Search This Blog

Saturday, January 18, 2014

சிறுபான்மையினர் வோட்டு யாருக்கு


சிறுபான்மைச் சமூகம், வோட்டு போடுவது குறித்து முடிவெடுப்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்கள் என்ன? ஒரு கட்சியை எதிர்ப்பது என்றால் அந்தச் சமூகம் முழுவதும் எதிர்க்குமா? மதவாதிகள் எந்த அளவுக்கு வோட்டு போடும் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள்? சிறுபான்மையோர் வாக்கு வங்கி என்று ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த வாக்கு வங்கியைக் கண்டு அரசியல் கட்சிகள் பயப்படுகின்றனவா?

2004 நாடாளுமன்றத் தேர்தல். அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரைக் குறித்து சிறுபான்மையோருக்கு ஒரு அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருந்த சூழல். காரணம் அவர் அந்தச் சமயம் கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டம். நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையோர் மொத்தமாக அ.இ.அ.தி.மு.க.வைப் புறக்கணித்து, தி.மு.க. அணிக்கே வோட்டு போடுவார்கள் என்று வெளிப்படையாகவே தெரிந்தது. சிறுபான்மையோர் என்றால் பொதுவாக அது இஸ்லாமியர்களைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. காரணம் கிறித்துவர்கள் எண்ணிக்கை இஸ்லாமியர்களை ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு. என்னைப் பொறுத்த வரையில் இஸ்லாமிய வாக்கு வங்கி என்ற ஒன்று கிடையாது. எல்லா இஸ்லாமியர்களும் ஒரே மாதிரிதான் வாக்களிப்பார்கள் என்று சொல்வதும் தவறு. இதை நான் பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை.தங்கள் மீது வெறுப்பையும், வன்மத்தையும், வன்முறையையும் ஏவிவிடும் அரசியல் இயக்கத்தை இஸ்லாமிய மக்கள் விரும்பவதில்லை. அதுபோன்ற அரசியல் இயக்கத்தையும், அதனுடன் கூட்டணி அமைக்கும் இயக்கத்தையும் அவர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு அவர்கள் ஆதரவு இருக்காது என்பது தெரிந்த ஒன்று. குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகே தங்கள் இருப்பையும், பாதுகாப்பையும் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாமிய சமூகம் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் குடும்பத்துக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறது. மாநில அரசியலை எடுத்துக் கொண்டால் திராவிட இயக்கத்துக்கு நெருக்கமாகவே இருந்து வந்திருக்கிறது இஸ்லாமிய சமூகம். இப்போதுகூட ஜெயலலிதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாவிட்டால்கூட தேர்தலுக்கு அப்புறம் (தனக்கு பிரதமர் வாய்ப்பில்லாத பட்சத்தில்) பா.ஜ.க.வுக்கே ஆதரவு கொடுப்பார் என்று உறுதியாக அந்தச் சமுதாயம் நம்புகிறது. தவிர இஸ்லாமியர்களை மதக் கலவரங்களிலிருந்து பாதுகாக்க மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை மோடியைப் போன்றே ஜெயலலிதாவும் எதிர்க்கிறார் என்பதை இஸ்லாமியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கிறித்துவர்களைப் பொறுத்தமட்டில் இஸ்லாமியர்களைப் போன்று அவர்களுக்கு எந்த மன அழுத்தமும் இல்லை.தமிழ்நாட்டு மக்கள் தொகையான சுமார் ஏழே கால் கோடியில் முஸ்லிம்களும், கிறித்துவர்களும் 90 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை இருக்கிறார்கள். சுமார் ஐந்து கோடி வாக்காளர்களில் சுமார் 60 லட்சம் சிறுபான்மை வாக்காளர்கள் இருக்கலாம் என்கிறார்கள். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், நாகப்பட்டினம், தஞ்சை, தேனி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்குச் சிறுபான்மை சமூகம் அங்கேயெல்லாம் அடர்த்தியாக இருக்கிறது. சிறுபான்மைச் சமூகம் - குறிப்பாக இஸ்லாமியர்கள் 90 சதவிகிதம் பேர் படிப்பறிவு இல்லாமல் வறுமையில் வாடுபவர்கள் என்று நீதிபதி சச்சார் கமிட்டி சொல்லியிருக்கிறது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பத்து சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதைக் கண்டு கொள்ளாததால் காங்கிரஸ் மீது, இஸ்லாமிய சமூகம் கொஞ்சம் கடுப்பில்தான் இருக்கிறது. 

2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சிறுபான்மையோர் வோட்டு வங்கியை நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது, ஜெருசலம் போகும் கிறித்துவர்களுக்கு மானியம் கொடுப்பது, கிறித்துவர்கள் பெரும்பான்மையாக இறங்கியிருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை போலீஸ் நடவடிக்கை மூலம் அடக்காதது என்று பல செயல்பாடுகள். அதேபோல் கடுமையான அழுத்தம் இருக்கும் போதும் பா.ஜ.க. வோடு தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்காமல் இருப்பதுகூட ஒரு வெளிப்படையான யுக்திதான். 

No comments:

Post a Comment