Search This Blog

Friday, July 04, 2014

நடால் ஃபெடரர் வெல்லப் போவது யார்?

 
விம்பிள்டன் ஆட்டங்கள் இந்த வாரம் தொடங்குகின்றன. விம்பிள்டனை முதல் வாரத்தில் யாரும் ஜெயிக்க முடியாது. ஆனால் நிச்சயம் இழக்க முடியும்" என்றொரு கூற்று உண்டு. ஃபெடரர், நடால் போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள்கூட கடந்த சில ஆண்டுகளில் முதல் வாரத்திலேயே தோற்றிருக்கின்றனர். இருப்பினும் இவை எல்லாம் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் தருணங்கள். எதிர்பார்ப்பு என்னவோ, தர வரிசையில் முதல் நான்கு இடங்களில் இருப்பவர்கள் அரையிறுதி வரை செல்வார்கள் என்றுதான். ஏழுமுறை விம்பிள்டனை வென்றிருக்கும் ஃபெடரரின் ஒவ்வொரு அசைவும் கூர்ந்து கவனிக்கப்படும்.
 
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஃபெடரரின் ஆட்டத்தில் அவர் உள்ளத்துணிவு வெளிப்படுகிறது. அவருடைய பேக்ஹாண்டின் பழைய துல்லியம் மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளது. கால்களின் வேகக் குறைவை, அவரது சர்வீஸும், வாலிகளும் சமன்படுத்துமாய் என்று பார்க்க வேண்டும். ஃபெடரர் இன்னொரு கிராண்ட்ஸ்லாம் ஜெயித்தால் அது விம்பிள்டனாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.
 
நடால் இருமுறை விம்பிள்டனில் வென்றிருந்தாலும், அவரை அதிகம் சோதிக்கும் களம் இதுதான். களிமண் தளங்களின் மன்னன் என்றாலும் புல் தரையில் வென்றதைவிட சறுக்கிய கணங்களே அதிகம். முதல் ரவுண்டிலேயே போன வருடம் வெளியேற்றப்பட்ட நடால் இந்த ஆண்டு முன்னேறக் கூடும் - அவர் ஆட்டமும் உடலும் இடம் கொடுத்தால்.
 
நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரேயின் ஆட்டம் விம்பிள்டன் வெற்றிக்குப் பின் சரிந்துள்ளது. காயங்கள், கோச் லெண்டிலுடன் முறிவு என்று பல சறுக்கல்கள். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மொரிஸ்மோவை கோச்சாக நியமித்து அவர் ஆடப் போகும் முதல் ஆட்டத் தொடர் இது.  

கடந்த சில ஆண்டுகளில் Mr. Consistent என்றால் அது ஜோகோவிச்தான். பட்டம் வெல்லாத ஆட்டத் தொடர்களில்கூட முதல் சில சுற்றுகளில் வெளியேறாமல், அரையிறுதி வரையிலாவது தகுதி பெற்றிருக்கிறார் ஜோகோவிச். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் ஃபேவரிட்டாக ஜோகோவிச் களமிறங்குகிறார்.
 
இவற்றுக்கிடையில் உலகின் ஏதோ ஒரு மூலையில் இந்தியாவும் பங்களாதேஷும் கிரிக்கெட் என்றொரு ஆட்டத்தை ஆடினார்களாம். தொடரை யார் வென்றார்கள் என்று உலகக் கோப்பையும் விம்பிள்டனும் முடிந்தவுடன் விசாரித்துப் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment