Search This Blog

Sunday, July 13, 2014

ஹெச்டிசி டிசையர் 616

ஸ்மார்ட் போன் உலகில் தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ள ஹெச்டிசி நிறுவனம், தனது புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனான 'ஹெச்டிசி டிசையர் 616’-ஐ கடந்த வாரம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. ரூ.14,335 விலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், டூயல் சிம்  வசதிகளோடு வருகிறது.

5  இன்ச் அகலமான 720X1,280 பிக்ஸல் ஹெச்டி அளவு மிகத் துல்லியமான டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், மீடியாடெக் MT6592 1.7GHz ஆக்டோ கோர் (Octo core) பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், 'மாலி 450MP4’ என்ற கேமிங் பிராசஸரைக் கொண்டுள்ள ஹெச்டிசி டிசையர் 616, 1ஜிபி ரேம்மை கொண்டு இயங்குகிறது. விலை அதிகம் கொண்ட சில ஸ்மார்ட் போன்களில்கூட இந்த வசதிகள் இல்லை.

 

4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியோடு வரும் ஹெச்டிசி டிசையர் 616 எஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரை விரிவுபடுத்தலாம். ஹெச்டிசி டிசையர் 616, 8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவை எல்இடி ஃப்ளாஷ் வசதியோடு பெற்றுள்ளது. 2 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் பெற்றுள்ளது. 3T, GPRS/EDGE, WiFi,  ப்ளூடூத் 4.0 போன்ற வசதிகளோடு வரும் இந்த போன், 2000mAh  பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. 14 மணிநேரம் வரை டாக்டைம் தரும் என ஹெச்டிசி நிறுவனம் உறுதி தந்துள்ளது.

தனது பிரத்யேகமான ஓஎஸ் டிசைன் மற்றும் மொபைல் லுக்குக்குப் பெயர்போன ஹெச்டிசி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை!

அருள்வாக்கு - பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும்!


‘உபகாரம்’ என்றால் பிறத்தியாருக்குச் செய்தால் மட்டும் போதுமா? இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரைக் கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்து விட்டிருக்கிறானே, மனஸ் என்ற ஒன்றைக் கொடுத்து அதை நல்லது, கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே! இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்கலாமா?

மனஸை நல்லதிலேயே செலுத்தி, பகவான் தந்திருக்கிற வாக்கு, சரீரம் எல்லாவற்றையும் நல்ல பேச்சு, நல்ல காரியங்கள் இவற்றிலேயே பிரயோஜனப்படுத்தி இந்த உயிரைப் பேரின்ப நெறியில் சேர்க்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லையா? சின்னதான ஸ்வயநலத்தைவிட்டு இந்தப் பெரிய ‘ஸ்வயநல’த்துக்கு எல்லோரும் பாடுபடத்தான் வேண்டும்.

இப்படிச் செய்வதற்குப் பரநலப் பணிகளே ரொம்பவும் ஸஹாயம் செய்கிறது. இதிலே ஒரு வேடிக்கை - இவன் மனஸ் சுத்தமாக இருந்தால்தான் பரோபகாரம் நிஜமாக நடக்கிறது, பலன் தருகிறது; பரோபகாரத்தால்தான் இவன் மனஸே சுத்தமாகத் தொடங்குகிறது என்றால் (Contradiction)முரண் மாதிரித்தானே இருக்கிறது? ஆனால் முரண்பாடு இல்லை. முதலில் இவனுக்கு மனஸ் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற தாபம் இருந்தாலே போதும்.  

மனஸ் லேசில் கட்டுப்பட்டு வரத்தான் வராது. இந்திரிய ஸௌக்யத்தையே நினைத்து அது திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டுதான் இருக்கும். அப்போது, ‘ஐயோ, இது திருந்த வேண்டுமே!’ என்ற உண்மையான கவலை இருந்தால் இந்த விசாரத்துக்கே ஒரு நல்ல சக்தி (Effect) உண்டு. இப்படி ஒரு தாபத்தோடு பரோபகார காரியங்கள் என்ற லகானைப் போட்டு அப்போதப்போது ஓடுகிற மனஸை இழுத்து ஒரு பொதுத் தொண்டில் செலுத்த வேண்டும். ஒன்றுக்கொன்று போஷித்து இட்டு நிரப்புவது Complementary என்கிறார்களே, அப்படிப் பரோபகாரப் பணி மனஸைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தம் பண்ணப் பண்ண அந்தச் சித்த சுத்தியால் நாம் செய்கிற தொண்டும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தமாகிக் கொண்டு சக்தியோடு பலன் தர ஆரம்பிக்கிறது. 

இப்படிப் பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று கைகோத்துக் கொண்டு பரஸ்பரம் பலம் தந்து கொண்டு வளர்கின்றன.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

உலகக் கோப்பை கால்பந்து

 
கால்பந்து உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டிகள் முடிந்துவிட்டன. இரண்டு ஐரோப்பிய அணிகளும், இரு தென்அமெரிக்க அணிகளும் அரை இறுதிக்குத் தேர்வாகியுள்ளன. 2002-ல் தென் கொரியா, 2006-ல் போர்ச்சுகல், 2010-ல் உருகுவே என்று எதிர்பாரா அணிகள் அரை இறுதிக்குத் தேர்வாகின. இந்த முறை அப்படி ஒரு அணி தேர்வாகாததே எதிர்பாராத நிகழ்வாக அமைந்துள்ளது.
 
முதல் ஆட்டத்தில் ஜெர்மனியும் பிரேசிலும் மோதுகின்றன. உலகக் கோப்பையில் ஜெர்மனியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், நாட்பட நாட்பட அந்த அணியின் ஆட்டத்தில் தொய்வு தென்படுகிறது. கோல்கீப்பர் நோயரும் (Neuer) தற்காப்பு ஆட்டக்காரர்களும் சிறப்பாக ஆடினாலும், மிட்ஃபீல்டில் ஆட்டம் களையிழந்து கோல் அடிக்கத் தேவையான போதுமான களங்களை உருவாக்க சிரமப்படுகிறது.  காலிறுதியில் ஜெர்மனி வெல்ல அந்த அணியின் முனைப்பைவிட எதிர்த்து ஆடிய பிரஞ்சு அணியின் முனைப்பின்மையே முக்கிய காரணம். 2002-ல் தொடங்கி தொடர்ந்து நான்காவது முறையா அரை இறுதிக்குத் தேர்வாகியிருக்கும் ஜெர்மனியில்லாம், க்ளோசா, முல்லர் போன்ற மிகச்சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். கிளப் ஆட்டங்களின் பல உச்சங்களைத் தொட்டவர்கள். எனினும், உலகக் கோப்பை அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. 1990-ல் கோப்பை வென்ற ஜெர்மனியின் 24 வருட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர இதைவிட சிறந்த அணி தேருவது கடினம்.
 
இதை எழுதும் வேளையில் (8 ஜூலை) பிரேசில் சொந்த மண்ணில் களமிறங்குகிறது. காலிறுதியில் அணியின் ஆட்டம் தொடக்க ஆட்டங்களைவிட சீராகவும் ஒருங்கிணைப்போடும் காணப்பட்டது. அணியின் கேப்டன் தியாகோ சில்வாவின் கோலும், டேவிட் லூயியின் அற்புத ஃப்ரீகிக்கும் அரையிறுதியில் இடம்பிடித்துக் கொடுத்ததை எண்ணி நியாயமாய் ரசிகர்கள் களிப்பில் கூத்தாட வேண்டும். ஆனால் நாடு முழுவதும் சோகம் தாண்டவமாடுகிறது. அணியின் நட்சத்திரம் நெய்மார் காலிறுதியின் கடைசி கணங்களில் கொலம்பிய வீரரால் வீழ்த்தப்பட்டு உலகக் கோப்பையில் இனி பங்கெடுக்க முடியாத நிலையில் உள்ளார். தியாகோ சில்வா காலிறுதியில் பெற்ற மஞ்சள் அட்டை அவரை அரையிறுதியில் நீங்கச் செய்துவிட்டது. இது பிரேசிலுக்குப் பேரிடி தான். என்றாலும், பிரேசில் அணியில் திறமைக்கு குறைவில்லை. சொந்த மண்ணில் ஆடுவது என்பது இருமுனைக் கத்தி. அதன் சாதகங்களை மட்டும் பயன்படுத்தி, அது கொடுக்கும் அழுத்தங்களுக்கு ஆட்படாமலிருப்பின் பிரேசில் நிச்சயம் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிவரை செல்லக்கூடும்.
 
இரண்டாவது ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன. இதுவரை அர்ஜென்டினா பெரிய அழுத்தத்தைச் சந்திக்கவில்லை. எதிர்த்த அணியைத் தரைமட்டம் ஆக்காவிட்டாலும், வெற்றிக்குக் குறைந்தபட்சத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்தே அரை இறுதிவரை முன்னேறியுள்ளது.  உலகின் சிறந்த வீரர் என்ற பட்டத்தை நான்கு முறை வென்றிருக்கும் மெஸ்ஸி அணியின் துருப்புச்சீட்டு. அவர் கோல் அடித்தாலும் அடிக்காவிட்டாலும், மூன்று நான்கு எதிரணி வீரர்களைத் தம்பக்கம் இழுத்துக் கொள்வதன் மூலம், எதிரணியின் கோட்டைகளை வலுவிழக்கச் செய்துவிடுகிறார். அணியின் முக்கிய வீரர் அகுவேரோ காயத்திலிருந்து மீண்டு அணிக்கு வரும் வேளையில், வலது சிறகிலிருந்து துல்லியமாய் எதிரணியைத் துளைத்த ஏஞ்சல் டிமரியாவின் காயம் அர்ஜென்டினாவுக்குப் பின்னடைவுதான். 
 
முதல் சில ஆட்டங்களில், இருக்கும் இடம் தெரியாமல் ஆடிய ஹிகுவென், காலிறுதியில் விழித்துக் கொண்டுள்ளார். மெஸ்ஸி, அகுவேரோ, ஹிகுவென் கூட்டணியை Best ever forward அணி எனலாம். தற்காப்பில் கோட்டைவிடாமல் இருந்தால் அர்ஜென்டினாவின் வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது.சென்ற முறை இறுதிப் போட்டிவரை வந்த நெதர்லாந்து இந்த முறை இன்னொரு படியேறி கோப்பையை வெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. முதல் சில ஆட்டங்களில் ரோபன், வான் பெர்ஸி, ஸ்னைடர் தொடர்ந்து வேகமான நகர்த்தல்களால் எதிரணியைத் திக்குமுக்காடச் செய்தனர். நாக் அவுட் ஆட்டங்களில் அணியின் அணுகுமுறை சற்றே வேறுபட்டுள்ளது. தற்காப்புக்கு முக்கியத்துவம் அதிகமாகியுள்ளது. காலிறுதியில் சிறிய அணியான கொஸ்டரிகாவிடம் கோலடிக்க முடியாமல் நெதர்லாந்து தவித்தது. இதை மோசமான கனவு என்று கடந்து போக வேண்டுமா, அல்லது அணியின் தற்போதைய நிலை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று காலம்தான் கூற முடியும். 120 நிமிட ஆட்டத்தின் முடிவில், கோல்கீப்பரை அணியின் நடத்துநர் வான்கால் மாற்றினார். அணி பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றிவிட்டதால் அது கால்பந்தாட்ட வரலாற்றின் மிகச் சிறந்த மாற்றமாகக் கொண்டாடப்படுகிறது. ஒருவேளை டிம் குரூல் தடுக்காமல் போயிருந்தால்? வேறென்ன? வான்கால் வில்லனாக்கப்பட்டிருப்பார்.ஒருவேளை அர்ஜென்டினாவும் பிரேசிலும் வெற்றி அடைந்தால் ஃபைனல் நடக்க வேண்டுமே என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டை விட ஆயிரம் மடங்கு அழுத்தங்கள் நிறைந்தது அர்ஜென்டினா - பிரேஸில் ஆட்டம். இரு அணிகளும் இடம் பெறாத ஆட்டங்களிலேயே இரு நாட்டு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் சீண்டி வருகின்றனர். நெய்மாரின் காயத்தை பொம்மை முதுகெலும்பை சுமந்தபடி அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கால்பந்தின் நீண்ட வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்களில் சுமூகமாய் நடந்து முடிந்தவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம்.இவ்விரு அணிகள் இறுதியாட்டத்தில் மோதினால் யார் ஜெயிப்பார்கள்? முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்புறம் சித்தப்பாவுக்குப் பெயர் வைத்துக் கொள்ளலாம்.

