Search This Blog

Friday, January 10, 2014

நலம் காப்போம் - பாதங்களைப் பாதுகாப்பது எப்படி? டாக்டர் கு.கணேசன்


நம் உடல் எடை எத்தனை கிலோவாக இருந்தாலும் அத்தனையும் தாங்கித் தளராத நடைபோட நமக்குப் பெரிதும் உதவுவது, பாதங்கள். நம் முகப்பொலிவைக் காக்க நாம் காட்டும் அக்கறையில் கால் பங்கு செலவழித்தால் போதும், பாதங்கள் பளிச்சிடும்; ஆரோக்கியமாக இருக்கும். இதோ பாதங்களைப் பாதுகாக்க சில ஆலோசனைகள்...

பாதங்களில் வரும் நோய்களில் முதன்மையானது சேற்றுப்புண். கான்டிடா ஆல்பிகன்ஸ் எனும் காளான் கிருமிகள் பாதங்களில் விரல் இடுக்குகளைப் பாதிக்கும்போது சேற்றுப்புண் வருகிறது. இந்தக் கிருமிகள் அசுத்தமுள்ள இடங்களிலும் அதிக ஈரமுள்ள இடங்களிலும் நன்கு வளர்ச்சி பெறும். ஆகவே அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்பவர்கள், துணி துவைப்பவர்கள், மீன் பிடிப்பவர்கள் போன்றோருக்குச் சேற்றுப் புண் வருகிறது. இரவில் பாதங்களைச் சுத்தப்படுத்தி விட்டு, காளான்கொல்லி களிம்பு ஒன்றை விரல் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகி விடும். இது மீண்டும் வராமலிருக்க விரல் இடுக்குகளில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அடுத்து வருவது நகச்சுற்று. அசுத்தமான நகம், நகத்தில் அடிபடுவது, நகத்தை வெட்டும்போது சதையோடு வெட்டிவிடுவது, கூர்மையான பொருள் குத்தி விடுவது போன்றவற்றால் பாக்டீரியா கிருமிகள் நகத்தைச் சுற்றியுள்ள தோல் மற்றும் தசையைத் தாக்கும். அப்போது ‘நகச்சுற்று’ ஏற்படும். இதன் விளைவால், நகத்தைச் சுற்றி வீக்கமும் வலியும் உண்டாகும். இதற்குத் தகுந்த ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டால் குணமாகும். நகச்சுற்றில் சீழ் வைத்துவிட்டால் சீழை வெளியேற்ற வேண்டும். ஐஸ்கட்டியைப் பிளாஸ்டிக் பையில் வைத்து நகச்சுற்று வந்த கால் விரலில் ஒற்றடம் கொடுத்தால் வலி குறையும். நகச்சொத்தை என்பது ‘ட்ரைக்கோபைட்டன் ரூப்ரம்’ எனும் ஒருவகைப் பூஞ்சையால் வருவது. நகம் சொத்தையானால், நகத்தின் பெரும்பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படும். பின்பு அது சுருங்கி, வதங்கி, உடைந்து, சிதைந்து போகும். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். நகச்சொத்தையில் தகுந்த களிம்பு தடவி, சில வாரங்களுக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைச் சாப்பிட அது குணமாகும். நகச்சொத்தை உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீரில் கால் விரல்களை முக்குவதைத் தவிர்க்க வேண்டும். விரல்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாதப் பிரச்னைகளில் அடுத்து வருவது ஆணிக்கால். இது ஒரு தோல் வளர்ச்சி நோய். பாதத்தில் உண்டாகும் அதிக உராய்வு அல்லது அதிக அழுத்தம் காரணமாக பாதத்தோல் தடித்துவிடும். அப்போது உடல் பளு இதில் அழுத்துவதால் தடித்த தோல் கடினமாகி, கட்டிபோல் திரண்டுவிடும். இதுதான் ஆணிக்கால். சரியான செருப்பு அல்லது ஷூ அணியாதவர்களுக்கு ஆணிக்கால் வரும் வாய்ப்பு அதிகம். அதிக எடையுள்ள செருப்புகளை அணிந்தால் பாதங்களில் ‘கேலஸ்’ எனும் ‘காப்பு’ வரும். இவற்றை ‘கார்ன்-கேப்’ அல்லது மின்சூட்டுக் கோல் கொண்டு அகற்றிவிடலாம். சிலருக்குச் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படும்.பாதங்களில் வெடிப்புகள் உண்டாவது அடுத்த பிரச்னை. பொதுவாக தோலில் ஈரம் குறைந்து போவதால் இது ஏற்படுகிறது. அதிலும் பனிக் காலத்தில் இந்தப் பிரச்னை அதிகரிக்கும். பாதங்களில் ‘மாச்சுரைசர்’ களிம்பையோ எண்ணெயையோ தடவிக்கொள்ளலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது சமையல் உப்பு கலந்து, அதில் பாதங்களை 5 நிமிடங்கள் நனைக்க வேண்டும். 

பாதங்களில் பனியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்போது தோன்றுகிற ஒரு தொல்லை ‘உறைபனிக்கடிக் காயம்’(Frost Bite). உறைநிலைக்கும் கீழான காலநிலையில் தோலில் உள்ள சிறிய ரத்தக்குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் குறைந்து, திசுக்கள் இறக்கின்றன. இதன் விளைவால் இந்த நோய் ஏற்படுகிறது. இதன் முதல் அறிகுறி பாதத்தில் வலி ஏற்படுவது. பிறகு, மதமதப்பு உண்டாவது. காயத்தில் தொடு உணர்ச்சி குறைவது. தோல் வெளுப்பது. இவற்றைத் தொடர்ந்து, காயம் நீலநிறமாக மாறுவது. பாதங்களை இளம் சூடான தண்ணீரில் அமிழ்த்தி வைப்பதாலும், காயமுள்ள பாதத்தைச் சற்றே உயர்த்தி வைப்பதாலும் வலி குறையும். காயமுள்ள காலுடன் தேவையின்றி நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.நீண்ட காலம் ஈரம் நிறைந்த, குளிர் மிகுந்த சூழலில் கால்கள் இருக்குமானால், விரல்களுக்குக் கீழும், விரல் இடுக்குகளிலும் புண்கள் தோன்றும். இவை கொப்புளங்களாக மாறும். இவற்றுக்கு ‘மறைகுழிப்புண் பாதம்’ (Trench Foot) என்று பெயர். இந்த நோயின் ஆரம்பத்தில் தோல் சிவக்கும். மதமதப்பு ஏற்படும். தொடு உணர்வு குறையும். சிவந்த இடம் வீக்கம் அடையும். கொப்புளம் தோன்றும். அதிலிருந்து ரத்தம் வடியும். இந்நோயுள்ளவர்கள் ஈரமான காலுறைகளைப் பயன்படுத்தக்கூடாது. எப்போதும் உலர்ந்த காலுறைகளையே அணிய வேண்டும். பாதங்களை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும். சற்றே வெதுவெதுப்பான தண்ணீரில் பாதங்களை அமிழ்த்தலாம். பாதங்களில் ’மாச்சுரைசர்’ களிம்பைத் தடவிக்கொள்ளலாம் அல்லது எண்ணெயைத் தடவலாம்.வாரம் ஒருமுறை பாதநகங்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். நக ஓரங்களில் கல், மண் அல்லது அழுக்கு படிந்துவிட்டால் அவற்றை அகற்ற ஊக்கு, ஊசி போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. பருத்தி துணியின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, அதை வைத்துச் சுத்தப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும். இரவில் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு கலந்து பாதங்களை 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, பழைய பல் துலக்கியை வைத்து பாதங்களை நன்றாகச் சுத்தம் செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயைத் தடவ வேண்டும். அதிக எடை இல்லாத, பாதத்தின் வளைவுக்கு ஏற்ற ரப்பர் அல்லது மென்மையான தோல் செருப்புகளை அணிவதுதான் நல்லது. பிளாஸ்டிக் மற்றும் ‘பிவிசி’யில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தவிர்க்க வேண்டும். ஹீல்ஸ் இல்லாத, முழுவதும் தட்டையாக உள்ள செருப்புகள்தான் பாதங்களைப் பாதுகாக்கும். ஒன்றரை அங்குலத்துக்கு மேல் ஹீல்ஸ் உயரம் இருக்கக்கூடாது. பெரிய ஹீல்ஸ் அணிபவர்களுக்குக் காலின் வடிவம் மாறிவிடும். கால் பெருவிரலில் வீக்கம் ஏற்படும்.

No comments:

Post a Comment