இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர்கள் ஒரு பெரிய சோகத்தைக் கடந்துதான்
சாதிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார்கள். டிசம்பர் 2006ல்,
கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி மேட்ச் நடந்து கொண்டிருக்கும் போது கோலியின்
தந்தை
இறந்துபோனார். ஆனால், தம்முடைய அணி கடினமான சூழ்நிலையில் இருந்ததால்
அதிகாலையில் தந்தை இறந்த செய்தி கிடைத்தும் தொடர்ந்து அன்றைய ஆட்டத்தில்
கலந்து கொண்டு 90 ரன்கள் அடித்து அணியை
மீட்டெடுத்த பிறகுதான் தந்தைக்கான இறுதிக் கடமைகளை முடிக்கச் சென்றார்
கோலி. புஜாராவுக்கும் இப்படிப்பட்ட ஓர் இழப்பு உண்டு. 2005ல், தம்முடைய
17வது வயதில், புற்றுநோயின் பாதிப்பால் தாயைப்
பறிகொடுத்தார். தாய் இறந்த அதே தேதியில்தான் (அக். 9) முதல் டெஸ்ட் ஆட
புஜாராவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
2010ல், இந்திய அணியில் இடம்பிடித்த புஜாரா, அதற்கு முன்பு 2006லிருந்து
ரஞ்சி மற்றும் இதர உள்ளூர் போட்டிகளிலும் இந்தியா ஏ அணிக்காகவும்
மாங்குமாங்கு என்று ரன்களைக் குவித்து வந்தார். கங்குலி ஓய்வு
பெற்றபிறகு, புஜாராவை ஒதுக்கிவிட்டு யுவ்ராஜ் சிங், ரைனாவுக்கு
வாய்ப்பளித்தது, முன்னாள் தேர்வுக்குழு. எதைப் பற்றியும் கவலைப்படாமல்
ஆடுகிற மேட்சுகளிலெல்லாம் டபுள் செஞ்சுரி, டிரிபிள் செஞ்சுரி அடித்து ரன்
மிஷினாக இருந்தார் புஜாரா. இதனால், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில்
புஜாரா தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் டெஸ்டிலேயே, சேஸிங்கில் மூன்றாவதாகக்
களம் இறங்கி சுறுசுறுவென 72 ரன்கள் எடுத்து தம்முடைய வருகையை
உலகுக்கு அறிவித்தார். ஆனால், அடுத்தடுத்து இரண்டு சறுக்கல்கள் ஏற்பட்டன.
தென் ஆப்பிரிக்காவில் ஆடிய டெஸ்டுகளில், புஜாரா சரியாக ஆடவில்லை. தொடர்ந்து
வந்த ஐ.பி.எல்.லில் காயம் ஏற்பட்டு, பல மாதங்கள் படுக்கையில்
கிடக்க நேர்ந்தது. இதனால் மீண்டும் யுவ்ராஜ், ரைனாவுக்கும் புதிதாக
கோலிக்கும் டெஸ்ட் மேட்சுகளில் வாய்ப்பளிக்கப்பட்டன. நல்ல வேளையாக
டிராவிடும், லஷ்மணும் ஓய்வு பெற்றதால் அணிக்குள் மீண்டும் சேர்க்கப்பட்ட
புஜாராவுக்கு, நிரந்தரமாக மூன்றாவதாகக் களம் இறங்க நியூசிலாந்துடனான டெஸ்ட்
தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. உடனே ஒரு செஞ்சுரி அடித்தார். இப்போது
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் டபுள் செஞ்சுரி. இதோ இன்று ஒரு சதம். அடுத்த திராவிட்
கிடைத்துவிட்டார் என்று கிரிக்கெட் நிபுணர்களும் ரசிகர்களும் புஜாராவை
முழுமனதாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
‘நான்கூட ஆரம்ப காலங்களில் இவ்வளவு சிறப்பாக ஆடவில்லை’என்று பாராட்டு தெரிவிக்கிறார் டிராவிட்.
சாதாரணமாக செஞ்சுரி அடித்ததோடு புஜாரா திருப்தியடைவதில்லை. முதல்தர
ஆட்டங்களில் அவர் அடித்த 16 செஞ்சுரிகளில், ஒன்பது செஞ்சுரிகள் 150
ரன்களுக்கு மேல் கடந்தவை. இங்கிலாந்துக்கு எதிரான முதல்
டெஸ்டில் புஜாரா கடைசி வரை அவுட் ஆகாமல் ஆடியதைக் கண்டு இங்கிலாந்து
பௌலர்கள் மிரண்டு போனார்கள். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும்
அவர்களால் புஜாராவை அவுட் செய்யவே முடியவில்லை.
புஜாராவை டெஸ்ட் மேட்ச் பிளேயர் என்று மட்டும் ஒதுக்கிவிடமுடியாது.
வெகுவிரைவில் ஒருநாள் அணியில் அவர் இடம்பிடிக்கப் போகிறார். இந்திய
வீரர்களுக்கு இடையே நடந்த சேலஞ்சர் டிராபியில், ஆடிய மூன்று மேட்சுகளில்,
இரண்டு செஞ்சுரிகளும் ஒரு பிஃப்டியும் அடித்திருக்கிறார் புஜாரா.
ஃபீல்டிங்கும் அமர்க்களமாகப் பண்ணக்கூடியவர் என்பதால் ஒருநாள்
ஆட்டத்துக்கும் பொருந்திப் போகிறார்.
சமீபகாலமாக சின்னஞ் சிறிய ஊர்களில் இருந்துதான் அற்புதமான வீரர்கள்
இந்திய கிரிக்கெட்டுக்குக் கிடைக்கிறார்கள். ராஜ்கோட் என்கிற சிறிய
ஊரிலிருந்து கிளம்பியவர் புஜாரா. ‘கிரிக்கெட்டுக்குத் தேவையான பெரிய
வசதிகள் எதுவும் கிடைக்காமல், கிடைத்த வசதிகளைக் கொண்டுதான் ஆடப்
பழகியிருக்கிறேன்,’ என்கிறார் புஜாரா.
எட்டு வயதில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்து பல தடைகள், இழப்புகளைத்
தாண்டித்தான் இவ்வளவு தூரம் சாதித்திருக்கிறார். தாய் இறந்த அடுத்த
வருடத்தில், அக்-19 உலகக்கோப்பையில் கலந்துகொண்ட புஜாரா, அதிக ரன்கள்
எடுத்த வீரர் என்கிற சாதனையைச் செய்தார். திறமை மட்டுமில்லாமல் உறுதியான
மனோதிடம் கொண்ட வீரர்கள்தான் இந்திய கிரிக்கெட்டுக்கு அவசியம்.
புஜாராவுக்கு அதற்குரிய தகுதிகள் இயல்பாக இருக்கின்றன. டிராவிட்
இடத்தை நிரப்புவதும் அவருடைய இழப்பை உணராமல் இருப்பதும் சாதாரண விஷயமில்லை.
புஜாராவால் இந்த இரண்டையும் போகிற போக்கில் சாதிக்க முடிந்திருக்கிறது.
புஜாராவின் நம்பிக்கை மேலும் சிறக்கட்டும்...
ReplyDelete