Friday, July 11, 2014

காரிருளில் வாழும் அதிசய மீன்கள்!

 
கடல்களில் 1000 மீட்டர் ஆழத்துக்கு கீழே ஒளியே இராது. ஒரே இருட்டாக இருக்கும். அவ்வளவு ஆழத்தில் கடல் நீரானது ஐஸ்கட்டி அளவுக்குக் கடும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் அந்த இருட்டிலும் கடல் வாழ் உயிரினங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் பலவும் அந்தச் சூழலுக்கு ஏற்ற வகையில் விசேஷத் திறன்களைப் பெற்றவையாக உள்ளன.
 
தூண்டில் மீன் (Angler fish) அவற்றில் ஒன்று. அந்த மீன் பார்ப்பதற்கு மிக விகாரமானது. இரை கிடைத்தால் கவ்வி அப்படியே விழுங்குவதற்கு ஏற்ற வகையில் அதன் வாய் பெரியது. அதன் கோரமான பற்கள் உள்நோக்கி வளைந்ததுள்ளன. இதை விட முக்கிய அம்சம் அந்த மீனின் தலையில் தூண்டில் போன்ற உறுப்பு உள்ளது. இந்த உறுப்பின் நுனிப் பகுதி பிரகாசமான ஒளியை வெளிவிடும் தன்மை கொண்டது. இப்படி ஒளி விடுவதன் நோக்கம் இருளில் வழியறிந்து செல்வது அல்ல. இரையைக் கவருவதற்காகவே இந்த உறுப்பு உள்ளது. அத்துடன் எதிரியை விரட்டவும் இது உதவுகிறது.
 
சுற்று வட்டாரத்தில் உள்ள இதர ஜீவ ராசிகள் தூண்டில் மீனின் உறுப்பு வெளிவிடும் ஒளியைப் பார்த்து அதனால் கவரப்பட்டு அருகே வந்தால் அவற்றை தூண்டில் மீன் ஒரேயடியாகக் கவ்வி விழுங்கி விடும்.தூண்டில் மீன் மட்டுமன்றி வேறு வகை மீன்களும் இவ்விதம் ஒளியை வெளிவிடுகின்றன. இந்த ஒளியானது உயிரிஒளி என்று அழைக்கப்படுகிறது. தூண்டில் மீனைப் பொறுத்தவரையில் சில வகை பாக்டீரியாக்கள் இவ்வித ஒளியைத் தோற்றுவிக்க உதவுகின்றன.தூண்டில் மீன்களில் 320 வகைகள் உள்ளன. இவை வெவ்வேறு வடிவமைப்பைக் கொண்டவை. ஆழ்கடலில் வாழும் உயிரினங்களில் சுமார் 80 சதவிகிதம் தூண்டில் மீன்களே.ஆழ்கடலில் தூண்டில் மீன்களைத் தேட முற்பட்டால் பெரும்பாலும் பெண் மீன்களைத்தான் காண முடியும். ஆண் தூண்டில் மீன்களைக் காண்பது அரிது. ஆனால் பெண் தூண்டில் மீன் ஒன்றை உற்று நோக்கினால் அதன் உடலில் பல ஆண் தூண்டில் மீன்கள் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண முடியும்.ஆண் தூண்டில் மீனுக்கு மோப்ப சக்தி அதிகம். அது பெண் தூண்டில் மீனைக் கண்டுபிடித்து அதன் உடலில் போய் ஒட்டிக்கொள்ளும். அதன் பிறகு ஆண் தூண்டில் மீன் தனியே பிரிந்து வர முடியாது. பெண் மீனின் ரத்தம் ஆண் மீனின் உடலில் பாய ஆரம்பிக்கும். அதன் பிறகு ஆண் மீன் தனியே திரியவோ இரை தேடவோ அவசியமே இல்லாமல் போய் விடும். இவ்விதமாக ஆண் மீனுக்கு உணவு கிடைக்க ஆரம்பித்து விடும். பெண் தூண்டில் மீனின் உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் தூண்டில் மீன்கள் ஒட்டிக்கொண்டு ஓசியில் உயிர் வாழ்ந்து வரும். ஆனால் பெண் தூண்டில் மீன் இறக்க நேரிட்டால் அதனுடன் ஒட்டிக்கொண்டுள்ள ஆண் தூண்டில் மீன்களும் செத்து விடும். ஆண் தூண்டில் மீன் தனது உடலில் ஒட்டிக்கொள்வதால் பெண் தூண்டில் மீனுக்கு பெரிய பிரச்னை இல்லை. ஏனெனில் பெண் தூண்டில் மீனுடன் ஒப்பிட்டால் ஆண் தூண்டில் மீன்கள் வடிவில் மிகச் சிறியவை. கடலில் மிக ஆழத்தில் வாழும் மீன்கள் பொதுவில் அதிகம் மேலும் கீழுமாக நீந்தாதவை. அந்த அளவுக்கு அவற்றுக்கு உடலில் சக்தியும் இருக்காது. ஆகவே அவை இரை தம்மைத் தேடி வரட்டும் என்று காத்திருக்கும். பல சமயங்களில் ஒரே இடத்தில் இருந்தபடி மிதக்கும்.
 
ஆழ்கடலில் வாழும் மீன்களில் இன்னொரு வகை மீன் கொடுக்குப் பல் மீன் (Fangtooth fish).இந்த மீனும் பார்ப்பதற்கு கோரமானது. ஆனால் இது ஒன்றும் பெரிய மீன் அல்ல. சுமார் 18 செண்டி மீட்டர் நீளம் கொண்டது. ஆனால் இது நீளமான பெரிய பற்களைக் கொண்டது. பற்கள் கொடுக்கு போல உள்ளன என்பதால்தான் இந்தப் பெயர். பற்கள் பெரியவை என்பதால் இதனால் வாயை மூட இயலாது.கொடுக்குப் பல் மீன்கள் பகல் நேரங்களில் மிக ஆழத்தில் நடமாடும். இரவு நேரம் வந்தால் கடல் மட்டத்துக்கு வந்து இரை தேடும். விடியும் நேரம் வந்ததும் ஆழ்கடலுக்குச் சென்று விடும். சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்படிச் செய்கின்றன. உதாரணமாக லாந்தர் மீன்கள் பகலில் ஆழ்கடலுக்குள் சென்று விடுகின்றன. இரவு நேரம் வந்தால் இரை தேட கடல் மட்டத்துக்கு வந்து விடுகின்றன.இந்த வகை மீனின் உடலின் இரு புறங்களிலும் ஒளிரும் உறுப்புகள் உள்ளன. எனவேதான் இவை லாந்தர் மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒளியை வேண்டும்போது அதிகரித்துக் கொள்ளவும் குறைத்துக் கொள்ளவும் முடியும்.பசிபிக் வைப்பர் மீனும் இதே போல பகல் நேரங்களில் ஆழ் கடலுக்குச் சென்று விடுகின்றன. இரவில் சற்றே ஆழம் குறைந்த பகுதிக்கு வருகின்றன. இதுவும் ஒளிவிடும் தன்மை கொண்டது. எனினும் விளக்கைப் போட்டுப் போட்டு அணைப்பது போல வேண்டும் போது ஒளி விடுவதை நிறுத்திக் கொள்கின்றன.கடல்களில் 1000 மீட்டருக்குக் கீழே உயிரினமே இருக்க வாய்ப்பில்லை என்று முன்னர் கருதப்பட்டது. பின்னர் ஆழ்கடலில் காரிருளிலும் பல வகை உயிரினங்கள் உள்ளன என்பது தெரிய வந்தது.கடல்களில் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும்போது நாலா புறங்களிலிருந்தும் கடல் நீர் அழுத்துவதால் மனிதனால் மிக ஆழத்துக்கு இறங்கி அங்குள்ள உயிரினங்களை ஆராய இயலாது. 1960ம் ஆண்டில் ஜாக்கஸ் பிக்கார்டு, டான் வால்ஷ் ஆகிய இருவரும் பின்னர் 2012ம் ஆண்டில் ஜேம்ஸ் கேமரானும் கடலுக்குள் 11 கிலோ மீட்டர் ஆழம் வரை சென்று வந்தனர் என்றாலும் அவர்கள் விசேஷ நீர் மூழ்கு கலங்களைப் பயன்படுத்தினர்.

உடலினை உறுதிசெய் - ஆரோக்கியம்


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் முதலில் சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். அடுத்து சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு புதிய சைக்கிளை வாங்குகிறீர்கள். அதை ஓட்டாமல் வீட்டிலேயே வைத்துக்கொண்டால், என்ன ஆகும்? நாளாக ஆக சைக்கிள் துருப்பிடித்து, கிரீச் என்று சத்தம் போடும். அந்த சைக்கிளைத் தினமும் துடைத்து மசகு போட்டு ஓட்டி வந்தால் எப்படி இருக்கும்? அந்த சைக்கிள் பயணமே ஓர் அலாதியான ஆனந்தம் தரும். அதுபோலவே 206 எலும்புகள், 600க்கும் மேற்பட்ட தசைகள், தசைநார்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட உள்ளுறுப்புகளால் பிணைக்கப்பட்டுள்ள நம் உடல், உடற்பயிற்சிகளைச் செய்யச் செய்யத்தான் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. எலும்பும் தசையும் வலுப்பெற்று, மூட்டுகள் நெகிழ்வுத் தன்மை அடைந்து, அவற்றின் இயக்கங்கள் எளிதாகி, நலம் காக்கும் உடற்தகுதியை நமக்குத் தருகிறது. இதற்குத்தான் உடற்பயிற்சி தேவைப்படுகிறது.

உடற்பயிற்சிகளில் முக்கியமானது, ஏரோபிக்ஸ் பயிற்சிகள். இவை காற்றில் உள்ள ஆக்ஸிஜனை நுரையீரலும் இதயமும் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் பயிற்சிகள். நடப்பது, ஓடுவது, நீச்சலடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, ஹாக்கி, கோகோ, டென்னிஸ், டேபிள்டென்னிஸ், ஸ்கிப்பிங் போன்ற விளையாட்டுகள் எல்லாமே ஏரோ பிக்ஸ் பயிற்சிகள்தான்.

இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நம் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கின்றன? முதலில் நாம் வேகமாகவும் ஆழமாகவும் சுவாசிக்கிறோம். அப்போது அதிக அளவு ஆக்ஸிஜன் உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலக்கிறது. ரத்தம் சுத்தமாகிறது. அடுத்ததாக இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இதன் பலனால் உடலில் ரத்தம் வேகமாகவும் அதிகமாகவும் சுற்றி வருகிறது. அப்போது சிறு ரத்தக் குழாய்கள் கூட அளவில் பெரிதாகின்றன. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ரத்தம் செல்வது அதிகரிக்கிறது. சாதாரணமாக ஒரு நிமிடத்தில் ஐந்து லிட்டர் ரத்தம் நம் உடல் முழுவதும் சுற்றிவரும். நாம் விளையாடும்போது ஐந்து மடங்கு ரத்தம் (25 லிட்டர்) அதிகமாகச் சுற்றிவரும். இதனால் உடலில் உருவாகும் கழிவுகள் விரைவில் வெளியேறிவிடுகின்றன. சீக்கிரமே ரத்தம் சுத்தமாகிறது. உடலின் வெப்பம் குறைகிறது. உடலும் மனமும் புத்துணர்வு பெறுகின்றன.

