'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா
வரிகளையும் ஒழித்துக்கட்டுவோம்’ என்று சில வாரங்களுக்குமுன் அதிரடி
அறிவிப்பை வெளியிட்ட பா.ஜ.க, இப்போது இன்னொரு குண்டைத்
தூக்கிப்போட்டிருக்கிறது. வங்கி மூலம் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2
சதவிகிதம் வரி விதிப்பதன் மூலம் தற்போது அரசாங்கத்துக்குக் கிடைக்கும்
12.5 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைவிட அதிக வருமானம் கிடைக்கும். இதன்
மூலம் வருமான வரியை எளிதாக ஒழித்துக் கட்டலாம் என்று விளக்கம் சொல்ல
முற்பட்டிருக்கிறது.
வரி ஒழிப்புப் பிரச்னையில் பா.ஜ.க முதலில் சொன்ன கருத்து பலத்த
விமர்சனத்துக்கு உள்ளானதுபோல, இப்போது சொல்லப்பட்டிருக்கும் கருத்தும் பல
கேள்விகளை எழுப்புகிறது. வங்கிகள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வரி
விதித்தால், இனிவரும் நாட்களில் மக்கள் பலரும் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை
செய்வதையே விட்டுவிடுவார்கள். தற்போது நடப்பதுபோல, நேரடியாகப் பணம்
தந்துவாங்கும் போக்கே மீண்டும் தலையெடுக்கும். வங்கி மூலம் அல்லாமல்,
நேரடிப் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் கடும் அபராதம் விதிப்போம் என்று
சொல்லி, அதைக் குறைக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்றாலும், தற்போது சரியாக
நடக்கும் ஒரு விஷயத்தை இத்தனை சிக்கல் நிறைந்ததாக ஏன் மாற்றவேண்டும்?
தவிர, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரே சதவிகிதத்தில் வரி
என்று வரும்போது அதிகம் சம்பாதிப்பவர்கள் குறைவாகவும், குறைவாகச்
சம்பாதிக்கிறவர்கள் அதிகமாகவும் வரிக் கட்டவேண்டிய நிலை உருவாகும். இது,
ஏழைகள் மீது கூடுதல் பாரத்தைச் சுமத்துவதாகவே இருக்கும். தவிர, ஏற்கெனவே
இருக்கும் ஏழை, பணக்காரர் என்கிற இடைவெளியை இன்னும் அதிகமாக்கவே செய்யும்.எல்லாவற்றுக்கும் மேலாக, உலகின் வேறு சில நாடுகளில் இந்த நடைமுறை
கொண்டுவந்தபோது படுதோல்வி அடைந்ததாகவும், அரசுக்குக் கிடைக்கவேண்டிய
வருமானமும் பாதியாகக் குறைந்ததாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.
ஏற்கெனவே இருக்கும் வரி விதிப்பை இன்னும் செழுமைப்படுத்துவதன் மூலமும்,
புதிய நேரடி வரி, பொருள் மற்றும் சேவை மீதான வரி போன்ற சட்டங்களை விரைவில்
நடைமுறைக்குக் கொண்டுவருவதன் மூலமும் அரசின் வருமானத்தை அதிகரிப்பதை
விட்டுவிட்டு, இதுபோன்ற கருத்துகளை எந்த முன்யோசனையும் இன்றி வெளியிடுவது,
பா.ஜ.க. மீது மக்களுக்கு இருக்கும் நன்மதிப்பைக் குறைக்கவே செய்யும்.
No comments:
Post a Comment