Search This Blog

Thursday, December 23, 2010

அண்ணா முதல் ஆ.ராசா வரை!

20 வயது அன்பழகனை திருவாரூருக்கு அழைத்து வந்து 18 வயது கருணாநிதி கூட்டம் போட்டார். திராவிட இயக்கத்தின் 70 ஆண்டு கால அரசியல் சக்கரத்துக்கு இவர்கள் இருவரும் தான் தொடர்ச்சியாக எண்ணெய் வார்த்தவர்கள்!

கடந்த சனிக் கிழமை அன்று தனது 89-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் அன்பழகன். 87 வயதான கருணாநிதி, அவரது இல்லம் தேடிச் சென்று வாழ்த்தினார். இருவரும் தனிமையில் உரையாடினர்.

தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தை திருவாரூரில் தான் தொடங்கிய காலக் கதையை கருணாநிதியோ... அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தான் கட்சி வளர்த்த கதையை அன்பழகனோ... அப்போது அளவளாவி இருக்க வாய்ப்பு இல்லை.

'எப்படி எல்லாம் வளர்த்த கட்சி, இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டதே!’ என்று நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பார்கள். வெளியே ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவர்களின் மனசாட்சிகள் அதையே வழிமொழியும்!

'மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே... உங்கள் ஆட்சியில் ஊழலின் முகம் தெரிய ஆரம்பித்துவிட்டது..’ என்று முதலமைச்சர் அண்ணா முன், காங்கிரஸ் உறுப்பினர் சொல்லி முடிக்கவில்லை. எழுந்த அண்ணா, 'இதை நிரூபித்தால், இந்த நிமிடமே பதவியில் இருந்து விலகத் தயார்!’ என்றார். அண்ணாவுக்கும் 'அதற்கும்’ சம்பந்தம் இல்லை என்பதால், மேலே எதுவும் சொல்லாமல் காங்கிரஸ் உறுப்பினர் உட்கார்ந்தார். பின்னால், தனியே வந்து அண்ணாவிடம் விஷயத்தைத் தெரிவித் தார். 'நான் இதைச் சொன்னபோது அண்ணா வின் முகம் அவமானத்தால் கறுத்துப் போனது’ என்று அந்த காங்கிரஸ்காரர் சொன்னாராம்.

அந்தரங்கத்தில் அண்ணாவிடம் சொன்னதைப்போல் அல்ல... இன்று அகில இந்திய மீடியாக்களில், உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஸ்பெக்ட்ரம் 2ஜி முறைகேடுகளின் மூலமாக, தி.மு.க. மீது கறை பூசப்படுகிறது. எந்தக் குற்றச்சாட்டுக்களை எல்லாம் ஆளும் கட்சிகளின் மீது, ஒரு ஆக்ரோஷமான எதிர்க்கட்சியாக தி.மு.க. வீசியதோ... எதையெல்லாம் எதிர்த்துப் போர்க் குரல் கொடுத்து, அதன் தொண்டன் அந்தக் கட்சியை வளர்த்தானோ... அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் இன்று தன் கட்சி மீதே வீசப்படும்போது, எந்தச் சுகமும் காணாத அந்தத் தொண்டனின் உள்ளம் எவ்வளவு பாடுபடும்!

'பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு; கட்டியிருக்கும் வேட்டிதான் மானம். துண்டு பற்றிக் கவலை இல்லை. மானமே மகத்தானது!’ என்று சொல்லிச் சொல்லியே மக்களின் மனதில் வேரூன்றிய கட்சியின் இன்றைய நிலை என்ன?

'1.76 லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி, மிகப் பெரிய முறைகேட்டுக்கு ஆ.ராசா காரணமாக இருந்திருக்கிறார்’ என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை, அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. ஆ.ராசாவை, அவர் வகித்து வந்த தொலை தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து, ஏகத்துக்கும் கட்டாயப்படுத்தி... மிகுந்த பிரயாசைக்குப் பிறகே ராஜினாமா செய்யவைத்தது மத்திய அரசு.

அதுவரையில், 'குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாயம் ராஜினாமா செய்வார் ராசா' என்றே அந்த பதவியைப் பிடித்துக்கொண்டு இருந்தது கட்சி. சி.பி.ஐ. அவரது வீட்டுக்குள் புகுந்து இருக்கிறது. அவரது உறவினர்கள், நண்பர்களின் இடங்கள் சோதனை செய்யப் பட்டு உள்ளன.

ஆ.ராசா குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது. 'ஏலம் இல்லாத இந்த ஏலத்தின்' முக்கிய தொடர்பாளராகச் செயல்பட்டதோடு அல்லாமல்... அந்நிய தேசங்களின் உளவாளியாக உலா வந்தாரோ என்ற சந்தேகத்துக்கும் ஆளாகியுள்ள நீரா ராடியா, இன்று தி.மு.க -வின் ஒவ்வொரு தொண்டனுக்கும் அறிமுகம் ஆகிவிட்டார், மிகக் கசப்பாக!

முதலமைச்சர் கருணாநிதியின் துணை வியார் ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர் பூங்கோதை ஆகியோர் தொடர்ந்து இந்த நீரா ராடியாவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். தொலைபேசிப் பதிவுகளைப் பார்த்தால், அந்தப் பெண்மணியுடன் இவர்களெல்லாம் தேச சேவை பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. சி.பி.ஐ தொடங்கி, செல்போன் எஸ்.எம்.எஸ். வரை இதை எல்லாம் தினந்தோறும் அலசிக் கிண்டலடிப்பதைப் பார்த்துத் துடிக்கிறான் தி.மு.க-வின் தொண்டன்! சுண்டு விரல் சும்மா சீண்டிவிட்டாலே சீறிக் கிளம்பிப் பதிலடி கொடுக்கிற தங்கள் தலைவர், இத்தனை பூகம்பங்களுக்குப் பிறகும் ஏன் மௌனம் காக்கிறார் என்று எண்ணிக் குமைகிறான்!

'சித்த மருத்துவம்’ பத்திரிகையில் சிறு விமர்சனம் வந்தால்கூட அறிக்கை விடும் கருணாநிதி, ஜெயின் கமிஷன் அறிக்கையில் அரசியல்ரீதியான விமர்சனங்கள் வந்த நிலையில், 'ஒரு நிமிஷம்கூட மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்க மாட்டோம்’ என்று சொல்லிய கருணாநிதி... 2ஜி விஷயத்தில் சாந்தசொரூபியாக மாறிப் போனார்.

இந்த விஷயத்தில், ஆ.ராசாவின் நேர்மை மட்டுமல்ல; கருணாநிதியே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார். 'கோபாலபுரம் இல்லம் தவிர, எனக்கு எந்தச் சொத்துக்களும் இல்லை’ என்று அறிவித்த கருணாநிதியால், 'என்னைப்போல்தான் என் உறவினர்களும் நேர்மையானவர்கள், என் அமைச்சரவை சகாக்களும் அப்பழுக்கற்றவர்கள்’ என்று ஏனோ சொல்ல முடியவில்லை. 'என் உறவினர்கள் சம்பாதிக்க, தொழில் தொடங்க நான் எந்த உதவியும் செய்யவில்லை’ என்று பட்டும் படாமலும் சொல்ல வேண்டிய நிலைமைக்கு என்ன காரணம்? தி.மு.க-வின் முகம் இப்படி மாறிப் போனதற்கு என்ன காரணம்?

''தட்டிக் கொடுத்துப் பாராட்டவும், குட்டுவைத்துச் சீர்தூக்கவும் இரண்டு கைகள் இருப்பதுதான் நல்ல நிர்வாகத் துக்கு அழகு! இப்போது அது இல்லை. ஜால்ராக்கள் மட்டும் தலைவரை அணுக முடிகிறது. உள்ளதை உள்ளபடி மட்டுமே பார்க்கவும், தவறான பாதையில் யார் சென்றாலும் தயங்காமல் தோலுரித்துக் காட்டவும் தலைவருக்கு ஒரு மனசாட்சியாகச் செயல்பட இப்போது யாரும் இல்லை'' என்கிறான் உண்மைத் தொண்டன்.

எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், 'முரசொலி’ மாறன் மறையும் வரை தனது கையில் சாட்டையை வைத்திருந்தார். கட்சியின் பொதுக் குழு, செயற் குழு கூடினாலே மந்திரிகளும் மாவட்டச் செயலாளர்களும் உள்காய்ச்சலில் உருளுவார்கள். 'ஆற்காடு வீராசாமி சொல்லும் ஆளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தேர்தலுக்கு ஜனநாயகத் தேர்தல் என்றா பெயர்?’ என்று கேட்டார். 'ஆலடி அருணா, மக்களையும் தொண்டனையும் எப்போது மதிக்கப்போகிறார்?’ என்று தாளித்தார். 'டி.ஆர்.பாலுவுக்கு ஏதோ டெல்லியையே ஆள்வதாக நினைப்பு?’ என்று கர்ஜித்தார். 'தமிழ்க்குடிமகன் கட்சியில் இருக் கும் வரை தமிழ் வளராது’ என்று காரணத் தோடு கிண்டல் அடித்தார். பொன்முடியின் தவறுகளைச் சாடினார். ஸ்டாலின் மந்தப் போக்கு காட்டியபோதும் தயங்காமல் விமர்சித்தார். ஏன்... கருணாநிதியையேகூட முரசொலி மாறன் சுருக்கென்று குத்திப் பேசியதும் உண்டு.

