சதுரங்க உலகில் சென்ற வாரம் பெரும் சலசலப்பிருந்தது. இந்த ஆண்டின்
கடைசியில் உலக சாம்பியன்ஷிப் போட்டி கார்ல்ஸனுக்கும் ஆனந்துக்கும் இடையில்
நடைபெறுவதில்
பல மாதங்கள் இழுபறியாகிக் கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்தான்
ரஷ்யாவில் இவ்வாண்டு பனிக்கால ஒலிம்பிக்ஸ் நடந்த சோச்சியில் இப்போட்டி
நடைபெற உள்ளதாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஆனந்தும் கார்ல்ஸனும் இந்த வாரம்
உலக ராபிட் செஸ் போட்டியில் மோதினர். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்
அநேகமாய் இருவரும் மோதிக் கொள்ளும் ஒரே ஆட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்ற
நிலையில், ரசிகர்கள் பரபரப்புடன் இவ்வாட்டத்தைக் கண்டுகளித்தனர்.
வெள்ளைக் காய்களுடன் கார்ல்ஸன் தொடங்கிய ஆட்டத்தை, ‘மெதுவாக டிராவை
நோக்கிச் சென்ற ஆட்டம்’ என்று ஆனந்தே குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில்
ஆனந்தின் வலுவான யானையை (Rook), கார்ல்ஸனின் குதிரையும் பிஷப்பும்
கட்டுக்குள் வைத்திருந்தன. அப்போது கார்ல்ஸன் செய்த தவறான நகர்த்தல்
ஆனந்துக்கு
சாதகமாய் அமைந்தது. ஒன்றன்பின் ஒன்றாகப் பல துல்லியமான நகர்த்தல்கள்
ஆனந்திடமிருந்து வெளிப்பட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.
இவ்விருவருக்குமான ஆட்டத்தில் ஆனந்த் வென்றாலும், ராபிட் மற்றும் ப்ளிட்ஸ்
எனப்படும் அதிவேக ஆட்டத்தொடர் இரண்டையும் கார்ல்ஸனே வென்றார். இதன் மூலம்,
கிளாசிகல், ராபிட், ப்ளிட்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் கோலோச்சும் உலக
சாம்பியனாகவும்
விளங்குகிறார்.
இந்த ஒரு ஆட்டத்தையோ, இந்தத் தொடரையோ வைத்து இந்த ஆண்டின் கடைசியில்
நடக்கவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் யார் வெல்வார்கள் என்று
சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம்
சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியைப் போல அல்லாமல் ஆனந்தின் ஆட்டம் வேறுபட்டதா,
தோல்வியைத் தவிர்க்கும் தற்காப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்
இருக்கும் என்று நம்பலாம்.
கார்ல்ஸன் மீண்டும் வெல்லக்கூடும் என்றாலும் சாம்பியன் என்கிற பளு ஏதும்
இல்லாத ஆனந்தின் ஆட்டம் இம்முறை எந்த மனத்தடையும் இன்றி அமையும் என்றும்
எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment