Search This Blog

Monday, November 12, 2012

1992 ஒலிம்பிக்ஸில் என்ன நடந்தது?


1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸில், சோவியத் நாடுகளில் ஒன்றான உக்வேனியா, குறுக்கு வழியில் அதாவது ஊக்க மருந்தின் காரணமாக ஏராளமான தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்காவை பதக்கப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியதாக சமீபத்தில் வெளிவந்த ‘மாற்றான்’ திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு உண்மை? 1992 ஒலிம்பிக்ஸில் இப்படியெல்லாம் நடந்தனவா? 

1991ல், கோர்பசேவ் ஆட்சிக் காலத்தில் சோவியத், பிரிவினையைச் சந்தித்தது. நாட்டில் நிலவிய பல்வேறு குழப்பங்களினால் புரட்சி உண்டாகி, ரஷ்யா உள்பட 15 குடியரசுகள் சுதந்திரத் தனிநாடுகளாயின. இந்த நிலையில் பார்சிலோனா ஒலிம்பிக்ஸில் முன்னாள் சோவியத் யூனியனின் 12 குடியரசுகள் ஒரே அணியாக ‘ஒன்றிணைந்த அணி’ (The Unified Team) என்கிற பெயரில் 234 வீரர்களுடன் பங்கேற்றன. 

1972க்குப் பிறகு (இருபது ஆண்டுகளுக்குப் பிறகு) எந்த நாடுகளும் புறக்கணிப்பில் ஈடுபடாத ஒலிம்பிக்ஸ் என்பதால் முதல் இடத்தைப் பிடிக்க அமெரிக்கா, ஒன்றிணைந்த அணி, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. 

இறுதியில், ஒன்றிணைந்த அணி 45 தங்கப்பதக்கங்களைப் பெற்று சாம்பியன் ஆனது. ஒன்றிணைந்த அணியின் சார்பாக கலந்துகொண்ட உக்வேனியா நாட்டு வீரர்கள் அனைவரும், ஊக்க மருந்தை உட்கொண்டு அதிகப் பதக்கங்களை வென்றதாக மாற்றானில் காண்பிக்கப்படுகிறது. (பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக உக்வேனியா என்கிற கற்பனை நாடு, ‘மாற்றானி’ல் இடம்பெற்றுள்ளது.) 

உண்மையில், பார்சிலோனா ஒலிம்பிக்ஸில் போதை மருந்து குற்றச்சாட்டுக்காக 5 பேர் பிடிபட்டார்கள். ஒன்றிணைந்த அணியின் சார்பாகக் கலந்து கொண்டவர்களில் மடினா பிக்டாகிரோவா என்கிற மராத்தான் வீரர் மட்டும் இக்குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டார். அவர் கலந்து கொண்ட மராத்தான் போட்டியில் நான்காம் இடத்தையே பிடித்தார். 

இதனால் 1992 ஒலிம்பிக்ஸில் சோவியத் நாடுகள் (ஒன்றிணைந்த அணி) ஊக்க மருந்தின் உதவியால் எந்த ஒரு பதக்கத்தையும் பெற்று ஆதாயம் அடையவில்லை. இதுதவிர, உக்வேனியா சார்பாக தங்கம் வாங்கிய வீரர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் நோயினாலும், விமான விபத்தினாலும் இறந்து போன உண்மையை தமிழ்நாட்டைச் சேர்ந்த சூர்யாதான் மிகவும் புத்திசாலித்தனமாகக் கண்டுபிடிப்பதாகவும் படத்தில் காட்சிகள் உள்ளன. 

நிஜத்தில் இது சாத்தியமேயில்லை. ஒரு ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்கிய அத்தனை பேரும் காணாமல் அல்லது இறந்து போயிருந்தால் அதைக் கண்டு ஒலிம்பிக்ஸ் சங்கமோ அல்லது மீடியாவோ ஒருநிமிடம் கூட சும்மா இருந்திருக்காது. நிச்சயம் உண்மைகள் வெளியே வந்திருக்கும்.

1988 ஒலிம்பிக்ஸில் நடந்த ஒரு சம்பவத்தை எந்த ஒரு விளையாட்டு ரசிகரும் மறக்கமுடியாது. 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் கார்ல் லூயிஸைத் தோற்கடித்த பென் ஜான்சன், ஒரேநாளில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக மாறினார். ஆனால் இந்த சந்தோஷம் அற்ப ஆயுளில் முடிந்தது. ஊக்கமருந்து உட்கொண்டதாக சோதனையில் தெரியவந்து, அவரிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது. இப்படி ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் முந்தைய ஒலிம்பிக்ஸில் நடந்துள்ள நிலையில், ஒரு தேசமே மிகத் தைரியமாக ஊக்க மருந்தினை உட்கொள்ளும்படி தன் வீரர்களுக்குக் கட்டளையிடுவது எங்குமே நடக்காத ஒரு கற்பனை. 

பென் ஜான்சனை நினைவில் கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் ஒரு வீரர் தவறு செய்யலாம். ஆனால், ஒட்டுமொத்த அணியும் தவறான பாதையில் செல்வதென்பது சாத்தியமில்லாதது. ஒலிம்பிக்ஸில் முதல் முறையாகக் கலந்துகொள்ளும் ஒரு தேசம், இப்படிப்பட்ட செயலில் இறங்காது. அதுவும் 12 நாடுகள் பங்கேற்ற ஒன்றிணைந்த அணியில், ஒரு நாடு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட வேண்டும்? 

1996 ஒலிம்பிக்ஸில் பழைய சோவியத் நாடுகள் தனித்தனியாகவே போட்டியிட்டன. இதனால் அமெரிக்கா மிக சுலபமாக அதிக தங்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. இன்று தனித்தனியாகப் போட்டியிடும் 12 நாடுகளும், ஒரு ஒலிம்பிக்ஸில் ஒன்றாகப் போட்டியிட்டன என்பது இங்கு யாரும் அவ்வளவாக அறியாத செய்தி. இதற்காக (மட்டும்) மாற்றானுக்கு நன்றி.


No comments:

Post a Comment