தொடர்ந்து தினமும் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் பல நோய்கள் நம்மை அண்டுவதற்கு அஞ்சும். காரணம், விளையாட்டுப் பயிற்சிகள் இதய நோயைத் தடுக்கும். நுரையீரல்களைக் காக்கும். சர்க்கரை நோயைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்தக் கொழுப்பைக் கரைக்கும். பக்கவாத நோயைத் தடுக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வை நீக்கும். உடலின் ஆற்றலையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி அமைக்கும்.

தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தால் உடலுழைப்பு குறைகிறது. இளம் வயதிலேயே நோய்கள் வந்துவிடுகின்றன. ஆரோக்கியமாக வளர, உடற்பயிற்சி அவசியம்.

பிரேஸில் கால்பந்து


கால்பந்து உலகக் கோப்பை பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. பிரேஸில்தான் உலகின் மையமாக இருக்கிறது. 1950க்குப் பிறகு பிரேஸிலில் உலகக் கோப்பைப் போட்டி நடக்கிறது. 1950ல் ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்றது. இந்த முறை 12 மைதானங்களில். அப்போது 13 அணிகள். இப்போது 32 அணிகள். அப்போது இறுதிப் போட்டியில் யாரும் எதிர்பாரதவிதமாக உருகுவேயிடம் தோற்றுப் போனது பிரேஸில். பிரேஸில் கால்பந்து ரசிகர்களால் அதை மறக்கவே முடியாது. இன்றைக்கும் அது சோக காவியமாகப் பேசப்படுகிறது. பிறகுதான் பீலே என்றொரு வீரர் உருவானார். லட்டு லட்டாக பிரேஸிலுக்கு மூன்று உலகக் கோப்பைகளை வாங்கித் தந்தார். பீலே, மரடோனா, ரொனால்டோ என்று உலகக் கோப்பை அளித்த மகா ஆட்டக்காரர்கள் பலர் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். 

மெஸ்ஸி (அர்ஜெண்டினா), ரொனால்டோ (போர்ச்சுகல்), நெமர் (பிரேஸில்) கோஸ்டா (ஸ்பெயின்) வான் பெர்ஸி (நெதர்லாந்து), மார்கோ ரியுஸ் (ஜெர்மனி), ரூனி (இங்கிலாந்து), லுயிஸ் சுவரேஸ் (உருகுவே), ஈடன் அசார்ட் (பெல்ஜியம்), பிராங்க் ரிபர் (பிரான்ஸ்) ஆகிய 10 வீரர்கள் இந்தப் போட்டியில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை இந்த 10 பேரில் ஒருவர்தான் தட்டிச் செல்வார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

மெஸ்ஸி சென்ற உலகக் கோப்பையில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றிவிட்டார். ஆனால் அவருக்கு ஆதரவு அளிக்கிறார் மாரடோனா. மெஸ்ஸி, உலகக் கோப்பையில் கோல்கள் அடித்துதான் தன்னைச் சிறந்த வீரர் என்று நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் ஏற்கெனவே தன்னை நிரூபித்து விட்டார்" என்கிறார். ஆனால் மெஸ்ஸியோ, ஒரு கால்பந்து ஆட்டக்காரர் உலகக் கோப்பையில் தன்னை யார் என்பதை நிரூபித்தாக வேண்டும்" என்று ஒப்புக்கொள்கிறார். எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த வீரர் நட்சத்திர அந்தஸ்த்தை அடைவார் என்று இந்த உலகக் கோப்பையில் ஏகப்பட்ட பரபரப்புகள்.

பூமி தினம்

 
வில்சனின் பண்ணைக்கு அம்மாவுடன் வந்தார் மேரி. குழந்தைகளின் ஆரவாரக் குரல் கேட்டு, வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே அறை முழுவதும் சிறியதும் பெரியதுமாகப் புத்தகங்கள் இறைந்து கிடந்தன. வண்ண பென்சில்கள் கொட்டிக் கிடந்தன. மேரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஓடிச்சென்று ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். 
 
மேரி, உனக்குப் படிக்கத் தெரியாது. புத்தகத்தைக் கீழே வை" என்றாள் ஒரு பெண்.  ஒரு நொடி அதிர்ந்து போனார் மேரி. ஆமாம். அவள் சொல்வது உண்மைதான். ஆனால் எனக்கு மட்டும் ஏன் படிக்கத் தெரியவில்லை? கண்ணீர் பெருகியது. இதயமே நொறுங்கியது போல ஒரு வலி.நானும் ஒருநாள் உன்னைப் போல படிப்பேன்" என்றபடி அம்மாவிடம் ஓடினார். தான் ஏன் படிக்கவில்லை என்று கேட்டார்.நாம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். நம்மை இத்தனை ஆண்டுகள் அடிமைகளாகத் தான் அமெரிக்கர்கள் நடத்தினார்கள். ஒரு அடிமைக்கு எதுக்குப் படிப்பு என்பது அவர்கள் எண்ணம்" என்றார் மேரியின் அம்மா.படிப்பு இல்லாததால்தான் நாம் கஷ்டத்தில் வாழ்கிறோம். படிப்பு இருப்பதால்தான் அமெரிக்கர்கள் நம்மை அடக்கியாள்கிறார்கள். நான் படிக்கணும். நாம் எல்லோருமே படிக்கணும். வாழ்க்கையில் முன்னேறணும்" என்ற மேரியை, வியப்புடன் பார்த்தார் அம்மா.சில நாள்களில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பத்து வயதுக்குப் பிறகே படிக்க ஆரம்பித்தார் மேரி. அவருடைய ஆர்வமும் உழைப்பும் விரைவாகக் கற்றுக்கொள்ள வழி வகுத்தன. மேரியைப் பார்த்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலரும் படிக்க வந்தனர். கல்லூரிப் படிப்பை முடித்தார். ஆசிரியராகப் பணியாற்றினார். ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை ஆரம்பித்தார். சிறந்த கல்வியாளராக விளங்கினார். 
 
எழுத்தாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பொறுப்புகளைத் திறம்படச் செய்தார். 4 அமெரிக்க அதிபர்களிடம் வேலை செய்தார். தானும் உயர்ந்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் உயர்த்தினார் மேரி மெக்லியோட் பெத்யூன். ஜூலை 10, மேரியின் பிறந்தநாள்.

Monday, July 07, 2014

தடுமாறும் தமிழ்சினிமா?


தமிழ்நாட்டில் வெளியாகும் எந்தப் படமும் சரியாக ஓடுவதில்லை. நினைத்த தொகை வசூல் ஆவதில்லை. தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை. இனி சினிமாவின் எதிர்காலம் கவலைக்கிடம்தான். 

காரணம் கோடம்பாக்கத்தில் ஆண்டுதோறும் 100க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில் வசூல் ரீதியாக வெற்றி பெறும் படங்கள் எண்ணிக்கையே விரல் விட்டு எண்ணக்கூடியவை தான். கனவு கோட்டையான சினிமாவை நம்பி வரும் புது தயாரிப்பாளர்களும், புதுமுக நட்சத்திரங்களும் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுகிறார்கள். இவர்கள் மட்டுமா? பெரும் பட நிறுவனங்கள் தயாரித்த படங்கள் ஓடாமல் அடுத்த படங்களை வெளியிட முடியாமலும், நிதிச் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. தலைமுறைகளை தாண்டி படம் தயாரித்தவர்கள் கூட இன்று சினிமாவை விட்டு வேறு தொழிலுக்கு மாறலாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவே இன்றைய சினிமாவின் உண்மைநிலை.

2011ல் தமிழில் 131 திரைப்படங்கள் வெளியாகின. இதில் 2 சூப்பர் ஹிட் படங்கள், 4 ஹிட் படங்கள் மட்டுமே. 2012ல் தமிழில் 143 படங்கள் வெளியாகின. இதில் வெற்றி பெற்றவை 11.

2013ம் ஆண்டு வெளியானவை 152 படங்கள். இதில் பேசப்பட்டவை 12 மட்டுமே.

கடந்த ஆண்டு வெளியான படங்களால் பல புரட்சிகளும், அதிர்வுகளும் உண்டானது. அதில் முக்கியமானது சினிமா ஜாம்பவான்களுக்கு தோல்விகள் பரிசாக கிடைத்தன. அடுத்த மாற்றம் புதிய, திறமையான இளைஞர்களுக்குக் கிடைத்த வரவேற்பு. 

மணிரத்னத்தின் ‘கடல்’, பாரதிராஜாவின் ‘அன்னக் கொடி’, அமீரின் ‘ஆதிபகவன்’, வசந்தின் ‘மூன்றுபேர் மூன்று காதல்’ போன்ற ஜாம்பவான்கள் பலர் இயக்கிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதே நேரத்தில் இளம் ரத்தங்கள் சாதனை சரித்திரம் படைத்தனர். மூத்த இயக்குநர்கள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் செய்வதுதான் மிகச் சரியே என்ற குருட்டு தன்னம்பிக்கையை கைவிட வேண்டும் என்பதே இந்தத் தோல்வி கற்று தந்திருக்கும் பாடம். 

மேலும் சாதாரண மக்கள் தியேட்டருக்கு சென்று, குடும்பத்துடன் படம் பார்ப்பது முற்றிலுமே குறைந்து விட்டது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட எந்த தியேட்டரும் முழுமை ஆவதில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நான்கைந்து நாட்கள் மட்டுமே ஓப்பனிங் இருக்கிறது. அதிக தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்வதால், ஓரளவு கையைக் கடிக்காமல் வசூல் பார்த்து விடுகிறார்கள்.  

புதுமுகங்கள் நடித்த படங்களின் நிலை அந்தோ பரிதாபம். அந்தப் படங்களைத் தயாரிப்பவர்கள் புதியவர்கள். முன் அனுபவம் இல்லாமை, திட்டமிடாமல் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது, நட்சத்திரங்களுக்குச் சம்பளத்தை வாரி வழங்குவது என, ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. சென்சார் சான்றிதழ் வாங்கியும் ரிலீசாகாத படங்களின் எண்ணிக்கை 400க்கும் மேல் நீள்கிறது. இதுவரை தமிழ் சினிமா சந்தித்த நஷ்டக் கணக்கு பல கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கும் என்று, சொல்கிறார்கள் விவரமறித்தவர்கள்.






அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்


'அனைத்து அறன்’ அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்.’ அதாவது, தங்கள் மனஸைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்து கொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர். 

கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம், ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.

தான் அடங்கியிருக்க வேண்டும்; பக்தியோடு ஈஸ்வர ஸேவை என்று நினைத்து ஸமூஹ ஸேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்கச் சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், ‘ஷோ’வாகவுமே முடிந்து போகும். இந்தப் படாடோபத்தால் ‘ஸேவை’ என்று செய்கிறவனுக்கு அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய ஸேவையை அடக்கமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கிவிடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக் கொண்டதாகி விடும்.

‘தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்’ என்றால் இது ஸ்வயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான ஸ்வயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய ஸுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான ஸ்வய நலம். மனஸை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது. இது இந்திரிய ஸௌக்கியங்களிலிருந்து நம் மனஸை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Friday, July 04, 2014

நாட்டின் மிகப்பெரிய சோலார் தர்மல் பிளாண்ட்

 
இன்றைய உலகின் வளர்ச்சி என்பது மின் ஆற்றலைச் சார்ந்துள்ளது. தற்போது, நிலக்கரி, நீர், காற்று, சூரிய ஒளி, அணு உலை போன்றவற்றின் மூலம் மின்ஆற்றலைப் பெற்றுவருகிறோம். 
 
புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், எரிபொருள் விலை உயர்வு போன்றவை மனித இனத்தின் முன் நிற்கும் பேராபத்துகள். காற்று, நீர், சூரியஒளி மூலம் மின்சக்தி பெறுவது பாதுகாப்பானது. ஆனால், நீர் மற்றும் காற்று மூலம் கிடைக்கும் ஆற்றல் நிரந்தரமாக ஒரே சீராகக் கிடைப்பதில்லை.  இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு மரபுசாரா எரிசக்திகளான காற்றாலை, சோலார், உயிர்ம எரிபொருள் போன்றவையே சரியான வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆண்டின் 365 நாட்களும் நமக்குச் சூரிய ஒளி கிடைக்கிறது. வெப்ப மண்டல நாடான இந்தியா இப்போது சூரிய ஒளியில் இருந்து எடுக்கும் மின்சாரத்தின் அளவு ஒரு சதவிகிதம்தான். சூரிய வெப்பம் மூலமான ஆற்றல் பெறுதல் நிரந்தரமானது. இது குறித்து யார் யோசித்தார்களோ என்னவோ ஆன்மிகம் சார்ந்தவர்கள் யோசித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய சோலார் தர்மல் பவர் பிளான்ட் (Solar Thermal Power Plant) உருவாகி வருவது குறித்துச் சொன்னார்கள். மவுன்ட் அபு ரோட்டில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சாந்திவனம் (Shantivan) வளாகத்தில் இதன் அலுவலகம் இருக்கிறது. சாந்திவனம் அருகிலேயே இந்த பவர் பிளான்ட் வளாகம் இருந்தது. இந்தத் திட்டத்துக்காக இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஒரு பகுதி நிதியை அளிக்கிறது. அத்துடன் ஜெர்மன் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தியிலிருந்து பாதுகாப்பு (பி.எம்.யூ.) அமைப்பும் ஒரு பகுதி நிதியளிக்கிறது. 
 
இங்கு தற்போது ஐம்பது பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.நாட்டில் 30 கோடி மக்களுக்கும் மேலாகச் சரியாக மின்சார வசதி இல்லாத நிலையில், பல தொழில்துறைகளும் மின்சாரத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய சூரிய மின்சக்தி உற்பத்தி பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்குப் பெரிய உதவியாக இருக்கும். தமிழகமும் இந்த முறையிலான மின் உற்பத்தியில் இறங்கலாமே.

அருள்வாக்கு - தவறான நாகரிகப் பிரிவினை


இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரீகம் வேறே என்று தப்பாக அபிப்ராயப்பட்டுக் கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன்காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த விஷயங்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யர் வைதிக நாகரீகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது. 

நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரீகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்தத் திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி விட்டுப் போயிருக்கும் தமிழ் நூல்களைப் பார்த்தாலும் சரி, இந்தப் புது அபிப்ராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை.

இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. (வேடிக்கைக் கஷ்டம்) என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியாமல் வேரோடி விட்டதாக நினைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆதரவைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களிடையே அறிவாளிகளாக இருக்கப்பட்ட சிலபேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.  

தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி செலுத்திவந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரீகம் என்று ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போஷித்த மாதிரியே எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். 

சரித்திரத்தை Base பண்ணிக் கதை எழுதுகிறவர்கள் மாத்திரமில்லாமல் சரித்திர புஸ்தகமே எழுதுகிறவர்கள், தமிழிலக்கிய வரலாறு எழுதுகிறவர்கள், பண்டைத் தமிழ் நூல்களுக்கு இப்போது உரை எழுதுகிறவர்கள் ஆகியவர்களிலும் ரொம்பப் பேர் இந்த ரீதியில் எழுதுவதுதான் மிகவும் கவலையாயிருக்கிறது. இதனால் இவர்கள் இதுவரை ஜனங்களுக்கு இல்லாமலிருந்த பேத எண்ணங்களை உண்டாக்கி, வலிவு கொடுத்து வருகிறார்கள். பொதுவான பாரத கலாச்சாரத்துக்குள்ளேயேதான் அங்கங்கே வித்தியாஸங்களிருப்பது.  

இது ரீஜினல் (பிராந்திய) வித்யாஸம்தானே தவிர ரேஷியல் (இன) வித்யாஸம் இல்லவேயில்லை. தமிழ் ஜனங்களுக்குள்ளேயே பழக்க வழக்கங்களிலும் பேச்சிலும் தென்பாண்டி நாடு, கொங்குதேசம், சோழ தேசம், வடார்க்காடு - தென்னார்காடு - செங்கல்பட்டு சேர்ந்த பழைய நடுநாட்டு - தொண்டை நாட்டுப் பகுதிகள் ஆகியவற்றுக்குள் எத்தனை வித்தியாஸங்களிருக்கின்றன? அதிலும் சேராமல், அத்தனையையும் அவியலாக்கி, இன்னும் சிலதையும் சேர்த்ததாகப் சென்னப்பட்டினத்தில் இருக்கிறது. ஸ்மார்த்தப் பொம்மநாட்டிகள் (மடிசார்) கட்டிலேயே மூன்று நான்கு தினுஸு சொல்வார்கள். அதனாலே வேறே வேறே ரேஸ் என்றாகிவிடு

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

நடால் ஃபெடரர் வெல்லப் போவது யார்?

 
விம்பிள்டன் ஆட்டங்கள் இந்த வாரம் தொடங்குகின்றன. விம்பிள்டனை முதல் வாரத்தில் யாரும் ஜெயிக்க முடியாது. ஆனால் நிச்சயம் இழக்க முடியும்" என்றொரு கூற்று உண்டு. ஃபெடரர், நடால் போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள்கூட கடந்த சில ஆண்டுகளில் முதல் வாரத்திலேயே தோற்றிருக்கின்றனர். இருப்பினும் இவை எல்லாம் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் தருணங்கள். எதிர்பார்ப்பு என்னவோ, தர வரிசையில் முதல் நான்கு இடங்களில் இருப்பவர்கள் அரையிறுதி வரை செல்வார்கள் என்றுதான். ஏழுமுறை விம்பிள்டனை வென்றிருக்கும் ஃபெடரரின் ஒவ்வொரு அசைவும் கூர்ந்து கவனிக்கப்படும்.
 
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஃபெடரரின் ஆட்டத்தில் அவர் உள்ளத்துணிவு வெளிப்படுகிறது. அவருடைய பேக்ஹாண்டின் பழைய துல்லியம் மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளது. கால்களின் வேகக் குறைவை, அவரது சர்வீஸும், வாலிகளும் சமன்படுத்துமாய் என்று பார்க்க வேண்டும். ஃபெடரர் இன்னொரு கிராண்ட்ஸ்லாம் ஜெயித்தால் அது விம்பிள்டனாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.
 
நடால் இருமுறை விம்பிள்டனில் வென்றிருந்தாலும், அவரை அதிகம் சோதிக்கும் களம் இதுதான். களிமண் தளங்களின் மன்னன் என்றாலும் புல் தரையில் வென்றதைவிட சறுக்கிய கணங்களே அதிகம். முதல் ரவுண்டிலேயே போன வருடம் வெளியேற்றப்பட்ட நடால் இந்த ஆண்டு முன்னேறக் கூடும் - அவர் ஆட்டமும் உடலும் இடம் கொடுத்தால்.
 
நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரேயின் ஆட்டம் விம்பிள்டன் வெற்றிக்குப் பின் சரிந்துள்ளது. காயங்கள், கோச் லெண்டிலுடன் முறிவு என்று பல சறுக்கல்கள். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மொரிஸ்மோவை கோச்சாக நியமித்து அவர் ஆடப் போகும் முதல் ஆட்டத் தொடர் இது.  

கடந்த சில ஆண்டுகளில் Mr. Consistent என்றால் அது ஜோகோவிச்தான். பட்டம் வெல்லாத ஆட்டத் தொடர்களில்கூட முதல் சில சுற்றுகளில் வெளியேறாமல், அரையிறுதி வரையிலாவது தகுதி பெற்றிருக்கிறார் ஜோகோவிச். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் ஃபேவரிட்டாக ஜோகோவிச் களமிறங்குகிறார்.
 
இவற்றுக்கிடையில் உலகின் ஏதோ ஒரு மூலையில் இந்தியாவும் பங்களாதேஷும் கிரிக்கெட் என்றொரு ஆட்டத்தை ஆடினார்களாம். தொடரை யார் வென்றார்கள் என்று உலகக் கோப்பையும் விம்பிள்டனும் முடிந்தவுடன் விசாரித்துப் பார்க்க வேண்டும்.

ஆனந்துக்கு ஸ்கோப் அதிகம்!

 
சதுரங்க உலகில் சென்ற வாரம் பெரும் சலசலப்பிருந்தது. இந்த ஆண்டின் கடைசியில் உலக சாம்பியன்ஷிப் போட்டி கார்ல்ஸனுக்கும் ஆனந்துக்கும் இடையில் நடைபெறுவதில் பல மாதங்கள் இழுபறியாகிக் கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்தான் ரஷ்யாவில் இவ்வாண்டு பனிக்கால ஒலிம்பிக்ஸ் நடந்த சோச்சியில் இப்போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஆனந்தும் கார்ல்ஸனும் இந்த வாரம் உலக ராபிட் செஸ் போட்டியில் மோதினர். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன் அநேகமாய் இருவரும் மோதிக் கொள்ளும் ஒரே ஆட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்ற நிலையில், ரசிகர்கள் பரபரப்புடன் இவ்வாட்டத்தைக் கண்டுகளித்தனர்.
 
வெள்ளைக் காய்களுடன் கார்ல்ஸன் தொடங்கிய ஆட்டத்தை, ‘மெதுவாக டிராவை நோக்கிச் சென்ற ஆட்டம்’ என்று ஆனந்தே குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில் ஆனந்தின் வலுவான யானையை (Rook), கார்ல்ஸனின் குதிரையும் பிஷப்பும் கட்டுக்குள் வைத்திருந்தன. அப்போது கார்ல்ஸன் செய்த தவறான நகர்த்தல் ஆனந்துக்கு சாதகமாய் அமைந்தது. ஒன்றன்பின் ஒன்றாகப் பல துல்லியமான நகர்த்தல்கள் ஆனந்திடமிருந்து வெளிப்பட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. இவ்விருவருக்குமான ஆட்டத்தில் ஆனந்த் வென்றாலும், ராபிட் மற்றும் ப்ளிட்ஸ் எனப்படும் அதிவேக ஆட்டத்தொடர் இரண்டையும் கார்ல்ஸனே வென்றார். இதன் மூலம், கிளாசிகல், ராபிட், ப்ளிட்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் கோலோச்சும் உலக சாம்பியனாகவும் விளங்குகிறார்.
 
இந்த ஒரு ஆட்டத்தையோ, இந்தத் தொடரையோ வைத்து இந்த ஆண்டின் கடைசியில் நடக்கவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியைப் போல அல்லாமல் ஆனந்தின் ஆட்டம் வேறுபட்டதா, தோல்வியைத் தவிர்க்கும் தற்காப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் என்று நம்பலாம். கார்ல்ஸன் மீண்டும் வெல்லக்கூடும் என்றாலும் சாம்பியன் என்கிற பளு ஏதும் இல்லாத ஆனந்தின் ஆட்டம் இம்முறை எந்த மனத்தடையும் இன்றி அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.
 
 

Tuesday, July 01, 2014

வலை உலா

உலகில், விதவிதமான சுவர்கள் இருப்பது போல இணையத்திலும் சுவர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த இணையச் சுவரை நீங்களே உருவாக்கலாம்.

பேட்லெட் (padlet.com) என்ற இணையதளம்தான் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. (வால்விஷர் எனும் பெயரில் அறிமுகமாகி, பின்னர் பேட்லெட் எனப் பெயர் மாறியுள்ளது.) இரண்டு நிமிடங்களில் நூடுல்ஸ் தயார் செய்துவிடலாம் என்பது போல, இந்தத் தளத்தில் மிகச் சுலபமாக இணையச் சுவரை உருவாக்கலாம்.

இதற்காக, தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள அறிவிப்புப் பகுதியில் க்ளிக் செய்தால், ஓர் இணையப் பக்கம் தோன்றும். அதுதான் உங்களுக்கான இணையச் சுவர். இப்படி உருவாக்கும் இந்த இணையச் சுவரால் என்ன பயன்?



இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, இந்த இணையச் சுவரில் ஏதாவது ஓர் இடத்தில் இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள். சின்னதாக ஒரு கட்டம் தோன்றும். அந்தக் கட்டத்தின் மேல் பகுதியிலும் நீங்கள் டைப் செய்யலாம். கட்டத்தின் நடுவிலும் டைப் செய்யலாம். மேல் பகுதியில் உங்கள் பெயர் அல்லது  தலைப்பைக் கொடுக்கலாம். கீழ்ப் பகுதியில் நீங்கள் விரும்பும் வரிகளை டைப் செய்யலாம்.

இன்னும் இரண்டு அற்புதங்களும் உள்ளன. அந்தக் கட்டத்திலேயே அடிப்பகுதியில் பார்த்தால், சின்னச் சின்னதாக மூன்று ஐகான்கள் இருக்கும். சங்கிலி போன்ற முதல் ஐகான் புகைப்படம் அல்லது வீடியோ இணைப்புகளுக்கானது. இதை க்ளிக் செய்தால், நீங்கள் உருவாக்கிய கட்டம் அல்லது பெட்டியில் உங்களுக்குத் தேவையான புகைப்படம் அல்லது வீடியோவை இணைக்கலாம். இணையதள முகவரியையும் இணைக்க முடியும். அதேபோல, இந்தக் கட்டத்தை முடித்ததும், இணையச் சுவரில் வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் க்ளிக் செய்து, இன்னொரு கட்டத்தை உருவாக்கலாம். இந்தக் கட்டத்திலும் அதேபோல டைப் செய்யலாம். படங்களைச் சேர்க்கலாம். இப்படி எத்தனை கட்டங்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

அது மட்டுமா? இந்தக் கட்டங்களுக்கான பின்னணி வண்ணங்களைகூட விருப்பம் போல தேர்வுசெய்யலாம். பின்னணியை சித்திரங்களாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்தத் தளத்திலேயே கேலரி எனும் பகுதி இருக்கிறது. அதில் இந்த வசதியை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை அழகான உதாரணத்துடன் அறியலாம். வீட்டுப் பாடத்துக்கோ, வகுப்பில் கொடுக்கப்பட்ட செயல்பாடுகளுக்கோ இதைப் பயன்படுத்தலாம்.  உங்கள் நண்பனுக்கு பிறந்த நாளா? வாழ்த்துச் சொல்ல இந்த சுவரைப் பயன்படுத்தலாம். காலாண்டுத் தேர்வுக்கு எப்படிப் படிப்பது என்று திட்டமிடலாம். நீங்கள் பார்த்து ரசித்த பயனுள்ள இணையதளங்கள் பற்றிய விவரங்களைக் குறித்துவைக்கலாம். இப்படிப் பலவிதங்களில் இந்தச் சுவர் பயன்படும்.

வீட்டுப் பாடம் என்றால், இந்தச் சுவரில் நீங்கள் படித்த பாடத்தின் முக்கிய அம்சங்களைத் தனித்தனியே குறிப்பிட்டு, அதன் கீழ் ஒவ்வொரு அம்சத்துக்கான குறிப்புகளையும் இடம் பெறச்செய்யலாம். நோட்டில் எழுதி பார்ப்பதைவிட இது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அழகாக மனத்திலும் பதியும்.

 

பிறந்த நாள் வாழ்த்து என்றால், நண்பரின் பெயரை மேலே குறிப்பிட்டு, அதன் கீழ் உங்கள் வாழ்த்தைக் குறிப்பிட்டு, மற்ற நண்பர்களின் வாழ்த்துகளையும் இடம் பெறவைக்கலாம்.

இந்த இணையச் சுவரை உருவாக்கிய பின், அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். நண்பர்கள் கூட்டாக சேர்ந்து செயல்பட இது மிகவும் உதவியாக இருக்கும். உதாரணத்துக்கு, இதன் மூலமே விநாடி வினா நடத்தலாம். வரிசையாகக் கேள்விகள் கேட்டு, அதற்கு நண்பர்களை பதில் அளிக்கவைக்கலாம். இதே வசதியை ஒரு தலைப்புத் தொடர்பாக சக மாணவர்களின் கருத்துக்களை திரட்டவும் பயன்படுத்தலாம்.



உங்கள் பள்ளி ஆசிரியர்கூட இதுபோன்ற சுவரை உருவாக்கி, மாணவர்களை பங்கெடுக்கவைத்து, பாடத்தை மேலும் அழகாகப் புரிய வைக்கலாம். நீங்கள் உருவாக்கிய இணையச் சுவரை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம், மாற்றி அமைக்கலாம்.

உறுப்பினராகப் பதிவுசெய்துகொள்ளாமலே இணைய சுவரை உருவாக்கலாம் என்றாலும், உறுப்பினரானால் உங்கள் இணையச் சுவரை சேமித்துவைத்துக்கொள்ளலாம். இ-மெயில் அல்லது ஃபேஸ்புக் மூலம் இந்தச் சுவரை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் வலைப்பதிவு வைத்திருந்தால், அதில் இந்தச் சுவரை உள்ளீடு செய்துகொள்ளலாம்.


செல்போன் இணைப்பு... மக்கள்தொகையைவிட அதிகம்!

'மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பிருக்கிறது' என்றபடி காவல்துறையைக் குவித்தது... 'திருடர்கள் ஜாக்கிரதை’ என்று புகைப்படங்களை ஒட்டியது... எல்லாம் அந்தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற்றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும் கொள்ளையடிக்க முடியும்... பற்பல குற்றங்களை அரங்கேற்ற முடியும் என்பது இந்தக் காலம். எல்லாம், 'டெக்னாலஜி பகவான்' கடைக்கண் பார்வையால் ஏற்பட்டிருக்கும் 'வளர்ச்சியே!'
 
'நீங்கள், ஒரு ஷாப்பிங் மால் அல்லது திருவிழா கூட்டத்தில் நிற்கும்போது, உங்களுக்குத் தெரியாமலேயே உங்களுடைய மொபைல், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் இருக்கும் தகவல்கள் மொத்தத்தையும் திருடி, அதை வைத்தே ஒட்டுமொத்தமாக நொடிகளில் உங்களை மொட்டையடிக்க முடியும்' என்று சொன்னால், அதிர்ச்சியாவீர்கள்தானே! ஆனால், இதுதான் உண்மை!'ஆம்... இவன்தான் குற்றவாளி என்று அறிந்துகொள்ளக்கூட முடியாதபடி, நம் அருகிலோ, பக்கத்து வீட்டிலோ, பக்கத்து ஊரிலோ, வேறு நாட்டிலோ உலாவும் இந்த 'டெக் குற்றவாளிகள்', மிகவும் சிக்கலானவர்கள். இவர்களை நெருங்குவதுகூட பெரும்பாலும் கடினமே! ஆக, தொழில்நுட்ப வளர்ச்சி நம்முடைய வேலைகளை மட்டும் சுலபமாக்கவில்லை... திருடர்களின் வேலையையும்தான்! ஆக, மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருப்பதே, அவர்களிடமிருந்து நம்மையும், நம் பணம் மற்றும் பொருட்களையும் தற்காத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி''.
 
செல்போன் இணைப்பு...  மக்கள்தொகையைவிட அதிகம்!

''இந்தியாவின் மக்கள்தொகை இன்று 120 கோடிக்கு மேல். இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைவிட அதிகமாகக் கூடும் என்கிறது ஒரு தகவல். அந்தளவுக்கு இன்று அலைபேசி இணைப்புகள் மிகச்சுலபமாகக் கிடைக்கின்றன. ஆக, 110 ரூபாய் முதலீட்டில் ஒரு சிம் வாங்கிவிட்டால் போதும்... ஏன், இலவச சிம் கார்டுகளும்கூட வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்தி செய்யவேண்டிய குற்றப் பணிகளைச் செய்துவிட்டு, அந்த எண்ணைத் தூக்கி எறிந்துவிடலாம். சரியான தகவல்கள் பெறாமல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இணைப்புகளை வழங்கும் அலைபேசி நிறுவனங்களால், இத்தகைய குற்றவாளிகளைக் கண்டறிவது சாத்தியமில்லாமல் போகிறது. இதுவே சில வெளிநாடுகளில், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை உறுதிபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.



ஏமாற்று வேலைகள் பலவிதம்!

நம்மில் பலரும், 'நாங்க டுபாக்கூர்டெல் நெட்வொர்க்ல இருந்து பேசுறோம். உங்க அட்ரஸ், நேம் கன்ஃபர்ம் பண்ணணும்... ப்ளீஸ் சொல்லுங்க’ என்கிற ரீதியில் வரும் அலைபேசி அழைப்புகளைக் கடந்திருப்போம். உண்மையில் அலைபேசி நிறுவனங்களிடம் நம்மைப் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே இருக்கும் என்பதால், அவர்கள் நம்மிடம் கேட்க மாட்டார்கள். நம்மைப் பற்றிய விவரங்களை அவர்களே சொல்லி, 'சரியா?’ என்றுதான் கேட்பார்கள். எனவே, உங்களைப் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் என்று அழைப்பு வந்தால், துண்டித்துவிடுங்கள். உங்கள் பெயர், முகவரியைப் பெற்று, மோசடி வேலையில் இறங்கக்கூடும்.

என்னென்ன குற்றங்கள்?
 
சரி, நம்முடைய அலைபேசி எண் மற்றும் நம்மைப் பற்றிய விவரங்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?

ஒருவர் 10 ஆயிரம் தொலைபேசி எண்கள், சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு அனைத்து விவரங்களையும் பல குறுக்கு வழிகள் மூலமாகச் சேமித்து வைத்திருக்கிறார் என்றால், அவற்றை க்ரைம் மூளைகொண்ட ஒரு குழுவுக்கு விற்பனை செய்யலாம். அந்தக் குழு, பணக் கொள்ளையில் இருந்து குழந்தைகள் கடத்தல் வரை அந்த விவரங்களை வைத்தே திட்டங்களைத் தீட்டலாம். அல்லது, நம்முடைய பெயர் மற்றும் முகவரியில் ஒரு குற்றவாளி தனக்குத் தேவையான அலைபேசி எண் வாங்கவோ, வங்கிக் கணக்கு தொடங்கவோ முடியும்.

விளம்பர 'எஸ்.எம்.எஸ்’கள் அனுப்பும் ஏஜென்ஸிகளுக்கு, நம் பெயரும் அலைபேசி எண்களும் தரப்பட, அவர்களின் தொல்லை நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். 'வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் வேலை’ என்று வரும் ஒரு விளம்பர 'எஸ்.எம்.எஸ்’ஸை நம்பி அவர்கள் செல்லும் முகவரிக்குச் செல்லும் நபர்களிடம் 'முன் பணமா 1,000 கட்டுங்க’ என்று வசூலித்துக்கொண்டு, கம்பி நீட்டுவதில் தொடங்கி, நம் எண்ணுக்கு வரும் மோசடி 'எஸ்.எம்.எஸ்’கள் பல ரகம்.  



 பரிசு விழுந்திருக்கு!’
 
'உங்களுக்கு இலவசமாக 10 லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் கிடைத்திருக்கிறது’, 'உங்கள் அலைபேசி எண் 2,500 டாலர் பரிசுத் தொகையைப் பெற்றுள்ளது’, 'நான் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள். அதனால், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) மதிப்புள்ள எங்களது சொத்தை உடனடியாக வேறொருவர் வங்கிக் கணக்குக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால், அது யாருக்கும் கிடைக்காமல் போய்விடும். அதனால் உடனடியாக உங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றுகிறேன். இந்தப் பணத்தை வைத்து, பொதுச்சேவையாற்றலாம். இதற்கான சேவைக் கட்டணமாக 500 டாலர் (30 ஆயிரம் ரூபாய்) மட்டும் நீங்கள் அனுப்பி வைத்தால் போதும். வருகிற மொத்தப் பணத்தில் பாதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்றெல்லாம் ஆசையைத் தூண்டும் அழைப்புகளும், 'எஸ்.எம்.எஸ்’களும் இப்போது அதிகம் உலாவுகின்றன! இவற்றைஎல்லாம் புறக்கணியுங்கள். இல்லாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு எண் வரை கேட்டு வாங்கி, உங்களை மொட்டைஅடித்துவிடுவார்கள்.

