Search This Blog

Monday, October 04, 2010

ஒரு வீடு ஒரு கோவில் ஒரு வள்ளல் - ஒ பக்கங்கள்

முதல்வர் கலைஞர் கருணாநிதி கோபாலபுரத்தில் தான் வசித்து வரும் வீட்டைத் தன் காலத்துக்கும் தன் மனைவி தயாளு அம்மாள் காலத்துக்கும் பிறகு பொது மருத்துவமனையாக  ஆக்குவதற்கு நன்கொடையாக   அளித்ததை உலக மகா தர்மமாக அவர் கட்சியினரும் துதிபாடிகளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ அவர் இப்போதே வீட்டைக் கொடுத்துவிட்டு நடுத்தெருவில் நின்றபடி இனி எந்த வீட்டில் போய் வாழ்வது என்ற நிலை ஏற்பட்டுவிட்ட தியாகத்தை செய்திருப்பது போல சித்திரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோபாலபுரம் வீட்டை  தானமாகத் தருவதாக கருணாநிதி அறிவித்தபோது, அந்த றிக்கையில் ஒரு தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த வீட்டை அவர் 1968லேயே தன் மகன்கள் அழகிரி, ஸ்டாலின் முதலானோருக்கு செட்டில் செய்துவிட்டதாகவும் இப்போது தானமாகத் தருவதற்கு அவர்கள் மனமுவந்து சம்மதம் தந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆச்சரியமாக இருந்தது. 1968ல் கருணாநிதிக்கு வயது 44தான். சொத்தை மகன்களுக்கு  செட்டில் செய்யவேண்டிய முதுமையான வயது அல்ல. அதுவும் கோபாலபுரம் வீடு அவர் சம்பாதித்து வாங்கிய முதல் வீடு. ஏன் அப்போதே மகன்களுக்குக் கொடுத்தார் என்று யோசித்தால், அந்த வருடம்தான் துணைவியின் மூலம் வாரிசாகக் கனிமொழி பிறந்தார் என்ற தகவல் தெரியவந்தது.
எது எப்படியோ இப்போது அந்த வீட்டை தானமாகக் கொடுப்பதால் கருணாநிதியின் குடும்பங்களுக்கு எந்த பேரிழப்பும் இல்லை. அரசியலில்  கடுமையாக உழைத்து சம்பாதித்து  பேரன் பேத்திகள் வரை எல்லாருக்கும் தனித்தனியே சொந்த வீடுகள் வாங்கும் வசதிகள் வந்தாயிற்று.
ஒரு வீட்டை தானமாகக் கொடுத்ததற்கு கூரை மீது ஏறி நின்று கூவுகிற விசித்திரத்தைப் பார்க்கும்போது, அந்த கோபாலபுரம் வீட்டுக்கு விஜயம் செய்த பிரபலங்களில் ஒருவரின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
அவர் பெயர் பில் கேட்ஸ்.
உலகத்தில் ஏற்பட்ட கணிணிப் புரட்சியில் பெரும் உந்து சக்தியாக இருந்த மைக்ரோசாஃப்ட்  நிறுவனத்தை உருவாக்கிய அதே பில் கேட்ஸ்தான். இன்று உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்களின் முதல் வரிசைப் பட்டியலில் இருப்பவர் பில் கேட்ஸ்.
பில் கேட்ஸை சந்தித்தபோது என்ன பேசினீர்கள் என்று நிருபர்கள் கருணாநிதியைக் கேட்டார்கள். அவரோடு சேர்ந்து வியாபாரம் செய்வதைப் பற்றிப் பேசினேன் என்றுநகைச்சுவையாக’ (!) பதிலளித்தார் கருணாநிதி. நல்லவேளை வியாபார பேரம் நடக்கவில்லை. நடந்திருந்தால், மைக்ரோசாஃப்ட், சன் குழுமத்தில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.
அப்போது பில் கேட்ஸ் இப்போது அறிவித்திருக்கும் அறிவிப்பை செய்யும் வாய்ப்பே ஏற்படாமல் போயிருக்கலாம். தானும் தன் மனைவி மெலிண்டாவும் உயிரோடு இருக்கும்போதே தங்கள் சொத்தில் பெரும் பகுதியை பொதுக் காரியங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிடப் போவதாக பில் கேட்ஸ் அறிவித்தார்.
பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலர்கள். ஏற்கனவே இதில் 23 மில்லியன் டாலர் சொத்துகளை நன்கொடையாகக் கொடுத்தும் விட்டார் ! பில் கேட்ஸைப் போலவே இன்னொரு பெரும் பணக்கார தொழிலதிபர் வாரன் பஃபெட். இவரது சொத்து மதிப்பு 47 பில்லியன் டாலர்கள். இதில் ஒரே ஒரு சதவிகிதத்தை மட்டுமே தனக்கென்று வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்த பஃபெட், மீதி 99 சதவிகிதமும் தான் இறப்பதற்கு முன்னால்  நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.
இன்னொரு அமெரிக்கப் பணக்காரர் ஜார்ஜ் லூக்காஸ். இவருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் சினிமாகாரர்கள். ஸ்டார் வார்ஸ் படங்களை உருவாக்கியவர் லூக்காஸ். இவர் தன் மூன்று பில்லியன் டாலர் சொத்தில் பெரும் பகுதியைக் கல்வித்துறைக்குத் தான் வாழும்போதே கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.
பில் கேட்ஸும் வாரன் பஃபெட்டும் தங்கள் சொத்துகளை தானம் செய்வதோடு நிற்கவில்லை. அமெரிக்காவில் இருக்கும் இதர பெரும் பணக்காரர்களை அழைத்து நீங்களும் சம்பாதித்ததை இந்த சமூகத்துக்குத் திருப்பிக் கொடுங்கள் என்று பிரசாரம் செய்தார்கள்.  “ தருவதாகவாக்குறுதி அளித்தல்” ( கிவிங் ப்ளெட்ஜ்) என்ற இந்த இயக்கத்தில் இணைய, இதுவரை 40 பெரும் பணக்காரர்கள்  முன்வந்திருக்கிறார்கள்.
பதினெட்டு பில்லியன் டாலர் சொத்துள்ள புளூம்பர்க், 11 பில்லியன் சொத்துக்காரர் ரொனால்ட் பெரெல்மன், உலகத்தின் ஆறாவது பெரும் பணக்காரரும் 28 பில்லியன் டாலர் சொத்துக்காரருமான லாரி எல்லிசன் ஆகியோர் முன்வந்துள்ளனர்.
தன்  ஆயுட்காலத்திலேயே 95 சதவிகித சொத்தையும் கொடுத்துவிடப் போவதாக எல்லிசன் அறிவித்திருக்கிறார். பில் கேட்ஸின் தொண்டு நிறுவனம்  அவர் சொத்துகளை அதிகபட்சம் அவர் இறந்து 50 ஆண்டுகளுக்குள் முழுமையாகக் கொடுத்து முடித்துவிடவேண்டும் என்று டிரஸ்ட் விதியே போட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு அமைப்புகளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் நன்கொடை கொடுப்பதற்கு பதில், உடனடியாக பெரிய திட்டங்களுக்கு ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகைகளை இப்போதே கொடுத்து விரைவில் நல்ல விளைவுகளும் மாற்றமும் ஏற்படச் செய்யவேண்டும் என்பது பில் கேட்ஸின் கொள்கை. இப்போதே ஆப்ரிக்காவில் கொசு எதிர்ப்பு மருந்து பூசிய கொசு வலைகளைப் பெருமளவு விநியோகித்து மலேரியா ஏற்படுவதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.
இதே போல பிரிட்டனிலும் தொழிலதிபர்கள் நன்கொடை வாக்குறுதி இயக்கம் தொடங்கியிருக்கிறார்கள். ஆல்பர்ட் குபே என்பவர் சூப்பர் மார்க்கெட்கள் அதிபர். சொத்து மதிப்பு 480 மில்லியன் பவுண்டுகள்.. இதில் வெறும் 10 மில்லியன் பவுண்டை மட்டும் தனக்கு வைத்துக் கொண்டு மீதியை தரப்போவதாக அறிவித்துவிட்டார். சைன்ஸ்பரி பிரபு என்பவர்  ஏற்கனவே 275 மில்லியன் பவுண்டுகளை தானம் வழங்கியிருக்கிறார்.
பொதுவாக இதுவரை பெரும் பணக்காரர்கள் நன்கொடைகள் கொடுத்தாலும் பெருமளவில் தருவதில்லை. அமெரிக்காவில் இதுவரை மொத்த சொத்து மதிப்பில் அதிகப்ட்சம் 12 சத விகிதம் வரை மட்டுமே நன்கொடைகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதை பில் கேட்ஸும் வாரன் பஃபெட்டும் மாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
சாதாரண மனிதர்களாகத் தொடங்கினோம். இந்த சமூகம் இதுவரை நமக்குக்  கொடுத்தது. இனி நாம் நம் தேவைக்கு போக மீதியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது இவர்கள் பார்வை.
பில் கேட்ஸுக்கும் வாரன் பஃபெட்டுக்கும் குழந்தை குட்டி எதுவும் இருக்காது. குடும்பம் இருதால்தானே கொள்ளுப்பேரன் சினிமா தயாரிப்பாளராவதற்கும் சேர்த்து இப்போதே சேர்க்க வேண்டியிருக்கும் என்ற விதண்டாவாதமெல்லாம் செல்லுபடியாகாது.
