Search This Blog

Friday, November 02, 2012

அருள்வாக்கு - நித்யவஸ்து!


அநித்ய வஸ்துக்களைப் பற்றி நமக்கே நன்றாகத் தெரியும். நமக்கு நன்றாகத் தெரிகிற எல்லாமுமே அநித்ய வஸ்துக்கள் தான்! நித்ய வஸ்து மனோ, வாக்கு கடந்ததானாலும் ஒரு மாதிரி சூசகமாக அதை ஆத்ம சாஸ்த்ரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றிலிருந்து நித்ய வஸ்துவான ஆத்மாவைப் பற்றியும் அடிப்படை அறிவு பெறவேண்டும். நித்ய சாந்தியும் நித்ய சௌக்யமும் தருவதான அதைப் பற்றிய நினைப்பைக் கொண்டே தற்கால சாந்தி சௌக்யங்களை மட்டும் தரக்கூடிய அநித்ய வஸ்துக்களைத் தள்ள வேண்டும்.
இந்த ஆரம்ப நிலையில் அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட வேண்டுமென்றில்லை. நித்ய வஸ்துவான ஆத்மாவாக இல்லாவிட்டாலும் நம்மை அந்த நித்யத்திடம் கொண்டு சேர்க்க ஸஹாயம் செய்வதாக அநித்ய வஸ்துக்களிலேயே அநேகம் உண்டு. ஆத்ம சாஸ்த்ரங்கள், அதைப் பற்றிப் பெரியோர்கள் செய்யும் உபதேசம், பரிசுத்தமான பாவத்தை உண்டாக்கும் புண்ய ஸ்தலங்கள், புராணம், ஸ்தோத்ரம் முதலானவை - என்றிப்படிப் பல இருக்கின்றன. இதுகளும் ஆத்மா இல்லைதான். இதெல்லாங்கூட அடிபட்டுப்போன ஸ்திதியில்தான் ஆத்ம ஸாக்ஷாத்காரம் உண்டாவது. எந்தக் கார்யமும் எண்ணமுமில்லாமல் ஆத்மா ஒன்றாக மாத்திரம் இருப்பது தான் நித்யாநுபவமே தவிர மற்ற எதுவுமேயில்லை; அது ஒன்றுதான் பரம ஸத்யாநுபவமே தவிர வேறே எதுவுமில்லை. ஸ்வாமியே நேரே நின்று தரிசனம் கொடுத்தால்கூட, ஸாக்ஷாத் அம்பாள் மடியில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்தால்கூட, அதெல்லாமும் ஆத்மாநுபவமான நித்ய ஸத்யாநுபவம் இல்லைதான். ஆனால் இதெல்லாம் அதற்கு ரொம்பக்கிட்டே கொண்டுவிடக் கூடியவை. இப்படி ரொம்பக் கிட்டேயிருப்பதிலிருந்து ரொம்ப ரொம்ப ஆத்மாவுக்குத் தள்ளி தூரத்தில் நம்மைக் கொண்டு விட்டு விடுவதாகவும் அநேக சௌக்யங்கள், அதாவது அப்போதைக்கு நாம் சௌக்யமாக நினைப்பவை இருக்கின்றன. அவற்றில், இந்த ஆரம்பப் படியிலுள்ளபோது நல்லதாக இருப்பதையே விவேகத்தினால் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டே நித்ய வஸ்துவிடம் சேர வழி செய்து கொள்ள வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment