Search This Blog

Sunday, October 17, 2010

உயிர் வாழும் கடவுளுக்குப் பரிசு! அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...

இது நோபல் பரிசு சீஸன்!

டெஸ்ட் டியூப்குழந்தை களின் கர்த்தா ராபர்ட் எட்வர்ட்-டுக்கு மருத்துவத்துக் கான நோபல் பரிசை அறிவித்து இருக்கிறார்கள்.குழந்தை இல்லை என்ற காரணத்துக்காக கண்ணீர்விட்டு அழுத... லட்சக்கணக்கான தம்பதியி னரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் முகத்தில் புன்னகையைப் பூக்கவைத்த 85 வயது விஞ்ஞானி ராபர்ட் எட்வர்டின் முகத்தில், ஒரு புன்னகைக் கீற்று! 

1978-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, இங்கிலாந்தில் பிறந்த லூயிஸ் பிரவுன்தான் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை. இன்று வரை உலகம் முழுதும் 43 லட்சம் டெஸ்ட் டியூப் குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். லேப்ரோஸ்கோப்பி முறையில் பெண்ணின் சினைப் பையில் இருந்து எடுத்த முட்டை யையும், ஆணிடம் இருந்து பெற்ற விந்துவையும் ஒரு டெஸ்ட் டியூப்பில் செலுத்தி - அவை இரண்டும் செயற்கை முறையில் கருவாக உருவெடுக்கும் வரை காத்திருந்து - இந்தக் கருவை மீண்டும் ஒரு பெண்ணின் கருப் பையில் செலுத்தி, பெண்ணை கர்ப்பமுறச்செய்யும் இந்த முறையின் கர்த்தா... ராபர்ட் எட்வர்ட். 

லூயிஸ் பிரவுன் என்ற பெண் குழந்தை பிறந்தது. இன்று அந்த டெஸ்ட் டியூப் குழந்தை 32 வயது பெண்ணாக வளர்ந்து, இயற்கை முறையிலேயே ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள்! 

32 ஆண்டுகள் கழித்து அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ''உயிர்களைப் படைக்கும் ஆற்றல் பெற்றவர் கடவுள் ஒருவரே. அவரு டைய தொழிலை விஞ்ஞானிகள் என்ற பெயரில் மனிதர்கள் ஏற்றுக்கொள்வதை அனுமதிக்க முடியாது!'' என்று மதங்களும், சமூகமும், அரசாங்கமும் ஆரம்ப கட்டத்தில் அவருக்கு அடுக்கடுக்காக முட்டுக்கட்டைகளைப் போட்டன. ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, ''குழந்தை இல்லாத தம்பதிகளின் நிலைமை பரிதாபமானது. டெஸ்ட் டியூப் முறையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு!'' என்று வாதாடி, அதற்கான வாய்ப்பினை விஞ்ஞானத்தின் துணைகொண்டு செய்து காண்பித்தார்.  

ராபர்ட் எட்வர்டின் கண்டு பிடிப்பு மனிதகுலம் முழுமைக்கும் பயன்படும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு என்றாலும், இங்கிலாந்து அரசாங்கம் அவரது சாதனைகளை இத்தனை ஆண்டு களாகக் கண்டுகொள்ளவில்லை. கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தலைமை இடமான வாட்டிகனோ, ராபர்ட் எட்வர்ட் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, கமிட்டிக்கு கடுமையான கண்டனத் தைத் தெரிவித்து இருக்கிறது. 

இது ஒருபுறம் இருக்கட்டும்... ராபர்ட் எட்வர்ட் போலவே நமது நாட்டிலும் ஒரு விஞ்ஞானி இருந்தார். இவரும் அந்தக் காலத்தில் டெஸ்ட் டியூப் குழந்தை பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் பெயர் முகோபாத்தியாயா. இவரது முயற்சியின் வாயிலாக, ராபர்ட் டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கிய அதே 1978-ம் ஆண்டு கடும்நெருக்கடிகளுக்கு இடை யில், எந்தவிதமான வசதிகளும் இல்லாத ஆராய்ச்சிக்கூடத்தில் துர்கா என்ற டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கினார். 

இந்தியாவில் 100-க்கு 10 தம்பதிகள் குழந்தை இல்லாத தம்பதிகள் என்கிறது புள்ளிவிவரம். குழந்தை செல்வம் இல்லாவிட்டால் ஒரு பெண்ணை 'மலடி' என்று தொடங்கி... வாய்க்கு வந்தபடி அவதூறு சொல்லும் இந்த சமூகம். இப்படிப்பட்ட பெண்களுக்கு குழந்தைப் பேறு ஏற்பட வழி சொன்னார் என்பதற்காக, அப்போது முகோபாத்தியாயாவை யாரும் பாராட்டவில்லை. 

கைதட்டி உற்சாகப்படுத்தப்பட வேண்டியவரைக் கொடூரக் குற்றவாளி யாக சித்திரித்தது அப்போது ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்அரசு. இந்த அவமானங்களைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். 

'உலகம் தட்டையானது இல்லை... உருண்டை வடிவிலானது' என்று சொன்னதற்காக கலிலியோவைக் கல்லால் அடித்தவர்கள் பிறந்த உலகமல்லவா இது?!




No comments:

Post a Comment