இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அமைதியாக இருந்தது! இருந்தது ராமர் கோயிலா, பாபர் மசூதியா என்ற கவலையைவிட, அமைதி குடியிருந்தால் அதுவே போதும் என்று எல்லோரும் நினைத்ததால்தான், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் கெட்ட செய்தி இல்லை! "இல்லை! இது இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்றோ... முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிமையானது என்றோ தீர்ப்பு வந்திருந்தால், ஏதாவது ஒரு பிரிவினர் வன்முறையை விதைத்திருப்பார்கள். சரிவிகிதத்தில் பங்கீடு செய்யப்பட்டதால் பிரச்னைக்கு வழி இல்லை" என்று காரணம் சொல்லப்படுகிறது. மூன்றுவிதமான மனநிலைகளில் அலகாபாத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
இந்து நினைப்பு:
"இந்தத் தீர்ப்பு, கடவுள் ராமருக்குக் கிடைத்த வெற்றி. நீதித் துறை மீது இந்துக்கள்வைத்த நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 110 அடி நீளமும் 90 அடி அகலமும்கொண்ட அந்த இடம், ராமர் பிறந்த இடம் என்று உறுதியாகி உள்ளது. அதைச் சுற்றி உள்ள இடத்தில் மாபெரும் ராமர் கோயில் கட்டப் படும்" என்று விஸ்வஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா சொல்லி இருப்பது, இந்தப் பிரச்னையில் அக்கறை காட்டி வரும் இந்துக்களின் எண்ணமாக இருக்கிறது. ஸ்ரீராமர் குழந்தை வடிவில் அமர்ந்த நிலையில் (ராம் லல்லா விராத்) சிலையாக வழிபடப்படும் மத்தியப் பகுதி, இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அலகாபாத் தீர்ப்பு கூறுவது சராசரி இந்துக்கள் ஏற்கும் கருத்தாக இருக்கிறது. "மூன்று கோபுரங்கள் போன்ற கட்டடத்தின் ஒரு கோபுரத்துக்குக் கீழே இருப்பது ராமர் பிறந்த இடம். இது இந்துக்களின் நம்பிக்கை. நம்பிக்கைதான் இதற்கு ஆதாரம்" என்று நீதிபதி சுதீர் அகர்வால் சொல்ல, "இந்த இடம் முழுவதுமே ராமர் பிறந்த இடமாக இந்துக்களால் நம்பப்படுகிறது. எனவே, முழு இடமும் இந்துக் களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்று நீதிபதி தரம் வீர் சர்மா கூறினார். நீதிபதி சிப்கத் உல்லா கான், "இந்து மகா சபை, நிர்மோஹி அகடா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய மூன்று பேருமே இந்த இடத்தைப் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்ததால், மூவருமே கூட்டு உரிமையாளர்கள்" என்று கூறினார்.
எனவே, அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்துக்களின் நம்பிக்கை, அவர்களின் வாதங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட தீர்ப்புதான். ஆனால், இந்தத் தீர்ப்புபற்றி திருப்தி அடையாத இந்து மகாசபை, மேல் முறையீடு செய்யப்போவதாக அதன் உ.பி. மாநிலத் தலைவர் கமலேஷ் திவாரி அறிவித்து உள்ளார். மூன்றில் ஒரு பங்கு இடம் வக்ஃப் வாரியத்துக்குத் தரப்படுவதை ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் நிருத்ய கோபால்தாஸ் கண்டித்து இருக்கிறார்.
நீதிமன்றத் தீர்ப்பால் கிடைத்து உள்ள இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கான வேலைகளில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் முதல் குஜராத் முதல்வர் மோடி வரை இறங்கிவிட்டனர். இதற்கு இஸ்லாமியர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று புதுக் கோரிக்கையும் வேறு!
இஸ்லாமிய யோசனை:
சர்ச்சைக்கு உரிய இடத்தின் மத்தியப் பகுதி, சமையல் கூடம், யாக வேதிகை, பண்டார் ஆகிய இடம் நீங்கலான மற்ற இடங்கள் சன்னி வக்ஃப் முஸ்லிம் வாரியத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி சிப்கத் உல்லா கான்மட்டுமே இஸ்லாமியர் தரப்புக்கு ஓரளவு அனுசரணையான கருத்துக்களைப் பதிவு செய்தார். "இந்த மசூதியைக் கட்டுவதற்காகக் கோயிலை இடித்ததற்கான ஆதாரம் இல்லை" என்று நீதிபதி கான் கூறினார். மற்ற இரு நீதிபதிகளும் இதை ஏற்கவில்லை. எனவே, பாபர் மசூதி கட்டப்பட்ட சூழ்நிலை கேள்விக்கு உள்ளாக் கப்பட்டது. இது இஸ்லாமியர்கள் எதிர்பார்க்காத எதிர் வினையே!
அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரேஷி, "இந்தத் தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. குறிப்பிட்ட இடம்தான் ராமர் பிறந்தது என்பதற்கு, ஆவண ஆதாரமோ அல்லது வேறு ஆதாரங்களோ இல்லை" என்றார். அதே வாரியத்தின் அமைப்பாளர் இலியாஸ், "இது நீதிமன்றத் தீர்ப்பாக இல்லாமல், ஏதோ ஒரு சமரசத் தீர்வுபோல் இருக்கிறது. நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்றால், அதில் ஒரு பகுதியை மசூதிக்கு எப்படித் தர முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். "ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு உள்ளது" என்று இஸ்லாமிய அமைப்புகள் குறை கூறியுள்ளன. சன்னி வக்ஃப் வாரியம் மேல் முறையீடு செய்ய இருக்கிறது.
"இந்தியாவில் முஸ்லிம்கள் எந்தவிதமான உரிமைகளும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த ஒருதலைப்பட்சமான தீர்ப்பே சாட்சி. போனால் போகிறது என்று ஒரு துண்டு நிலம் முஸ்லிம்களுக்குத் தானம் தரப்பட்டு உள்ளது" என்று பாகிஸ்தான் மத விவகாரத் துறை அமைச்சர் ஹமீத் சய்யீத் கஸ்மி கூறுவதற்கு ஏற்பவே இஸ்லாமிய அமைப்புகள் கருத்துச் சொல்லி வருகின்றன!
இந்தியன் கனவு:
சராசரி இந்தியன் இந்தப் பிரச்னைகளுக்கு வெளியில் வாழவே விரும்புகிறான். மேலே குறிப்பிட்ட வாதப் பிரதிவாதங்கள் எதையும் மதிக்காமல், இந்தியன் இருப்பதால்தான் நாடு அமைதியாக இருந்தது.
ஒரு பாட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடப் போனார். அம்மனை வணங்கிவிட்டு கோயிலுக்குள் காலை நீட்டி உட்கார்ந்திருந்தார். சாமி சிலையை அப்போது எடுத்து வந்திருக்கிறார்கள். 'பாட்டி காலை மடக்கிக்கோ. சாமி வருது' என்று ஒரு ஆள் சொன்னாராம். உடனே அந்தப் பாட்டி, 'சாமி எல்லாப் பக்கத்துலயும்தானப்பா இருக்கு' என்றாராம். உடனே அந்த ஆள், பாட்டியின் காலைத் தொட்டு வணங்கினார்" என்பார்கள்.
அங்கு இங்கு எனாதபடி நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்பதும், கோயில் தெரியாவிட்டாலும் அது இருக்கும் திசை நோக்கி வணங்கினாலே கர்ப்பக்கிரகத்தை வழிபட்டதாக நினைப்பதுதான் சராசரி இந்தியன் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஐதீகம். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லிக்கொண்டே 2.77 ஏக்கருக்கு 60 ஆண்டுகள் சண்டையிடுவது, இன்றைய ரியல் எஸ்டேட் மனோபாவம், மதத்துக்குள் நுழைந்ததன் விளைவே ஆகும்.
பாபர், தன்னுடைய மகன் ஹுமாயூனுக்கு விட்டுச் சென்ற உயிலின் வார்த்தைகள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல... ஏக இந்தியாவுக்கே பொருத்தமானது.
'மகனே! நீ உனது மனத்தை, குறுகிய மத உணர்வுகள், தவறான எண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லாப் பிரிவினர்களும் பின்பற்றுகிற மத சம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும், மத வழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்பு கொடுத்து, பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும். நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. அடக்குமுறை என்ற வாளைவிட, இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக் கடன் என்ற வாள் மூலம் இஸ்லாமைப் பரப்புவது தான் அதிக பலன் தரும்' என்றது அந்த உயில். பாபரிடம் இருந்து படிக்க வேண்டியது இதைத்தான்!
2.77 ஏக்கர் இடத்துக்காக, இந்து, இஸ்லாம் அமைப்புகள் உச்ச நீதிமன்றம் போகட்டும். ஆனால், அமைதி வேண்டி அப்பாவி இந்தியன் மேல் முறையீடு செய்கிறான்!
No comments:
Post a Comment