Search This Blog

Sunday, July 13, 2014

உலகக் கோப்பை கால்பந்து

 
கால்பந்து உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டிகள் முடிந்துவிட்டன. இரண்டு ஐரோப்பிய அணிகளும், இரு தென்அமெரிக்க அணிகளும் அரை இறுதிக்குத் தேர்வாகியுள்ளன. 2002-ல் தென் கொரியா, 2006-ல் போர்ச்சுகல், 2010-ல் உருகுவே என்று எதிர்பாரா அணிகள் அரை இறுதிக்குத் தேர்வாகின. இந்த முறை அப்படி ஒரு அணி தேர்வாகாததே எதிர்பாராத நிகழ்வாக அமைந்துள்ளது.
 
முதல் ஆட்டத்தில் ஜெர்மனியும் பிரேசிலும் மோதுகின்றன. உலகக் கோப்பையில் ஜெர்மனியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், நாட்பட நாட்பட அந்த அணியின் ஆட்டத்தில் தொய்வு தென்படுகிறது. கோல்கீப்பர் நோயரும் (Neuer) தற்காப்பு ஆட்டக்காரர்களும் சிறப்பாக ஆடினாலும், மிட்ஃபீல்டில் ஆட்டம் களையிழந்து கோல் அடிக்கத் தேவையான போதுமான களங்களை உருவாக்க சிரமப்படுகிறது.  காலிறுதியில் ஜெர்மனி வெல்ல அந்த அணியின் முனைப்பைவிட எதிர்த்து ஆடிய பிரஞ்சு அணியின் முனைப்பின்மையே முக்கிய காரணம். 2002-ல் தொடங்கி தொடர்ந்து நான்காவது முறையா அரை இறுதிக்குத் தேர்வாகியிருக்கும் ஜெர்மனியில்லாம், க்ளோசா, முல்லர் போன்ற மிகச்சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். கிளப் ஆட்டங்களின் பல உச்சங்களைத் தொட்டவர்கள். எனினும், உலகக் கோப்பை அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. 1990-ல் கோப்பை வென்ற ஜெர்மனியின் 24 வருட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர இதைவிட சிறந்த அணி தேருவது கடினம்.
 
இதை எழுதும் வேளையில் (8 ஜூலை) பிரேசில் சொந்த மண்ணில் களமிறங்குகிறது. காலிறுதியில் அணியின் ஆட்டம் தொடக்க ஆட்டங்களைவிட சீராகவும் ஒருங்கிணைப்போடும் காணப்பட்டது. அணியின் கேப்டன் தியாகோ சில்வாவின் கோலும், டேவிட் லூயியின் அற்புத ஃப்ரீகிக்கும் அரையிறுதியில் இடம்பிடித்துக் கொடுத்ததை எண்ணி நியாயமாய் ரசிகர்கள் களிப்பில் கூத்தாட வேண்டும். ஆனால் நாடு முழுவதும் சோகம் தாண்டவமாடுகிறது. அணியின் நட்சத்திரம் நெய்மார் காலிறுதியின் கடைசி கணங்களில் கொலம்பிய வீரரால் வீழ்த்தப்பட்டு உலகக் கோப்பையில் இனி பங்கெடுக்க முடியாத நிலையில் உள்ளார். தியாகோ சில்வா காலிறுதியில் பெற்ற மஞ்சள் அட்டை அவரை அரையிறுதியில் நீங்கச் செய்துவிட்டது. இது பிரேசிலுக்குப் பேரிடி தான். என்றாலும், பிரேசில் அணியில் திறமைக்கு குறைவில்லை. சொந்த மண்ணில் ஆடுவது என்பது இருமுனைக் கத்தி. அதன் சாதகங்களை மட்டும் பயன்படுத்தி, அது கொடுக்கும் அழுத்தங்களுக்கு ஆட்படாமலிருப்பின் பிரேசில் நிச்சயம் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிவரை செல்லக்கூடும்.
 
