Search This Blog

Saturday, January 18, 2014

விஜயகாந்த் செல்வாக்கு வீழ்கிறதா?


காங்கிரஸும் பா.ஜ.க.வும், தி.மு.க.வும் விஜயகாந்த்தை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் இழுக்கக் கடுமையான முயற்சி செய்கின்றன. யாருடைய ‘பேக்கேஜ்’ ரொம்பவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்துக் கூட்டணி அமைத்து, பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் மாநில மாநாட்டில் தே.மு.தி.க. வேட்பாளர்களை அறிவிக்கவிருக்கிறார் விஜயகாந்த். ஆனால் தே.மு.தி.க. செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் விஜயகாந்த்தை இந்தக் கட்சிகள் கெஞ்சுவதற்குத் தக்க காரணம் இல்லை என்கிறார்கள். கட்சி தொடங்கிய 2006ல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தே.மு.தி.க. வாங்கிய வோட்டு 8.33 சதவிகிதம். 2009ல் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, அவர் வாங்கியது 10.1. சதவிகிதம். அதே சமயம் 2011 சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு அ.தி.மு.க. ஆதரவுடன் அவர் வாங்கியது 7.88 சதவிகிதம்தான். 

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக வந்திருப்பதாகச் சொன்ன விஜயகாந்த் அ.தி. மு.க.வுடன் 2011ல் கூட்டணி அமைத்தபோது சுமார் 2 சதவிகிதம் நடுநிலைமை வாக்காளர்களின் வாக்கை இழந்து விட்டார் என்று சொல்கிறது ஒரு கணிப்பு. அதேபோல் இப்போது தி.மு.க.வுடன் கூட்டு அமைத்தால் இன்னமும் 2 சதவிகித ஆதரவை இழப்பார் என்கிறார்கள். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு 75000 வாக்குகள் கிடைத்து வந்த நிலையில் வரும் தேர்தலில் அது கணிசமாகக் குறையுமாம்.  தே.மு.தி.க.வுக்கு இப்போது நான்கு முதல் ஆறு சதவிகித வாக்குகள்தான் இருக்கும் என்று மும்பை தனியார் நிறுவனம் எடுத்த கணிப்பு சொல்கிறது. இந்த நிலையில் ஜனவரி மூன்றாம் வாரத்தில் இன்னமும் 3 தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஆளும் கட்சி ஆதரவாக மாற இருக்கிறார்கள். இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனி அமைப்பு ஒன்றும் தொடங்கி விருதுநகர் தொகுதியை அம்மாவிடம் கேட்பதாக இருக்கிறார்களாம். அப்படிக் கிடைத்தால் இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாண்டியராஜன் போட்டியிடுவாராம்.ஜனவரி மூன்றாம் வாரம் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வர இருக்கிறது. இப்போதிருக்கும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் தம்பித்துரை, செம்மலை ஆகிய இருவருக்குத்தான் மீண்டும் விட்டுக் கொடுக்கப்படும் என்ற பேச்சு இருக்கிறது. அதே சமயம் மூத்த அமைச்சர்கள் சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடுமாம். அந்த வகையில் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. கூட்டணிக் கட்சிகளான வலது, இடது கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கொடுக்க ஆளும் கட்சி முடி வெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதை இரண்டாக்குவதற்காக தோழர்கள் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு காத்துக் கொண்டே இருக்கிறார்கள். (கொடநாடு) மலையிலிருந்து இறங்கி வந்த பிறகு சந்திக்கலாமே என்று சொல்லி விட்டாராமே அம்மா. படபடப்பில் இருக்கிறார்கள் தோழர்கள்.

பிரியன் 


No comments:

Post a Comment