உலகில், விதவிதமான சுவர்கள் இருப்பது போல இணையத்திலும்
சுவர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த இணையச் சுவரை நீங்களே
உருவாக்கலாம்.
பேட்லெட் (padlet.com) என்ற இணையதளம்தான் இந்த வாய்ப்பை
உங்களுக்கு வழங்குகிறது. (வால்விஷர் எனும் பெயரில் அறிமுகமாகி, பின்னர்
பேட்லெட் எனப் பெயர் மாறியுள்ளது.) இரண்டு நிமிடங்களில் நூடுல்ஸ் தயார்
செய்துவிடலாம் என்பது போல, இந்தத் தளத்தில் மிகச் சுலபமாக இணையச் சுவரை
உருவாக்கலாம்.
இதற்காக, தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள
அறிவிப்புப் பகுதியில் க்ளிக் செய்தால், ஓர் இணையப் பக்கம் தோன்றும்.
அதுதான் உங்களுக்கான இணையச் சுவர். இப்படி உருவாக்கும் இந்த இணையச் சுவரால்
என்ன பயன்?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, இந்த இணையச் சுவரில் ஏதாவது ஓர்
இடத்தில் இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள். சின்னதாக ஒரு கட்டம் தோன்றும்.
அந்தக் கட்டத்தின் மேல் பகுதியிலும் நீங்கள் டைப் செய்யலாம். கட்டத்தின்
நடுவிலும் டைப் செய்யலாம். மேல் பகுதியில் உங்கள் பெயர் அல்லது தலைப்பைக்
கொடுக்கலாம். கீழ்ப் பகுதியில் நீங்கள் விரும்பும் வரிகளை டைப் செய்யலாம்.
இன்னும் இரண்டு அற்புதங்களும் உள்ளன. அந்தக் கட்டத்திலேயே அடிப்பகுதியில்
பார்த்தால், சின்னச் சின்னதாக மூன்று ஐகான்கள் இருக்கும். சங்கிலி போன்ற
முதல் ஐகான் புகைப்படம் அல்லது வீடியோ இணைப்புகளுக்கானது. இதை க்ளிக்
செய்தால், நீங்கள் உருவாக்கிய கட்டம் அல்லது பெட்டியில் உங்களுக்குத்
தேவையான புகைப்படம் அல்லது வீடியோவை இணைக்கலாம். இணையதள முகவரியையும்
இணைக்க முடியும். அதேபோல, இந்தக் கட்டத்தை முடித்ததும், இணையச் சுவரில்
வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் க்ளிக் செய்து, இன்னொரு கட்டத்தை
உருவாக்கலாம். இந்தக் கட்டத்திலும் அதேபோல டைப் செய்யலாம். படங்களைச்
சேர்க்கலாம். இப்படி எத்தனை கட்டங்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
அது மட்டுமா? இந்தக் கட்டங்களுக்கான பின்னணி
வண்ணங்களைகூட விருப்பம் போல தேர்வுசெய்யலாம். பின்னணியை சித்திரங்களாகவும்
மாற்றிக்கொள்ளலாம்.
இந்தத் தளத்திலேயே கேலரி எனும் பகுதி இருக்கிறது. அதில்
இந்த வசதியை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை அழகான உதாரணத்துடன்
அறியலாம். வீட்டுப் பாடத்துக்கோ, வகுப்பில் கொடுக்கப்பட்ட செயல்பாடுகளுக்கோ
இதைப் பயன்படுத்தலாம். உங்கள் நண்பனுக்கு பிறந்த நாளா? வாழ்த்துச் சொல்ல
இந்த சுவரைப் பயன்படுத்தலாம். காலாண்டுத் தேர்வுக்கு எப்படிப் படிப்பது
என்று திட்டமிடலாம். நீங்கள் பார்த்து ரசித்த பயனுள்ள இணையதளங்கள் பற்றிய
விவரங்களைக் குறித்துவைக்கலாம். இப்படிப் பலவிதங்களில் இந்தச் சுவர்
பயன்படும்.
வீட்டுப் பாடம் என்றால், இந்தச் சுவரில் நீங்கள் படித்த
பாடத்தின் முக்கிய அம்சங்களைத் தனித்தனியே குறிப்பிட்டு, அதன் கீழ்
ஒவ்வொரு அம்சத்துக்கான குறிப்புகளையும் இடம் பெறச்செய்யலாம். நோட்டில்
எழுதி பார்ப்பதைவிட இது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அழகாக மனத்திலும்
பதியும்.
பிறந்த நாள் வாழ்த்து என்றால், நண்பரின் பெயரை மேலே
குறிப்பிட்டு, அதன் கீழ் உங்கள் வாழ்த்தைக் குறிப்பிட்டு, மற்ற நண்பர்களின்
வாழ்த்துகளையும் இடம் பெறவைக்கலாம்.
இந்த இணையச் சுவரை உருவாக்கிய பின், அதை மற்றவர்களோடு
பகிர்ந்துகொள்ளலாம். நண்பர்கள் கூட்டாக சேர்ந்து செயல்பட இது மிகவும்
உதவியாக இருக்கும். உதாரணத்துக்கு, இதன் மூலமே விநாடி வினா நடத்தலாம்.
வரிசையாகக் கேள்விகள் கேட்டு, அதற்கு நண்பர்களை பதில் அளிக்கவைக்கலாம். இதே
வசதியை ஒரு தலைப்புத் தொடர்பாக சக மாணவர்களின் கருத்துக்களை திரட்டவும்
பயன்படுத்தலாம்.
உங்கள் பள்ளி ஆசிரியர்கூட இதுபோன்ற சுவரை உருவாக்கி,
மாணவர்களை பங்கெடுக்கவைத்து, பாடத்தை மேலும் அழகாகப் புரிய வைக்கலாம்.
நீங்கள் உருவாக்கிய இணையச் சுவரை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம்,
மாற்றி அமைக்கலாம்.
உறுப்பினராகப் பதிவுசெய்துகொள்ளாமலே இணைய சுவரை
உருவாக்கலாம் என்றாலும், உறுப்பினரானால் உங்கள் இணையச் சுவரை
சேமித்துவைத்துக்கொள்ளலாம். இ-மெயில் அல்லது ஃபேஸ்புக் மூலம் இந்தச் சுவரை
மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் வலைப்பதிவு வைத்திருந்தால்,
அதில் இந்தச் சுவரை உள்ளீடு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment