வேதியியல்
பொதுவாகவே வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும்போது 'முழுதாக
வேதியியலுக்கு விருது வழங்கப்படுவது குறைந்துவிட்டது. வேதியியலை ஊறுகாய்
மாதிரி தொட்டுக்கொண்டு இயற்பியல் அல்லது உயிரியல் சார்ந்த துறைக்கே பரிசு
அளிக்கப்படுகிறது’ என்ற பேச்சு எழும். இந்த ஆண்டும் அப்படியே நடந்து
இருக்கிறது. உயிரியல் சார்ந்த செல் ஏற்பிகள் (Cell receptors) பற்றிய
கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி ஆராய்ச்சியாளர்கள், ராபர்ட்
ஜே.லெஃப்கோவிட்ஸ் (Robert J. Lefkowitz) மற்றும் பிரையன் கே. கோபில்கா
(Brian K. Kobilka)ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல்
பரிசு அளிக்கப்படுகிறது. செல் ஆராய்ச்சியில் ஜி-புரதங்களின் மேற்பரப்பில்
உள்ள ஏற்பிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்தப் பரிசு
வழங்கப்படுகிறது.
நாம் உட்கொள்ளும் பெரும் பான்மையான மருந்துகள், மாத்திரைகள் இந்த ஜி -
புரதச் செல் ஏற்பிகளின் வழியாகவே தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றன.
இயற்பியல்
ஓர் அணுவுக்குள் என்னென்ன இருக்கும்? புரோட்டான், எலெக்ட்ரான்,
நியூட்ரான். இந்த மூன்று மட்டும் இல்லாமல், ஓர் அணுவின் உட்கருவுக்குள்
இன்னும் சில அடிப்படைத் துகள்கள் இருக்கின்றன. இவற்றை குவான்டம், க்வார்க்
என இன்னும் பல பெயர்களில் சொல்வார்கள். இந்த அடிப்படைத் துகள்களைச்
சேதப்படுத்தாமல், அவற்றின் பண்புகளை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற
ஆராய்ச்சிக்குத்தான் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு. இந்தப் பரிசை
செர்ஜ் ஹாரோஷே (Serge Haroche)என்ற ஃப்ரான்ஸ் விஞ்ஞானியும், டேவிட் ஜே.
ஒயின்லாண்ட் (David J. Wineland) என்ற அமெரிக்க விஞ்ஞானியும்
பகிர்ந்துகொண்டு உள்ளனர். நோபல் பரிசை இவர்கள் கூட்டாக வென்று இருந்தாலும்,
ஆராய்ச்சியைச் சேர்ந்து செய்யவில்லை. இருவருடைய வழிமுறைகளும் வெவ்வேறானவை.
அடிப்படைத் துகள்களைச் சிதைக்காமலேயே அதன் பண்புகளை ஆராய முடியும் என்பதை இவர்கள் நிரூபித்து உள்ளனர். இதன் மூலமாக குவான்டம் இயற்பியல் பல படிகள் முன்னோக்கிச் செல்லும்.
மருத்துவம்
ஸ்டெம் செல்கள்(Stem Cells) எனப்படும் குருத்தணு செல்கள் தொடர்பான
ஆராய்ச்சியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஜான் பி. கர்டன் (John B.
Gurdon) என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருக்கும், ஷின்யா
யாமனகா (Shinya Yamanaka) என்ற ஜப்பான் ஆராய்ச்சியாளருக்கும்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.
குருத்தணு செல் ஆராய்ச்சியின் மூலம் உடலில் இருந்து முழு வளர்ச்சி
அடைந்த (mature cells) எந்த ஒரு செல்லையும்கொண்டு, உடலில் எந்த இடத்திலும்
பயன்படக்கூடிய குருத்தணு செல்களை உருவாக்க முடியும். இந்தக் குருத்தணு
செல் ஆராய்ச்சியின் மூலம் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணம் அளிக்க முடியும். மாரடைப்பால் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளைச்
சரி செய்வதற்கான ஆராய்ச்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இருவரின் முயற்சிகளின் மூலம் மனிதர்களுக்குத் தேவையான குருத்தணு
செல்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கி இருக்கிறது.
பொருளாதாரம்
இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, லியாட் ஷாப்லெ (Lloyd
Shapley) மற்றும் ஆல்வின் ரோத் (Alvin Roth) ஆகிய அமெரிக்கப் பொருளாதார
ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சந்தை வடிவமைப்பு (Market design)பற்றிய
இவர்களது கோட்பாடுகளுக்காக இந்த அங்கீகாரம்.
மழைக் காலத்தில் தள்ளு வண்டியில் ஐஸ் விற்பதும், மின்சாரமே இல்லாத ஊரில்
மின்விசிறியை விற்பதும் நஷ்டத்தில்தான் முடியும். மாறாக, தொடர்ந்து
மின்வெட்டு நீடிக்கும் ஊரில் இன்வெர்டர் விற்பவர்களை வரவைக்க வேண்டும்.
இப்படிக் குறிப்பிட்ட பொருட்களை விற்பவர்களை, குறிப்பிட்ட பொருட்களை
வாங்குபவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு சந்தை மாதிரியை உருவாக்குவதற்கான மிகப்
பொருத்தமான மற்றும் திறன்மிக்க கோட்பாடுகளை லியாட் ஷாப்லெ மற்றும்
ஆல்வின் ரோத் உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக இந்தக்
கோட்பாடுகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். இருவரின்
வடிவமைப்புகளும் கோட்பாடுகளும் வெவ்வேறானவையாக இருந்தாலும், இரு
வடிவமைப்புகளின் ஒட்டுமொத்த தொகுப்புகளும் சந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுபவை
என்ற காரணத்துக்காக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு
உள்ளது.
இலக்கியம்
சீன எழுத்தாளர் மோ யான் (Mo Yan) இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று
இருக்கிறார். மோ யான் என்பது இவரது புனை பெயர். இதற்கு சீன மொழியில்
'பேசாதே’ என்று பொருள். இவருடைய இயற்பெயர் குயான் மோயெ (Guan Moye)..
சீனாவில் இருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் எழுத்தாளர்.
சீனாவில் இவருடைய பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. அதேசமயம்
இவருடைய புத்தகங்கள் கள்ளச் சந்தையில் அதிகம் பதிப்பிக்கப்பட்டும்
இருக்கின்றன. இவரது நாட்டுப்புறக் கதைகளிலும், நாவல்களிலும் மாய யதார்த்தத்
தன்மை (Hallucinatory / Magical Realism) இருக்கும்.
சீனாவின் மக்கள் ராணுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றியபோது எழுதத்
துவங்கிய இவர், பின்னர் மக்கள் ராணுவ அகாடமியில் கலையையும் இலக்கியத்தையும்
சொல்லித்தரும் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான் இவருடைய முதல்
நாவல் வெளியானது. பிறகு பல சிறுகதைகள், நாவல்கள், சீனாவின் கம்யூனிசப்
புரட்சி, கலாசாரப் புரட்சி பற்றிய வரலாறுகள் முதலானவற்றை எழுதினார். இவரது
படைப்புகள் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
அமைதி
கடந்த 60 ஆண்டுகளாக ஐரோப்பாவில் ஜனநாயக அரசுகள் சிதையாமலும், போர்
இல்லாத அமைதியான சூழல் நிலவவும் காரணமாக இருப்பதற்காக ஐரோப்பிய யூனியன்
(Europian Union) அமைப்புக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டு உள்ளது.
14-ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தே ஐரோப்பாவில் எல்லா நாடுகளும்
தங்களுக்குள் அதிகமாக சண்டை போட்டுக்கொண்டுதான் இருந்தன. கடல் மார்க்கமாக
பல நாடுகளைக் காலனி ஆதிக்கம் செய்ய முற்பட்டதில் இருந்தே இந்தப் போர்வெறி
தீவிரமாகத் துவங்கியது. இதற்கு உச்சமாக முதல் உலகப் போரும், இரண்டாம் உலகப்
போரும் வெடித்தன. இந்த இரு போர்களிலும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம்
பொருளாதார ரீதியாகப் பல இழப்புகளைச் சந்தித்தன. இந்த நிலைமையில்தான்,
ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து பல அமைப்புகளை உருவாக்கி, இறுதியில் ஐரோப்பிய
யூனியனை அமைத்தன. தங்களுக்குள் யூரோசோன் (Euro zone)வர்த்தக மையம், யூரோ
(Euro) பொது நாணயம் போன்றவற்றை அமைத்தன. இந்த அமைப்பின் முயற்சிகள்
மூலமாகவே ரத்த பூமியாக இருந்த ஐரோப்பா, அமைதிப் பூங்காவாக இருக்கிறது.
நல்லதொரு பகிர்வு...
ReplyDeleteசேமித்துக் கொண்டேன்...
நன்றி...