Search This Blog

Friday, December 24, 2010

முதுமை தேடும் ஆதரவு

திருமண விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்கு ஒரு துண்டுப் பிரசுரத்தை அளித்தார்கள். ஏதோ வாழ்த்து மடல் என்றெண்ணிப் படித்தபோது, இன்றைய பெற்றோர் பலரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அது இதுதான்.
 
"என் அருமை மகனே, மகளே, நான் முதுமையால் தள்ளாடும் நாள்களில், நான் உண்ணும்போது, உடை அழுக்கானால்.. நான் உடையணிய முடியாதிருந்தால்..  பொறுமையைக் கடைப்பிடி. நீ குழந்தையாய் இருந்தபோது, அவற்றைக் கற்றுத் தர நான் செலவிட்ட பல மணி நேரங்களை எண்ணிப் பார்.  
 
நான் குளிக்க விரும்பாதபோது என்னை அவமானப்படுத்தாதே, கோபித்துக் கொள்ளாதே, உன்னைக் குளிப்பாட்ட ஆயிரம் கற்பனைக் காரணங்களைச் சொல்லி உன் பின்னால் ஓடி வந்த நாள்களை நினைத்துப்பார்.  சொன்னதையே திரும்பத் திரும்ப நான் சொன்னாலும், அதைக் கவனித்துக் கேள். உனக்குத் தூக்கம் வரும்வரை திரும்பத் திரும்ப ஒரே கதையைச் சொன்னது நானல்லவா.  
 
என் கால்கள் தளரும்போது உன் கரங்களால் என்னைத் தாங்கு. நீ நடை பழக என் கரங்கள் உன் பிஞ்சுப் பாதங்களைத் தாங்கி நின்றதை அப்போது நினைத்துக்கொள்.  மறதி என்னை ஆட்கொள்ளும்போதெல்லாம் என்னிடம் சிடுசிடுக்காதே. என் உரையாடலைவிட, நான் உன்னுடன் இருப்பதும், நீ என்னைக் கவனித்துக் கொள்வதுமே முக்கியம்'.  வயதான தாய், தந்தையரைத் தொட்டிலில் அமர்த்தி தனது இரு தோள்களில் சுமந்து புனித யாத்திரை மேற்கொண்ட சிரவணன் பிறந்த நம் நாட்டில்தான் இந்த ஏக்கப் பெருமூச்சு வார்த்தைகள் உதித்துள்ளன.

இன்று பணமும், பகட்டும் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது.  இதற்காக இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும்  போக்கு அதிகரித்துள்ளது. 

 தனிக் குடித்தனம் என்ற புதிய சிந்தாந்தம் இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் வேரூன்றிவிட்டது. இதனால் கிராமப்புறங்களில்கூட கூட்டுக்குடும்ப வாழ்க்கை மெல்லச் சிதைந்து வருகிறது.  இத்தகைய சூழலில் பெற்றோர் வயதான காலத்தில் தனித்து விடப்படும் நிலை உருவாவதைத் தடுக்க முடியவில்லை. ஒண்டுக் குடித்தனம், உல்லாச வாழ்க்கை,  வயதான பெற்றோரின் அறிவுரையை ஏற்க இயலாத மனப்போக்கு, அவர்களைப் பராமரிக்க நேரத்தைச் செலவிட மனமின்மை போன்ற காரணங்களால் இன்றைக்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  அமெரிக்க நாட்டின் கலாசாரச் சீரழிவால், இன்றைக்கு 17 ஆயிரம் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு 1.5 கோடி முதியோரைப் பராமரிக்கும் நிலை உருவெடுத்துள்ளது. மேலைநாட்டுக் கலாசாரம் மெல்ல நம்மிடையே பரவும்  நிலையில் இங்கேயும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில்  வியப்பில்லைதான்.
 
இன்றைக்கு நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை லாபநோக்குடனும், விளம்பர நோக்குடனும் பராமரிக்கப்படுபவையாகவே உள்ளன.  இந்நிலையில், தமிழக அரசு மாவட்டம்தோறும் அரசு சார்பில் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நிலை வருவது தலைக்குனிவுதான் இன்றைய தலைமுறைக்கு.
 
வெளிஇடங்களிலும், வெளிநாடுகளிலும் பணம் சம்பாதிக்கக் குடியேறும் இளைய தலைமுறையினர் பலர் ஏனோ தனது பெற்றோரைத் தன்னோடு வைத்துப் பாதுகாக்கத் தவறுகின்றனர்.  இதனால் தனித்துவிடப்படும் பெற்றோர், தனது மகனின், மகளின் பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை அதிகரித்து வருகிறது.  முதியோர் இல்லங்களில் என்னதான் பராமரித்தாலும், அவற்றை அண்டி வாழும்  பெற்றோரின் இறுதிக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை.  செல்ல நாய்க்குட்டியைப் பராமரிக்கவும், பாசத்தைக் காட்டவும் நேரம் ஒதுக்க  முடிந்த இன்றைய தலைமுறையினர் பெற்றோர் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
 
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை, கணவன்-மனைவி கட்டாயம் வேலைக்குச்  செல்லும் மனப்போக்கு, குழந்தைகளிடம் இருந்து பெற்றோரைப் பிரித்துவிடுகிறது. இதில் இன்றைய தலைமுறை உடனடியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில், அவர்களும் முதியோர் இல்லங்களை எதிர்காலத்தில் நாட வேண்டியிருக்கும்.   

No comments:

Post a Comment