பில் கேட்ஸுக்கு மூன்று குழந்தைகள். பெரியவளுக்கு வயது 24. அடுத்தவளுக்கு 18 வயது. கடைசி மகன் - வயது 11. முதல் தலைமுறைக்கே கூட சொத்தையெல்லாம் வைத்துவிட்டுப் போக வேண்டும் என்று கேட்ஸ் தம்பதி  நினைக்கவில்லை.
ாரன் பஃபெட் முதல் மனைவி இறந்தபிறகு தன் துணைவியாக இருந்தவரை  அவளுடைய அறுபதாவது வயதில் திருமணம் செய்துகொண்டார். வாரனுக்கு ஒரு மகள், இரு மகன்கள். வாரன் மஞ்சள் துண்டு அணியாத ஒரு பகுத்தறிவுவாதி. கடவுள் நம்பிக்கையற்றவர் என்று அறிவித்துக் கொண்டவர்.
ஈ பே என்ற ஏல இணைய தளத்தின் அதிபர்களான பியர், பாம் இருவரும் ஐந்து பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ளவர்கள். எங்கள் குடும்பத்துக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை விட பல மடங்கு அதிகமாக எங்களிடம் இருக்கிறது. அதை சும்மா வைத்துக் கொண்டிராமல் இப்போதே பொதுக் காரியத்துக்குப் பயன்படுத்துவதுதான் சரி  என்று சொல்லியிருக்கிறார்கள்.
----
தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆயிரமாவது ஆண்டு விழா  எடுப்பதில் கூட வாரிசு அரசியலை முன் நிறுத்தும் மனப்பான்மைதான் துருத்திக் கொண்டு வருகிறது. தஞ்சை மாவட்ட தி.மு., கலைஞர் கருணாநிதியைஎங்கள் ராஜ ரஜ சோழனேஎன்று வர்ணித்து முழுப்பக்க விளம்பரம் வெளியிடுகிறது. இவெண்ட் மேனேஜ்மெண்ட் அமைச்சர் துரைமுருகன்  ராஜராஜனுக்கு ஒரு ராஜேந்திர சோழன் போல எங்களுடைய ராஜேந்திர சோழன்  ஸ்டாலின் என்கிறார்.  (அப்படியானால் நான் யார் என்றதத்துவக் குழப்பம் அழகிரிக்கு ஏற்பட்டிருக்கலாம்.)
தமிழக வரலாறு குழப்பமாக இருக்கிறதாம். அதை சரி செய்ய முதல்வர் குழு அமைத்து வரலாறு எழுதவேண்டும் என்கிறார் துரைமுருகன். அப்படி ஒன்று எழுதினால் எப்படியிருக்குமோ ? ராஜராஜனை முதலாம் கருணாநிதி என்று கூட எழுதிவிடுவார்கள்.
பெரிய கோயில் ராஜராஜனின் தனிப்பட்ட சாதனை அல்ல. அந்த காலகட்டத்தின் தமிழ்ச் சமூகத்தின் ரத்தம், வியர்வை, அறிவு, பக்தி எல்லாம் கலந்த விளைவு. ராஜராஜன் ஜனநாயகவாதியும் அல்ல. வாரிசு அரசியலைப் பின்பற்றியவன். குடும்பத்தில் இருந்து தேர்வு செய்யாமல், மக்களிடையே இருந்து அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பின்பற்றிய சேர நாட்டுப் பழக்கத்தை ஒழித்துக் கட்டியவன் ராஜராஜ சோழன். அதனால் அவனை இன்றைய வாழும் ராஜராஜன்களுக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
தஞ்சைப் பெரிய கோயில் என்ற  சரித்திர சாதனையைப் போற்றவேண்டுமென்றால், அது கட்சிக்கும் அரசுக்கும் அப்பாற்பட்ட அனைத்துக் கட்சி, அனைத்து மக்கள் இயக்க விழாவாக  நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசு விழாவாக, ஆளுங்கட்சி விழாவாக நடத்தப்பட்டது. கூட்டணிக்கட்சியாக இருக்கும்  வாசனுக்கு இடமுண்டு, திருமாவுக்கு இந்த விழாவில் இடமில்லை என்பது கோயில் சார்ந்த சாதி அரசியலின் இன்னொரு வடிவம்தான்.
ஒரு பெரிய கோயில் கொண்டாடப்படும் அதே வேளையில் தமிழகமெங்கும் எண்ணற்ற வரலாற்றுச் சின்னங்கள் - கோயில்கள், விஹாரங்கள், குகைகள், எல்லாம் கற்குவாரி வியாபாரிகள்  கையில் சிக்கிக் கிடப்பதைப் பொருட்படுத்தாமல் அரசு நடக்கிறது.
எல்லாமே இங்கு ஒருஷோதான். தான் ஒரு ஷோமேன் என்பதில் பெருமைப்படுபவரல்லவா நம் முதல்வர், சாரி ராஜராஜ சோழர் !
 
-  கல்கி

No comments:

Post a Comment