தகவல் கொள்ளை!
நம் செல்போன்களில் உள்ள தகவல்களை நாம் அறியாமலேயே ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட 'ஸ்கேனர்’கள் இன்றைக்கு வந்துவிட்டன. 10 ஆயிரம் ரூபாய் விலையிலேயே இவை கிடைக்கின்றன. ஷாப்பிங் மால், திரையரங்கம், விழாக்கள் என மக்கள் கூடும் இடங்களில் சதிகாரர்கள் நம் அருகில் நின்று, அந்த ஸ்கேனர் மூலமாக நம் செல்போன்களில் உள்ள தகவல்களை ஸ்கேன் செய்துவிடுவார்கள். சிலர் அலைபேசியில் வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம் பின் நம்பர் முதற்கொண்டு சேமித்து வைத்திருப்பார்கள். இவையெல்லாம் சதிகாரர்களுக்கு கிடைத்தால்... அவர்களுக்கு கொண்டாட்டம்தானே! செல்போனில் இருக்கும் தகவல்கள், புகைப்படங்களைத் திருடி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். வங்கிக் கணக்கு தகவல்களை வைத்து, பணத்தைக் கொள்ளையடிப்பார்கள். எனவே, ஷாப்பிங் செல்லும்போது எடுத்துச் செல்லும் ஏ.டி.எம். கார்டுக்குரிய வங்கிக் கணக்கில் தேவையான அளவு பணத்தை மட்டுமே வைத்திருப்பதுதான் பாதுகாப்பு.

எந்தவொரு சதிகாரருக்கும் நிச்சயம் உதவி செய்யக்கூடிய மறைமுக சதிகாரர்கள் இருப்பார்கள். அப்படித்தான் நம் பண விவரங்கள் முதல் ஏ.டி.எம் பின் நம்பர் வரை குற்றவாளிகளின் கைக்குக் கிடைக்க, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பணியாளர்களே சமயங்களில் காரணமாகிறார்கள். ஒருவேளை அத்தகைய பணியாளரை வங்கி மேலதிகாரி கண்டுபிடித்துவிட்டாலும், அதிகபட்சமாக வேலையை விட்டு நீக்குவார்கள். ஏனென்றால், அவர் செய்த தவறு வெளியில் தெரிந்துவிட்டால், வங்கியின் பெயர் கெட்டுவிடும். வாடிக்கையாளர்கள் குறைந்துவிடுவார்கள் என்பதுதான். பணியாளரும் வேலை பறிபோனதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல், தன் சதிவேலையை வேறொரு வங்கியில் சென்று தொடர்வார்.

இதற்கெல்லாம் என்னதான் முடிவு?!

இதுபோன்று தொழில்நுட்பக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 99.9 சதவிகிதம் பேர் புகார் கொடுப்பதில்லை. அப்படியே புகார் கொடுக்கச் செல்லும் 0.1 சதவிகிதம் பேரின் புகார்களை அவ்வளவு சீக்கிரத்தில் காவல் நிலையங்களும் ஏற்பதில்லை. அப்படியே ஏற்றாலும் பெரும்பாலும் நடவடிக்கைகள் இருப்பதில்லை. காரணம், டெக் குற்றங்களை கண்டறிவதற்கான போதிய வசதிகள் இல்லாமை. இதுவே குற்றவாளிகள் தொடர்ந்து குற்றங்கள் செய்ய தூண்டுகோலாக இருக்கிறது.

பாடம் சொல்லும் குறும்படம்!
 
தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் ஏமாற்று வேலைகளை செய்யலாம் என்பதை சொல்லக்கூடிய குறும்படம், 'நான்காவது குற்றத் தருணம்’. ராபி இயக்கியுள்ள இப்படம், 14 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில் நண்பர்கள் இருவர் 'ஏ.டி.எம்’மில் இருந்து பணம் எடுத்து வெளியே வரும் நபரிடமிருந்து பறித்துக்கொண்டு ஓடுவதை தொழிலாக வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில், 'இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. எங்கயாவது ரூமுக்குள்ளயே உட்கார்ந்துட்டு திருடுற மாதிரி ஐடியா இருந்தா சொல்லு’ என்று ஒரு நண்பன் கேட்க, 'நான் ஒரு பொய்யான வெப்சைட் உருவாக்கியிருக்கேன். அதுல பல எம்.என்.சி கம்பெனிகளோட லோகோ டீடெய்ல்ஸ் எல்லாமே போட்டிருக்கேன். வேலை வேணும்னு இன்டர்நெட்ல தேடுறவங்க நம்ம பக்கத்துக்கு வர்ற மாதிரியும், ரிஜிஸ்டர் பண்றதுக்கு ஒருத்தருக்கு 200 ரூபாயும் நம்ம அக்கவுன்ட்ல கிரெடிட் ஆகுற மாதிரி புரோகிராம் பண்ணிருக்கேன்’ என்கிறான் மற்றொரு நண்பன். தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி எப்படிஎல்லாம் கொள்ளையடிக்கலாம் என்பதை எச்சரிக்கும்விதமாகச் சொல்லியிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்க... https://www.youtube.com/watch?v=R1dhNZGtF34 என்ற லிங்கை டைப் செய்யுங்கள்.

லக்கி டிரா... உஷார்!

மெயில் அனுப்பும்போது பிசிசி (bcc) என்கிற வகையில் அனுப்பினால், ஒருவரின் ஐ.டி மற்றவருக்குத் தெரியாது. டூ (to) மற்றும் சிசி (cc) மூலமாக அனுப்பினால், அனைவருக்கும் மற்றவர்களின் மெயில் ஐ.டி தெரிந்துவிடும். அதை அவர்கள் தங்களின் நட்பு வட்டத்துக்கு ஃபார்வர்டு செய்யும்போது, முகம் தெரியாத பலரின் பார்வைக்கும் அனைவரின் 'ஐ.டி’யும் சென்று சேரும். இது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்க வாய்ப்பு உண்டு.

அலைபேசியில் உள்ள 'ப்ளூ டூத்’ வசதியை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து, பின் மறக்காமல் 'ஆஃப்’ செய்துவிட வேண்டும். மறந்தால், அனைத்து விவரங்களும் மற்றவர்களின் அலைபேசிகளுக்கு தானாகவே செல்லக்கூடும்.

டெபிட்/கிரெடிட் கார்டு ஆகியவற்றின் பின்பக்கத்தில், அவற்றின் பின் நம்பரை எழுதாதீர்கள். பெட்ரோல் பங்க், கடைகள் என்று எங்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினாலும், கார்டை பணியாளரிடம் கொடுத்து, கையோடு திரும்பப் பெறுங்கள். ஏனெனில், டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடும் ஸ்கேனர்கள் நிறைவே இருக்கின்றன.  

தியேட்டர், மால்கள், திருவிழாக்கள் என்று பல இடங்களிலும் நின்று கொண்டு, 'லக்கி டிரா... உங்கள் மொபைல் எண், இ-மெயில் ஐ.டி மட்டும் சொல்லுங்கள்' என்று கேட்டு சிலர் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இதைச் செய்து கொண்டிருப்பார்கள். என்றாலும், நீங்கள் அவர்களிடம் கொடுத்த தகவல்கள், அடுத்தவருக்குச் செல்லாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


வலைதளத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கமுடியும் என்பது போலிகளுக்கு வசதியாக இருக்கிறது. 'வேலை வாங்கித் தருகிறோம்... கடன் தருகிறோம்... தொழில்கற்றுத் தருகிறோம்...’ என்று எப்படி வேண்டுமானாலும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடமுடியும். உஷார்... உஷார்.

ஒரு வங்கி அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் வலைதளம் போலவே போலியான வலைதளத்தை உருவாக்கி, நம்முடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை திருடும் 'ஃபிஷிங்’ வேலைகளும் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குள் நீங்கள் சென்றதுமே... முகவரி இருக்கும் பகுதியில் பூட்டு வடிவம் ஒன்று தோன்றுவதுடன், முகவரி மற்றும் அந்த பூட்டு இருக்கும் பகுதியின் பின்புலமானது பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். இதை வைத்தே, ஒரிஜினல் என்று உறுதி செய்யலாம்.

டூப்ளிகேட் ஏ.டி.எம் மெஷின் அறிவீர்களா?!

இன்றைக்கு சந்துபொந்துகளில்கூட ஏ.டி.எம் மெஷின்கள் உள்ளன. அதில் சில, நாம் கேள்விப்படாத வங்கியின் பெயரில் இருக்கும். அவற்றில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது கூடாது. காரணம், ஒருவேளை அது மோசடி ஏ.டி.எம் ஆகவும் இருக்கக் கூடும். அதில் நம் டெபிட் கார்டை செருகினால், பணம் வரும், அல்லது மெஷினில் பணம் இல்லை என்கிற தகவல் வரும். ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள், நம் கார்டை ஒருவித 'ஸ்கேனர்’ மூலம் சதிகாரர்கள் ஸ்கேன் செய்து, டூப்ளிகேட் கார்டு உருவாக்கிவிடுவார்கள்.

நம் அக்கவுன்டில் உள்ள பணம் அத்தனையும் கொள்ளையடிக்கப்படும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீரில் நடந்த ஒரு பெரும் நிகழ்ச்சியின்போது, இத்தகைய ஏ.டி.எம் அமைக்கப்பட்டு, கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தல் தொழில்நுட்பங்கள்!


iSTREAM

ஆட்டோமொபைல் உலகில் மாதம் தோறும் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பாதி, பெரும்பான்மை மக்களைச் சென்றடையாமல், அறிக்கைகளோடு காணாமல் போய் விடுகின்றன. ஆனால், இங்கே வெளியாகியுள்ள ஆறு தொழில்நுட்பங்களும் எதிர்காலத்தில் பரவலான பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று, 'கார்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையையே மாற்றக்கூடியவை.

உலகில் முதன்முதலாக ஹென்றி ஃபோர்டு, கார் தயாரிக்கும் அசெம்பிளி லைனைத் துவக்கியதில் இருந்து இன்று வரை 'கார்’ என்ற வாகனத்தைத் தயாரிக்கும் அடிப்படை முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இதை முற்றிலும் மாற்றியமைத்து, கார் தயாரிப்பு என்ற விஷயத்தை மிக எளிமையாக்கி இருக்கிறார் மெக்லாரன் F1 காரை உருவாக்கிய கார்டான் முரே. அவர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் பெயர் ஐ-ஸ்ட்ரீம் (iStream). இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்களைத் தயாரித்தால், வழக்கமான கார் தயாரிப்புக்குத் தேவைப்படும் தொழிற்சாலை வசதிகளில் 20 சதவிகிதம் போதும். மேலும், 'மெட்டல் ப்ரெஸ்’ எனப்படும் உலோகத் தகடை காருக்கு ஏற்ப மாற்றும் வேலைகள் இதில் தேவை இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எந்த ஒரு சிறு நிறுவனமும், சிறிய முதலீட்டில் கார் தயாரிப்பைத் தொடங்க முடியும்.ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தில் ஐ-பேனல்ஸ், ஐ-ஃப்ரேம் (iPanels, iFrame) என இரண்டு அம்சங்கள் உள்ளன. ஐ-பேனல்ஸ் என்பவை கண்ணாடி இழைகள் அல்லது இயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட காம்போசிட் (Composite). இவை மிகவும் ஸ்திரமான, அதிக எடையைத் தாங்கும் திறன்கொண்டவை. ஐ-ஃப்ரேம் என்பது லேசர் மூலம் வெட்டப்பட்ட, கம்ப்யூட்டர் வெல்டிங் செய்யப்பட்ட, மெல்லிய ஸ்டீல் குழாய்களால் ஆன ஸ்டீல் ஃப்ரேம்.

ஐ-பேனல்ஸும், ஐ-ஃப்ரேமும் தயாரானவுடன் இரண்டையும் இணைப்பது வெகு எளிது. இரண்டு நிமிடங்களுக்குள் ஐ-பேனலை ஃப்ரேமுடன் இணைத்து, பிரத்யேக பசையின் மூலம் ஒட்டிவிடலாம். இவை இரண்டும் ஒன்று சேர்ந்தவுடன் நமக்குக் கிடைப்பது மிகவும் திடமான, பாதுகாப்பான கட்டுமானம். 1,00,000 ஸ்திர சோதனைகளுக்குப் பின்பும் சேதமடையாமல் நிற்குமாம், இந்தக் கட்டுமானம்.ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய வசதி என்ன என்றால், ஒரு சேஸியை உருவாக்கிவிட்டு, அதன்மீது எந்தவிதமான பாடி அமைப்பையும் உருவாக்க முடியும். 4 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார், இடவசதி நிறைந்த டாக்ஸி, எடை சுமக்கும் பிக்-அப் டிரக் என இத்தனை வாகனங்களையும் ஒரே ஒரு அடிப்படைக் கட்டுமானத்தை வைத்தே தயாரிக்க முடியும். மேலும், பெட்ரோல், டீசல், ஹைபிரிட், எலெக்ட்ரிக் என எல்லா வகை வாகனங்களையும் இதில் தயாரிக்க முடியும். ஒரே தொழிற்சாலையில், ஒரே அசெம்பிளி லைனை மிகக் குறுகிய நேரத்தில் மாற்றியமைத்து, எந்த வகையான வாகனத்தை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களைச் சுதந்திரமாகச் சோதனை செய்யும் அமைப்பான EuroNCAP, 'கார்களுக்கு வகுத்துள்ள சட்ட திட்டங்களைப் பூர்த்தி செய்யும் பாதுகாப்பான கட்டுமானம் இது’ என உறுதி செய்யப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம், ஐ-ஸ்ட்ரீம் முறையில் ஏற்கனவே மோட்டிவ்.இ (Motiv.e) என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Free valve

'இன்ஜின்’ விஷயத்தில், கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் பாகம், கேம் ஷாஃப்ட். ஸ்வீடனைச்  சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான கோனிசே மற்றும் கார்ஜின் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, 'ஃப்ரீ வால்வு’ எனும் தொழில்நுட்பத்தை உருவாக்குகின்றன. இதில், சிலிண்டர்களுக்கு மேலே உள்ள கேம் ஷாஃப்ட்டுக்குப் பதில், நியூமாட்டிக் (Pneumatic -  அழுத்தப்பட்ட காற்றால் இயங்கும்) ஆக்சுவேட்டர்களைப் பொருத்திவிட்டார்கள். இதனால், ஒவ்வொரு சிலிண்டரையும் தனித்தனியாக இயக்க முடியும். தேவைப்பட்டால், இந்த இன்ஜினை குறைந்த ஆர்பிஎம்-ல் 2 ஸ்ட்ரோக்காகவும் இயங்க வைக்க முடியும். இப்போது பயன்பாட்டில் இருக்கும் இன்ஜின்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், 30 சதவிகிதம் அதிக சக்தியும், டார்க்கும் கிடைக்கும். மேலும், மைலேஜ் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கும். டைமிங் பெல்ட் போன்ற சர்வீஸ் சிக்கல்கள் இதில் இல்லை.

கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்

கூகுள் நிறுவனம், ஆட்டோமொபைல் உலகுக்கு சமீபத்தில் கொடுத்த ஷாக், 'செல்ஃப் டிரைவிங் கார்.’ இத்தனை நாட்களாக மற்ற நிறுவனத்தின் கார்களில் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வந்த கூகுள். திடீரென்று ஒரு புத்தம் புதிய காரையே அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஸ்டீயரிங் வீல், பெடல்கள் போன்றவை கிடையாது. இதன் டிஸைனையும் ஏற்கெனவே பிரபல கார் டிஸைனர்கள் விமர்சித்துவிட்டார்கள். கூகுளின் மற்ற செல்ஃப் டிரைவிங் கார்களில் இருந்தது போலவே LIDAR ஸ்கேனர் மேலே சுற்றிக்கொண்டிருக்கிறது. மேலும், காரில் அமர்ந்திருப்பவரின் செல்போனில் சிக்னல் இல்லையென்றால், இதனால் தொடர்ந்து இயங்க முடியாது. காரணம், செல்போன் நெட்வொர்க் மற்றும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்திக்கொள்கிறது இந்த கார். ஆனால், இந்த தானியங்கி காரால் விபத்து ஏற்பட்டாலோ, உயிரிழப்பு நிகழ்ந்தாலோ யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு, கூகுள் உட்பட யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=CqSDWoAhvLU இந்த லிங்க்கில் வீடியோவைக் காணலாம்.

ஆப்பிள் CarPlay

காருக்குள் செல்போன் பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, ஆப்பிள் நிறுவனம் 'கார்ப்ளே’ ( CarPlay) என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை சந்தைக்கே கொண்டுவந்துவிட்டது. கார்ப்ளே வசதி கொண்ட காரில், உங்களுடைய ஐபோனை இணைத்துவிட்டால் போதும்; காரின் டச் ஸ்க்ரீனிலேயே ஐபோனை முழுமையாக இயக்க முடியும். போன் செய்வது; குறுந்தகவல் அனுப்புவது; இசை கேட்பது; மேப்ஸில் தேடுவது என அனைத்து வேலைகளையும் இந்தத் திரைக்குள் கொண்டுவந்துவிட்டது ஆப்பிள் கார்ப்ளே. தற்போது ஃபெராரி, ஹோண்டா, ஹூண்டாய், மெர்சிடீஸ் பென்ஸ், வால்வோ  கார்களில் இந்த வசதி இருக்கின்றன. விரைவில் பிஎம்டபிள்யூ, செவர்லே, ஜாகுவார், லேண்ட்ரோவர், நிஸான், ஃபோர்டு, சுஸ¨கி, டொயோட்டா கார்களில் இந்த வசதி விரைவில் வரவிருக்கிறது. இதில் இருக்கும் லாபத்தை உணர்ந்துகொண்ட கூகுள், இப்பொது 'ஆட்டோலிங்க்’ என்ற தொழில்நுட்பத்தை வேகமாக உருவாக்கிவருகிறது.

லேசர் ஹெட்லைட்ஸ்

கடந்த மாதம் ஜெர்மனியில் எட்டு வாடிக்கையாளர்களுக்கு, லேசர் ஹெட்லைட்டுகள் கொண்ட i8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்தது பிஎம்டபிள்யூ. இதன் மூலம், கார்களில் லேசர் ஹெட் லைட்டுகளைப் பொருத்தி விற்பனை செய்த முதல் நிறுவனம் பிஎம்டபிள்யூ என்று பெயரெடுத்துள்ளது. லேசர் ஹெட்லைட்டுகளில் இருந்து வரும் ஒளி ஆபத்தான கதிர்கள் இல்லை. ஹெட்லைட் அசெம்பிளியின் பின்பக்கத்தில் இருந்து வரும் மூன்று நீல நிற லேசர் பீம்கள், கண்ணாடித் துண்டுகள் வழியாக மஞ்சள் பாஸ்ஃபரஸ் நிரப்பப்பட்டுள்ள லென்ஸின் மீது படுகிறது. அப்போது லென்ஸ், சக்திவாய்ந்த வெள்ளை நிற வெளிச்சத்தை உருவாக்குகிறது. அந்த வெளிச்சம் ஒரு ரிஃப்ளெக்டர் மீது பட்டு, அதன் வீரியம் குறைக்கப்பட்டு வெளியே செல்கிறது. இந்த லேசரினால் உருவாகும் வெளிச்சம், கண் பார்வைக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது என்கிறது பிஎம்டபிள்யூ. இந்த லேசர் விளக்கு, எல்இடி விளக்குகள் எடுத்துக்கொள்வதில் முக்கால் பங்கு சக்தியை மட்டுமே பயன்படுத்தி, அதைவிட 1,000 மடங்கு ஒளியைத் தருகிறது. ஏதேனும் விபத்து ஏற்பட்டு ஹெட்லைட்டுகள் சேதமானால், இது தானாகவே ஆஃப் ஆகிவிடும்.

ஆடி டிராஃபிக் லைட் அஸிஸ்ட் 

நாம் கார் ஓட்டும்போது, வரிசையாக சாலையில் உள்ள அனைத்து சிக்னல்களும் பச்சையிலேயே இருந்தால், எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் அல்லவா? இந்த எளிதான ஐடியாவை எடுத்துக் கொண்டு, ஆடி நிறுவனம் உருவாக்கி இருப்பதுதான் 'டிராஃபிக் லைட் அஸிஸ்ட் ரிகக்னிஷன்’ (Traffic Light Assist Recognition) எனும் தொழில்நுட்பம். இதை ஜெர்மனில் ஓடும் கார்களில் பரவலாகப் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 900 மில்லியன் லிட்டர் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஆடி. நமது கார் செல்லும் சாலையில் உள்ள சிக்னல்களின் டைமிங், காரின் நேவிகேஷன் சிஸ்டத்துக்கு வை-ஃபை மூலம் அனுப்பப்படுகிறது. பின்பு, அடுத்த சிக்னல் சிவப்பில் இருந்தாலும், அது சரியாக பச்சை விளக்குக்கு மாறும்போது கடக்க, எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டுமோ, அதை உங்களுக்குக் காட்டும். நாம் அதைக் கடைப்பிடித்தால், சிக்னல் பச்சையில் இருக்கும்போது கடந்துவிடலாம். கூடவே, சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால், பச்சைக்கு மாறுவதற்கு எத்தனை விநாடிகள் இருக்கின்றன என்பதையும் காட்டும். இதனுடன் காரின் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டமும் இணைந்து இயங்கும்போது, கணிசமான எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஆடி.

ராஜா





பதில் சொல்லுங்கள், மோடி!


''நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்''

-இப்படி ஓர் அறிவிப்பை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஒருசில நல்ல திட்டங்களில், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் ஒன்று. வளர்ச்சித் திட்டங்களுக்காக, தொழிற்சாலைகளுக்காக என்று விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, ஓரளவுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை இந்தச் சட்டம்தான் உறுதிப்படுத்தியிருக்கிறது. கிராமப்புறங்களில் சந்தை மதிப்பில் 4 மடங்கும், நகர்ப்புறத்தில் இருமடங்கும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

இத்தகையச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், நிலத்தைக் கையகப்படுத்தி கோடிகோடியாகச் சம்பாதிக்கத் திட்டமிடும் முதலாளிகள், இதை முடக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்கள். அதையெல்லாம் மீறி, விவசாயிகளின் வாக்குகளைக் குறிவைத்து, சட்டத்தை நிறைவேற்றியது காங்கிரஸ். விவசாயிகளின் வாக்குகளை மனதில் வைத்தே, தானும் ஆதரவை அள்ளி வழங்கியது அன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பி.ஜே.பி.

ஆனால், 'தற்போது மத்தியில் ஆட்சி மாறியவுடன், அந்த முதலாளிகள், மீண்டும் தங்களின் வேலையை ஆரம்பித்துள்ளனர். இதற்கு, பி.ஜே.பி-யும் துணைபோக ஆரம்பித்துவிட்டதோ’ என்கிற சந்தேகம், விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.

'விவசாயத்தை வாழ வைப்பது என் கடன்' என்றபடி அரியணை ஏறியிருக்கும் நரேந்திர மோடி, இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

மன்மோகன் சிங் ஆகிவிடாதீர்கள் மோடி!

நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முப்பது நாட்களைக் கடந்திருக்கிறது. ஒரு மாத காலம் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில், இந்த ஆட்சியின் செயல்திறனை சீர்தூக்கிப் பார்ப்பது நிச்சயமாகச் சரியான விஷயமாக இருக்காது.
 
