Search This Blog

Tuesday, December 28, 2010

ஜிஎஸ்எல்வி ராக்கெட்


செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பாதை மாறியதால், அது மண்ணில் விழுந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வானிலேயே வெடித்துச் சிதறும்படிச் செய்தனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்புவதில் தோல்வியடைந்திருக்கிறோம்.

1979-ம் ஆண்டு முதலாக 7 முறை செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஏவப்பட்டு, நான்கு முறை தோல்வி அடைந்திருக்கிறோம். இத்தகைய தோல்விகள் வளர்ந்த நாடுகளிலும் ஏற்படுவது உண்டு. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பெரிய இழப்பு. தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் மதிப்பு ரூ. 125 கோடி. சென்ற ஏப்ரல் மாதம், பாதை தவறி கடலில் விழுந்த ராக்கெட்டின் மதிப்பு ரூ. 150 கோடி.

இதற்காக நம்பிக்கை இழந்து செயற்கைக்கோள்களை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல அர்த்தம். இத்தகைய முயற்சிகளை நாம் நிறுத்த முடியாது,  நிறுத்தவும் கூடாது. இத்தகைய அறிவியல் சாதனைகள்தான் நம்மை உலக அரங்கில் தலைநிமிர வைக்கும். பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய அறிவியல் வளர்ச்சிதான் ஒரு வளரும் நாட்டுக்கு முக்கிய அடையாளம் என்பதை மறுக்க முடியாது.

ஏன் மீண்டும் மீண்டும் இத்தகைய தோல்வியை இந்தியா சந்திக்க நேர்கிறது என்பதை மிகத் துல்லியமாக, நுட்பமாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது மிகமிக அவசியம். இதற்காக இரண்டொரு நாளில் ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ராக்கெட் விண்ணுக்குச் செலுத்தியபோதும் இத்தகைய குழு அமைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும்கூட இப்போது புதிதாக ஒரு தவறு ஏற்பட்டு, அதன் காரணமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்த முடியாமல் போயுள்ளது.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் தேவையான முன்னேற்றம் காணவில்லை என்பது வெளிப்படை. தற்போது நாம் விண்ணில் செலுத்திக்கொண்டிருக்கும் ராக்கெட்டுகளில் ரஷியாவிடம் பெற்ற கிரையோஜெனிக் இன்ஜின்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன. புவியீர்ப்பு விசையை மீறி, சுமார் 2000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏந்திச்செல்ல வேண்டுமானால், மண்ணிலிருந்து புறப்படும் வேகம் மிகமிக அதிகமாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தொழில்நுட்பமாக கிரையோஜெனிக் இன்ஜின் அமைந்துள்ளது. இந்த முறையும் கிரையோஜெனிக் இன்ஜினை முடுக்கிவிடுவதில் ஏற்பட்ட கோளாறுதான் ராக்கெட் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. சரியாக எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

தற்போது ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தைக்  கண்டறிந்தாலும்கூட, முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு காலத்தால் பின்னடைவு நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த பிரச்னையை அணுக வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. 

முதலாவதாக, ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொறியியல் மாணவர்கள் எல்லோரையும் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாற்றுகின்றன. நல்ல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் கல்வியை அளிப்பது இல்லை. இதையும் மீறி நல்ல ஆராய்ச்சியாளர்கள் உருவானால் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆளில்லை.   

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எங்கள் மாணவர் ஆண்டுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று விளம்பரம் செய்யும் அவலம்தான் கடந்த பத்து ஆண்டுகளில் உருவெடுத்திருக்கிறது. எங்கள் மாணவர் இஸ்ரோவில் சேர்ந்திருக்கிறார் என்றோ, டிஆர்டிஓ-வில் ஆராய்ச்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றோ, கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்திருக்கிறார் என்றோ சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மட்டுமல்ல, அரசும் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்திவிட்டது.  

இரண்டாவதாக, ஆராய்ச்சியாளர்களைவிட அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறுவது எல்லா நிலைகளிலும் ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சியாளர் நியமனங்களில்கூட, அமைச்சருக்கும் ஆட்சியாளர்களுக்கும் வேண்டியவர், தகுதியில் சற்று பின்தங்கியிருந்தாலும்கூட தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் இவர்கள்தான் சில ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்று, பொறுப்பான பதவிகளில் அமர்கிறார்கள். அப்போது இவர்களது திறமைக்குறைவு எல்லாவற்றின் மீதும் படிகிறது. 

மூன்றாவதாக, ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இஸ்ரோ என்றாலும், புதிய பீரங்கிகளை உருவாக்கும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானாலும் (டிஆர்டிஓ) தங்களுக்குத் தேவையான மிகச் சிறு கருவிகளையும் வெளியில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தம் மூலமாகவே பெறுகின்றன. இத்தகைய அயல்பணி ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிற்கூடம், தரத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான தொழிற்கூடமாக இருந்தால் மட்டுமே, ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் பயனுறும். இதில் ஒரு சிறிய பாகத்தை தரக்குறைவான தொழிற்கூடத்திடம், அரசியல் நிர்பந்தம் அல்லது மேலதிகாரியாக இருக்கும் ஆராய்ச்சியாளரின் நிர்பந்தம் காரணமாக ஒப்பந்தம் கொடுத்து, செய்து வாங்கினால், இத்தகைய தோல்விகள் ஏற்படவே செய்யும்.

இதனிடையே நடுவானில் வெடித்துச் சிதறிய ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் காப்பீடு செய்யப்படவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின்களில் ஒன்று மட்டுமே மீதமுள்ள நிலையில், 2011ம் ஆண்டில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் திட்டங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராக்கெட் தொழில்நுட்பத்தில், கிரையோஜெனிக் இன்ஜின் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தொழில்நுட்பம் உலகளவில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாகவே இருந்துள்ளது. ராக்கெட் விண்ணில் பறக்கும் போது, 3,600 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் ஏற்படும். அப்போது, திரவ ஹைட்ரஜன் டேங்கை மைனஸ் 253 டிகிரி செல்சியசில் வைத்திருப்பதே கிரையோஜெனிக் தொழில்நுட்பமாகும். இஸ்ரோ, ரஷ்யாவிடமிருந்து ஏழு கிரையோஜெனிக் இன்ஜின்களை விலைக்கு வாங்கியிருந்தது. அவற்றில் ஆறு இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தற்போது ஒரு கிரையோஜெனிக் இன்ஜின் மட்டுமே மீதமுள்ளது. ஆனால், இரண்டு டன்னுக்கு மேல் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும், சந்திரயான் - 2 மற்றும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கும் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் அவசியமாகிறது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்டில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. ஆனால், எரிபொருள் குழாயில் ஏற்பட்ட கோளாறால் இந்த ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, உள்நாட்டு கிரையோஜெனிக் இன்ஜின் உற்பத்தி மீண்டும் சோதனைக் கூடத்திற்கு சென்றுள்ளது.

லாடம் சரியில்லாவிட்டால் குதிரை சரியாக ஓடாது. குதிரை சரியாக ஓடாவிட்டால் அதன் மீது அமர்ந்துள்ள ராணுவ வீரன் சரியாக சண்டையிட முடியாது. வீரன் சண்டையிட முடியாவிட்டால், போரில் தோல்வி தவிர்க்க முடியாதது. தரத்துக்கும் அறிவுக்கும் முன்னுரிமை தரப்படாவிட்டால் இதுபோன்ற தோல்விகளைத் தவிர்க்க இயலாது.   

   

No comments:

Post a Comment