சச்சின் ரஞ்சிப் போட்டியில் ஆடிய காலத்தில் (1988), அவரைப் பார்ப்பதற்காகவே
பெரிய கூட்டம் ஒன்று மைதானத்துக்கு வரும். ஆனால் இன்று நூறு பேர்கூட
இல்லாத ஒரு மைதானத்தில்தான் ரஞ்சி
ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் சச்சின், ஷாகீர்கான், ஷேவாக்,
கம்பீர், அஸ்வின் போன்ற முன்னணி இந்திய வீரர்கள் சமர்த்தாக ரஞ்சி
ஆட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில்,
வரிசையாக
8 டெஸ்டுகளில் தோற்ற பிறகு, பயிற்சி ஆட்டங்களின் முக்கியத்துவத்தை இந்திய
வீரர்கள் உணர்ந்திருப்பதால் இந்தமுறை ரஞ்சிப் போட்டிக்குக் கொஞ்சம் மவுசு
உருவாகியிருக்கிறது. அடுத்த வருடம் இந்திய அணியில்
உருவாக இருக்கும் பல காலி இடங்களுக்கு இப்போட்டிதான் முக்கியமான விசிட்டிங்
கார்ட்.
ரஞ்சிப் போட்டியிலுள்ள 27 அணிகளும் மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. க்ரூப் ஏ, பி பிரிவுகளிலிருந்து மூன்று அணிகளும்
க்ரூப் சி பிரிவிலிருந்து இரண்டு அணிகளும் கால் இறுதிக்குத் தகுதி பெறும்.
கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 2 கோடி பரிசு. (2005-ல், பரிசுத்தொகை: ரூ.7
லட்சம் மட்டுமே.) வீரர்களின் ஒருநாள் சம்பளம்: ரூ. 40,000. இதுவரை மும்பை
39 தடவை ரஞ்சிக் கோப்பையைத் தட்டிச்
சென்றுள்ளது. கடந்த இருமுறையும் ரஞ்சிக் கோப்பை ராஜஸ்தான் வசம்தான்
சென்றுள்ளது. ஆனால், இந்த அணியிலிருந்து ஒரு வீரர் கூட இந்திய அணியில்
இடம்பெறவில்லை என்பது மிகப்பெரிய முரண். இருமுறை மட்டுமே
ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது தமிழகம் (கடைசியாக 1988ல் ரஞ்சி
சாம்பியனானது). சென்ற வருடம் சென்னையில் இறுதிப் போட்டி நடந்தும் ஜெயிக்க
முடியவில்லை. அடுத்தவருடம் இந்நேரத்தில் சச்சின், ஷாகீர், தோனி, ஷேவாக் போன்ற வீரர்களின்
எதிர்காலம் அறியப்பட்டுவிடும். இந்த நிலையில் இந்த வருட ரஞ்சிப்
போட்டியில் ஜொலிக்கும் வீரர்களுக்குப் பெரிய
வாய்ப்புகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. என்ன, கூடுதலாக அவர்கள்
ஐ.பி.எல்.லிலும் மிளிரவேண்டும். ரஞ்சிப் போட்டியில் அதிக ரன்கள், அதிக
விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் உடனடியாக இந்திய அணிக்குத் தேர்வு
செய்யப்பட்டு இருக்கிறார்கள். பேட்டிங்கில் புஜாரா, விஜய், பந்துவீச்சில்
வினய்குமார், அபினவ் மிதுன் என்று சில உதாரணங்கள் உண்டு. ஆனால் சென்ற வருட
ரஞ்சிப் போட்டியில் பிரமாதமாகப் பந்து
வீசிய வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்ஷா படேல், ஆர்.ஆர். சிங் இருவரும் சிறிய
அடிகூட எடுத்துவைக்கவில்லை. மாங்கு மாங்கு என்று ரன்கள் குவித்த பிஸ்ட்,
சக்சேனாவுக்கும் அதே நிலைமைதான். மிகச் சிறந்த ரஞ்சி
வீரர் என்று அறியப்பட்டாலும் பத்ரிநாத்துக்கு இன்றுவரை முறையான வாய்ப்புகள்
வழங்கப்படவில்லை. ரஞ்சிப் போட்டிகளில் எதுவும் சாதிக்காத நிலையில் இந்திய
அணிக்குத் தேர்வான ராகுல் சர்மா, உனாட்கட் ஆகிய இரு
வீரர்களும் இன்று இந்திய அணியில் இல்லை. இப்படி ரஞ்சியில் சாதிப்பதனால்
என்ன பலன் என்று கேட்கக்கூடிய அளவுக்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும்,
ஒருமுறை மட்டுமில்லாமல் அடுத்தடுத்த வருடங்களிலும்
தொடர்ந்து சாதிக்கும்போது தேசிய அளவில் பெரிய கவனம் கிடைக்கிறது.
இப்படித்தான் புஜாரா இந்திய அணிக்குத் தேர்வானார். மற்றவர்கள் ரஞ்சியில்
சாதித்து, பிறகு ஐ.பி.எல்.லிலும் தங்களை முன்னிறுத்தியபோது இந்திய
அணிக்குத் தேர்வானார்கள்.
தமிழக அணியில் இந்த முறை சில புதுமுகங்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். 2011
ரஞ்சிப் போட்டி, அபரஜீத்துக்குச் சாதகமாக அமையவில்லை. உலகக்கோப்பை
வெற்றியால் அவர் இம்முறை புது உத்வேகத்துடன் இருக்கிறார்.
ஆஷுக் ஸ்ரீனிவாஸ், கௌசிக், முஹமத், எம்.அஸ்வின், ரோஹித் போன்ற இளம்
வீரர்களால் தமிழ்நாட்டு ரஞ்சி அணி புதிய தோற்றத்துடன் உள்ளது. 2003, 2004,
2011ல் இரண்டாம் இடம் பெற்ற தமிழக
அணி, இந்தமுறை ரஞ்சிக் கோப்பையை வென்றால் குறைந்தது நான்கு வீரர் களையாவது
இந்திய அணியில் பார்க்கமுடியும்.
THANKS BROTHER
ReplyDelete