Search This Blog

Saturday, November 17, 2012

எனது இந்தியா (மத்த விலாசம் - II) - எஸ். ராமகிருஷ்ணன்....

அது, தன்னுடைய பிட்சைப் பாத்திரம் என்பதைப் புரிந்துகொண்ட காபாலிகன்,  பைத்தியக்காரனிடம் இருந்து கபால ஓட்டைப் பிடுங்க முயற்சிக்கிறான். ஆனால் பைத்தியக்காரனோ, அதை ஒரு தங்கக் கிண்ணம் என்று சொல்லி காபாலிகனுக்கே பரிசாகத் கொடுத்துவிடுகிறான். உங்களைச் சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள் என்று பௌத்த துறவியிடம் மன்னிப்பு கேட்கிறான் காபாலிகன். அதற்கு, உன்னை சந்தோஷப்படுத்த முடிந்ததற்கு நன்றி என்று பெருந்தன்மையுடன் சொல்கிறான் புத்த துறவி. அவரிடம் இருந்து விடைபெற்று சத்தியசோமன் தன் காதலியோடு புறப்பட்டுச் செல்வதோடு நாடகம் நிறைவுபெறுகிறது. நாய் தூக்கிச் சென்ற கபால ஓட்டை முன்வைத்து புத்த துறவியும், சமணத் துறவியும், காபாலிகர்களும் கேலிசெய்யப்படுகின்றனர். மூவருமே மதத்தின் பெயரால் பிறரை ஏமாற்றுகிறவர்களாக சித்திரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

பசுவின் கொம்பில் மது வாங்கிக் குடிப்பது, கபாலத்தில் இறைச்சி உண்பது, பெண்களும் மது குடித்துவிட்டு ஆடுவது, பௌத்த பிக்குகள் வணிகர்களின் விருந்தில் கலந்துகொண்டு உல்லாசமாக வாழ்வது, சமணர்களைக் கேலிசெய்வது என, சமூக வாழ்வு துல்லியமாக இந்த நாடகத்தில் பதிவாகி இருக்கிறது.
இந்த நாடகம், மகேந்திர வர்மனின் அரச சபையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ஆகவே, இதன் பார்வையாளர்களாக இருந்தவர்கள் அரசை குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்திருக்கக் கூடும். பொதுமக்கள் இந்த சமஸ்கிருத நாடகத்தைப் பார்த்தார்களா? இந்த நாடகத்துக்கு எவ்வாறு எதிர்வினை செய்தனர் என்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நாயோ அல்லது பௌத்த பிக்குவோதான் கறிக்கு ஆசைப்பட்டு தன்னுடைய பிட்சைப் பாத்திரமான கபால ஓட்டைத் திருடி இருக்க வேண்டும் என்று சத்தியசோமன் சொல்வது பௌத்த சமயத்தை விமர்சிக்கும் குரலாகும். அது வெறும் கேலி அல்ல. மாறாக, பௌத்தர்கள் மீதான வெறுப்பு. அதே வேளையில், வணிகனின் விருந்தை ரசித்துப் பாராட்டும் புத்த துறவி, 'புத்தர் ஏன் மது, மாது இரண்டையும் தனது சங்கத்தில் அனுமதிக்கவில்லை. இது நிச்சயம் கையாலாகாத மூத்தத் துறவிகள் செய்த ஏற்பாடாகத்தான் இருக்கக் கூடும். மூல பாடத்தைத் தேடிப்பார்க்க வேண்டும். நிச்சயம் இதை புத்தர் தடுத்திருக்க மாட்டார்’ என்று ஆதங்கப்படுகிறான். அவனுடைய மனது, ஞானத்தைவிடவும் போகத்துக்காக ஏங்கித் தவிக்கிறது. ஆகவே, பௌத்தம் குறித்த தனது தீவிரமான எதிர்ப்பு மனநிலையை மகேந்திரவர்மன் நாடகமெங்கும் பிரதிபலித்து இருக்கிறான்.

போதையில் கைப்பொருளை மறப்பதும், தெருவில் சண்டை போடுவதும், தனது பொருளை யாரோ திருடிவிட்டனர் என்று அப்பாவியை வம்புக்கு இழுப்பதும், குடிப்பதற்காக இடம் தேடி அலைவதும் 1,000 வருடங்களுக்கு முன்பு இருந்து இன்று வரை ஒரு நீண்ட மரபாகவே நடைபெற்று வருகின்றன போலும்.

மத்த விலாசத்தைப் போலவே, பகவதஜ்ஜூகமும் புத்த மதத்தைக் கேலி செய்கிறது. இந்த நாடகத்தில் ஒரு புத்த துறவி கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்று இருக்கிறான். அவனது சீடன் சாண்டில்யன். இருவரும் ஒரு நந்தவனத்தில் இருக்கும்போது வசந்த சேனா என்ற தாசி, பாம்பு கடித்து இறந்துவிடுகிறாள். அவளை எப்படியாவது பிழைக்கவைக்க சாண்டில்யன் வேண்டுகிறான். அவள் உடலுக்குள் புத்த துறவியின் ஆவி புகுந்துகொள்கிறது. தாசியின் ஆவியோ துறவியின் உடலுக்கு மாறிவிடுகிறது. இந்த மாறாட்டம் ஏற்படுத்தும் வேடிக்கைகள்தான் நாடகம்.

இதிலும் புத்தமதத் துறவிகளைக் கடுமையாகக் கேலிசெய்து இருக்கிறார் மகேந்திர வர்ம பல்லவன். ஒரு மன்னர் பௌத்த சமயத்துக்கு எதிராக எவ்வளவு கசப்பு உணர்ச்சியுடன் இருந்தார் என்பதன் அடையாளமாகவே இந்த நாடகங்கள் இருக்கின்றன. கேரளாவின் கூடியாட்டக் கலையில் மத்தவிலாஸ் இன்றும் நிகழ் கலையாக நடத்தப்பட்டு வருகிறது. மகேந்திர வர்மனைப் போலவே, ஹர்ஷரும் சமஸ்கிருத நாடகங்களை எழுதி இருக்கிறார். 'நாகானந்தம்’, 'ரத்னாவளி’, 'ப்ரியதர்சிகா’ என்ற மூன்று நாடகங்களை இவர் எழுதி இருக்கிறார். இவை, கவிஞர் பாண பட்டரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, வட இந்தியா சிறுசிறு மன்னர்களால் ஆளப்பட்டு சிதறிக்கிடந்தது. அவற்றை, ஹர்ஷரே ஒன்றிணைத்து ஆட்சி செய்தார். கி.பி. 590-ல் பிரபாகர வர்தனரின் மகனாகப் பிறந்தார் ஹர்ஷர். அவரது அண்ணன் ராஜீய வர்தன். இவனே ஹூணர்கள் என்ற நாடோடி இனத்தைப் போரிட்டு விரட்டி அடித்தவன். ஹூணர்கள், முரட்டு நாடோடி இன மக்கள். குப்தர்களின் ஆட்சி இவர்களால்தான் அழிந்தது. ஹூணர்களில் இரண்டு பிரிவுகள் இருந்தன. ஒன்று கறுப்பு ஹூணர். மற்றது வெள்ளை ஹூணர். இதில், கறுப்பு ஹூணர்கள் ரோமப் பேரரசைத் தாக்கி ஜெயித்தனர். அவர்களின் தலைவன் அட்டில்லா. ஹெபாத லேட்ஸ் எனப்படும் வெள்ளை ஹுணர்கள், இந்தியாவைத் தாக்கி இங்கிருந்த குப்த அரசை நிலைகுலையச் செய்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானியப் பகுதிகளைப் பிடித்து, தோராமான் தலைமையில் ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்த ஹுணர்களை ஒடுக்கியதில் ராஜீய வர்தன் முக்கியமானவர்.


ஹர்ஷரின் சகோதரி ராஜஸ்ரீயின் கணவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க ராஜீய வர்தன் சென்றபோது, கௌட மன்னன் சசாங்கனால் சூழ்ச்சிசெய்து கொலை செய்யப்பட்டான். அதற்கு பழிவாங்க ஹர்ஷர் படை எடுத்துச்சென்று சசாங்கனை வீழ்த்தி வங்காளத்தைக் கைப்பற்றினார்.
புத்த கயாவில் இருந்த போதி மரத்தைத் தோண்டி எடுத்துக் கொளுத்தியதோடு, பௌத்த விகாரைகளை இடித்துப் புத்த உருவங்களை சிதைத்தவன் இந்த சசாங்கனே. ஹர்ஷரின் ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன. கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தன. குறிப்பாக, கொள்ளையரின் வலது கை துண்டிக்கப்பட்டது. ஹர்ஷர், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது ஆட்சியின்போது நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்கியது. அப்போது வந்த சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷர் காலத்து இந்தியா குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். பௌத்த மதத்தைத் தழுவிய ஹர்ஷர், பௌத்த மடாலயங்களுக்கும் விகாரைகளுக்கும் நிறைய பொருளுதவிகள் செய்து இருக்கிறார். பௌத்த இலக்கியங்களை முறையாகக் கற்றுத்தேர்ந்ததோடு புத்த ஜாதகக் கதையின் கருப்பொருளைக்கொண்டு புதிய நாடகங்களை எழுதி இருக்கிறார். ஹர்ஷர் அறிவைப் பரவலாக்குகிறார். எல்லோருக்கும் கல்வி வழங்குகிறார் என்று உயர் ஜாதியினர் குற்றம் சாட்டி, அவரைக் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டினர். ஹர்ஷர் தலைமையில் நடக்க இருந்த தத்துவ விவாத அரங்குக்குத் தீ வைத்தனர். ஆனால், ஹர்ஷர் இந்தச் சதியில் இருந்து தப்பிவிட்டார். விசாரணையின்போது, சதியின் பின்னால் பண்டிதர்கள் பலர் இருப்பதை அறிந்து அவர்களை நாடு கடத்தினார் ஹர்ஷர். போரில் தோல்வியே காணாத ஹர்ஷர், தெக்காணத்தை நோக்கிப் படை எடுத்து வந்தபோது, சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியிடம் தோற்றுப்போனார்.