எனினும், பொருளாதார ரீதியில் இந்த அரசாங்கத்தின் ஒன்றிரண்டு நடவடிக்கைகளை உற்று நோக்கும்போது, நம் நம்பிக்கை கொஞ்சம் தடுமாறவே செய்கிறது. சமீபத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்திய இந்த அரசாங்கம், பிற்பாடு புறநகர் ரயில் கட்டண உயர்வை  மட்டும் வாபஸ் பெற்றுக்கொண்டது. விரைவில் நடக்கப்போகும் மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஓட்டுபோடாமல் போய்விடுவார்களோ என்கிற பயத்தின் காரணமாகவே இப்படி செய்யப்பட்டுள்ளது.
 
அடுத்த முக்கியமான விஷயம், ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவேண்டியிருந்த இயற்கை எரிவாயுக்கான விலை உயர்வை இன்னும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து 15 டாலர் தந்து நாம் இயற்கை எரிவாயுவை வாங்க, உள்ளூர் நிறுவனங்களுக்கு 4.2 டாலர் மட்டுமே தருவோம் என்று சொன்னால், எந்த நிறுவனம் இங்கு எரிவாயுவை எடுக்கும் தொழிலை செய்யும்? எரிவாயுவின் விலையை உயர்த்தினால், அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சாதகமாகப் போய்விடுமோ என்று பயந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதனால் சில பொதுத் துறை நிறுவனங்களும் பாதிப்படையும் என்பதை அரசாங்கம் ஏன் யோசிக்கவில்லை?
 
 

நாட்டின் நன்மைக்காக கசப்பு மருந்தைக் குடித்தே ஆகவேண்டும்’ என்று சொன்னவர், இப்போது ஏன் கசப்பு மருந்தின் வீரியத்தைக் குறைக்கிறார்? முடங்கிப்போயிருக்கும் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் முடுக்கிவிடுவார் என்கிற எதிர்பார்ப்பில்தானே இத்தனை பெரிய பொறுப்பை மோடியிடம் தந்திருக்கிறார்கள் மக்கள்? ஓட்டு அரசியலை மனத்தில்கொண்டு செயல்பட்டதால்தான், காங்கிரஸ் அரசால், நாட்டின் வளர்ச்சிக்கு எந்த உருப்படியான திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் போனது. உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக இருந்தாலும், துரும்பைக்கூட தூக்கிப்போடமுடியாத அளவுக்கு திராணியில்லாமல் போனார் மன்மோகன் சிங். எதையுமே செய்யாமல் ஐந்து ஆண்டு காலத்தை ஓட்டிய மன்மோகன் சிங் போல, மோடியும் ஆகிவிடக் கூடாது. பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் வேகமெடுக்க வைக்கும் அறிவிப்புகளை வரவிருக்கும் பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் கட்டாயம் வெளியிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
 

Sunday, June 22, 2014

அருள்வாக்கு - யார் நல்ல வாய் உடையவர்?


முகம் என்பது முழு மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றேதான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. 

வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது ஸமஸ்கிருத வார்த்தை. மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண - இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்தியார்த்திகளும், தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிஹாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை முகம் இல்லாதவன் என்பானாம். அவன் இவனை வாய் இல்லாதவன் என்று திருப்புவானாம்.  

பரிஹாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. Good & humoured banter என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீன மாகக் கேலி பண்ணிக் கொள்வார்கள்.

முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் என்றால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது. அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு.  

21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தனுக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸு புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ரஸாள புஷ்பம் போடணும் என்று இருக்கிறது. ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். யார் லோகத்தை முதலில் சுற்றிக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு என்று நாரதர்\ கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக்கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

உலகக் கோப்பை கால்பந்து


வழக்கமாய் உலகக் கோப்பையின் முதல் வாரம் சோம்பல் முறிக்கும் வாரமாய் அமையும். கிரிக்கெட் போலன்றி, கால்பந்தாட்டக்காரர்கள் நாட்டுக்கு விளையாடுவதை விட, அவரவர் கிளப்புக்கு விளையாடுவதே அதிகம். ஒரு அணியில் இருப்பவர்கள் சேர்ந்து ஆடியதை விட, ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடியதே அதிகமாக இருக்கும். 

இந்த உலகக் கோப்பையில் கோல்களின் எண்ணிக்கை முதல் ரவுண்டிலேயே கணிசமான அளவில் உள்ளது. முதல் 14 ஆட்டங்களில் 13 ஆட்டங்கள் டிராவின்றி அமைந்துள்ளன. அதிலும் பெரிய அணிகள் மோதும்போது கோல் மாரி பொழிந்ததென்றே சொல்லலாம். முதல் ஆட்டம் பிரேசிலுக்கும் க்ரோயேஷியாவுக்கும் இடையில் நடந்தது.

இவ்வாண்டு சாம்பியன்ஷிப்பை வெல்லக் கூடிய வாய்ப்பு பிரேசிலுக்கு அதிகமுள்ளதாகக் கருதப்பட்ட நிலையில் அந்த அணியின் ஆட்டம் அத்தனை சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக உலகின் தலைசிறந்த தற்காப்பு வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், பல நேரங்களில் எதிர் அணியின் தாக்குதலை பிரேசில் ஆட்டக்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தின் முதல் கோல், ரியல் மாட்ரிடின் லெஃப்ட் பேக் (Left back) மார்செலோவின் செல்ஃப் கோலாக அமைந்தது. அதிர்ஷ்டமும், ரெஃப்ரீயின் கருணையும், நெமார் மற்றும் ஆஸ்கரின் சிறப்பான ஆட்டமுமே கடைசியில் பிரேசிலை கரை சேர்த்தன.சென்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய நெதர்லாந்துடன் இம்முறை முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் மோதியது. ஸ்பெயினின் வழக்கமான Possession game முதல் அரை மணி நேரத்துக்கு ஆட்டத்தை அதன் கட்டுக்குள் வைத்திருந்தது. பெனல்டி ஏரியாவில் கோஸ்டாவை நெதர்லாந்து வீரர் தடுக்கிவிட, சாபி அலோன்ஸோ (Xabi Alonso) 1-0 என்று ஸ்பெயினை முன்னிலைப்படுத்தினார்.ஆட்டத்தின் முதல் பகுதியின் முடிவில் டாலி ப்ளைண்டின் கிராஸை, ஒரு துல்லியமான டைவின் மூலம் தலையால் கோல்கீப்பரின் தலைக்கு மேல் பந்தை செலுத்தி வான் பெர்ஸி ஆட்டத்தை சமன் செய்தபோது ஆட்டம் திசை திரும்பியது. அந்த கோலின் தருணமும், செயலாக்கப்பட்ட விதமும் நெதர்லாந்தை தட்டி எழுப்பின.ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் முதலில் இருந்தே அதிரடியாய் நெதர்லாந்து தொடங்கி, ஸ்பெயினை திக்குமுக்காடச் செய்தது. ரோபனும், வான் பெர்சியும் தலா இரண்டு கோல் அடித்தனர். 

சென்ற உலகக் கோப்பை முழுவதும், கோல்கீப் பர் கஸியாசை தாண்டி ஐந்து கோல்களே சென்றன. இந்த முறை முதல் ஆட்டத்திலேயே ஐந்து கோல்களைப் பறிகொடுத்து பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமே. ஸ்பெயின் இருக்கும் பிரிவில் இன்னொரு அணியான சிலேவின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, ஸ்பெயின் அடுத்த இரு ஆட்டங்களில் வென்றாலன்றி இரண்டாவது சுற்றுக்குச் செல்வதே சிரமம்தான்.

சென்ற முறை அரை இறுதிவரை சென்ற உருகுவேயின் நிலைமையும் ஸ்பெயினைப் போலத்தான். ஃபோர்லான், கவானி போன்ற நட்சத்திரங்கள் இருக்கும் உருகுவேயின் முதல் ஆட்டத்தில் சௌரேஸ் ஆடாதது பலவீனமாய் அமைந்தது. முதல் கோலை உருகுவே அடித்தபோதும், அடுத்தடுத்து மூன்று கோல்கள் பதற்றமின்றி அடித்து கோஸ்டாரிகா வென்றது. இந்தப் பிரிவின் மற்ற இரு அணிகளான இங்கிலாந்தும், இத்தாலியும் மோதிய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நிறைய அனுபவம் உள்ள பிர்லோவின் டம்மி (அடிப்பது போல் ஏமாற்றி பந்தை தன் அணியின் வேறொருவருக்கு அனுப்பி வைப்பது) மூலம் இத்தாலி முன்னிலை பெற்றது. இங்கிலாந்து ஸ்டரிட்ஜின்கோல் மூலம் சமன் செய்தாலும், வென் ரூனி கிடைத்த நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டார். மரியோ பாலோடெல்லியின் ஹெட்டர், ஆட்டத்தை இத்தாலிக்கு வென்று கொடுத்தது. இந்தப் பிரிவில் இனிவரும் ஆட்டங்கள் பல வாழ்வா சாவா வகை என்பதால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமையும்.உலகெங்கிலும், குறிப்பாக இந்தியர்களிடையிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கும் அர்ஜென்டினாவின் தொடக்கமும் எதிர்பார்த்த அளவு அமையவில்லை. தலைசிறந்த ஸ்டிரைக்கர்கள் கொண்ட அணி வழக்கமான 4-3-3 ஃபார்மேஷனாக இல்லாது 5-3-2 ஃபார்மேஷனில் போஸ்னியாவை எதிர்த்துக் களமிறங்கியது. கோல் அடிப்பதற்கான பளு மெஸ்ஸியின் மேல் அதிகமாய் இருக்க, அவர் ஆட்டம் சொபிக்கவில்லை. இரண்டாம் பகுதியில் ஹிகுவென் நுழைந்து 4-3-3 ஃபார்மேஷனாக ஆனதும்தான் பழைய மெஸ்ஸி தென்படத் தொடங்கினார். அவருடைய டிரேட்மார்க் நகர்த்தல் மூலம் தன் முதல் கோலை அடித்து ஆட்டத்தை அர்ஜென்டினா வெல்ல உதவினார். இரண்டாம் சுற்றுக்கு அர்ஜென்டினா நிச்சயம் தகுதி பெற்றுவிடும் என்றபோதும், இவ்வகையில் ஆடினால் சாம்பியனாவது கடினம். விரைவில் அணியின் வலிமைக்கேற்ற சூழல்களை அவர்கள் வகுத்துக் கொள்ளுதல் அவசியம்.முதல் ரவுண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய ஆட்டம் ஜெர்மனிக்கும் போர்ச்சுகலுக்கும் இடையே நடைபெற்றது. நட்சத்திர ஆட்டக்காரர்களை நம்பாமல் சேர்ந்து ஆடுவதில் கவனம் செலுத்தும் ஜெர்மனி ஒருபுறம், ஒற்றை ஆளா ஆட்டத்தைத் திருப்பிப் போடும் கிரிஸ்டியானோ ரொனால்டு, அவ ருக்கு உதவியாய் இருக்க மற்ற ஆட்டக்காரர்கள் என்று வியூகம் அமைத்துக் கொள்ளும் போர்ச்சுகல் மறுபுறம்.

ஷ்வான்ஸ்டைகர், பொடோல்ஸ்கி போன்ற ஆட்டக்காரர்கள் இல்லாமல் களமிறங்கினாலும் கூட ஜெர்மன் அணியின் வலு கணிசமானதாகத் தோன்றியது. போட்டிக்கு முன் ஏற்பட்ட காயம் முழுவதாகக் குணமாகிவிட்டதாக ரொனால்டோ கூறினாலும் அவர் ஆட்டத்தைப் பார்க்கும்போது அந்தக் கூற்றின் நம்பகத்தன்மை குறைகிறது. ஜெர்மனியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் மூலம் எழுந்த அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் பாதியிலேயே மூன்று கோல்களைக் கொடுத்துத் தவித்தது போர்ச்சுகல். போதாக்குறைக்கு தேவையே இல்லாமல் ரியல் மாட்ரிடுக்கு ஆடும் பெப்பே சண்டையில் இறங்கி ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். போன உலகக் கோப்பையில் ஐந்து கோல்கள் அடித்து கோல்டன் பூட் வென்ற தாமஸ் மூல்லர் இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் அடித்து இவ்வாண்டும் பட்டத்தை வெல்லும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளார்.