இரண்டாவது ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன. இதுவரை அர்ஜென்டினா பெரிய அழுத்தத்தைச் சந்திக்கவில்லை. எதிர்த்த அணியைத் தரைமட்டம் ஆக்காவிட்டாலும், வெற்றிக்குக் குறைந்தபட்சத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்தே அரை இறுதிவரை முன்னேறியுள்ளது.  உலகின் சிறந்த வீரர் என்ற பட்டத்தை நான்கு முறை வென்றிருக்கும் மெஸ்ஸி அணியின் துருப்புச்சீட்டு. அவர் கோல் அடித்தாலும் அடிக்காவிட்டாலும், மூன்று நான்கு எதிரணி வீரர்களைத் தம்பக்கம் இழுத்துக் கொள்வதன் மூலம், எதிரணியின் கோட்டைகளை வலுவிழக்கச் செய்துவிடுகிறார். அணியின் முக்கிய வீரர் அகுவேரோ காயத்திலிருந்து மீண்டு அணிக்கு வரும் வேளையில், வலது சிறகிலிருந்து துல்லியமாய் எதிரணியைத் துளைத்த ஏஞ்சல் டிமரியாவின் காயம் அர்ஜென்டினாவுக்குப் பின்னடைவுதான். 
 
முதல் சில ஆட்டங்களில், இருக்கும் இடம் தெரியாமல் ஆடிய ஹிகுவென், காலிறுதியில் விழித்துக் கொண்டுள்ளார். மெஸ்ஸி, அகுவேரோ, ஹிகுவென் கூட்டணியை Best ever forward அணி எனலாம். தற்காப்பில் கோட்டைவிடாமல் இருந்தால் அர்ஜென்டினாவின் வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது.சென்ற முறை இறுதிப் போட்டிவரை வந்த நெதர்லாந்து இந்த முறை இன்னொரு படியேறி கோப்பையை வெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. முதல் சில ஆட்டங்களில் ரோபன், வான் பெர்ஸி, ஸ்னைடர் தொடர்ந்து வேகமான நகர்த்தல்களால் எதிரணியைத் திக்குமுக்காடச் செய்தனர். நாக் அவுட் ஆட்டங்களில் அணியின் அணுகுமுறை சற்றே வேறுபட்டுள்ளது. தற்காப்புக்கு முக்கியத்துவம் அதிகமாகியுள்ளது. காலிறுதியில் சிறிய அணியான கொஸ்டரிகாவிடம் கோலடிக்க முடியாமல் நெதர்லாந்து தவித்தது. இதை மோசமான கனவு என்று கடந்து போக வேண்டுமா, அல்லது அணியின் தற்போதைய நிலை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று காலம்தான் கூற முடியும். 120 நிமிட ஆட்டத்தின் முடிவில், கோல்கீப்பரை அணியின் நடத்துநர் வான்கால் மாற்றினார். அணி பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றிவிட்டதால் அது கால்பந்தாட்ட வரலாற்றின் மிகச் சிறந்த மாற்றமாகக் கொண்டாடப்படுகிறது. ஒருவேளை டிம் குரூல் தடுக்காமல் போயிருந்தால்? வேறென்ன? வான்கால் வில்லனாக்கப்பட்டிருப்பார்.ஒருவேளை அர்ஜென்டினாவும் பிரேசிலும் வெற்றி அடைந்தால் ஃபைனல் நடக்க வேண்டுமே என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்ள வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டை விட ஆயிரம் மடங்கு அழுத்தங்கள் நிறைந்தது அர்ஜென்டினா - பிரேஸில் ஆட்டம். இரு அணிகளும் இடம் பெறாத ஆட்டங்களிலேயே இரு நாட்டு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் சீண்டி வருகின்றனர். நெய்மாரின் காயத்தை பொம்மை முதுகெலும்பை சுமந்தபடி அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கால்பந்தின் நீண்ட வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்களில் சுமூகமாய் நடந்து முடிந்தவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம்.இவ்விரு அணிகள் இறுதியாட்டத்தில் மோதினால் யார் ஜெயிப்பார்கள்? முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்புறம் சித்தப்பாவுக்குப் பெயர் வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment