிரித்து, மேலும் சிறுசிறு
துண்டுகளாகப் பிரித்துகொண்டே சென்று, வெறுமைப்படுத்துவதை
'வெறுமைப்படுத்தும் முறை’ என்று கணிதத்தில் அழைப்பார்கள். இதை,
முதன்முதலில் கணிதத்தில் யூடோசக்ஸ் அறிமுகப்படுத்தினார். இதன் மூலமே பலரும்
புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். தொகை நுண்கணிதம் என்ற முக்கிய
கணிதப் பிரிவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது வெறுமைப்படுத்தும் முறைதான்.
யூடோசக்ஸ் உருவாக்கிய கணிதச் சிந்தனைகள், உலகின் முதல்
கணிதப் புத்தகம் தோன்றுவதற்கு ஆதாரமாக விளங்கியது. பல்வேறு அரிய
செய்திகளைக் கணிதத்தில் வழங்கி, அதன் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக
விளங்கினார்.
கணித வானில் மிளிரும் நட்சத்திரமாக என்றென்றும் யூடோசக்ஸ் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார்.
இரா.சிவராமன்
No comments:
Post a Comment