'மாறன் சொல்வது அவரது குரல் மட்டும்அல்ல; அவர் எனது மனசாட்சியாக இருந்து பேசுகிறார். நான் சொல்ல வேண்டியதை அவர் சொல்கிறார்’ என்று கருணாநிதியே ஒப்புக்கொண்டார். 'மாறனுக்கு ஒரு விஷயம் தெரிந்தால், அது மறு நிமிஷமே தலைவருக்குத் தெரிந்துவிடும். அதை பொதுக் குழுவில், ஆயிரம் பேர் முன்னால் போட்டு உடைத்து அவமானப்படுத்திவிடுவார்கள்’ என்ற பயம் எல்லா முன்னணித் தலைவர்களுக்கும் இருந் தது. குறிப்பாக, டெல்லிக்கு அனுப்பப் படும் பிரதிநிதிகள் பற்றி கட்சித் தலைமை கவலையே பட வேண்டாம் என்கிற அளவுக்குக் கட்டி மேய்த்தார் முரசொலி மாறன். ஆனால், இன்றோ அங்கே தலைக்குத் தலை சட்டாம் பிள்ளைத்தனம் என்பதே காட்சியாகி... அது இந்த நிலை வரை கொண்டுவந்து இருக்கிறது!

'கருணாநிதியின் காதுக்கு வராமல் எதுவும் நடந்தது இல்லை’ என்கிற அளவுக்கு இருந்த நிலைமை மாறி, புதிய புதிய ஆட்ட நாயகர்கள் வந்து கேப்டனையே கவிழ்த்துவிட்டார்கள். 'டெல்லியில் என்னென்னவோ நடந்திருக்கிறது. எதையுமே என்னிடம் ஏன் சொல்லவில்லை?’ என்று எல்லாம் முடிந்த பிறகு டி.ஆர்.பாலுவிடம் கருணாநிதி வருத்தப்படுகிறார். 'எனக்கு வர வேண்டிய விஷயத்தை துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு சேர்ந்து மறைச்சிட்டாங்க’ என்று கோபப்படுகிறார். 'யாருமே என்னை நம்பாம, யார் யாரையோ நம்பி இருக்காங்க’ என்று நொந்துகொள்கிறார். ஆ.ராசா குறித்த விளக்கங்களை கருணாநிதி சொல்வதற்குப் பதிலாக, 'ஆ.ராசா குற்றமற்றவர்’ என்று குஷ்பு வந்து மீடியாக்களில் விளக்கம் அளிக்கும் அளவுக்குத்தான் அங்கே அதிகார எல்லைகள் இப்போது வகுக்கப்பட்டு இருக்கின்றன!

உள்ளதைக் காட்டும் மனசாட்சிகள் தேவை இல்லை. குறைகளுக்கு அரிதாரம் பூசி மறைக்கக்கூடிய கவர்ச்சி முகங்கள்தான் கட்சிக்குத் தேவை என்று முடிவு எடுத்த மாதிரிதான் தி.மு.க-வின் அண்மைக் கால நடப்புகள் இருப்பதாக அடிமட்டத் தொண்டன் கருதுகிறான்! அரசின் திட்டங்களும்கூட வாக்காளனை மயக்கி 'போதை'யில் வைக்கும் கவர்ச்சித் திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.

ஆக, மாறன் தி.மு.க. என்ற காலம் மறைந்து... குஷ்பு தி.மு.க-வாகக் காலம் தன் லீலையைக் காட்டுகிறதா என்று கலங்கி நிற்கிறான் அந்தத் தொண்டன்.

'இந்தக் கட்சியை வேறு யாராலும் அழிக்க முடியாது. நம்மவர்களால் மட்டுமே முடியும்’ என்றார் அண்ணா!

'நம்மவர்கள்' என்று 'அ’ சொன்னது 'ஆ’-வைத்தானா?

1 comment:

  1. INTHA VARAM ANANTHA VIKATANIL VANTHADU ,NEENGAL AA VI I PDF FILE AAGA KODUKKALAM,NANRI

    ReplyDelete