ஆர்.ஜி! - ராகுலை நெருக்கமாக நண்பர்கள் வட்டாரம் அழைப்பது இப்படித்தான்!
'எங்கள் கட்சியின் எதிர் காலமே இந்த இளைஞனை நம்பித்தான் இருக்கிறது' என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால், ராகுல் வெட்கப்பட்டுச் சிரிக்கிறார். "என்னை இளைஞன் என்று சொல்லாதீர்கள். இந்தியாவின் மக்கள் தொகையை வயது அடிப்படையில் கணக்கிட்டால், நான் வயதானவன். எனக்கு 40 வயது ஆகிறது" என்று மறைக்காமல் சொல்லும் உண்மை விளம்பியாகவும் இருக்கிறார்.
"நீங்கள் பிரதமராக முடியுமா?" என்று கேட்டால், "வருங்காலத்தைப்பற்றி யாரால் என்ன சொல்ல முடியும்?" என்பது ராகுலின் சமாளிப்பு. "பிரதமராக ஆவது உங்களது தலைவிதியாக இருந்தால்..." என்று தொடர்ந்தால், "தலைவிதியில் எனக்கு நம்பிக்கை இல்லை. தலைவிதி என்பது பழமைவாதிகளின் கூற்று. கடின உழைப்பில்தான் எனக்கு நம் பிக்கை உள்ளது" எனத் தீர்க்கமான பதில்!
அது உண்மைதான். மாதத்தில் மூன்று வாரங்கள், இந்தியாவின் ஏதாவது ஓர் ஊரில் புழுதி படிந்த மக்களுடனோ அல்லது மாணவர் கூட்டத்துடனோ உரையாடிக்கொண்டே இருக்கிறார் ராகுல் காந்தி. "பரந்து விரிந்த இந்த தேசத்தின் எந்தப் பகுதியையும் பார்க்காமல், நான் எப்படி இந்த நாட்டுக்காகப் பாடுபடுவதாகச் சொல்ல முடியும்?"- என்பது ராகுலின் விளக்கம். மகாத்மா காந்தியின் எழுத்துக்களில் இருந்துதான் ராகுல் இந்த வழியைத் தேர்ந்து
எடுத்தாராம்.
"தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த காந்தி, தனது குருவான கோபாலகிருஷ்ண கோகலேவைச் சந்தித்தார். 'நீ இந்தியாவை முதலில் சுற்றிப் பார். அதற்குப் பிறகு, தீவிர அரசியலில் இறங்கு' என்றாராம் கோகலே. காந்தி அதன் பிறகுதான் இந்தியாவை வலம் வர ஆரம்பித்தாராம். இதையே, தனது பாணியாகவும் எடுத்துக்கொண்டார் ராகுல். சோனியா தனது மகனைப் பார்க்கக்கூட பல நாட்கள் காத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு சுற்றுப்பயணத்திலேயே இருக்கும் ராகுலுக்கு, தங்கை பிரியங்கா என்றால் பாசம் அதிகம். அநேகமாக, தினமும் பிரியங்காவுடன் போனில் பேசுவதைப் பழக்கமாக வைத்து இருக்கிறார். "எனது சகோதரியைவிட எனக்கு நெருக்கமானவர் யாரும் இல்லை" என்று சொல்லும் அளவு பந்தம்.
ராகுல் காந்தியின் பயணங்கள் அனைத்தும் கடைசி நிமிடங்கள் வரை ரகசியமாக வைக்கப்படுகின்றன. மூன்று நாட்களுக்கு முன்னதாகத்தான் விளம்பரமே செய்ய வேண்டும் என்பது இவர் கட்டளை. இந்தப் பயணங்களை, எண் 12, துக்ளக் லேன் சாலையில் உள்ள ராகுலின் அலுவலகத்தில்தான் திட்டமிடுகிறார்கள். இங்குதான் ராகுலின் ப்ரைம் டீம் என்று சொல்லப்படும் ஒரு டஜன் ஆட்கள் இருக்கிறார்கள். பவன் ஜிதேந்திர சின்கா, பங்கஜ் சங்கர், ஜித்தின் பிரசாதா, மீனாட்சி நடராஜன் ஆகியவர்கள் இதில் முக்கியமானவர்கள். இந்திய அரசியல் வரலாறு, இயற்கை வளம் முதல் இன்றைய வறட்சி நிலைமை வரை அத்தனை தகவல்களையும் முழுமையாகத் தொகுத்துவைத்திருக்கும் இவர்கள்தான், ராகுலுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். தனக்குத் தெரிய வரும் ஒரு வரிச் செய்தியைப்பற்றிய முழு விவரங்களையும் இவர்களிடம் இருந்து கேட்டுப் பெறுகிறார் ராகுல்.
"இந்தியாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது ராகுலின் ஒரு வரிக் கொள்கை. அதற்கு, இந்திய அரசியல் தூய்மை பெற வேண்டும். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தூய்மை பெற வேண்டும். இந்த அடிப்படையில் இளைஞர் காங்கிரஸை ராகுல் கையில் எடுத்திருக்கிறார். அவரால் உருவாக்கப்படும் இந்த இளைஞர்கள்தான் அடுத்த 15 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் கட்சியை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள். இன்று ராகுலால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களது கையில் கட்சி சென்றால், நிர்வாகம் தூய்மையாகவே இருக்கும். அதை நோக்கியதாக இருக்கிறது ராகுலின் பயணங்கள்"
தனக்கு வசதியானவரைத் தலைவராக நியமித்துக்கொள்வதுதான் காங்கிரஸின் நூற்றாண்டு கால வழக்கம். ராகுல் வந்ததும் முதலில் மாற்றியது இதைத்தான். "யாரையும் டெல்லியில் இருந்து நியமிக்க மாட்டோம். அப்பா கட்சியில் இருக்கிறார் என்பதற்காக, வாரிசுக்கு பதவியை வாரிக் கொடுக்கவும் மாட்டோம்" என்று ராகுல் அறிவித்தபோது, மூத்த காங்கிரஸ் தலைவர்கள்கூட, 'இது முடியாத காரியம், ஒன்றிரண்டு மாநிலங்களில் நடக்கும். அதற்குப் பிறகு அவ்வளவுதான்' என்றே நினைத்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்தியாவின் பாதி மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸுக்கு உறுப்பினர் கார்டு கொடுத்து, அதில் பாதி இடங்களுக்குத் தேர்தலும் நடத்தி, கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் வந்துவிட்டனர். "போலியான உறுப்பினர்கள் வந்துவிடக் கூடாது" என்று கட்டளையிட்ட ராகுல், அனைத்து உறுப்பினர்களது புகைப்படங்களையும் வாங்கினார். இதுவரை உறுப்பினரான 50 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் படங்களும், முகவரிகளும் அவரது டேட்டாவில் இருக்கின்றன. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முறைகேடுகள் செய்தவர்களை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பது ராகுலின் உத்தரவு. "சொந்தக் கட்சியில் ஒரு பதவியைப் பிடிக்கவே இவ்வளவு முறைகேடுகள் செய்தால், பணத்தைக் கையாளும் அதிகாரம் வாய்ந்த அரசுப் பதவிகளை அடைய இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?" என்று கேட்கிறாராம் ராகுல்.
பதவியைப் பிடித்தவர்களுக்கு, ஜவஹர்லால் நேரு தலைமைத் தகுதிக்கான பயிற்சி நிறுவனப் பொறுப்பாளர் ஜெயராமனை வைத்து பயிற்சி தரப்படுகிறது. தலைமைக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் முறைகள் சொல்லித் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சியின் கடைசி அரை மணி நேரம் மட்டும் ராகுல் வருகிறார். "தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். இனி, எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைக்காதீர்கள். சரியாக வேலை செய்யாதவர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுப்போம்" என்கிறார். கட்சி எல்லைகளைத் தாண்டி ராகுல் கவனிக்கப்படுவதற்கு ஒரே காரணம், தனது மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறார் என்பதுதான்.
"எனக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அவர்கள், மக்களைக் கொல்கிறார்கள். மற்றபடி எங்களுக்குள் மாற்றுக் கருத்துக்கள் இல்லை" என்று ஒரிஸ்ஸாவில் உட்கார்ந்துகொண்டு சொன்னார்.
மும்பையில் மராட்டியர்கள் தவிர, மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்று சிவசேனா சொன்னபோது, 'அப்படியானால் மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடியது மற்ற மாநில இந்திய வீரர்களும் தானே? இந்தியர்கள் அனைவருக்கும் இந்தியா சொந்தம்' என்று சொல்லிவிட்டு, அந்தக் கொந்தளிப்பான சமயத்தில் மும்பைக்குப் போய் பாதுகாப்பற்ற நிலையில், மின்சார ரயிலில் பயணமும் செய்தார்.
"இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இஸ்லாமிய அமைப்பான சிமிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்றபோது, பாரதிய ஜனதாவுக்குத் தேள் கொட்டியதுபோல் ஆனது.
"பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷை உருவாக்கியது எங்கள் குடும்பத்தின் சாதனை" என்று சொன்னதைக் கேட்டு, பாகிஸ்தான் பகீரென ஆனது.
'நடிகர் விஜய் இளைஞர் காங்கிரஸில் இணையும் வயதைத் தாண்டிவிட்டார்' என்று கிண்டல் அடித்ததும் ராகுல்தான். பக்குவம் இல்லாத பேச்சு என்று பெரியவர்கள் கிண்டலடித்தாலும், இளைஞர்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.
ஆர்.ஜி-யின் வளர்ச்சியும் அதில்தான் இருக்கிறது!
No comments:
Post a Comment