கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகமே சூடு பறந்த நேரம்... 'ஜி.கே.மூப்பனார் யார் பக்கம் போகப்போகிறாரோ, அந்த அணிக்குத்தான் வெற்றி...' என மீடியாக்கள் அனுமானம் வாசிக்க... அவரோ யாருடன் கூட்டணி என்பது குறித்து தவறியும் வாய் திறக்கவில்லை. பத்திரிகை உலகில் அவருக்கு நெருக்க மான நண்பர்கள் வற்புறுத்திக் கேட்டபோது, 'நாளாக ஆக டிமாண்ட் அதிகமாகிட்டுத்தான்பா இருக்கு. இப்பவே கூட்டணிபற்றி பேசிட்டால், நமக்கான டிமாண்டை நாமளே குறைக்கிறதா ஆகிடுமே!' என்றார் மூப்பனார். அவரைப் பார்த்து அரசியல் கற்றுக்கொண்டவர் விஜய காந்த். அப்படி இருக்க, டிமாண்ட் காட்ட இவருக்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் விஜயகாந்த்தை வைத்து சூடு கிளப்பி வரும் நிலையில், கூட்டணி குறித்து இன்று வரை மீடியாக்களிடமோ, கட்சி நிர்வாகிகளிடமோ அவர் வாய் திறக்கவில்லை. 'கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணி' எனத் தனித்துவம் பாடியவர், 'என் தலைமையில் கூட்டணி அமைக்கத் தயார்!' எனக் கதவைத் திறந்ததோடு சரி... அதன் பிறகு கப்சிப்தான்!
இது, எல்லாவிதத்திலும் விஜயகாந்த்தை உற்று கவனிக்கவைக்கிற தேர்தல். 'தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் உறுதி செய்துவிட்டாலும், தனித்துப் போட்டியா? காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பாரா? இல்லை... பழைய ஆவேசங்களை எல்லாம் மறந்துவிட்டு அம்மையாருடன் கூட்டணி பேசப் போகிறாரா?' என்பது தமிழக அரசியல் அரங்கை உலுக்கும் பட்டிமன்றமாகப் பரபரத்து வருகிறது. விஜயகாந்த் என்ன திட்டத்தில்தான் இருக்கிறார் ?
''கேப்டன் கூட்டணி குறித்து இதுவரை யாரிடமும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டுமே சிலர் கேப்டனிடம் பேச விரும்பினார்கள். கட்சி நிர்வாகிகள் மூலமாகவே, 'இப்போதைக்கு சந்திக்க முடியாது!' எனச் சொல்லிவிட்டார். அவர்கள் கூட்டணிக்காக கேப்டனை சந்திக்க விரும்பினார்களா, இல்லை கேப்டனைத் தனித்துப் போட்டியிடவைத்து, தி.மு.க கூட்டணிக்கு சாதகத்தை உண்டாக்கப் பார்த்தார்களா என்பது தெரியவில்லை. அ.தி.மு.க. தரப்பில் இருந்து எங்களுக்குத் தொடர்ந்து அழைப்பு வந்தது. பண்ருட்டியாரின் சமகால நண்பரான பொன்னையன் மூலமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. எங்கள் கட்சியில் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன், லீ கிளப் ராமச்சந்திரன், மாஃபா பாண்டியராஜன் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் யாருமே கேப்டனின் கருத்தாக எதையும் சொல்வதில்லை. 'நீங்கள் சொல்வதை கேப்டனின் கவனத்துக்குச் சொல்லிவிடுகிறோம்!' என்பது மட்டும்தான் இவர்களின் பதில்.
முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் 36 ஸீட் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டது. எங்கள் தரப்பில் '60 ஸீட் வேண்டும்' என உறுதியாக இருந்தார்கள். சமீபத்தில், ஜெயலலிதா கொடநாடுக்குப் போனபோது, எங்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகளுடன் பேசி இருக்கிறார். நாங்கள் 60 ஸீட் கேட்டதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அதனால், 36 ஸீட்டுடன் அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் இரண்டு எம்.பி. ஸீட்டுகளைத் தருவதாக எங்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது. 60 ஸீட்டுகளைத் தவிர வேறு எந்த டிமாண்டையும் நாங்கள் வைக்கவில்லை. 'ராஜ்யசபா ஸீட் குறித்த பேச்சுவார்த்தையே இப்போது தேவை இல்லை' எனச் சொன்னோம். இதற்கிடையில், நாங்கள் கூட்டணி ஆட்சிக்கு அச்சாரம் போடுவ தாக, அ.தி.மு.க. தரப்புக்கு சிலர் சொல்ல... ஜெயலலிதா அது குறித்து எங்கள் நிர்வாகிகளிடம் விசாரிக்கச் சொன்னார். 'அ.தி.மு.க. ஆட்சி அமைக்க எங்கள் எம்.எல்.ஏ-க்களின் உதவி தேவைப்படும் நிலை வந்தால்கூட மந்திரி சபையில் பங்கு கேட்க மாட்டோம்!' என எங்கள் நிர்வாகிகள் உறுதி கூறினார்கள். அந்த விளக்கம் ஜெயலலிதா காதுக்குப் போக... அவர் அதில் ரொம்பவே சந்தோஷமாகி விட்டார். அடுத்தபடியாக, 45 ஸீட் தருவதாக எங்களிடம் பேசினார்கள். ஆனால், 60 ஸீட் என்பதில் இருந்து எங்கள் நிர்வாகிகள் இறங்கி வரவில்லை. அதனை முகத்தில் அடித்ததுபோல் சொல்லாமல், தனித்து நின்றாலே வெற்றி பெறக் கூடிய 30 வேட்பாளர்களின் பட்டியலையும், அவர்களின் செல்வாக்கு பற்றிய விவரங்களையும் கொடநாட்டுக்கே அனுப்பி, 'நாங்கள் தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் எங்கள் மீது அபிமானம் கொண்டு பண உதவி செய்ய நிறையப் பேர் இருக்கிறார்கள். தொகுதிக்கு இவ்வளவு கோடிகள் என்று ஒரு கணக்கு வைத்தாலும்கூட, தனித்து நின்றாலே எங்களால் 30 தொகுதிகளில் தைரியமாக செலவு செய்து வெல்ல முடியும்!' எனச் சொல்லி அனுப்பினோம். அதன் பிறகு அங்கு இருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. இதற்கிடையில், 'அம்மா கோபமாகிட்டாங்க... தே.மு.தி.க-வுடன் கூட்டணி குறித்து இப்போதைக்கு ஏதும் பேச வேண்டாம்னு சொல்லிட்டாங்க...' என அ.தி.மு.க. நிர்வாகிகள் மூலமாக செய்தி வந்தது. அதன் பிறகு பல நாட்களாக இரு தரப்புக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
கடந்த வாரத்தில் மீண்டும் அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகி மூலமாக, 'கூட்டணி நிச்சயம்... பொறுமையாக இருங்கள்!' எனத் தகவல் அனுப்பப்பட்டது. கோவை, திருச்சியில் பிரமாண்ட கூட்டத்தை நடத்திக்காட்டிய ஜெயலலிதா, அதைவிட பிரமாண்டமாக மதுரைக் கூட்டத்தை நடத்தும் முடிவில் இருக்கிறார். அவருடைய முழுக் கவனமும் அதில்தான். கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு குறித்து சுய பரிசோதனை செய்துகொள்ளவும் மதுரை கூட்டம் உதவும் என அவர் நினைக்கிறார். அதனால், அந்தக் கூட்டத்துக்குப் பிறகு மளமள வேகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 124 தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை எங்கள் வேட்பாளர்கள் பெற்றனர். எங்களின் வாக்கு சதவிகிதம் இப்போது 14 சதவிகிதம் வரை உயர்ந்து இருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க-வின் பண இறைப்பு பலமாக இருக்கும். அதனால், வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குகளின் அளவு மிகக் குறைவாகத்தான் இருக்கும். வாழ்வா... சாவா போராட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க-வினர் இதனை நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். கூட்டணி இணக்கமாக அமைய 10 ஸீட்டுகள்தான் இழுபறியாக நீடிக்கின்றன. அவர்கள் இறங்கிவரும் பட்சத்தில் எங்கள் கேப்டன் சில சமரசங்களுக்கு சம்மதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது!'' என்கிறார்கள் .
அ.தி.மு.க. வட்டாரத்தில் ''விஜய காந்த்தை நாங்கள் இழுக்க விரும்புவதே அவருடைய பிரசாரத்துக்காகத்தான். மற்றபடி வாக்கு சதவிகித அளவில் நெருக்கடியான போட்டியைக் கொடுக்கும் அளவுக்கு நாங்களே வலிமையோடுதான் இருக்கிறோம். எங்களுக்கு எப்படி இது அதிமுக்கியமான தேர்தலோ, அதேபோல்தான் தே.மு.தி.க-வுக்கும். கட்சி அங்கீகாரத்தைப் பெறவும், முரசு சின்னத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் இந்தத் தேர்தலில் உரிய வெற்றியை விஜயகாந்த் பெற்றாக வேண்டும்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் விஜயகாந்த் தரப்பினரின் அணுகுமுறை அம்மாவை ரொம்பவே ஈர்த்துவிட்டது. அதேநேரம், 60 ஸீட்டுகள் தந்தாக வேண்டும் என்று அவர்கள் உறுதியாக நிற்பதுதான் வருத்தத்தைக் கொடுக்கிறது. அவர்களுக்கு மட்டுமே அப்படி ஒதுக்கிவிட்டால், மீதம் இருக்கும் ம.தி.மு.க., இடதுசாரிகள், புதிய தமிழகம், ம.ம.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை ஸீட் ஒதுக்க முடியும்? கூட்டணி விஷயத்தில் அம்மா எப்போதுமே தனி மெஜாரிட்டிக்குத் தேவையான ஸீட்டுகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார். விஜயகாந்த்துக்கு அதிக ஸீட் ஒதுக்க வேண்டி இருக்கும் என்பதாலும், வைகோ-வுக்கு உரிய பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதாலும் அம்மா இப்போதுவரை பா.ம.க-வை சட்டை செய்யவே இல்லை. எப்படியும் விஜயகாந்த்துடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கும் எங்கள் தரப்பு 52 ஸீட்டுகள் வரை இறங்கி வர வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்னோட்டம் பார்க்கும்விதமாக, எங்கள் கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவரே விஜயகாந்த் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துபவர்களிடம், 52 ஸீட் வாங்கித் தருவதாகச் சொல்லி இருக்கிறார். அதே நேரம், மதுரையில் திரளும் கூட்டம் அம்மாவின் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. கட்சியின் பலத்தை அறியும் விதமாகத்தான் கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல் தனிப்பட்ட ரீதியாக அம்மா கூட்டம் நடத்துகிறார். கோவை, திருச்சியை மிஞ்சக்கூடிய அளவுக்கு மதுரை கூட்டம் பிரமாண்டமாக நடந்தால், விஜயகாந்த் எதிர்பார்க்கும் ஸீட்டுகள் குறையத்தான் செய்யும்!'' என்கிறார்கள் .
ஜூவி
இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்
ReplyDelete