அசோகரைப் போலவே பௌத்த மத வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தார் ஹர்ஷர். அசோகர், இந்தியாவுக்கு வெளியே கடல் கடந்து புத்த மதம் பரவ வேண்டும் என்பதற்காக, இலங்கைக்குத் துறவிகளை அனுப்பி வைத்தார். அவரைப் போலவே, ஹர்ஷரும் பௌத்த மதம் பரவி இருந்த சீனாவுக்குத் தனது தூதுவர்களை அனுப்பி சீன அரசனுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். 
ஹர்ஷருக்கு சமஸ்கிருதக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் முறையாக சமஸ்கிருத இலக்கணங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு, இசையோடு பாடுவதற்கு ஏற்ற பாடல்களைப் புனைபவராகவும் இருந்தார். அவரது நாடகங்களின் உரையாடல்களும் கவித்துவமாகவே இருக்கின்றன. சமஸ்கிருத நாடக மரபில், உயிரோடு வாழ்ந்த ஒருவரின் வரலாற்றைக் கேலியாக நகைக்கும்படி மாற்றி எழுதும் நாடகங்களை பிரஹசனம் என்பார்கள். அப்படியான ஒரு நாடகம்தான், 'மத்தவிலாச பிரஹசனம்’.

இன்று நமக்கு கிடைத்துள்ள சமஸ்கிருத நாடகங்களில் மிகப் பழமையானது சுபந்து இயற்றிய 'உதயணன் வாசவதத்தை’ என்ற நாடகம். இது, கி.மு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதே கதையை, கவிஞர் பாஷனும் 'ஸ்வப்ன வாசவதத்தை’ என்ற பெயரில் நாடகமாக எழுதி இருக்கிறார்.

திருமணமான உதயணனை, ரத்னாவளிக்குக் கட்டிவைக்க சதி நடக்கிறது. அதற்காக, வாசவதத்தை காட்டில் இறந்து போய்விட்டாள் என்ற கட்டுக்கதை உருவாக்கப்படுகிறது.

அதை நம்பிய உதயணன், ரத்னாவளியை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், முகத்திரை போட்டு முகத்தை மறைத்த காரணத்தால் ரத்னாவளியை உதயணன் நேரில் பார்க்கவே இல்லை. அவர்கள் பயணம் செய்த கப்பல் விபத்துக்கு உள்ளாகி ஆளுக்கு ஒரு பக்கம் சிதறடிக்கப்படுகின்றனர். தன் கணவன் என அறியாமலேயே வேறு பெயரில் ரத்னாவளி அவனுடன் பழகத் தொடங்குகிறாள். அதில் ஏற்படும் விளைவுகளையும் குழப்பத்தையும் விவரிக்கிறது ஹர்ஷரின் நாடகம்.

சமஸ்கிருத மொழியின் முக்கியக் கவியான பாண பட்டர், ஹர்ஷரின் ஆஸ்தானக் கவிஞராக இருந்தார். இவரே, ஹர்ஷர் வாழ்க்கை வரலாற்றை, 'ஹர்ஷ சரிதம்’ என்ற நூலாக எழுதியவர். அதில், ஹர்ஷரின் கொடைத்திறனையும் அவரது அரசாட்சியின் சிறப்புக்களையும் நுட்பமாகப் பதிவுசெய்து இருக்கிறார். ரத்னாவளி எழுதிய ஹர்ஷரைப் போலவே, ஸ்ரீஹர்ஷர் என்ற இன்னோர் அரசர் 12-ம் நூற்றாண்டில் நள சரித்திரத்தை நைஷதம் என்ற பெயரில் எழுதினார். அதை புகழேந்திப் புலவர் நைடதம் என தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். இரண்டு ஹர்ஷர்களும் வேறுவேறு நபர்கள்.

ஹர்ஷரும் மகேந்திர பல்லவனும் கால வெள்ளத்தில் மறைந்துவிட்டனர். ஆனால் அவர்களின் நாடகங்கள் காலத்தின் அழியாத சாட்சிகளாக மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன. தன்னுடைய வாழ்க்கையை காலவெளியில் நீட்சி பெறச்செய்யவே மனிதன் ஆசைப்படுகிறான். மாமன்னராக இருந்தாலும் மரணம் வாழ்வின் முற்றுப்புள்ளியாகிவிடுகிறது.  மரணத்தையும் தாண்டி தன் படைப்புகளின் வழியே  வாழ்வது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். அதுதான், உண்மையான கலைக்குக் காலம் தரும் பரிசு.

1 comment: