Search This Blog

Wednesday, October 06, 2010

பா.ம.க இல்லாமல் தி.மு.க ஜெயிக்கும் - சொல்கிறார் துரை முருகன்

எப்போதுமே உணர்ச்சிவசப்படக் கூடிய பா.ம.க. தரப்பு, 'அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட் இல்லை' என்று அறிவித்த போதும், மிகுந்த கனிவோடு கருணாநிதியை சந்தித்தது. 'எங்கள் கூட்டணியில் பா.ம.க. நீடிக்கிறது!' என்ற முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பை.. அன்போடு ஏற்றுக்கொண்டது. ஆனால், சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் உறுமல்! கடந்த 'ஆனந்த விகடன்' வார இதழில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், 'கருணாநிதி நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டார்!' எனக் கொந்தளித்திருந்த பேட்டி, தி.மு.க. தரப்பை பலமான கோபத்துக்குத் தள்ளியது. இதற்கு பதிலடியாக, தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளரும், சட்டத் துறை அமைச்சருமான துரைமுருகன், 'ராமதாஸ் ஓர் அரசியல் வியாபாரி!' என 'முரசொலி'யில் ஆவேசக் கட்டுரையை எழுத... இரு கட்சிகளுக்கும் இடையே ஒட்டுறவே அறுந்துவிட்டதாக அரசியல் அரங்கில் பரபரப்புக் கிளம்பியுள்ளது. 
 
''கருணாநிதி கழுத்தறுத்துவிட்டதாக, ராமதாஸ் வருத்தப் பட்டு இருக்கிறாரே?''
''கழுத்தை அறுப்பதோ... காலை வாருவதோ எங்களுக்குப் பழக்கம் இல்லை. நம்பியவர்களுக்கு எல்லாமும் செய்யக்கூடியவர் எங்கள் தலைவர். மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் ராமதாஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதையே வெளிப்படையாகச் சொல்லி இப்படி ஆவேசப்படுகிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. ஆனால், அதற்குள்ளேயே டாக்டருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதுபோலும். அதனால்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி, பரிதாபத்தைத் தேடப் பார்க்கிறார். நம்பகத்தன்மை பற்றி இவர் பேசுவது எல்லோ ரையும் சிரிக்கத்தான் வைக்கும். எந்தத் தேர்தலிலாவது நம்பகத் தன்மையுடன் ஒரு கூட்டணியில் அவர் இருந்திருக்கிறாரா?
 
ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறி மாறி சாதனை நிகழ்த்தியவர் ராமதாஸ். கழுத்தறுப்பு கலையை நன்றாக அறிந்தவர் ராமதாஸ்தான். 'உண்ட வீட்டுக்கு இரண்டகம்' செய்வதில் அவரை மிஞ்ச ஆள் இல்லை. இன்றைக்கு ஒரு பேச்சு... நாளைக்கு ஒரு பேச்சு என இடத்துக்குத் தக்கபடி பேசும் ராமதாஸ், எங்களை துரோகி எனச் சொன்னால் கேட்பவர்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்!''
 
 
''நீங்கள் எப்படியும் அன்புமணிக்கு ஸீட் கொடுப்பீர்கள் என நம்பித்தானே சட்டமன்றத்தில் ஆளும் கட்சி கொண்டுவந்த மேலவைத் தீர்மானத்தை பா.ம.க. ஆதரித்தது?''

''சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருகிறார்கள் என்றால், அது மக்களை பாதிக்குமா... இல்லை மக்களுக்கு சாதகமான விஷயம்தானா என்பதை ஆராய்ந்துதான் ஒரு கட்சித் தலைமை முடிவெடுக்க வேண்டும். மேலவை முடிவு மக்களுக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை... தன் மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்தால் சரி என ராமதாஸ் நினைப்பதை என்னவென்று சொல்வது? 'தி.மு.க. துரோகம் செய்யும் என நினைத்திருந்தால், மேலவைத் தீர்மானத்தை ஆதரிக்கும் முன்பே அவர்களிடம் எழுதி வாங்கி இருப்பேன்!' என ராமதாஸ் சொல்லி இருக்கிறார். மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கொடுத்தால் சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் கொண்டுவந்தாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு அவர் ஆதரிக்கத் தயாராக இருக்கிறாரா? 'தமிழகத்திலேயே கொள்கையும் லட்சியமும்கொண்ட கட்சி பா.ம.க-தான்!' என கூட்டத்துக்குக் கூட்டம் முழங்கும் ராமதாஸ், மகனுக்கு ஸீட் வாங்குவதை மட்டும்தான் கொள்கையும் லட்சியமுமாகச் சொல்கிறாரா?!''

''எங்கள் தயவு இல்லாவிட்டால் துரைமுருகன், வீரபாண்டியார் உள்ளிட் டோர் வெற்றி பெற்றிருக்க முடியாது என டாக்டர் சொல்லி இருக்கிறாரே..?''

''ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்னரே நானும், வீரபாண்டியாரும் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறோம். வன்னியர் சங்கத்தைத் தொடங்கி அவர் தி.மு.க-வை திரும்பிய பக்கம் எல்லாம் வசைபாடிய காலத்திலும், நாங்கள் வெற்றி பெறத்தான் செய்தோம். அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து எங்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியபோதும், மகத்தான வெற்றி பெற்றோம். கூட்டணி என்பது, அதில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமே நன்மை பயக்கக்கூடிய விஷயம். பா.ம.க-வால்தான் நாங்கள் ஜெயித்ததாகச் சொல்லும் ராமதாஸ், எங்களின் தயவு இல்லாமல் அவர் கட்சி எம்.எல்.ஏ-க்களை சுயமாக ஜெயிக்க வைத்தாரா? இதையெல்லாம் யோசிக்காமல் பேசுவது அரசியல் தரமா?''

''அப்படி என்றால் எதிர்வரும் தேர்தலில் பா.ம.க-வின் தயவு உங்களுக்குத் தேவை இல்லை என்கிறீர்களா?''

''பா.ம.க. கூட்டணி தேவை என்றோ, தேவை இல்லை என்றோ நான் சொல்ல முடியாது. கூட்டணி குறித்த முடிவுகளை எங்கள் கட்சித் தலைமைதான் எடுக்கும்!'' என்று முடித்துக் கொண்டார் துரைமுருகன்!

வழக்கமான மந்திரப் புன்னகையுடன் அமைச்சர் துரைமுருகன் இப்படிச் சொன்னாலும், ''முரசொலியில் ஸ்பெஷல் கட்டுரை போட்டு பதிலடி கொடுக்கிறோம் என்றாலே ஒரு விஷயம் புரியவில்லையா? பா.ம.க-வுடன் கூட்டணி இல்லாமலே எங்களுக்கான வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்து கொள்ள வெயிட்டான ஃபார்முலா தயாராக இருக்கிறது. திரும்பத் திரும்ப டாக்டர் ராமதாஸ் இப்படி குடைச்சலாகவே பேசிக் கொண்டிருந்தால், அவருக்கான கதவுகள் அடைக்கப்படும். அ.தி.மு.க-விலும் இடமில்லாமல் போய், தன் கட்சியின் உண்மையான 'பலத்தை' மீண்டும் ஒரு முறை காட்டக் கூடிய நிலைக்கு அவர் தனித்து நிற்பார்!'' என்கிறார்கள் அறிவாலயத்தின் முக்கியத் தூண்களான சில தலைவர்கள்!


No comments:

Post a Comment