ஜான் கூச் ஆடம்ஸ் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதம்
படித்துக் கொண்டிருந்த மாணவர். வயது 26. படிப்பில் சிறப்பாகத் தேறிய
பின்னர் வானவியல் பக்கம் திரும்பினார். ஏற்கெனவே 1781-ம் ஆண்டில்
கண்டுபிடிக்கப்பட்டிருந்த
யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப்பாதை தொடர்பான சில பிரச்னைகள் இருந்தன. அதாவது
யுரேனஸ் தனது பாதையில் ஒரே சீராகச் செல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகத் தெரிய
வந்தது. யுரேனஸை அலைக்
கழிப்பது எது என்று ஆராய்ந்தபோது யுரேனஸுக்கு அப்பால் ஒரு கிரகம்
இருக்கலாம் என்று தோன்றியது.
ஆடம்ஸ் இது தொடர்பாகச் சில கணக்குகளைப் போட்டு யுரேனஸ் கிரகத்துக்கு
அப்பால் இருக்கக்கூடிய கிரகம் குறிப்பாக ஓர் இடத்தில் இருந்தாக வேண்டும்
என்ற முடிவுக்கு வந்தார்.
எனவே ஆடம்ஸ் 1845-ம் ஆண்டு செப்டெம்பர் வாக்கில் கேம்பிரிட்ஜ் வான்
ஆராய்ச்சிக்கூட இயக்குனரை அணுகினார். இரவு வானில் Aquarius (கும்ப ராசி)
ராசியில் குறிப்பிட்ட இடத்தை நோக்கி
தொலைநோக்கியைத் திருப்பி கூர்ந்து கவனியுங்கள். புதிய கிரகம் தெரியும் "
என்று கூறினார். பின்னர் இங்கிலாந்தின் பிரபல வானவியல் விஞ்ஞானியையும்
அணுகினார். ஆனால் யாரும் இந்தச் ‘சின்னப் பையன்’ கூறியதைப்
பொருட்படுத்தவில்லை.
அவர்கள் மட்டும் ஆடம்ஸ் சொன்னபடி செய்திருந்தால் புதிய கிரகத்தைக்
கண்டுபிடித்தவர் என ஆடம்ஸுக்கு உரிய நேரத்தில் உரிய புகழ்
கிடைத்திருக்கும். அதில் இங்கிலாந்துக்கும் பெருமை கிடைத்திருக்கும்.
ஆடம்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில் பிரான்ஸ் நாட்டில்
உர்பன் லே வெரியர் என்ற இளைஞரும் யுரேனஸ் தொடர்பாக ஆராய்ந்து, யுரேனஸுக்கு
அப்பால் புதிய கிரகம் எங்கே இருக்கும் என்பதைக்
கணக்குப் போட்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தார். தமக்கு முன்னரே ஆடம்ஸ்
செய்த கண்டுபிடிப்பு பற்றி அவருக்குத் தெரியாது.
லே வெரியர் கூறுவது சரிதானா என்று வானை ஆராய்ந்து உறுதிப்படுத்துமாறு,
வெரியர் சார்பில் இங்கிலாந்தின் நிபுணர்களுக்கு வேண்டுகோள்
விடுக்கப்பட்டது. அப்போதும் இங்கிலாந்தின் நிபுணர்கள்
தகுந்த ஆர்வம் காட்டவில்லை. எனவே ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள்
விடப்பட்ட போது அவர்கள் உடனே இதில் ஈடுபட்டனர். 1846 செப்டெம்பர் 23-ம்
தேதி அவர்கள் தொலைநோக்கி மூலம்
வானை ஆராய்ந்தபோது புதிய கிரகம் தென்பட்டது. ஆடம்ஸ், லே வெரியர் கூறிய
புதிய கிரகம் அதுதான். அந்தக் கிரகத்துக்கு நெப்டியூன் (Neptune) என
ரோமானியக் கடவுளின் பெயர் வைக்கப்பட்டது.
நெப்டியூன் முதலில் கண்களில் சிக்கி அதன் பிறகே தொலைநோக்கியில்
சிக்கியது. இது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கண்டுபிடித்த பெருமை
யாருக்கு உரியது என்பதில் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே
தகராறு மூண்டது. இறுதியில் கூச் ஆடம்ஸ், லே வெரியர் ஆகிய இருவருக்குமே
இந்தப் பெருமை உரியது என்று முடிவு செய்யப்பட்டது.
சூரியனை புதன், வெள்ளி, பூமி,செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் ஆகிய
கிரகங்கள் தனித்தனி வட்டங்களில் சுற்றுகின்றன. நெப்டியூன் கிரகம் எட்டாவது
வட்டத்தில் அமைந்தபடி சூரியனைச் சுற்றுகிறது.
சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் உள்ள தொலைவு சுமார் 450 கோடி கிலோ மீட்டர்.
(இத்துடன் ஒப்பிட்டால் சூரியனிலிருந்து பூமியானது சுமார் 15 கோடி கிலோ
மீட்டர் தொலைவில் உள்ளது.) சூரியனை நெப்டியூன் ஒரு தடவை
சுற்றி முடிக்க 164 ஆண்டுகள் ஆகின்றன.
நெப்டியூன் கிரகம் கிட்டத்தட்ட சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது.
வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது. தொலைநோக்கி மூலம் பார்த்தால் அது
நீலநிற ஒளிப் புள்ளியாகத்தான் தெரியும். பூமிக்கு மேலே
பறக்கும் ஹப்புள் தொலைநோக்கி வந்த பிறகுதான் நெப்டியூன் கிரகத்தை முழுதாகப்
பெரிய கோளமாகப் படம் பிடிக்க முடிந்தது.
வியாழன், சனி, யுரேனஸ் போலவே நெப்டியூன் கிரகம் பெரிய பனிக்கட்டிக்
உருண்டை. இது யுரேனஸ் கிரகத்தை விடச் சற்றே சிறியது. பூமியைப் போல 17
மடங்கு எடை கொண்டது. நெப்டியூன் கண்கவர் நீலமாகத் தெரிவதற்கு
அந்தக் கிரகத்தின் வாயு மண்டலத்தில் மீதேன் வாயு உள்ளதே காரணம்.
நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து சுமார் 144 ஆண்டுகளுக்குப்
பிறகுதான் நெப்டியூன் பற்றி நிறையத் தகவல்களைப் பெற முடிந்தது. அமெரிக்க
நாஸா விண்வெளி அமைப்பானது பல கிரகங்களை நெருங்கி ஆராயும் நோக்கில் 1977-ம்
ஆண்டில்
வாயேஜர்-2 என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம்
முதலில் வியாழனையும் பின்னர் சனி கிரகத்தையும் நெருங்கி ஆராய்ந்து எண்ணற்ற
தகவல்களையும் படங்களையும் அனுப்பியது. அடுத்து அது
யுரேனஸ் கிரகத்தையும் இதே போல ஆராய்ந்தது. பின்னர் 1989-ம் ஆண்டில்
வாயேஜர்-2 விண்கலம் நெப்டியூன் கிரகத்தை நெருங்கி எண்ணற்ற படங்களை
அனுப்பியது. வாயேஜர் நெப்டியூனை நெருங்கியபோது அந்த விண்கலத்துக்கும்
நெப்டியூனுக்கும் இடையிலான தூரம் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர். இத்துடன்
ஒப்பிட்டால் பூமியிலிருந்து நெப்டியூன் குறைந்தது 300 கோடி கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. ஆகவே நெப்டியூன்
கிரகத்துக்கு அருகாமையில் போய் அதைப் படம் பிடித்து அனுப்பச் செய்வதில்
மனிதன் வெற்றி கண்டான் என்பது மிகப் பெரிய சாதனையே. விஞ்ஞானிகள்
பூமியிலிருந்து வாயேஜர் விண்கலத்துக்கு ஆணைகளைப்
பிறப்பித்தால் அவை போய்ச் சேர 4 மணி 6 நிமிடங்கள் ஆகின. ஆகவே வாயேஜர் நெப்டியூனை நெருங்கும்போது என்னென்ன செய்
வியாழன் கிரகத்தில் ‘செங்கண்’ எனப்படும் பெரிய திட்டுப் பகுதி உள்ளது.
நெப்டியூனிலும் இதே போல ஒரு திட்டுப் பகுதி உள்ளது என்பது வாயேஜர் விண்கலம்
மூலம் தெரிய வந்தது. பெயர்தான் திட்டுப் பகுதியே தவிர, இந்தப் பகுதி பூமி
அளவுக்கு உள்ளது. இந்தப் பகுதி கருமை வாய்ந்ததாகக் காணப்படுகிறது.
நெப்டியூன் கிரகம் அடர்ந்த மேகங்களால் சூழப்பட்டது. இந்த மேகங்கள்
கிழக்கிலிருந்து மேற்காக மணிக்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் ஓயாத கடும்
புயலாக வீசிக் கொண்டிருக்கின்றன. நெப்டியூனின் மேற்பரப்பில் கடும்
குளிர் வீசிய போதிலும் இந்தக் கிரகத்தின் மையமானது கனல் வீசுவதாக உள்ளது.
நெப்டியூனுக்கு இரண்டு சந்திரன்களே உள்ளதாக நீண்ட காலம் கருதப்பட்டு
வந்தது. மேலும் பல சந்திரன்கள் உள்ளதாக வாயேஜர் கண்டுபிடித்துக் கூறியது.
சமீபத்திய தகவல் களின்படி நெப்டியூனுக்கு 13 சந்திரன்கள் உள்ளன.
இவற்றில் மூன்றுதான் ஓரளவுக்குப் பெரியவை. மற்ற அனைத்தும் வடிவில் சிறியவை.
சனி கிரகத்துக்கு உள்ளது போலவே நெப்டியூனைச் சுற்றி வளையங்கள் உள்ளன.
இந்த வளையங்களுக்கு மிகப் பொருத்தமாக நெப்டியூனைக் கண்டுபிடித்த ஆடம்ஸ்,
லேவெரியர் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment