Search This Blog

Sunday, November 04, 2012

சாய்னா நேவால் புத்தகம்


இந்திய பாட்மின்டனின் இளம்புயல் சாய்னா நேவால் தம்முடைய வெற்றிக் கதையை, , Saina Nehwal - Playing to win என்ற தலைப்பில் 120 பக்கங்களில் சுருக்கமாக, சுவாரஸ்யமாக புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். பெங்குயின் வெளியிட்டுள்ளது. என் ஆரம்பகால வெற்றிகள் முதற்கொண்டு அனைத்துச் செய்திகளும் பத்திரிகைகளில் வெளியானபோது, என் அப்பா அவற்றைச் சேகரித்து, இத்தனை காலமும் பத்திரப் படுத்தினார். அதுதான் இந்தப் புத்தகம் எழுதுவதற்கு மிக உபயோகமாக இருந்தது" என்கிறார் சாய்னா. புத்தகத்திலிருந்து சில சுவாரஸ்ய பகுதிகள் இதோ:

ஹரியாணா மாநிலம், ஹிஸ்ஸாரில் தான் நான் பிறந்தேன். அங்கே இருந்த ஹரியாணா விவசாயப் பல்கலைக்கழகத்தில் என் அப்பா டாக்டர் ஹர்வீர்சிங் விஞ்ஞானி. என் பெற்றோர் (அம்மா : உஷா நேவால்) இருவருமே பாட்மின்டன் ஆட்டக்காரர்கள். அவர்கள் விளையாடும் போது என்னையும், அக்கா அபுவையும் அழைத்துக்கொண்டு போவார்கள். பெரும்பாலும், நான் அங்கே தூங்கிப் போய்விடுவேன். சில சமயங்களில் கண்களை அகல விரித்து, அவர்கள் விளையாடுவதை ஆர்வத்தோடு பார்த்ததும் உண்டு. 

அப்போது எனக்கு எட்டு வயது. அப்பாவுக்கு ஹைதராபாத்தில் இருக்கும் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தில் பிரதம விஞ்ஞானியாகப் பணி உயர்வு பெற்றார். எனவே ஹைதராபாத் வாசம். அங்கே என்னை கராத்தே வகுப்பில் சேர்த்தார்கள். ஒரு வருஷம் கராத்தே கற்றுக்கொண்டு, பிரவுன் பெல்ட் வாங்கினேன். கராத்தே வகுப்பில் மூச்சுப் பயிற்சியின் போது மூச்சை உள்ளே இழுத்து வைத்துக்கொண்டு, வயிற்றுப் பகுதியில் பளுவைத் தாங்க வேண்டும். நான் மூச்சை உள்ளிழுத்துப் படுத்துக் கொண்டிருக்க, ஒரு 90 கிலோ குண்டு ஆசாமி, என் வயிற்றில் உட்கார்ந்துகொண்டார். திடீரென்று மூச்சுப் பிடிக்க முடியாமல், மூச்சை விட்டு விட, அவருடைய எடையைத் தாங்க முடியாமல் ஒரே வயிற்று வலி. அதனால் என் கராத்தே பயிற்சி ஒரு முடிவுக்கு வந்தது.

அடுத்த கோடையில், என்னை பாட்மின்டன் பயிற்சியில் அப்பா சேர்க்க விரும்பினார். ஆனால், அதற்கான கடைசித் தேதி முடிந்துவிட்டது. பாட்மின்டன் கோச்களிடம் சொல்லி, எனக்கு விளையாட ஒரு வாய்ப்புத் தரச் சொல்ல, என் ஆட்டத்தைப் பார்த்த கோச்கள் என்னைப் பயிற்சிக்குச் சேர்த்துக் கொண்டார்கள். கோடைப் பயிற்சி முடிந்த போது, எங்களில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப் போவதாக கோச் கூறினார். அதற்கான போட்டியில் எனக்கு இரண்டாம் இடமே கிடைத்தாலும், அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது. முதல் இடம் பெற்றுப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட நாக்பூரைச் சேர்ந்த தீப்தி விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்ல வேண்டி இருந்ததால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

பாரதிய வித்யாபவன் வித்யாஷ்ரமத்தில் படிப்போடு, லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் எனது பாட்மின்டன் பயிற்சியும் சேர்ந்து கொண்டது. அப்பாவும், நானும் தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, பஸ் பிடித்து, 25 கி.மீ. தூரம் பயணித்து, ஸ்டேடியத்துக்குப் போவோம். எட்டு மணி வரை பயிற்சி. அப்புறம் அவசரம், அவசரமாக வீடு திரும்பி, ஸ்கூலுக்குப் புறப்படுவேன். பிற்பகலில், மூன்றரை மணிக்கு அம்மா என்னை ஸ்கூலிலிருந்து நேரே ஸ்டேடியத்துக்கு அழைத்துக் கொண்டு போவார். பயிற்சி முடியும் நேரத்தில், அப்பா வந்து என்னை அழைத்துக் கொண்டு வீடு திரும்புவார். எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கும். இரவில் கால் வலிக்கும்; அழுவேன். அம்மா ஆயில் மசாஜ் செய்து விடுவார். கண்களில் கருவளையம் வரும். ஆனாலும், பாட்மின்டன் பயிற்சியை விட்டுவிடவில்லை. 1999ல், திருப்பதியில் நடந்த 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டியில் ஜெயித்தது என் முதல் வெற்றி. ஐந்நூறு ரூபாய் பரிசு கொடுத்தார்கள். அதை என் பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டேன். இன்றைக்கும் அதைத்தான் நான் செய்து வருகிறேன்.

ஜூனியர் ஜெர்மன் மற்றும் டச் ஓபன் போட்டிகளை முடித்து விட்டு ஊருக்குத் திரும்பிய 25 நாட்களில் என் பத்தாம் வகுப்பு பரீட்சை. ஒரு வருடத்துப் பாடங்களையும், நான் அந்த 25 நாட்களில் படித்து பரீட்சைக்குத் தயாராகும் டென்ஷன். இரவு பகலாகப் படித்தேன். என் அப்பா, அம்மா இருவரும் என் கூடவே இருந்து உதவினார்கள். மேட்ச் ஆடுவதைவிட பரீட்சை எனக்கு அதிக பட படப்பைக் கொடுத்தது. அதுவும் சமூக அறிவியல் பாடம் ரொம்ப கஷ்டம். நான் சமூக அறிவியல் பரீட்சையை எழுதி முடித்துவிட்டு வெளியில் வரும்வரை என் அப்பா டென்ஷனோடு காத்திருந்தார். நான் ஃபெயிலாகிவிடுவேன் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் 65 சதவிகித மார்க்ஸோடு நான் 10ம் வகுப்பு பாஸ்! ஆரம்பத்தில் டாக்டராக விரும்பிய நான், இப்போது எனக்கு முழு நேரம் பாட்மின்டன் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். என் அப்பாவும் அதற்கு ஊக்க மளித்தார். 

2006ல் பிலிபைன்ஸ் ஓபன் போட்டியில் வெற்றி. ஊருக்குத் திரும்பியதும், பள்ளி அசெம்பிளியில் பேசச் சொன்னார்கள். இரண்டு வருடங்கள் கழித்து, ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் தினத்துக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். பள்ளி முதல்வர் என்னை ‘மேடம்’ என்று அழைத்தபோது எனக்கு இன்ப அதிர்ச்சி!

2010 ஜனவரியில் அப்பாவுக்கு மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரியிடமிருந்து ஃபோன். ‘உங்கள் மகள் சாய்னாவுக்கு பத்மஸ்ரீ விருது தரப்பட உள்ளது. ஏற்றுக்கொள்ள சம்மதமா?’ என்று அவர் கேட்க, அப்பா மகிழ்ச்சியோடு சம்மதித்தார். மறுநாள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மே மாதம் ஜனாதிபதி மாளிகையில் விருது விழா. விருதை வழங்கும்போது, யாருடனும் பேசுவது வழக்கமில்லை என்றாலும் ஜனாதிபதி பிரதிபா பாட்டில் சிரித்த முகத்தோடு, ‘நானும் சிறு வயதில் டேபிள் டென்னிஸ் ஆடி இருக்கிறேன்’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்."

சாய்னா தம் தினசரி உணவு குறித்தும் புத்தகத்தில் பேசி இருக்கிறார்:

காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் பால். காலை உணவு முட்டை வெள்ளைக் கரு, பிரவுன் பிரெட். மதிய உணவுக்கு இரண்டே இரண்டு ரொட்டி, தால், சப்ஜி, கிரில்டு சிக்கன், லஸ்ஸி. டின்னருக்கு லஞ்ச் போல வேதான். ஆனால் ரொட்டி மட்டும் ஒன்றே ஒன்று தான். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தக் கட்டுப்பாடுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, எனக்குப் பிடித்த ஐட்டங்களை அளவோடு ருசித்துச் சாப்பிடுவேன்.

பிடித்த விஷயங்கள்:

படம் வரைவது, தினமும் நியூஸ் பேப்பரை எடுத்ததும், நான் நேரே விளையாட்டுப் பகுதியைத்தான் படிப்பேன். அடுத்து சுடோக்கு போடுவேன். பாலிவுட் இசை கேட்கப் பிடிக்கும். நிறைய இந்தி சினிமா பார்ப்பேன். என் ஆல் டைம் ஃபேவரிட்: தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே.




No comments:

Post a Comment